ஃபாதர் ப்ரான்ஸிஸ் சேவியரின் நூறாவது மரணம்
Published in Puthuezhuthu July 2023
இவ்வளவு சீக்கிரம் நூறு மரணங்களை நெருங்கிவிடும் என்று பிரான்ஸிஸ் சேவியர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய கணிப்பு, நூறைத் தொட்டதும் அதாவது, அதற்குள் தனக்கும் அகவை எழுபத்தி ஐந்தை சமீபித்துவிடும் அத்துடன் இனி ஆத்மாக்களை பரலோக ராஜ்யத்திற்கு அனுப்பி வைக்கும் இந்த அலுப்பூட்டும் விதியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார். வயது, மரணம் இரண்டில் மரணம் எண்ணிக்கையில் முந்திவிட்டது. எழுபத்திஐந்துக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றன அதுவரை எத்தனை மரணங்களுக்காக் காத்திருக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு மிகவும் சோர்வை அளிக்கும் விஷயமாக இருந்தது. ஒவ்வொருநாளும் காலையில் எழுந்ததும் வெளியே வந்து தேவாலய கோபுரத்தில் பூத்திருக்கும் சாம்பல், வெள்ளை புறாக்களைப் பார்ப்பதும் பிறகு எப்போதும் தங்களுக்கு அன்றாட வேலைகள் ஏதுமின்றி பொழுதை நகர்த்த முடியாமல் தேவாலய வளாகத்தைச் சுற்றி அமர்ந்து இருக்கும் பிச்சைக்காரர்கள் என மாறாத இந்த வஸ்துக்கள்தான் அவரது நாற்பத்தி ஐந்து வருட வாழ்வை, இதுவரை இருந்த அத்தனை தேவலாயத்திலும் நிறைத்திருக்கின்றன.
தினமும் காலை நடையில் இவர்களெல்லாம் எழுந்து ஃபாதர் “சோஸ்த்திரம்” என்பார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அவர் பார்த்த தேவாலங்களில் இவர்கள் இதே தோற்றத்தில் அழுக்கான கரிய நிற உடையில் பாதி நரைத்த தலை முடியுடன் எப்படி உருவம் மாறாமல் வயது ஏறாமல் இருக்கிறார்கள் என்பதுதான். தான் வேறொன்றிலும் இவைகள் இன்னொன்றிலுமாக காலம் இரண்டாகப் பிரிந்திருப்பதை சேவியர் அவதானித்தார். ஆனால் இறைபணியாற்றிய மற்ற இடங்களைவிட இங்கு வந்து சேர்ந்த இந்த நான்கு வருடத்தில்தான் இவையெல்லாம் கண்ணுக்குப் புலப்பட ஆரம்பித்திருக்கிறது.
ஜன்னலைத் திறந்ததும் தெரிவது இந்த தேவலாயத்தின் இடது பக்க விலாவும் அதன் கோபுரமும் வெட்டவெளியில் உலவும் காக்கைளும் நிழலோடு அலையும் பிச்சைக்காரர்கள். அவரது காலத்தில் ஓடிய ஒரே காட்சியாக அலுப்பூட்டும் திரைத் தொங்குகிறது. தேவாலயத்தின் நுழைவாயிலுக்கும் பின்புறம் இருக்கும் காப்ரியேல் அரங்கத்திற்கும் நடுவே சரியாக கட்டடம் மடிகின்ற ஒரு அறைவட்டபகுதியில் கரிய நிறத்தில் கல்லறை ஒன்று இருக்கிறது. தேவாலயத்தின் வெண் சுவரின்மீது சுரந்து கொண்டிருக்கும் வெயிலுக்கு அந்த கரும்பாறை வடிவ கல்லறை கண்ணாடி அணியவில்லையென்றால் யானை துதிக்கை உயர்த்தி நிற்பதுமாதிரி தெரியும். இதே போன்று எங்கோ ஒரு கல்லறையை வேறு தேவாலயத்திற்குள் பார்த்த நினைவு. அதனால் இந்த ஒற்றைக் கல்லறை மட்டும் தேவாலயத்துக்குள் வந்ததைப்பற்றி சேவியருக்கு யாரிடமும் கேட்க அவசியப்படவில்லை. ஏற்கெனவே கேட்ட கதையைத்தான் இதற்கும் இருப்பதாகவும் அல்லது இதேதான் ஏற்கெனவே பார்த்த கதைகளில் வருவதாகவும் அவருக்குத் தோன்றிற்று. பல வருடங்களுக்கு முன்பு ஒரு வயதான பாதிரியார் இங்கு இருந்தார். அவருக்கு தேவாலயத்தை அழகு கெடாமல் பார்த்துக்கொள்வதில் விருப்பம் அதிகம். அதன் ஒவ்வொரு இடத்தையும் பொறுப்பாக தினமும் கவனிப்பார். ஒவ்வொரு முறையும் உச்சிக்குச் சென்று சுவர் வெடிப்பில் முளைத்திருக்கும் அரசமரக் கன்றைக் களைவது வாடிக்கை. எத்தனைமுறை களைந்தாலும் அதை முழுதாக அழிக்க முடிவில்லை. விதைத்தப் பறவையை சபீக்காத நாள் கிடையாது. இவரும் ஒவ்வொரு முறையும் அதைத் தவறாமல் செய்தார். ஒருநாள் ஒவ்வொரு இலைகளாகப் பிய்த்தெறிந்தபடியே கீழே குனிந்தபோது கைக்கு எட்டாத ஒரு இலை அவரை கீழே பிடித்துத் தள்ளி விட்டது. விழுந்தவர் அன்றைக்குப் பூராவும் யாருடைய கண்ணிலும் படாமல் அறை வட்ட மூலையில் கிடந்திருக்கிறார். அடுத்த நாள் காலை தேவாலத்தில் கூடிய காகங்கள்தான் மரணத்தை ஊருக்கு அறிவித்தன. இப்படியொருக் கதையை யாரோ அவருக்குச் சொன்னதாக ஞாபகம். அல்லது அப்படி இருப்பதாகக் கற்பனை செய்திருக்கலாம். சேவியர் இதை யாரிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளவில்லை.
வழக்கமாக காலைநடையில் (தேவாலயத்தை ஒரு முறைச் சுற்றுவதுதான் நடையின் அளவு) மூச்சு திணறல் அதிகமாகிவிடுகிறபோது கல்லறைமீது உட்காருவது வழக்கம். சமீபமாக ஆஸ்துமா, அறையிலிருந்து பத்து அடி, சரியாக அந்த ஒற்றைக் கல்லறையை அடைவதற்குள் திணறிவிடுகிறது. சற்று இளைப்பாறினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். தலையைத் தூக்கி அண்ணாந்தால் கோபுர உச்சியில் அரசங்கன்று செழிப்புடன் ஆடிக்கொண்டிருக்கும். கோபுரம் அப்படியே சாய்வதுபோல் இருக்கும். ஒருகணம் தலைச்சுற்றி நிற்கும். காட்சிகள் மிதக்க ஆரம்பிக்கும். ஆனால் இந்த விளையாட்டை திரும்பத் திரும்ப செய்து பார்ப்பதில் சேவியருக்கு ஆசை. இன்றைக்கு அங்கு உட்கார்ந்திருக்கிறபோதுதான் உத்திரியராசு அவரை எழுப்பி தொன்னூற்றி எட்டாவது மரணத்தையும் தொன்னூற்றி ஒன்பதையும் கூறினான்.
