எஞ்சுதல்
எஞ்சுதல்
காய்ந்த மருதாணியை உடையாமல் எடுக்க வேண்டுமென்கிற ஆட்டத்தில் நீலா மூன்றாவது முறையாகத் தோற்றபோது மஞ்சு செல்லமாக உதட்டைச் சுழித்துக் காட்டினாள். அவள் செல்லச் சிணுங்கலோடு கடைசி விரலிலிருந்த மருதாணித்தொப்பியைப் பதற்றத்துடன் உருவிக்கொண்டிருந்தாள். விரல்களின் சிவப்பு முகங்கள் மஞ்சுவிற்கு பரவமூட்டின. மெகந்தி கூம்புகளை அவள் எப்போதும் விரும்பியதில்லை. மருதாணியிலைகளில் மட்டுமே அந்தரங்க மணமிருப்பதாக உணர்ந்தாள். பச்சை வாசனையை நுகர்ந்துவிட ஆசை எழுந்தும் நீலாவின் ஆட்டம் முடிவதற்காகக் காத்திருந்தாள். இம்முறை செம்பருத்தி சிவப்பு. போனமுறை கருஞ்சிவப்பாகச் சிவந்திருந்தது. கரிய ரத்தம் போலிருப்பதாக சரவணவேலு சொன்னான். அவளின் கரியநிறத்திற்கு மென்மையான சிவப்பதே அழகு என்றான். அன்றைக்குச் சாப்பிடும்போது மருதாணிக்கையால் பிசைந்தூட்டச் சொல்லிக் கேட்டதும் அவளுக்கு என்னமோ போலாகிவிட்டது. அவள் சிரித்துக்கொண்டாள்.
நீலா சிதறிய கூடுகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு மஞ்சு கையை இழுத்துப் பார்த்து “செவந்தது போதுமா?” என்று கேட்டாள். மஞ்சு தலையாட்டினாள். தேங்காய்எண்ணெய் விட்டு தேய்ப்பதற்குமுன் உள்ளங்கைகளை அப்படியே முகத்தில் பொத்தி போதும் போதுமெனுவரையில் அவ்வாசனையை நிறைத்துக்கொண்டாள். பெயர் தெரியாது பூவொன்றின் மகரந்த வாசம்.
சரவணவேலுவும் மெய்யம்மாவும் சீமைக்கருவேலப் பாதை வழியே ஏறிவந்துகொண்டிருந்தார்கள். வானம் மழை வருவதற்காக திரண்டிருந்தது. தேர்த்திருவிழாவிற்கு தூறலாவது பெய்துவிடும். அவர்களைப் பார்த்ததும் ஜிம்மி வாலைத் தூக்கிக்காற்றி அடித்து உற்சாகமானது. அருகில் வந்ததும் கைகளைப் பற்றுவது போல் முன்னங்காலைத் தூக்கி நின்றது. அவன் பார்வை பட்டதும் கால் நகங்களில் பாலிஷ் பூசிக்கொண்டிருந்தவள் வெடுக்கென எழுந்துகொண்டாள்.
“யாரு இதுல பொண்ணு. யாரு மணத்தோழி?”
நீலா, “யாருனு சொல்லனுமா உங்களுக்கு இவுகதான் பொண்ணு. நாந்தான் மணத்தோழி” என்றவள் மஞ்சு தலையைச் சாத்து முனகினாள். “சும்மாயிருடீ” என்று மஞ்சு அவளைக் கிள்ளி வைத்தாள். “ஆ” என்று கத்தியவள் “ஏக்கா இப்படி தேள் கொட்டுராப்புல கிள்ளுர நா என்னத்த சொன்னேன். புள்ள பெக்குற வர நீ புது பொண்ணு தானே”. என்றாள். சட்டென நீலா சப்தமாகக் கூறியதும் மஞ்சு சரவணவேலுவை ஏறிட்டுப்பார்த்து விழி அகலச் சிரித்தாள். சரவணவேலுக்கு நீலா ஏதோ மாற்றிச் சொல்லிச் சமாளிப்பதாக எண்ணினான்.
