தூயன் வலைத்தளம்
  • மொழிபெயர்ப்புகள்

பூமராங் – Etger keret

February 24, 2018 / thuyan / 0 Comments

பூமராங்
எட்கர் கரட்

சில சமயங்களில் அப்பா தன்னுடைய பழுப்புநிறப் பையில் சிலவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கொஞ்ச நாட்களுக்கு எங்காவது கிளம்பிச் சென்றுவிடுவார்.
அப்பா எங்கே போவார்? நான் அம்மாவிடம் கேட்பேன். “சாக்கடலுக்கு” பொறுமையிழந்து அவள் பதில் சொல்வாள். சாக்கடலில் அவர் என்ன செய்வார்? “ஓ இன்னைக்கு முழுக்க கேள்விகளோடு இருக்கிறாயா?” என்று சொல்லி “போ வீட்டுபாடங்களை செய்” என்பாள்.
ஆகவே நான் அப்பாவிடமே கேட்டேன். “நான் எங்கு போகிறேன்?” என்றார். “உண்மையில் எனக்கு நினைவு இல்லை. நான் போவதைப் பற்றி அம்மா உன்னிடம் என்ன சொன்னாள்?” சாக்கடல் என்றாள். “ஓ ஆமாம் இப்போது எனக்கு ஞாபகம் வருது.” எனச் சொல்லி அப்பா சிரித்தார். “அங்குதான் நான் போகிறேன்”. அங்கு என்ன தான் செய்வீர்கள்? “அங்கு நான் என்ன செய்கிறேனென்று அம்மா ஏதும் சொன்னாளா?” அப்பா கேட்டார். நான் இல்லையென்றேன். அவள் ஒன்றும் சொல்லமாட்டாள். ஏதும் ரகசியமா? “நிச்சயமா அது ரசகியம் தான்.” அப்பா மெதுவாகப் பேசினார். “அது மிக முக்கியமான ரகசியம். நீ யாரிடமும் சொல்லமாட்டேனென்றால் நான் உனக்குச் சொல்கிறேன்”. நான் சத்தியம் என்றேன். “வெறும் வார்த்தையில் சொன்னால் போதாது” என்றார். “நீ எதன் மீதாவது சத்தியம் செய்”. சரி நான் அம்மாவின் மீது செய்கிறேன் என்றேன். “அம்மாவா?” அப்பா சிரித்தார். “சரி அதற்கு சரியானதுதான். இங்கே வா” நான் அப்பாவினருகே சென்றேன். அவர் என் காதில் “நான் மீன் பிடிப்பதற்காக சாக்கடலுக்கு போகிறேன்” ரகசியமாகச் சொன்னார். மீன் பிடிக்கவா? “உஷ்” அப்பா என் வாயைப் பொத்தி “சத்தம் போடாதே” என்றார். ஆனால் எப்படி நீங்கள் மீன் பிடிப்பீர்கள்? உங்களிடம் ஒரு தூண்டில் இல்லையே? “தூண்டில் கோழைகளுக்குத்தான். நான் கைகளாலே பிடித்துவிடுவேன்” என்றார். யார் கோழைகள்? சரி மீன்களைப் பிடித்துவிட்டு என்ன செய்வீர்கள்? அப்பா முகம் தீவிரமானது. “உண்மையில் இது நல்ல கேள்விதான்” அவர் சொன்னார். “ஆனால் கோழைகளைப் பற்றியதைத் தவிர மற்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அவைகள் ரகசியாக இருந்தாலுமே” நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். என் அம்மாவின் மற்றும் சியோன் மீதும் சத்தியம் என்றேன்.
“சியோனா?” அப்பா கேட்டார்.
‘சியோன் ஷிமேஷ்’ நான் தலையை ஆட்டினேன். “நல்லது. நீ யாரிடமும் சொல்லமாட்டாய் என்று இப்போது நம்புகிறேன்” அப்பா சொன்னார். “ஆனால்  அவர்கள் உன்னை கடத்திச் சென்று உண்மை கண்டறியும் சீரத்தை உனக்குச் செலுத்துவார்கள், என்ன நடக்கிறதென தெரிவதற்குள் அது உன் தலைக்குள்ளிருக்கும் ரகசியம் மொத்தத்தையும் உறிஞ்சிவிடும்” என்றார். யார்? நான் கேட்டேன். யாரை சொல்கிறீர்கள்? “கோழைகள்” அப்பா முனுமுனுத்தார். அப்போது அம்மா உள்ளே வந்தாள். “எப்போ கிளம்புறிங்க” என்று கேட்டுக்கொண்டே சிகரெட்டைப் பற்ற வைத்தாள். “இப்போ” எனச் சொல்லி அப்பா தன் பையை எடுத்துக்கொண்டார். “மறந்துடாதே” அவர் தன் விரலை உதட்டில் வைத்து என்னிடம் காட்டினார். “ஒரு வார்த்தை கூட” என்றார். ஒரு வார்த்தைக்கூட. அவர்கள் இந்த உலகத்திலிருக்கும் மொத்த சீரத்தையும் எனக்குச் செலுத்தினாலும் ஒரு வார்த்தைக் கூட சொல்ல மாட்டேன். “என்ன சீரம்?” அம்மா அப்பாவை முறைத்தபடி கேட்டாள். “குழந்தை தலைக்குள் என்னமாதிரி விசயங்களை நுழைக்கிறீர்கள்” “உன் அம்மாவிடம் கூட” அப்பா புன்னகைத்தவாறே கூறிவிட்டு கிளம்பினார்.. அவர் என்னை நம்புகிறாரென எனக்கு தெரியும்.