“ஃபாதர் தோஸ்த்திரம், மார்த்தாண்ட புரத்தில இன்னைக்கு ரெண்டு”. சேவியருக்கு ஒன்றும் புரியவில்லை. “ஒன்னு அந்தோணி பேக்கரிக்காரர் இன்னாசிமுத்து. வயசானவர். இன்னொன்னு ஞானமேரி பையன். பாவம் சின்ன வயசுதான் உடம்பு முடியாதப் பையன். பூசையில நீங்க பார்த்திருக்கலாம்”
சேவியர் சிரித்தார் “நான் பூசையே வைக்கலயே”
“எல்லா பூசைக்கும் வரும். நீங்க நடத்திய ஏதோ ஒரு பூசைக்கு வந்திருக்கலாம்”
ஃப்ரான்ஸிஸ் சேவியர் அதற்கு பதில் சொல்லவில்லை. அவருக்கு கேட்காது என்பதற்காக குரலை உயர்த்தும்போது தொனித்த எள்ளல் அவரைச் சீண்டியது. சாய்ந்தரம் கல்லறைக்குப் போக வேண்டி இருப்பதால் மதியம் தூக்கத்தை நிறுத்தத்தான் உத்திரியராசு வந்திருக்கிறான். நான் எப்போதுமே தூங்கறது இல்லையே. இப்போதான் கொஞ்ச நாளாக. இந்த வெயில் உக்கிரமாக இருக்கிறப்போது மதியம் ஒரு மயக்கமான பொழுதா மாறிவிடுகிறது. நாய், பூனை தூங்கும், பறவைகள்கூட மரக்கிளைகளில் இந்த வெயிலுக்கு கொஞ்சம் இளைப்பாறும். உத்திரியராசு சென்றுவிட்டான். அவன் நேராக ஃபாதர் மைக்கேல் அறைக்குப் போகிறான். அவருக்குப் பணிவிடை செய்யவதென்றால் அவனுக்கு பரம சந்தோஷம். அவர் சிந்தும் பருக்கைகள்கூட அவனுக்குப் பயன்படும். ரொம்ப சிரமப்படவேண்டாம். எல்லா வேலையையும் அவர் தானாக செய்து கொள்ளவார். பணியாள் என்பது வெறும் துணைக்கு மட்டும். ஊர்ப் புறணிகளைக் கேட்க, பூசைகளை விதந்தோத, அடுத்த வேளை சமையலுக்கானதை விவாதிக்க இப்படி சலிப்பூட்டாத விஷயங்கள் நிறைய. பாதிரியார்களுக்கு வெளி உலகமே தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்,
ரொம்ப நேரம் பேசியது போல உணர்ந்தார். மூச்சுத்திணறல் அதிகமாகியது. அவரால் நடக்க முடியவில்லை சுவாசப் பொந்துக்குள்ளிருந்து நிறைய எலிகள் கூச்சலிட்டன. “ச்சூ ச்சூ” ன்று சத்தம்போட்டு அடக்கினார். முன்பெல்லாம் ஒன்று இரண்டு தான் கத்தும் இப்போது குட்டி போட்டு பெருகிவிட்டன. மைக்கேல் காலை பூசைக்காகக் கிளம்பிக்கொண்டிருப்பது தெரிந்தது. உத்திரியராசு தன்னைக் காட்டி ஏதோ சொல்வதற்கு, மைக்கேல் அவரை நோக்கிக் காத்திருப்பதுபோல நிற்கிறார். உடனே போக முடியாது குறைந்தது இரண்டு மலைகளாவது ஏற வேண்டியிருக்கும். சேவியர் மெல்ல நடக்கத் தொடங்கினார். அதற்குள் மைக்கேல் அவரை நோக்கி வந்துவிட்டார்.
“ப்ரைஸ் த லார்ட் ஃபாதர்” என்றார். சேவியர் தலை அசைத்தார். “இன்றைக்கு சர்ச்ல கல்யாணம் இருக்கு. அப்புறம் ஜூப்ளிக்கு போகனும். நிறைய வேலை இருக்கு. நீங்க சாய்ந்தரம் கல்லறைக்குப் போயிடுங்க. மறந்துடாதிங்க. ரெண்டு சாவு. வீடு சந்தித்தலை நான் பார்த்துக்குறேன். எனக்குப் போகிற வழிலதான். வழக்கம் போல அடக்கத்திருப்பலி, மற்றதை நீங்க கவனிங்க” சேவியர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இன்றைக்கு ஒருநாள் தான் கல்லறைத்துத் தோட்டத்துக்குப் போக விரும்பவில்லையென்பதை எப்படி சொல்வதென்று புரியாமல் அப்படியே நின்றார். என்ன பதில் வரும் என்று அவருக்குத் தெரியும். தெரிந்த பதிலைப் பெற எதற்குக் கேள்வியை வீணடிக்க வேண்டும்? மாறாக அவர் விரும்பிய வேறொன்றைக் கேட்கலாம் என்று எண்ணினார். மைக்கேல் அங்கிருந்து நகரும் முன் “இன்னைக்கு ஒரு நாள் நான் திருப்பலி நடத்தவா?” அவர் சொன்னது அவருக்கேகூட சரியாக விழுந்திருக்காது ஆனால் இதை முன்பே பலமுறை கேட்டதுபோல மைக்கேல் சாதாரணமாக எதிர்கொண்டார். “அது எப்படி ஃபாதர். உங்களலாலதான் மாஸ் வைக்க முடியாதே. நடக்க முடியல பேச முடியல எப்படி நடத்த முடியும். சோத்யூஸா இருக்கிறது பிடிக்கலையா உங்களுக்கு?” கடைசியாக சிரிப்புடன் கேள்வியை முடித்தது சேவியருக்குப் பதில் சொல்ல வரவில்லை.
“பத்து நிமிஷத்துல திருப்பலி வைக்க முடியாதா? எவ்வளவு நேரம் வேணும்?” என்றார் சேவியர் கோபமாக.
மைக்கேல் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை இருந்தும் தான் எதையும் அதிகப்படியாகக் கேட்காததுமாதிரி புன்னகையுடன் கிளம்பத் தயாரானார். சேவியருக்கு அங்கு நிற்பது அந்நியமாக இருந்தது. திருவிவிலியச்சட்டத்தில் இவ்வளவு நேரம்தான் திருப்பலியை நடத்த வேண்டும் என்று இருக்கிறதா?
மைக்கேல் போனதும் உத்திரியராசு இவர் அருகே வந்து, “ஏன் ஃபாதர் உங்களுக்கு” என்று ஏதோ சொல்ல வந்தான் சேவியர் அவனை “உன் வேலைய பார்த்துட்டு போடா” என்றதும் பின்னகர்ந்துவிட்டான். பிறகு எல்லோருக்கும் கேட்கிறபடி (அங்கு அவரைத்தவிர யாரும் இல்லை) “கிறிஸ்துவையே உங்களால் காப்பாற்ற முடியவில்லை…பிறகு இந்த பிரசங்கம் மேடை சொற்பொழிவு எல்லாம் வைத்து என்ன செய்ய போகிறீர்கள்? யாருக்கு நன்மை செய்யப் போகிறீர்கள். என்ன அற்புதங்களைக் காட்ட போகிறீர்கள்?” நிச்சயமாக யாருக்கும் கேட்டிருக்காது என்று தெரியும் கேட்டிருந்தாலும் எந்த எதிர்வினையும் ஆற்றப்போறதில்லை..