அம்மா நைலான் ஒயர்க்கூடையை எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள். சரவணவேலுவிடம் “நா முன்ன போறேன் நி அவள கூட்டிக்கிட்டு லவக்குனு வந்துசேரு. ஒம்பொண்hட்டிக்கு என்னமோ இன்னைக்குதான் விடிஞ்சுறுக்கு” என்று முனகியபடியேச் சென்றாள். அந்த முனகல் உதடுக்குள்ளே பாடுவது போல இருந்தது. சமயங்களில் அவள் மஞ்சுவைப் பாட்டு பாடியே நக்கலாகத் திட்டவும் செய்வாள். அது சரவணவேலுவுக்கு மட்டுமே தெரியும். திருவிழாவில் முளைப்பாரி எடுத்து வருகிறபோதுää நடுவில் மைக்கில் பாடக்கூடியது மெய்யம்மாள் மட்டும்தான்.
கல்யாணமான புதிதில் மஞ்சுவுக்கு சமையல் கைகளில் பிடிபடாமலிருந்தது. கிராமத்தில் பிறந்திருந்தாலும் அவளின் உப்பு காரக்கணக்கெல்லாம் அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் நாவில் ஒட்டவில்லை. சரவணவேலு சொன்னதற்கு “ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஒரு உப்பு புளி உண்டு ஆனா இங்க எவளோ அள்ளி போட்டாலும் பத்த மாட்டேங்குதுனா இனி நா மில்லுல போயி கூடைலதான் அள்ளியாறனும்” என்று அங்கலாய்த்தாள். மெய்யம்மாளோ அவள் சமையலைப் பாட்டாவே பாடிக்கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் மஞ்விற்கு அப்பாடல்கள் ஏதும் புரியவில்லை. ஒருவித ராகத்தோடும் சளியை இழுத்து விடுவதுபோல அக்குரல் இருந்ததால் கிழவிக்கு உடம்பு சரியில்லையென நினைத்துக்கொண்டாள். கொஞ்சநாளில் மெய்யம்மாளின் நய்யாண்டிப் பாட்டு கேட்டு பக்கத்து வீடுகளில் சிரித்தபோதே அதன் விஷமம் புரிந்தது. கோவத்தில், “கிழவிக்கு என்ன இந்த வயசுல காரசாரமா கேக்குதா” என்று பதிலுக்கு சீறி அடக்கினாள்.
சரவணவேலு வேஷ்டியை அவிழ்த்து கட்டிவிட்டு தலையை வாரிக்கொண்டிருக்கும் போது மஞ்சு கூப்பிட்டபடியே உள்ளே வந்தாள். கண்ணாடி முன் நிற்பதைப் பார்த்ததும் பக்கத்தில் நின்று சேலைலைத் தூக்கி கால் விரல்களைக் காட்டிக் கேட்டாள், “நகபாலிசு எப்படியிருக்குனு சொல்லவேயில்ல”. அவனுக்கு சட்டென ஒருவித கிறக்கம் ஆட்கொண்டதுபோல உணர்ந்தான். அறை முழுதும் மஞ்சு தலையிலிருந்த முல்லை பூவின் வாசம் குமைந்தது. அவளின் குறும்பு செய்கைகளைப் பார்த்தபடியே பீரோவிலிருந்து ஜாஸ்மின் சென்டை திறந்து அடித்தபோது அவள்ää “எனக்கு” என்று கையை உயர்த்தியவாறு அவன் நெஞ்சில் உரசி நின்றாள். சட்டென அவளின் அச்செய்கை அவனைச் சீண்டியது. அக்குளில் வியர்வை வட்டம். அவன் பார்வை அவளிடத்தில் பாய்ந்ததும் கண்களைத் தாழ்த்திக்கொண்டாள். விலகிக்கொள்வாளென்று நினைத்தவனுக்கு அவளின் அருகாமை பிரக்ஞையைக் கலைத்தது. அவளைத் தழுவிக்கொண்டான். அவள் கண்கள் அத்தழுவலை எதிர்பாராமல் மிரண்டன. பதற்றத்துடன் மறுக்க எத்தனித்தாள். மார்பில் அவள் முகத்தின் வெப்பத்தை உணர்ந்தான். மூச்சுக்காற்று ரோமத்தில் கூசியது. அவன் முகத்தை மருதாணிக்கை தள்ளியதுபோது அவளுடலில் குமைந்த அப்புதிய வாசனையை கண்டுபிடித்தான். அறைää வீடுää தெருää கோவில் எல்லாம் விலகி காற்றில் மிதந்தன. கோவிலில் தேர் கிளம்பியதன் வேட்டு அதிர்ந்தபோதே அவன் பிரக்ஞை மீண்டான்.