அப்பா கிளம்பிச் சென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு மிக்கி வீட்டிற்கு வந்தார்.  மிக்கி எப்போதும் அப்பா இல்லாதபோது வருவார். பெரும்பாலும் இரவில், நான் தூங்கிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு வெளியே காத்திருப்பார். நிச்சயமாக அவர் என் அம்மாவை புணர்வதாக சீயோன் ஷிமேஷ் சொன்னான். அவன் என்னைவிட நான்கு வயது மூத்தவன் மேலும் இதுபோன்றவைளை நன்கு அறிந்தவனும்கூட. சரி நான் என்ன செய்ய முடியும்? அவனிடம் கேட்டேன். “ஒன்னும் செய்ய முடியாது”என்றான். “பெண்கள் இப்படித்தான். அவர்களுக்கு எப்போதும் ஆணுறுப்பு வேண்டும் மேலும் ஆணுறுப்பு ஒரு பூமராங்” என்றான். ஏன்? ஏன் அவர்கள் அதை விரும்புகிறார்கள்?’ “அது அப்படித்தான்” சீயோன் சொன்னான். “பெண்கள் எல்லாம் வேசிகள். அது அவர்களுடைய இயல்பு. என்னுடைய அம்மாவும்கூட.” ஆனால் ஏன் ஆணுறுப்பு பூமராங்காக இருக்கிறது? மேலும் வேசிகளிடம் அதற்கு என்னதான் வேலை? “எனக்கென்ன தெரியும்” என்றான் சீயோன்;. “என்னுடைய சகோதரன் எப்போதும் அப்படி சொல்வான். அதை வைத்து உன்னால் ஒன்றுமே செய்ய முடியாதுனு நினைக்கிறேன்” என்றான். அதனால் நான் எதுவும் செய்யவில்லை
நான் எப்போதுமே மிக்கியை வெறுத்தேன். ஏனேன்று தெரியவில்லை அவர் காலையில் வந்தபோதும் எனக்கு சாக்லெட் வாங்கிக்கொடுத்த போதும். அவர் என்னை அவருடைய நண்பனாக்க முயற்சிக்கிறார். நான் கதவைத் திறந்ததும் “என்ன ஆயிற்று. பையா?” என்றார். “உன் அம்மா இருக்கிறாரா?” நான் ஆமாம் என்பது போல தலையசைத்தேன். “அப்பா?” அவர் கண்கள் குடியிருப்பை நோட்டமிட்டன. ‘இல்லை’ “எங்க இருக்கிறார்?” அவர் கேட்டார், கண்கள் இன்னும் எதையோ தேடிக்கொண்டிருந்தன. “பயணமா?” அப்போதுதான் எனக்கு சந்தேகத்திற்கிடமாகத் தோன்றியது. என் அம்மாவுடன் இருக்க வந்திருந்தால் எதற்கு அப்பாவைப் பற்றி விசாரிக்க வேண்டும்? நான் எதுவும் கூறவில்லை. அம்மா அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள், மிக்கி தன் தோல்பையை கீழே வைத்துவிட்டு அவளுடன் உள்ளே சென்றார். அம்மா உண்மையிலேயே அவரை ஆச்சர்யத்துடன் தான் பார்த்தாள். “இங்கு என்ன செய்கிறீர்கள்?” அவள் கேட்டாள். “உங்களுக்கென்ன பைத்தியமா?” “மருத்துவமனைக்கு போவதாக என் மனைவியிடம் சொல்லிவிட்டேன்” என்றார் . “ஏன் என்ன பிரச்சனை?” அவர் என் அம்மாவினருகே சென்று அவள் கைகளைப் பற்றினார். “டாக்டர் தன் நோயாளியை வந்து பார்க்கக்கூடாதா என்ன?” அம்மா அவர் கைகளை விலக்க முயற்சித்தார். ஆனால் நிஜமாக இல்லை. அவர் விலகவில்லை. “குழந்தை  இருக்கு?” அம்மா மெல்ல சொன்னாள். “குழந்தையா?” மிக்கி கூறினார் “அவனுக்கு சாக்லெட் கொடுத்திருக்கிறேன்”
அவர்கள் படுக்கையறைக்குள் சென்று தாழிட்டப் பிறகு நான் அவருடைய பையைத் திறந்தேன். உள்ளே நிறைய வகையான பாட்டில்களும் காகிதங்களும் இருந்தன, ஆனால் அதனடியில் ஒரு ரகசிய பாக்கெட்டும் அதில் சீரம் நிரப்பிய ஊசியும் இருந்தது. என் கைகள் நடுங்கின, அதை எடுத்துக்கொண்டு படுக்கையறை நோக்கி ஓடினேன். கதவு மூடியிருந்ததால் வேகமாக தட்டத் தொடங்கினேன். அம்மா, அம்மா ஜாக்கிரதை. அவரிடம் எதுவும் சொல்லி விடாதே நான் கத்தினேன். சில கணங்களுக்குப் பிறகு அம்மா பெரு மூச்சுடன் கதவைத் திறந்தாள். “என்ன ஆச்சு?” அவள் கேட்டாள். அவள் மிகவும் பைத்தியத்தனமானவள் என்று என்னால் சொல்ல முடியும். “அது மிக்கிதான்“ நான் கத்தினேன். அவர் உண்மையில் உன்னுடன் இருக்க வரவில்லை. இதோ இந்த ஊசி. தன் பெரிய பைக்குள் அவர் மறைத்து வைத்திருக்கிறார். அவரிடம் எதுவும் சொல்லிவிடாதே. ‘எதுவும் சொல்லக்கூடாதா?’ அம்மா என்னை கோபமாகப் பார்த்தாள், மிக்கியும் கதவருகே வந்தார். “ஏன் இப்படி எல்லாவற்றிலும் மோசமாக நடந்துகொள்கிறாய்” அம்மா சத்தம் போட்டாள். என் தோள்களைப் பிடித்து உலுக்கினாள். நான் ஒன்றும் மோசமாக செய்யவில்லை. அப்பாதான் சொன்னார். அப்போது நான் அழத் தொடங்கினேன். “அப்பா? எங்கே அவர்?” மிக்கி கேட்டார். நான் உங்களிடம் சொல்லமாட்டேன். நீங்கள் என்னை கொன்றாலும் கூட. நீ கோழை. மிக்கி தன் ஷூவைப் பிடித்தபடி சட்டை பொத்தான்கள் அவிழ்ந்திருக்க பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அந்த ஊசி என்னிடம் தான் இருந்தது. அம்மா பிறகு என்னிடம் கேள்வி கேட்டு துழைப்பதற்கு முயற்சித்தாள் ஆனால் நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றேன். ஏனேன்றால் அவளுக்கு கோழைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. மேலும் அப்பா அவளிடம் சொல்வதை விரும்பவும் மாட்டார், அதே சமயம் சீயோன் பெண்களைப் பற்றி சொன்னதும் சரியானதுதான் அவர்கள் இயல்பைக் குறித்தும் எப்படி அவர்கள் எப்போதும் பூமராங்கை விரும்புகிறார்கள் என்பதும்.
அப்பா திரும்பி வந்ததும் அம்மா அவரிடம் கொஞ்ச நேரம் ஏதோ பேசினாள். அப்பா உண்மையில் பைத்தியம் தான்,; வீட்டில் ஒரு கோழையை அவளுடன் அனுமதித்ததற்கு. அப்பா அம்மாவை அடித்ததற்காகத்தான் தன் பழுப்புநிற பையை ஜன்னல் வழியே வீசினார் எனத் தெரிந்துகொண்டேன். கதவு சாத்தியிருந்ததால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கேட்க முடியவில்லை, ஆனால் அதற்குபிறகு அப்பா எங்கேயும் போகவேயில்லை. அன்றிரவு அவராகவே என்னிடம் சொன்னார். “ஒரு கணம் கூட உன் அம்மாவை தனியாக விட மாட்டேன்” ஆனால் அந்த மீன்கள்? “எந்த மீன்?” உங்களுக்குத் தெரியாதா அப்பா, அந்த சாக்கடலிலிருக்கும் மீன்கள். “எல்லாவற்றையும் கேள்விகளுடனே அப்படியே விட்டு விடு” அவர் சொன்னார். “போ உன் வீட்டு பாடத்தை செய்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

« Etger keret’s short stories
பைத்தியத்தனமான பசை- Etger keret »

Recent Posts

  • சுவா்களின் ஊடே- Etger keret
  • நடைபாதை- Etger keret
  • பைத்தியத்தனமான பசை- Etger keret
  • பூமராங் – Etger keret
  • Etger keret’s short stories

Recent Comments

  • தூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு on முகம்
  • SHAN Nalliah on இன்னொருவன்
  • santhini on பிரக்ஞைக்கு அப்பால்….
  • santhini on பிரக்ஞைக்கு அப்பால்….

Archives

  • February 2018
  • December 2017
  • November 2017

Categories

  • Uncategorized
  • குறுநாவல்
  • சிறுகதைகள்
  • மதிப்புரைகள்
  • மொழிபெயர்ப்புகள்

Meta

  • Register
  • Log in
  • Entries RSS
  • Comments RSS
  • WordPress.org

Theme by The WP Club. | Proudly powered by WordPress