0
மதியம் வெயில் வானில் நன்றாக தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி அனலை அறைக்குள் வாறி இறைத்தது. சேவியர் சட்டையைக் கலட்டிவிட்டு சாய்ந்து அமர முடியாமல் நாற்காலியின் கையைப் பற்றியபடி குனிந்திருந்தார். மூச்சு இரைப்பு அதிகமாகியது. நுரையீரலுக்குள் கீச்சொலி மட்டும் ஓய்ந்தபாடில்லை. கண்களை மூடி நன்றாக உற்று கேட்டார். அவ்வளவு சத்தம் எப்படி அந்த உடம்புக்குள்ளிருந்து வருகிறது? எங்கு கவனத்தைத் திருப்பினாலும் சத்தம் வந்து கெடுத்துவிடுகிறது. காட்டுப் பூனையைப் பிடித்து உயிருடன் விழுங்க வேண்டும் என்று தோன்றிற்று. கத்தும் எலிக்குஞ்சுகளை எல்லாம் தின்றுவிட்டு வாய் வழியாக வெளியே குதிக்கட்டும். இஸபெல்லாவிடம் மதியம் சமையலுக்குக் காட்டுப் பூனைக் கிடைக்குமா என்று கேட்டு சிரித்துக்கொண்டார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் முகம் வாடி இருந்தது. “ஞானமேரி பையன் இறந்துருச்சாம் பாவம்” என்றாள். பெரிய கதை ஒன்றை உள்ளுக்குள் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு கடைசி வரியை மட்டும் சத்தமாக உச்சரித்தது மாதிரி. “ஆண்டவர் எப்படியொரு சோதனைய கொடுக்குறார் பாருங்க. அந்தம்மாவுக்கு அந்தப்பையனை விட்டா வேற யாரும் இல்லை” என்று சேலைத்தலைப்பில் மூக்கை உறிஞ்சிக்கொண்டாள். பிறகு நெஞ்சில் சிலுவைக் குறியை இட்டுக்கொண்டு காய்கறியை நறுக்க ஆரம்பித்தாள். அவளுடைய செய்கை சேவியருக்கு அந்தக் கணத்தை சட்டென நிறுத்திற்று. இறந்தவர்களைப் பற்றிய எந்த விபரத்தையும் தனக்குத் தெரியப்படுத்த வேண்டாமென்று அவர் பலமுறை எச்சரித்திருக்கிறார். கொஞ்ச நாளாக அவருடைய எச்சரிக்கையைமீறி கல்லறைக்குப் போகும்போதும் இறுதி செபம் முடிந்து திரும்பும்போதும் சாவைப் பற்றி நிறைய விசாரிப்புகள் வருகின்றன. விசாரிப்புகள் அந்த இறப்பின் துக்கம் பற்றியது அல்லாமல் அதன் ஆன்மாவை சொர்கத்திற்கு அனுப்புவதில் (சகல பாவங்களிலிருந்து விடுதலை செய்து நல்லபடியாக) தனக்கு இருக்கும் பொறுப்பு சரியானதுதானா என்று தன்னை சந்தேகிப்பதைப்போல் இருக்கிறது. ஒருகட்டத்தில் இதுமாதிரியான அகால மரணங்கள் பற்றிய விசாரிப்புகள் அவருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. சேவியர் சத்தமாக அவளுக்குக் கேட்கும்படி “புலம்புறதா இருந்தா வெளியே போயிடு இஸபெல்லா.” என்று சொன்னார். அடுப்படியில் சத்தம் ஒருகணம் சட்டென (அவருக்கு நின்றதைப் போல) நின்றுவிட்டு தொடங்கிற்று. .
மாதா மக்கள் மன்றத்தில் பாதிரியார் லியோ ஜோசப் ஜெயராஜின் குருத்துவ பொன்விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. தேவாலய விடுதி அறைக்கும் மக்கள் மன்றத்திற்கும் ஒரே சுவர்தான். சேவியர் ஜன்னலைத் திறந்து வைத்தார். பாதிரியார்கள் அருட் தந்தையுடன் முக்கியமான விசயத்தை விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். சேவியரையும் அழைத்திருந்தனர். இவர்தான் வர இயலாது என்று மறுத்துவிட்டார். அங்கு எல்லோரும் இளமையாக பளீரென சலவைக் கற்களுக்கு கை கால் முளைத்தது மாதிரி இருப்பார்கள். பற்களெல்லாம் செதுக்கியதுபோல அழகாக இருக்கும். விதவிதமான உயிரினங்கள் எண்ணெயில் பொறித்து குப்பிமாதிரியான பாத்திரங்களில் திறந்ததும் ஆவியை விடும். அவருக்கு அது அத்தனையும் அலூப்பூட்டுகிறது. ஏன் அர்ப்பண வாழ்வை கொண்டாட வேண்டும்? இதுவரை நடந்த அத்தனை அற்புதங்களையும் இறைவனே செய்துவிட்டபோது எதற்கு இதெல்லாம்?
ஞானமேரியின் பையனை நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறார். பதிலாக அடக்கம் செய்யப் போகும் அந்தோனி பேக்கரிக்காரர் நினைவுக்கு வருகிறார். நல்ல பெரிய மீசை அவருக்கு. சேவியர் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தார். பிறகு குளியலறைக்குச் சென்று முடிச்சாயத்தைத் தயார் செய்தார். “இதனால் ஒன்றும் மாறிவிடப் போறதில்லை. ஒரு பத்து வயது குறையும் அவ்வளவுதான். இறைப்பணியில் இருப்பவர்கள் இளமையாகத் தெரிவது அவசியம். பாதிரியாரிடம் வரும் அத்தனைபேரும் நோயுடனும் வயதானத் தோற்றத்திலும் இருக்கும்போது பாதிரியாரும் அவர்களைப்போல இருந்தால் என்ன அர்த்தம்? நான் உங்கள் காயங்களையெல்லாம் சுமக்கிறேன் உங்களை நோயிலிருந்து காப்பேன்.” சேவியர் சிரிப்பு வந்தது. தலைக்குச் சாயம் பூசிவிட்டு குளிக்கக் காத்திருந்தார். மழையில் நனைந்த கோழிமாதிரி ஆகிற்று முகம். அவருக்கு தாடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும் நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறைப்பள்ளியில் சேரும் முன் வைத்திருந்தது. அப்போதுகூட அணில் வாலைப் போன்று செம்பட்டையும் கருப்புமாக சரியாக வளராத ரகம். இப்போது இருந்தால் மிக அழகாக இருக்கும். சிவாஜியாக தெரியலாம். அவருக்கு சிவாஜி பிடிக்கும். சிவாஜியின் திரைப்படப் பாடலொன்று நினைவுக்கு வந்ததும் முணுமுணுத்தவாறே குளித்து முடித்தார். மழித்த கன்னங்கள் பாறையின் வழவழப்பில் மின்னின. சேவியருக்கு அந்த உருவத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு அவரைப் போலவே ஆனால் இதே முகம் கிடையாது, அழகான தாடியில் ஒருவரை அடக்கத்திருப்பலிக்குக் கொண்டுவந்தார்கள். தாடியை அழகாகக் கத்தரித்திருத்திருக்க வேண்டும். நகை ஆசாரியின் நுணுக்கம். தாவங்கட்டையில் மட்டும் இலை வடிவில் வெள்ளைமயிர். இறுதி செபத்தைச் சொல்லி முடிக்கவே விருப்பமில்லை. முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஒரு மாவீரனாக வாழ விரும்பியவனாக இருக்க வேண்டும். தனக்குப் பிடித்த அத்தனையும் அனுபவித்திருப்பான். முடியாது என்று எதுவும் இருந்திருக்காது. அப்படிபட்டவர்களுக்கே இம்மாதிரி முகவமைப்பு அமையும். மாவீரனை அடக்கம் செய்ய இதுபோன்ற செபங்கள் போதாது. எல்லோருக்கும் ஒரே செபம், ஒரே வரிகள், ஒரே சொற்கள். அவருக்கு மிகவும் சலிப்பூட்டின. பவுலுக்காக எழுதப்பட்ட வரிகள் நினைவுக்கு வந்ததும் அங்கு அவற்றை உச்சரித்தார். அவரது முணுமுணுப்பு அங்கிருந்தவர்களுக்குக் கேட்டுவிட்டது. ஒன்றிரண்டு முகங்கள் அவரை நோக்கித் திரும்பியதும் உடனே நிறுத்திவிட்டார்.