கதவிற்கு வெளியே செருப்பு தேய்கின்ற சப்தம் வந்ததும்ää “யாரோ” என்றாள் மெதுவாக. காற்றில் பேசும் குரல். அவன் கனத்திருந்தான் அவனை அணைத்திருப்பது கற்சிற்பத்தினை பிடித்திருப்பது போல மஞ்சு உணர்ந்தாள். மின் வெட்டியது போல அவனிடத்திலிருந்து நழுவி “நேரமாச்சு தேர் கௌம்பிருக்கும்” என்றாள் குரலை மெல்ல இழுத்து. செறுப்பு சப்தம் மீண்டும் வரவே, அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்து, வெளியே வந்து பார்த்தாள். ஜிம்மி பழைய செருப்பொன்றை சிமெண்டு தரைமீது ‘பரக் பரக்’ என தேய்த்து விiளாயடிக்கொண்டிருந்தது. சரவணவேலு அதன் அருகே அமர்ந்து நீண்ட செவிமடல்களை மடக்கித் தடவிவிட்டான். அது கண்களைச் சிமிட்டி வருடலை தவிப்புடன் வாங்கியது. நான்கைந்துமுறை அப்படிச் செய்ததும் அதுää வாலை பலமாக ஆட்டி தலையைத் தரையோடு தாழ்த்தி அவன் கால்களுக்குள் கொண்டு போனது.
“போலாம் வாங்க” மஞ்சு முந்தானையைச் சரி செய்தபடி வந்தாள். “அத உள்ள விட்டு சாத்திடுங்க பின்னாலயே ஓடிவரும்” என்றாள். சரவணவேலு கழுத்து பெல்டில் சங்கிலியை கோர்த்து வேப்ப மரத்தில் கட்;டினான்
“என்னஞ்சே இன்னைக்கு ரெம்ப சந்தோசமா இருக்க”
“நீங்க தான் சந்தோசமா இருக்கீக” கொசுவத்தை மடித்;து அடிவயிற்றில் திணித்தாள். வயிற்றின் மென் சதைக்குள் புகுந்தது. “நகபாலிசு நல்லாருக்குனு சொல்லவேயில்;ல”
“நல்லாத்தான் இருக்கு”
“ஆமா என்ன பாத்திங்ளோ” சொல்லிக்கொண்டே பைக்கில் ஏறிக் கொண்டாள்.
அவளை கண்ணாடியில் பார்த்தபடியே வந்தான். அவளின் கரிய முகம் இன்று வெளுத்திருந்தது. அவள் எப்போதும் ஒப்பனைகளை விரும்புவதில்லை. மூக்கு நெளிவுகள் நுணுக்கமாகத் தெரிந்தன. வெண்முத்துப் பதித்த மூக்குத்தி நெளிவிலமர்ந்து எட்டிப்பார்த்தது. அவன் சிரித்தவாறே வண்டியை ஓட்டினான். தார்ச்சாலை முழுவதும் தண்ணீர் மோர்ப்பந்தல் கொட்டகைகள் இருந்தன. பளீரென பட்டுச்சரிகை மிளிர சரசரவென ஒவ்வொருவரும் சென்றுகொண்டிருந்தார்கள்
மாரியம்மனை ஒவ்வொரு முக்கத்திற்கும் அழைக்கின்ற பாடல்கள் வெவ்வேறு குரல்களில் கலந்து ஸ்பீPக்கர்களில் ஒலித்தன. உச்சஸ்தாயில் எல்.ஆர். ஈஸ்வரியின் கார்வை அதிர்ந்தது. கோவிலைச்சுற்றி அலங்கார விளக்கு தோரணைகள் ஊரணிச் சுவர் விளிம்புகளில் நீண்டிருந்தன. மாலை வெயில் அதிகம் இல்லாதபோதும் மழை வருவதற்கான குளிர்ச்சி பரவியிருந்தது. கடைவீதிகளில் தோரணை விளக்கு எரிவது அவளுக்குப் பரவசமாக இருந்தது. ஜனத்திரளைப் பார்த்ததுமே மனம் விடுதலையடைந்ததுபோல உணர்ந்தாள்.