வழக்கத்துக்கு மாறாக மதியம் இப்படி ஒப்பனைகள் செய்துகொண்டு (ஜோசப்பின் ஜூப்ளி நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களைப் பார்த்ததும் உதித்த எண்ணம்) குளித்ததால் மதியத்தூக்கம் அழுத்தியது. எழுந்து சென்று சாய்ந்தரம் அணிய வேண்டிய கருப்பு அங்கியை எடுத்துக்கொண்டு சாய்விருக்கையில் அமர்ந்தார். மூச்சு இரைப்பது சற்று தணிந்திருந்தது. உறக்கம் மிகப்பெரிய இறகுகளுடைய பறவையாக எங்கிருந்தோ தூரத் தேசத்திலிருந்து வந்து அவருக்காக தேவாலய கோபுரத்தில் அமர்ந்து இறகுகளை நீவிக்கொண்டிருக்கிறது. அது பறப்பது போல அடிக்கடி இறகுகளை விரித்து மூடிக்கொள்ளும்போது இந்த உலகம் பாதி திறந்தும் மூடியதுமாக அசைகிறது. ஞானமேரியின் பையன், அந்தோனி பேக்கரிக்காரர் இவர்களெல்லாம் உயிர் பிழைத்து அவரவர் வேலையைப் பார்க்க போய்விட வேண்டும் என்று சேவியர் பிராத்தித்தார். விண்ணகத்திலிருந்து கிறிஸ்து அவர் முன் மூன்று புதியர்வர்களுடன் தோன்றி “இவர்ளை நீ உயிர்தெழச் செய்வாய்” என்று ஆசீர்வதிக்கிறார். பிறகு நிறைய கழுதைகள் பொதிகளுடன் விண்ணகத்தின் பாதையில் நடக்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் கழுதைமீது பயணக்களைப்பில் சாய்ந்து உறங்குகின்றன. சட்டென அவர்களெல்லாம் எழுந்தமர்கிறார்கள். ஏன் திடீரென்று எழுகிறார்கள் “பொறுங்கள்” என்று சேவியர் சத்தம் போடுகிறார். அதற்குள் உத்திரியராசு வந்து எழுப்பிவிட்டான். பூசைக்கு நேரம் ஆகிற்று தூங்க வேண்டாமென்று சொல்லியும் நீங்கள் கேட்காமல் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறீர்களே என்று கடுமையாக சத்தம் போட்டான். கழுதைகளில் அமர்ந்திருந்தவர்களெல்லாம் அவனை நோக்கித் திரும்பினார்கள். என்ன கனவு?
“எல்லாம் வந்துட்டாங்க போங்க.” என்றான். தேவாலயத்தில் ஒற்றை மணியின் சத்தம் கேட்டது. சேவியர் தலையைத் தூக்கிப் பார்த்தார். ஒரு சில உருவங்கள் தேவாலயத்தின் பின்புற வாசலில் நின்றுகொண்டிருந்தன. முகத்தைக் கழுவிவிட்டு அங்கியை அணிந்து வெளியே வந்தார். பளீரென அலுமினியப் பாத்திரத்தில் விழுவதுபோல வெயில் கூசியது. எந்தப் பக்கம் திருப்பினாலும் வெயில் முன்னால் வந்து நிற்கிறது “நரகம்” என்று சபித்தார்.
சேவியரைப் பார்த்ததும் அவர்கள் வணங்கினர். வெகுநேரம் காத்திருக்க வேண்டும் முகத்தில் களைப்பு அதிகம். உள்ளே சிறிய சவப்பெட்டியில் சிவப்பாக ஞானமேரியின் பையன். பன்னிரெண்டு அல்லது பதிமூன்று வயது இருக்கலாம். சட்டென அவனது உருவம் அவரை நிறுத்திற்று ஆனால் அவர் அதை அதிகம் கவனிக்கக்கூடாதெனத் திருப்பலி மேடைக்கு விரைந்தார். அடக்கத்திருப்பலியை நடத்திய இருபது நிமிடத்தில், அவரால் அவ்வளவு நேரம்தான் நடத்த முடிந்தது, அதற்குள் அவனை நான்கு முறை திரும்பிப் பார்த்திருப்பார். தடித்த உதடுகள் அவனுக்கு. உடலுக்குப் பொருந்தாத அரைக்கால் சட்டை, பெட்டிக்குள் இடமில்லாத மாதிரி உடலை வசதியாக வைக்க முடியாமல் கைகள் ஒடுங்கிக் கிடந்தன. பள்ளியை விட்டு வந்து அம்மாவை ஏமாற்ற கதவு மூலையில் ஒளிந்திருப்பது போல இருக்கிறான். முகத்தில்கூட அந்தக் கள்ளச் சிரிப்பை மறைக்க முடியாமல் மூடியிருக்கிறான்.
அங்கு மொத்தம் பத்து பேர்கள்தான் இருந்தார்கள். ஞானமேரியை சேவியர் தேடினார். அவளை அங்கு காணவில்லை. பெட்டிக்கு அருகே இருந்த இரண்டு பெண்களுக்கும் முகத்தில் கண்ணீர் காய்ந்தச் சுவடைத் தவிர பெரிதாக அழுதிருக்கவில்லை. இவ்வளவு அழகான மகனைப் பெற்றவள் நிச்சயம் இந்தப் பெட்டிக்கு அருகே நிற்கமாட்டாள் என்று நினைத்துக்கொண்டார்.
கல்லறைத்தோட்டம் அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம். எல்லோரும் மெல்லக் கிளம்பினார்கள். டிவிஎஸ் வண்டியுடன் யாரோ ஒருவர் வந்து நின்றார். அவர்தான் கூறினார், “இன்னாசிமுத்துவை நாளைக்குத்தான் அடக்கம் செய்கிறார்களாம்”. சேவியருக்கு அது மிகுந்த சோர்வை அளித்தது. “நாளையும் வர வேண்டுமா” என்று கேட்டார். தன்னிடம் கேட்கவில்லை என்பதுபோல அவன் காட்டிக்கொள்ளவில்லை. “விண்ணகத்தை யாரும் விரும்புவதில்லை.” அவர் சிரித்துக்கொண்டார். சாய்ந்தரம் வெயில் இறங்குவது அவரைப் பிடித்து யாரோ தள்ளுவதுபோல அழுத்திற்று. இரண்டு கைகளையும் தூக்கி புருவத்திற்குமேல் சாளர விதானமாக்கினார். இருந்தும் சாலையைப் பார்க்க முடியவில்லை. சற்று கண்களை மூடிக்கொள்ள யாரிடமோ அனுமதிக் கேட்பதுபோல பணிந்தார். வண்டி ஓட்டுபவரின் முதுகோடு சாய்ந்துகொள்வது இதமாக இருந்தது.
0
கல்லறைத்தோட்டத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அதன் தெற்குப் பகுதியில் ஒரு சிறிய குண்று அதன்மீது கிறிஸ்து நின்றபடி கைகளை உயர்த்தி அவர்களை வரவேற்றார். கிட்டத்தட்ட தோட்டத்தில் அத்தனை இடங்களும் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டன. எல்லாமே கரிய பளிங்குகளால் குடும்பம் குடும்பமாக சவங்களை அடுக்கி வைக்க ஏதுவாக மாறிவிட்டிருந்தன. கிறிஸ்து நிற்பதற்கு அருகே இருந்த சிறிய முக்கோண வடிவ இடத்தைத்தான் செபாஸ்டினும் சவேரியாரும் ஞானமேரியின் பையனுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். குழி எடுக்கப்பட்டு இருந்தது.
சேவியர் அவர்களைக் காத்திருக்கும்படி கையை உயர்த்திவிட்டு, அங்கிருந்த சிறிய வழிபாட்டுக்கூடத்துக்குள் இருந்த கழிவறைக்குச் சென்றார். சிரமத்துடன் மூத்திரம் பிரிந்தது. இன்னும் இரண்டே இரண்டுதான். அதன்பிறகு எந்த ஆத்மாக்களையும் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடாது. இந்த ஆன்மாக்கள் எல்லாம் பரலோகத்தில் எப்படி இருக்கும்? உண்மையிலேயே பரலோகம் என்கிற ஒன்று உண்டா? நாம் அனைவரையும் ஏமாற்றுகிறோமா? அப்படி ஒன்று இருக்குமானால் அதன் பருவநிலை எப்படி இருக்கும்? நிச்சயம் இதைவிட அதிகம் வெயில் இருக்காது. அப்படியென்றால் தகதகவென வெந்துகொண்டிருக்கும் இந்த நிலம்தான் நரகம். ஆக நரகம் என்று ஒன்று விண்ணகத்தில் இல்லை. அவர் சிரித்துக்கொள்கிறார். சிறுநீர் சொட்டி நிற்கவில்லை. இப்படியே நின்றால் யோசனையும் இந்த சிறுநீரும் நிற்கப்போவதில்லையென்று சேவியர் மெல்ல அங்கிருந்து இறங்கி வந்தார். வெயில் சற்று தணிந்திருந்தது. ஆனால் வந்தவர்கள் யாரையும் காணவில்லை. அவருக்கு ஒன்றும் புரியாமல் அவசரமாக அவர்களைத் தேடினார். செபாஸ்டின் அவரது பதற்றத்தைப் புரிந்தவனாக கையிலிருந்து மண்வெட்டியுடன் வந்து “இங்கிருக்கிற நாலைந்து பேர்தான் ஃபாதர். அந்த அம்மா, நீங்க, அப்புறம் நாங்க மூனு பேர். அதனால் குழி மந்திரிச்சுடுங்க சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு போயிரலாம்” என்றான். தேவாலத்திலிருந்து சவப்பெட்டியுடன் வந்த ஐந்து ஆறு பேர்களும் கிளம்பிவிட்டனர். ஃபிரான்ஸிஸ் சேவியருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரவருக்கு ஆயிரம் வேலைகள் போல. அவனைப் பிடித்தபடி மெல்ல இறங்கி வந்தார்.
அப்போதுதான் அந்தப் பெண் ஞானமேரியை அருகில் பார்த்தார். அழுவதுமாதிரியே தெரியவில்லை மெல்ல விசும்பும்போது உடல் அதிர்வது தோள்மூட்டுகளில் தெரிகிறது அவ்வளவுதான். சேவியர் குழி மந்திரிப்பதற்காக புனித நீரை தெளித்துவிட்டு “ஜெபிப்போமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நீர் கல்லறையில் மூன்று நாள் துயில் கொண்டதால்” அவர் உச்சரித்துக்கொண்டிருக்கையில் திடுக்கிட்டு விழிக்கும் நாயைப் போல ஞானமேரி பதறி எழுந்தாள். சேவியர் “என்ன ஆச்சு?” என்று கேட்டார் புரியாமல்.
அவள் “யாருக்கு ஜெபிக்கிறீங்க” என்று ஒரு சுற்று நான்கு பேரையும் பார்த்துவிட்டு கேட்டாள். நான்கு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கொண்டனர். சவேரியாருக்குக் காது கேட்காததால் அவரும் அதே அதிர்ச்சியில் இருந்தார். சின்னப்பதாஸ் “உங்க பையனுக்குதான் அவனுக்கு இறுதிப்பூசையைத்தான் ஃபாதர் செய்றார்” என்றான்.
“அவன் தூங்குறான் ஃபாதர் ” என்றாள் ஞானமேரி குழந்தைபோல சிரித்தபடி.
மூவரும் திடுக்கிட்டுப்போனார்கள். சவேரியார் என்ன என்று தாஸைக் கேட்டார். அவன் இரு என்று சைகைச் செய்தான். ஃபாதர் சேவியர் பெருமூச்சு விட்டு மீண்டும் “இவ்வுலக வாழ்விலிருந்து அழைத்துக்கொள்ள” என்று தொடங்குவதற்குள் அவள் மறுபடியும் “தூங்குறான் ஃபாதர் தூங்குறான் ஃபாதர்” என்று கூச்சலிட்டாள். அவர் நிறுத்திவிட்டு அவளை ஏறிட்டார்.
அதற்கு அவள், “தூங்கற பிள்ளைய எதுக்கு இங்க தூக்கிட்டு வந்திங்க. மதியம் எப்போதும் அவன் நல்லா தூங்குவான். சாந்தரம் ஆறுமணிக்குத்தான் எழுந்திரிப்பான். நான் அவன தொந்தரவு பண்ண மாட்டேன். இந்த வெயில்ல முழிச்சிருந்து என்ன பண்ண முடியும்? வெயில் கொஞ்சமா அடிக்குது?” என்று பேசிக்கொண்டே இருந்தாள். தாஸ் விசயத்தை கிழவர் சவேரியாரிடம் சொன்னான். கிழவர் சிரித்தார். “சித்த பிரமை ஃபாதர்” இரண்டு தடவை சத்தமாக உச்சரித்தார்..
ஃபாதர் சேவியர் விவிலியத்தை அருகிலிருந்த கல்லறைமீது வைத்துவிட்டு அவளிடம் “யேசுராஜ் என்ன படிக்கிறான்?” என்றார். அவள் அதற்கு பதில் சொல்லாமல் கடைக்குப் போகுறவரைக்கும் தனக்குத் தூக்கம் வருவதாக அனத்திக்கொண்டிருதானென்றும் அவள் தாழ்போட்டு தூங்க வேண்டாமென்று எச்சரித்தைக் கேட்டபடி திரும்பி வரும்போது கதவைத் திறந்து வைத்து படுத்திருந்ததாக அப்படியே ஒரு கதையைப்போல சொல்லிக்கொண்டிருந்தாள். அந்தப் பையன் ஞானமேரியின் உயரம்தான் இருக்க வேண்டும். அது நல்ல உயரம்தான் ஆனால் எதற்கு அரைக்கால் சட்டை அணிந்திருக்கிறான்?. அவர் ஞானமேரியை கவனித்தார். அவள் எங்கோ பார்த்து வெறிக்கிறாள் வியர்வை காதோரத்தில் இறங்குகிறது துடைத்துக்கொள்கிறாள். பிறகு விழிகள் சுழல்கின்றன. வந்ததிலிருந்து அப்படியேதான் இருந்தாள். என்னதான் நினைக்கிறாளென்று ஊகிக்க முடியவில்லை. எரிச்சலாக இருந்தது சேவியருக்கு.
“இப்போ என்ன பண்ணலாம்?” ஃபாதர் திரும்பி சவேரியாரிடம் கேட்டார். அவருக்குக் காதில் விழவில்லை. மண்வெட்டியில் பூசியிருந்த சகதியை கால் விரலால் நிமிண்டிக்கொண்டிருந்தார். சின்னப்பதாஸ் அவரை உலுக்கி ஃபாதர் பக்கம் திருப்பினார். .ஃபாதர் சத்தமாகக் கேட்டார். “இப்போ என்ன பண்ணலாம் சவேரியாரே நேரம் ஆகுது? ஞானத்தாய் ஞானத்தந்தை யாரும் இருக்காங்களா? உங்களுக்கு இவங்க சொந்தக்காரங்களை யாரையும் தெரியுமா?” சவேரியார் க்ளுக்கெனச் சிரித்து உதட்டைப் பிதுக்கினார்..
“தூங்கற பையன் ஃபாதர் என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம் கேட்டா என்னங்க?” நியாயம் கேட்பதுமாதிரி எல்லோரது முகத்தையும் ஞானமேரி பார்த்தாள். அவள் முகம் யாரையோ எதிர் பார்த்திருப்பதுபோல அவசரத்தில் இருந்தது. பேசி முடிக்கும்போது ஒவ்வொரு முறையும் அதிகமாக வியர்த்துவிடுகிறது.