திருவிழா என்பதே பெண்களுக்கு நேந்துவிடப்பட்டது. அவர்கள் மட்டுமே அங்கு நாயகிகள். அன்றுதான் அவர்கள் புதிதாகப் பிறக்கிறார்கள். அன்று தான் பூப்பெய்துகிறார்கள். அன்றுதான் அவர்கள் திருமணத்துக்குத் தயாராகிறார்கள். உச்ச மகிழ்ச்சியும், வெட்கமும் அழகும் சிலிர்ப்பும் பேரலையாக எழுந்து வருகிறது. ஒவ்வொருத்தரும் அன்று தேவதைகளாக மாறிவிடுகிறார்கள். ஒட்டுமொத்தப் பெண்களும் ஆயிரம் அழகு சொரூபங்களாக பரிணாமமெடுக்கிறார்கள்.
மஞ்சுவும் சரவணவேலுவும் விளங்கியம்மன் கோவில் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள். விளங்கியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலுக்கு செல்கிற வழியில் இருந்தது. எப்போதுமே அங்கிருந்து பூத்தட்டுகளும் இரண்டு பெரிய தேரும் மாரியம்மனுக்கு போவதுண்டு. சரவணவேலுவின் அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சிறுவயதாயிருந்த காலத்திலிருந்தே பூத்தட்டுகளை எடுத்துக்கொண்டு விளங்கியம்மன் கோவிலைச்சுற்றி ஊரணி வழியாக கொண்டு போயிருக்கிறார்கள். பின்பு ஒவ்வொருத்தராக நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததும் அப்பழக்கம் நின்றுவிட்டது. இப்போது செட்டியார் வீட்டுப்பிள்ளைகள் மெட்ராஸிலிருந்து ஒவ்வொரு திருவிழாவுக்கும் அம்பாஸிட்டரில்; அலங்கரித்து வந்து, அம்மனுக்குப் படைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். மெய்யம்மாள் எவ்வளவு புலம்பியும் பழைய வழக்கத்தைத் திரும்ப எடுக்க முடியவில்லை.
தார் ரோட்டிலிருந்து கோவிலுக்கு நுழைவதற்கான இறக்கப் பாதையின் ஓரங்களில் சிதறிக்கடந்த பிளாஸ்டிக் தட்டுகுவியலுக்குள் பன்றிகள் முண்டிக்கொண்டிருந்தன. மதியத்திலிருந்தே அவ்விடத்தில் கீத்துப் பந்தல் கட்டி அன்னதானம் நடந்துக்கொண்டிருந்தது. மைக்கில் காய்கறிகளைச் சொல்லி சப்புக்கொட்டியபடி சாத்தன் மாமாதான் சொல்லிக்கொண்டிருந்தார். அவளுக்கும் போய் சாப்பிட்ட வரவேண்டுமென்றிருந்ததும் நீலாவை தயார் செய்து வைத்திருந்தாள். பின்பு ஏதோ தோன்றியவளாக மறுத்துவிட்டாள். நீலா சாப்பிட்டுவிட்டு வந்ததும் “எப்பிடிந்த இத்தன ஆம்பளக் கூட்டத்துல கூச்சமில்லாமா தின்னுட்டு வர” என்று மஞ்சு கேட்டாள். “கூச்சத்தலாம் பாத்த வட பாயசம் சாப்பாடு கெடக்காதுக்கா. அங்க போயி பாத்தா தெரியும் செட்டியவீட்டு ஆளுங்ககூட முண்டிகிட்டிருந்தத” என்றாள். மஞ்சுää அன்னதானப் பந்தலில் கம்பு வைத்துக் கட்டியிருக்கும் தடுப்பைக் காட்டிக் கேட்டாள், “என்னங்க தடுப்பெல்லாம் போட்டிருக்காங்க ஜல்லிகட்டுமாதிரி” என்றாள். “சனங்க வரிசையில் வரதுக்குத்தான்” என்றான். நீலாவும் இப்படித்தான் முண்டிக்கொண்டு நின்றிருப்பாள் என்று நினைத்துச் சிரித்தாள்