ஃபாதர் கையைத் தூக்கி அமைதி என அவளிடம் காட்டியதும் மறுபடியும் எங்கோ திரும்பினாள்.. இந்த முறை அந்திவெயில் அவள் முகத்துக்கு நேராக விழுந்து அவளை அழகாகக் காட்டியது. செபாஸ்டின் குழியைவிட்டு மேலே வந்து ஃபாதருக்கும் தாஸூக்கும் கேட்கும்படி “நான் இந்தம்மாவை அழைச்சுட்டு அந்தப்பக்கம் போறேன் நீங்க காரியத்த முடிச்சுடுங்க வேற வழி இல்லை” என்று முணுமுணுத்தான். சேவியர் அவனை முறைத்தார். “இறந்துக்கிடக்கிற நாய்க்குட்டி பக்கத்துல நிற்கிற மாதிரி அந்தம்மா நகராமல் நிற்கிறப்ப என்ன பண்ண முடியும்?” தாஸ் கேட்டான். அப்படித்தான் அவள் நிற்கிறாள். எப்போதாவது இறந்து கிடக்கிற குட்டி நாய் அருகே நிற்கும் நாயைப் பார்த்திருக்கிறேனா என்று ஃபாதர் சேவியர் யோசித்தார். பார்த்த நினைவு உண்டு. இதே கல்லறைத்தோட்டத்துக்கு வருகிற நெடுஞ்சாலையில்தான். குட்டி நாய் கிழிந்த சிறிய சுருக்குப் பை மாதிரி. வாகனங்களின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் அதன் உடலைப் பிய்த்து எடுத்துப் போகின்றன. பெரிய நாய் சாலைக்கு வர முடியாதபடி அங்கும் இங்கும் அலைகிறது. மடிக்கு அடியில் இரண்டு குட்டிகளுக்கு காம்பைக் கவ்வ போட்டி.
“ஃபாதர் நீங்களே விசயத்தைச் சொல்லிடுங்க இப்படியே எவ்வளவு நேரம் நிற்கறது?” செபாஸ்டின் சொன்னான். பிரான்ஸிஸ் சேவியர் அவளிடம் உன் பையன் இறந்துவிட்டான் என்பதைச் சொல்ல அருகே சென்று “அம்மா ஆண்டவர் உம்மோடு எப்போதும் இருப்பார்” என்று சிலுவையிட்டு சொல்ல வந்ததை ஆரம்பிப்பதற்குள் அவள் முழந்தாளிட்டு மன்றாட்டைத் தொடங்கினாள். “என்னுடைய மகன் நன்றாகப் படிக்க வேண்டும் வளர்ந்து பெரியவனாக இந்த ஊருக்கு நன்மை செய்ய வேண்டும். உங்களை மாதிரி் சாமியாராக அவர் வர வேண்டும். அவனை நிறைய அற்புதங்களுக்கு உரியவனாக்குவீர்” என்று சத்தமாக செபம் கூறி கேட்டுக்கொண்டாள். அவருக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. மூச்சு வாங்கியது வெயில் தணிந்தும் வெட்கை அதிகம். அவளைத் தொட்டு எழுப்பி “அடக்கத்திருப்பலி முடிந்தது அவ்வளவுதான். இந்த குமாரனை அடக்கம் செய்துவிட்டு கிளம்புவோம். இந்த உலகில் யாரும் இறப்பது இல்லை. இந்த வாழ்வு நம் ஆன்மாவை விடுதலைச் செய்யவே போராடுகிறது” அவர் முடிப்பதற்குள்,
அவள் குறுக்கிட்டு “ஆன்மா உறங்குவதில்லையா ஃபாதர்?” என்று கேட்டாள். அவருக்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஒரு குழந்தைமாதிரி இருந்தது அவளது முகம். உண்மையில் இவள்தான் நோயுற்றவள். புத்தி பேதலித்தவள். பையன் யேசுராஜ் இத்தனை நாளாக இவளைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். அவருக்கு யாரோ இவர்களைப் பற்றி கூறியிருக்கிறார்கள். அவனுக்கு இதய நோய் அத்துடன் அவனால் சரியாக நடக்க முடியாது. கால்கள் மணல் பையைப் போன்று உணர்ச்சியின்றிக் கிடக்கும். நடப்பதற்கு இவள்தான் அவனது கால்கள். இவளுக்கு மகனைவிட வயது குறைவு. அவனுடன் விளையாடும் சிறுமி. அவனே இவளது நல்ஆயன்.
ஞானமேரி பெட்டி அருகே சென்று “யேசு யேசு” என்று அவன் காதில் பட்டும் படாததுபோல மெல்ல அழைத்துவிட்டு பிறகு, எழட்டும் அவசரமில்லையென்பது மாதிரி கைகளை உதறிக்கொண்டாள்.
ஃபிரான்ஸிஸ் சேவியர் அவர்களைப் பார்த்தார். செபாஸ்டின் பக்கத்துக் குழியினடியில் வேறு ஏதும் கல்லறை இருக்கிறதாவென ஆழம் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு கடப்பாறையால் அங்கிருந்த மேடு பகுதியில் நான்கு இடத்தில் அடையாளத்திற்கு நான்கு குத்து வைத்துவிட்டு சவேரியாரை அழைத்துக் காட்டினான். சவேரியார் அவனுக்குத் தலையாட்டுகிறார். சேவியருக்கு அவர்கள் செய்வது புரியவில்லை. எதற்காக இன்னொரு குழிக்கு இடம் பார்க்கிறார்கள். இவர்கள் யாருக்காக வேலைப் பார்க்கிறார்கள்? அதுவும் இந்த சவேரியார் செவிட்டுக் கிழவனை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. நினைப்பதைத்தான் செய்வார். யாருக்கு இன்னொரு குழியைத் தோண்டப் போகிறார்கள்?
“என்ன செய்றீங்க? நான் சொல்றத செய்யாம நீங்க எண்ண பண்றீங்க சவேரியாரே இது யாருக்கு? எனக்கா?” ஃபாதர் சேவியர் ஆத்திரமாகக் கத்தியதும் சவேரியார் பதறிப்போய் அருகே வந்தார். “ஐயோ சாமி. நம்ப அந்தோணி பேக்கரி இன்னாசியாருக்கு” உடல் தள்ளாடியது எச்சிலை விழுங்கினார். சிலசமயம் இப்படி நடிக்கவும் செய்வார் “நாளைக்கு காலையில் முதல் பூசை இருக்கு எப்படியும் மதியம் பொழுது இறங்கிடும் வெயில் அதிகமா இருக்கு அதான் குழி எடுத்து வைக்கலாம்” ஃபாதருக்கு மரியாதைக் கொடுப்பதற்காக சற்று நிறுத்தினார். “அவங்க இங்க குழி வெட்டச் சொன்னாங்களா?” அவர் கேட்டதற்கு தலையாட்டியதுடன் வெட்டலாமா என்பதுமாதிரி அனுமதி கேட்கும் பாவனைக்கு மாறினார். ஃபாதர் சரி செய்யுங்க என்று தலையசைத்துவிட்டு ஞானமேரியின் பக்கம் திரும்பி “உங்களுக்கு வேண்டிவங்க யாரும் இல்லையா?” அவள் பதில் சொல்லவில்லை பிறகு எதற்கு இந்தக் கேள்வியென விளங்காமல் நின்றார்..
சவேரியார் மற்ற இருவரிடம் திரும்பி “இன்னைக்கு எதுவும் நடக்காது. வாய பார்க்காம அடுத்த வேலைய பாருங்க ” என்றார் நக்கலாக..
மூன்று பேரும் அடுத்தக் குழியைத் தோண்ட ஆரம்பித்தார்கள். நாளை வரப் போகிற சடலத்திற்காக இன்றைக்கு ஒரு குழி. ஆனால் இது நியாயம் இல்லை. இந்த உலகில் எதுதான் நியாயம்? இறந்தவர்களை உயிர்மீளச் செய்வதுபோல உறங்குபவர்களை புதைக்கத்தான் வேண்டும். இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இங்கு இப்படி நிற்கப் போகிறோம் என்று நினைக்கும்போதே ஃபாதர் சேவியருக்கு சலித்தது. பன்னீர் மரத்தடியில் அமர்ந்தார். அந்த இடம் ஆசுவாசமாக இருந்தது. சின்னஞ்சிறு மெழுகு வர்த்திகள் எரிவதுபோல பூக்கள் பூத்திருந்தன. சவப்பெட்டி அருகே உறவினர்கள் யாரும் இல்லை. ஞானமேரி யாருக்கோ காத்திருப்பதுபோல கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்கிறாள். கல்லறை பராமரிப்பாளர்கள் மூன்று பேர் மட்டும் அங்கு. ஒரு உடல் அடக்கம் செய்யப்படுதற்கான எந்த சுவடுகளும் இல்லை. காக்கைகளும் நாய்களும்கூட அவ்விடத்தில் ஒரு சவப்பெட்டியையும் நான்கு பேரையும் சட்டை செய்யவில்லை. கல்லறைத்தோட்டம் திறந்திருப்பதை சாலையில் கடப்பவர்களும் நின்று பார்க்காமல் போகிறார்கள். இந்தக் காட்சியே அவரை அது இறப்பு இல்லையென்று நம்ப வைக்க முயற்சித்தது. இப்படியே இது நீண்டால் இந்த தருணத்தை அது பொய்யாக மாற்றக்கூடும். தன்னையும் அதன் மாயத்திற்குள் இழுத்துக்கொள்ளும். பிரான்ஸிஸ் சேவியர் பிரக்ஞையைப் பிடித்து வைத்திருந்த அவ்வெண்ணத்தை உதற “ஹோய் ” என்று அவர்களைப் பார்த்துக் கத்தினார். தாஸ் திடுக்கிட்டு தோண்டிக்கொண்டிருந்தக் குழிக்குள்ளிருந்து தலை தூக்கினான். ஃபாதர் அவனிடம் “ஞானமேரியை வரச் சொல்” என்றார்.
முக்கியமான விசயத்தைக் கேட்கும் ஆர்வத்துடன் கையைக் கட்டிக்கொண்டு வந்தாள். நல்ல பசியில் வாடியதுபோன்று முகம் மாறிவிட்டிருந்தது.
“மேரி உன் மகன் தூங்கட்டும். பரலோக ராஜ்யத்தில்தான் அவனை எழுப்ப முடியும். இந்தத் துயில் நீ எப்போதும் பார்க்கும் மதியநேர இளைப்பாறல் கிடையாது. இது மிக நீண்டது. இவ்வுலகத்திலிருந்து விடுபட கிடைக்கும் இவனது விண்ணகத்தின் நித்திரை இது. இதை இப்படித்தான் உறங்கப் பண்ண வேண்டும்” என்று அருகிலிருந்த கல்லறையைச் சுட்டினார். “எந்தச் சத்தமும் உறக்கத்தை களைத்துவிடாதபடிக்கு பெட்டிக்குள் (சவப்பெட்டி என்று உச்சரிக்காமல் ஜாக்கிரையாகத் தவிர்க்கிறார்) பத்திரமாக உறங்க வைக்கும் முறை. பரலோக ராஜ்யத்தில் இவனை எழுப்ப வல்லவர் கர்த்தர் ஒருவரே. கர்த்தர் இவனுக்காக தேவதூதர்களுடன் காத்திருக்கிறார். நாம் தாமதிப்பது அவரை அவமதிப்பதற்குச் சமம்.” கடைசி சொற்களை அழுத்தமாக உச்சரித்தார்.
ஞானமேரி சற்றே தெளிந்த முகத்திற்கு மாறினாள். சேவியர் அவளது பதிலுக்காகக் காத்திருந்தார். செபாஸ்டின் அவள் அருகே வந்து “ஆமா ஞானமேரி உன் பையனை கர்த்தர் எழுப்புவார்” என்று சத்தமாக இருமுறை கூறிவிட்டு “ஃபாதர் சொன்னது புரியுதா?” என்று கேட்டான். அவள் மெல்ல பயந்தபடியே, சத்தமாகக் கூறினால் தவறாகிவிடுமோ என்கிற தயக்கத்துடன் “அம்மாவைவிட மகனை வேறு யார் எழுப்ப முடியும் சொல்லுங்க? என்று முணுமுணுத்தாள்.
உடனே செபாஸ்டின் “சர்வவல்லமைப் படைத்த கர்த்தரால் முடியும். தேவனால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை. அவர் நிச்சயம் எழுப்புவார். இந்த உலகைப் படைத்தவர் அவர்தானே” அவள் அவனது குரலைக் கேட்காமல் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள்.
தாஸ் அவரிடம் “இப்போ என்ன செய்றது ஃபாதர்?” என்றான் சோர்ந்துபோய். அவருக்கு ஆத்திரமாக வந்தது. “நீங்கள் எடுக்க வேண்டிய குழியை எல்லாம் எடுத்தாச்சா? போய் உட்காருங்க” என்றார் கோபமாக. செபாஸ்டின் அதற்கு “ஃபாதர் எவ்வளவு நேரம் இப்படியே போராடுறது. பேசாம பெட்டிய இறக்கிடலாம்” என்றான்.
“ஒரு தாயின் கடைசி சொற்களுக்கு இடம் கொடுக்கனும்னு பையிள்ல சொல்லியிருக்கு. வந்த வேலைய முடிச்சுட்டு கிளம்ப முடியாது. கொஞ்சம் பொறுங்க” அவர் பொறுமையிழந்து ஒரு கல்லறையில் அமர்ந்து சிலுவையின்மீது முதுகைச் சாய்த்தார். வெயில் சரிந்துவிட்டிருந்தது. மேற்கில் அந்திச்சூரியன் மகிழிச்சியுடன் அடக்கம் பெற்றிருந்தது. மற்ற மூவரும் அவளைச் சுற்றி நின்று “மகனை கர்த்தர் எழுப்புவார் நாம் வீட்டுக்குத் திரும்புவோம்” என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தனர். அவள் சலிக்காமல் தன்னால் மட்டுமே மகனை எழுப்ப முடியும் என்று வாதாடினாள். விதி தன்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறதை எண்ணி சேவியர் அலுத்துக்கொண்டார். தேவாலய உச்சியின் அரச மர இலைகள் நினைவுக்கு வந்தன. அவை அசையும் காட்சி தோன்றியது. இன்னும் இரண்டு முறை சின்ன ஃபாதர் மைக்கேலிடம் மன்றாடியிருந்தால் இன்றைக்கு இங்கு வந்திருக்க வேண்டாம். குருத்து நிகழ்ச்சியில் களிப்புற்றிருக்கும் பாதிரியார்களைச் சபித்தார். பிறகு தன்னையும், இந்த உலக வாழ்வை, ஞானமேரியை, யேசுராஜை, அனைவரையும்…
ஞானமேரி அவர்களிடம் “நான் தூங்கி எழுந்திரிச்சா அவனும் எழுந்துடுவான்” என்று அவர்கள் வற்புறுத்தியதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். சட்டென்று பக்கத்திலிருந்த கல்லறைச் சலவைக்கல்லில் படுக்கப் போனாள். சேவியர் அவளிடம் அங்கு படுக்க வேண்டாமென்றும் உன் மகனோடு அருகில் படுக்க உனக்கும் ஏற்பாடு செய்கிறேனென்று எழுப்பினார். பிறகு அவர்களை நோக்கி மன்றாட்டுக்கூடத்தில் உடைந்து கிடக்கும் சவப்பெட்டி ஒன்றை எடுத்து வாருங்கள் என்றார். அவர்கள் குழப்பத்துடன் நின்றனர். தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. உயிர்தெழுதலிலும் வாழ்விலும் நான் உங்களோடு இருக்கிறேன் என்கிற வரிகளைச் சொல்லி அது எழுதப்பட்டிருந்த மன்றாட்டுக் கூடத்தைக் காட்டினார். அவர்கள் சென்று ஒரு பழைய பெட்டியை எடுத்து வந்தார்கள்.