மஞ்சு தன் உடலை அவன் பக்கமாக ஒட்டிக்கொண்டாள். நெருக்கத்தை உணர்ந்த சரவணவேலு தலையைத் தாழ்த்தி அவளைப் பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்தவளாக புருவத்தை உயர்த்தி இமைகளைச் சிமிட்டி சிரித்தாள். எப்போதும் அச்சிரிப்பை அவன் ரசிப்பான். திருவிழாக்களில் புது ஜோடிகள் பார்க்கும்போதெல்லாம் தோழிகளோடு சேர்ந்து கேலி செய்திருந்தாலும் நான்கு வருடங்களாக இப்படி உரசி செல்லும் பழக்கம் அவளையும் தொற்றி விட்டிருந்தது. அவளுக்கு அவன் கையைப் பிடித்து நடக்க வேண்டுமென்று தோன்றியதும் யாரும் பார்த்துவிட்டுக் கேலி செய்வார்கள் என்று சுற்றிமுற்றிப் பார்த்தாள். அவள் உள்ளங்கையின் தடித்தத்தோலைத் தடவிக்கொள்ள அவளுக்குப் பிடிக்கும். திருமணமான புதிதில் அந்தத் தடித்தக் கைகளைக் கண்டு மருண்டிருந்தாள். செங்கல் சூளை வெப்பத்தில் தகித்தக் அக்கைகள் தொடுகையை நிராகரித்திருக்கிறாள். அப்போது அவன் மனம் கூம்பிவிடும். பின் தடித்திருக்கும் அக்குண்டு விரல்களுடன் பழகத்தொடங்கினாள். கன்றுக்குட்டியின் வாலைப் பிடிப்பது போலிருக்கிறதென்பாள்.
மாரியம்மன் கோயிலைச்சுற்றி வெட்டவெளியாக இருந்த மைதானம் கடைகளாக நிரம்பியிருந்தது. வெளியூரிலிருந்து வந்திருந்த ஆட்கள் கூட்டத்தை செல்போன்களில் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் திருவிழா என்றால் ஜவ்வு மிட்டாய் தாத்தாவைச் சுற்றித்தான் கூட்டம் நிற்கும். மூங்கில் கொம்பில் உட்கார்ந்திருக்கும் பொம்மைனுள்ளேயிருந்து மிட்டாய் மாவை இழுத்து கண நேரத்தில் வாட்ச் மோதிரம் சைக்கிளென உருமாற்றித் தருவதைப் பார்க்க ஆசையாக இருக்கும். பெண் பிள்ளைகளென்றால் செயின் செய்து கழுத்தில் மாட்டிவிடுவார். பாம்பு டிசைனுக்கு எப்பவும் ரொம்ப கிராக்கி உண்டு. அரசமரத்தடிதான் ஜவ்வுமிட்டாய் தாத்தாவின் இடம்.
ஊரணிக்கரையிலிருந்த புளியமரங்களின் கீழ் கூட்டம் தேங்கி நின்றது. பிளாஸ்டிக் பாய்விரித்து கடைகளைச் சுற்றி கூட்டம் நின்றுகொண்டிருந்தது. பெரும் மரங்கள் இல்லாத இடத்தில் திருவிழா ஏது? என்றைக்கு இந்த மரங்களெல்லாம் இல்லாமல் போகிறதோ அன்று திருவிழாவும் நின்றுவிடுமென நினைத்துக்கொண்டாள்.
வளையல் கடையில் ஜிமிக்கி தோடு எடுத்துவிட்டு தன்னுடைய கணவனிடம் காட்டிக்கொண்டிருந்தாள். கணவனின் கையிலிருந்த குழந்தை தொங்கிக்கொண்டிருந்த கார் ஒன்றை பிடித்து இழுத்;தது. அவளுக்கு அக்குழந்தையைத் தூக்கிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. குட்டியானையின் துதிக்கை போலிருந்தன அதன் குண்டு கால்கள். அவள் அடிக்கடி சரவணவேலுவிடம் தனக்கும் கருப்பாகத்தான் பிறக்குமென்பாள். முதல் கருவுற்றதுபோது அவனிடம் அப்படிச் சொன்னதற்கு “கருப்புதான் அய்யனார் கலரு. வீரத்தோட நெறம் அதுதாஞ்சே” என்றான்.