உடைந்த முன் பகுதியை மட்டும் ஆணி வைத்து இறுக்கியதும் அது உறுதியாக மாறியது. பெட்டியைக் காட்டி சேவியர் சொன்னார் “பரலோக ராஜ்யத்தில்தான் உன்னை எழுப்ப முடியும். இந்தத் துயில் நீ எப்போதும் பார்க்கும் மதியநேர இளைப்பாறல் கிடையாது. இது மிக நீண்டது. இவ்வுலகத்திலிருந்து விடுபட கிடைக்கும் உனது விண்ணகத்தின் நித்திரை. இதை இப்படித்தான் உறங்கப் பண்ண வேண்டும்” அவள் சேவியரின் சொற்களைப் பெரும் பாக்கியத்துடன் வாங்கிக்கொண்டாள். அவளது நெற்றியில் சிலுவையிட்டு போய் படு என்று காட்டினார். அவள் குழிக்குள் வைத்திருந்த தனது பெட்டியைக் குனிந்து நோக்கி தன்னுடைய பெட்டியை வைத்தப்பின் தன் மகனை வைக்குமாறுக் கேட்டுக்கொண்டாள். சேவியர் சம்மதம் எனத் தலையசைத்தார். செபாஸ்டினுக்கு திக்கென்று ஆனது. “ஃபாதர்” என்று சத்தமாகக் கூச்சலிட்டான். மற்ற இருவரும் பொறு என்று அவன் தோளை அழுத்தியதற்கு திமிறி கைகளை உதறிவிட்டு அவளைத் தடுக்கப் பாய்ந்தான். சேவியர் அவனிடம் “நீ வெளியேறு செபாஸ்டின்” என்று கட்டளையிட்டார். மறுப்பு கூறாமல் அவன் மற்றவர்களைப் பார்த்தான். அவர்கள் அவன் குரலுக்குச் செவி சாய்க்காமல் சமைந்துபோய் அக்குழியின் முன் நின்றனர். நடக்கப் போகும் அதிசயத்தைக் காணும் பேராவல் அம்முகங்களில். செபாஸ்டின் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து ஓடினான்.
காலி பெட்டியை மூடாமல் குழிக்குள் இறக்கச் சொன்னார் சேவியர். அது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் கேள்வி கேட்காமல் இருவரும் செய்தனர். ஞானமேரி மெல்ல இறங்கி பெட்டிக்குள் ஒருக்கழித்துப் படுத்தாள். தன் மகனைத் தட்டிக்கொடுப்பதுபோல கைகளை ஒரு சேர வைத்துக்கொண்டு கண்களை மூடினாள். அவளது பெட்டியின் கதவுகள் சாத்தப்பட்டன. பிறகு ஞானமேரியின் மகன் யேசுராஜின் பெட்டி இறக்கப்பட்டது. வெண்ணிற ஆட்டுக்குட்டி நிழற்தாங்கலில் கால் மடக்கி அமர்ந்திருப்பதுபோல் இருந்தான். அவனது முகம் இப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இல்லை இன்னும் சற்றைக்கெல்லாம் உறக்கம் களையப்போகிறது சேவியர் அதை அவர்களிடம் சுட்டிக்காட்டினார். தாஸ் உற்று நோக்கினான். சவேரியாரின் காதில் தாஸ் அதைச் சத்தமாகச் சொன்னதும் அவர் பதற்றத்துடன் “ஆமாம் ஆமாம்” என்று விரல்கள் நடுங்க நெஞ்சில் சிலுவை இட்டார். பெட்டியின் கதவைச் சாத்தும்படி சைகைக் காட்டியதும் கொக்கியைத் திருகினர். முதல் கைப்பிடி மண்ணை சேவியர் தூவிவிட்டு, தள்ளுங்கள் என்றதும் தாஸின் கைகள் நடுங்கின. அவன் சவேரியாரிடம் நீங்களே செய்ங்க என்று கேட்டான். அவரே வேக வேகமாக மண்ணைச் சரித்தார். பிரான்ஸிஸ் சேவியர் அந்த இடத்தில் சிலுவையிட்டு மெழுகு வர்த்தி ஏற்றினார். இருவரும் ஆளுக்கு ஒன்று ஏற்றினர். சவேரியாரிடம் இந்த இடம் முழுக்க ஏற்ற வேண்டும் நான் ஏற்றுகிறேன் நீங்கள் போய் இன்னொரு உடைந்தப் பெட்டியை எடுத்து வாருங்கள் என்றார். தாஸ் திடுக்கிட்டுப் போனான். அவன் உடல் வியர்த்திருந்தது. அங்கு வேறு பெட்டி இல்லையே என்றான். இருக்கும் பாருங்கள் என்றார் சவேரியார் அவனை அழைத்துச் சென்றார். மூடியும் பக்கவாட்டு பலகையும் உடைந்திருந்த பழைய பெட்டி ஒன்று கூளத்தில் கிடக்கிறது. கையிலிருந்த ஆணிகளையும் சணல் கயிறையும் வைத்து அதை திருத்தம் பண்ணினார்கள். அதற்குள் கல்லறைத் தோட்டம் முழுக்க இருட்ட ஆரம்பித்திருந்தது. மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தைத் தவிர வேற ஒளியே அங்கு இல்லை.
திருத்தம் பண்ணப் பெட்டியை வெட்டி வைத்த இன்னாசிக்கான குழிக்குள் வைக்கச் சொல்லிவிட்டு சேவியர் தனது மீது புனிதநீரைத் தெளித்துவிட்டு கல்லறைத்தோட்டத்திற்கு சிலுவை இட்டார். பிறகு உள்ளே மெல்ல இறங்கினார். அவரது கையப் பிடித்து தாஸூம் சவேரியாரும் உதவியதும் ஃபாதர் சேவியர் பெட்டியில் படுத்தார். மூச்சு வாங்கியது. எலிக்குஞ்சுகளெல்லாம் இப்போது பயங்கரமாகக் கத்தத் தொடங்கின. சற்றைக்கெல்லாம் எல்லாம் பெட்டிக்குள்ளிருந்து வெளியேறிவிடும். தனது கையிலிருந்த புனித நீர் தெளிப்பானை சவேரியாரிடம் வீசியெறிந்ததுவிட்டு கண்களை மூடிக்கொண்டு “பரலோக ராஜ்யத்தில்தான் இனி உன்னை எழுப்ப முடியும். இந்தத் துயில் நீ எப்போதும் பார்க்கும் மதியநேர இளைப்பாறல் கிடையாது. இது மிக நீண்டது. இவ்வுலகத்திலிருந்து விடுபட கிடைக்கும் உனது விண்ணகத்தின் நித்திரை. இதை இப்படித்தான் உறங்கப் பண்ண வேண்டும்” என்று முணுமுணுத்து முடித்ததும் அவரது கைகள் தானாக பெட்டியின் கதவைச் சாத்திக்கொண்டன. சவேரியார் புனிதநீரை அவர்மீது தெளித்துவிட்டு மண்ணைத் தள்ள ஆரம்பித்ததும் தாஸ் வேகமாக மண்வெட்டியால் குவித்த மணலை சரித்தான். இப்படித்தான் அந்தத் கல்லறைத்தோட்டத்தில் கிறிஸ்துவின் சிலைக்கு அருகே ஒரு பாதிரியாரின் துயில்கல்லறை உருவானதென்கிற கதை எல்லோராலும் பின்னாளில் உச்சரிக்கப்பட்டது.