ஸ்கேன் ரிப்போர்டில் சிசுவில் உயிர் துடிப்பில்லையென வந்திருந்தது. அறுபது நாள் சிசு மாத்திரைகளை உள்வாங்கிக்கொண்டு சிறு சிறு பிண்டங்களாக உடைந்து வெளியேறியது. கழிவறையில் அமர்ந்துகொண்டு விம்மினாள். அக்குரூர மரணத்தை நினைக்கையில் உடல் சிலித்திடும். அப்பிண்டங்களை எண்ணியபடி அதைää அச்சிசுவின் கை கால் உடல் என மனதுக்குள் ஒட்டிப்பார்ப்பாள். குற்றவுணர்வு தாளாமல் அவனைக் கட்டிக்கொள்வாள். நிறைந்திருக்கும் வெறுமை முழுவதையும் அவன்மீது கவிழ்க்க வேண்டும் போலிருக்கும், உடலில் அழுத்திக்கொண்டிருக்கும் முட்களைப் பிடுங்கியெறிய முடியாமல் அவனுடலில் தன்னைக் குறுக்கிக்கொள்வாள். சட்டென முலைகளைத் தளர்த்தி அவன் முகத்தில்; விடுவாள். அக்கணம் மனம் ஆசுவாசமடையும். பின் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களுக்கு பழகிக்கொண்டாள். நீலா அவளைவிட சிறியவள். அவள் திருமணமாகி வந்தபின்னே மணமானவள். அவள் பிரசவித்தபோது அவளின் பால்முலைகளின் பெருக்கத்தைக் கண்டிருந்தாள். குழந்தை பால்வாசனை முகர்ந்து, நீண்டிருக்கும் காம்புகளை கவ்விக்கொள்கையில் அவளுக்கு மயிர்கூச்செறியும். மறுமுலையில் பால் கசிவதைக் காட்;டிச் சிரிப்பாள்.
மஞ்சு கூட்டத்துக்குள் சுதந்திரமாக சுற்றித் திரியும் வயசுப்பெண்களைப் பார்த்தாள். எவ்வளவு சந்தோஷம் அவர்கள் முகத்தி;ல். வியாபரிகளும், ஜனமும் நிரம்பியிருந்த பாதையில் ஒவ்வொருத்தரின் தோள்களில் கை போட்டு நடந்து போனார்கள். ஒருவித அந்தரங்கவுணர்வில் தங்களுக்குள் சிரித்துக்கொள்வதைப் பார்த்தாள். தனக்கும் பதினாறு வயது குறைந்துவிட்டது போல தோன்றிற்று. கைகளை வீசிக்கொண்டு வேகமாக நடந்தாள். காற்றில் சேலை பறந்தது. பறக்கட்டுமென விட்டுவிடட்டாள். பறப்பதற்குத்தானே அது அப்படி நெய்யப்பட்டிருக்கிறது. காற்று, மார்பையும் வயிற்றையும் தொட்டுப்போவது என்னமோ போலச்செய்தது. அக்கணத்தை விரும்பினாள். கூட்டத்தில் அத்தனைபேரும் புதிதாக தெரிந்தார்கள். கலர்வேட்டி கட்டிய இளைஞர்கள் அவளெதிரே வந்துகொண்டிருந்தார்கள்.. நடுவிலிருந்தவன் பக்கத்திலிருந்தவனின் தோளைத் தட்டி மஞ்சு பக்கம் திருப்பினான். இப்போது அவர்கள் எல்லோரும் அவளையேப் பார்;த்;தார்கள். அவர்கள் பார்வையைக் கண்டு ஒருகணம் அவளை உரசியது. புலப்படாத எல்லையைத் தொட்டு மீண்டது. சட்டென்று தன் உடலைக் குறுக்கிக்கொண்டாள். பின்பு அந்த பாவனையை மறைத்து அவளையறியாமல் சிரித்தாள்.
சரவணவேலு ‘என்ன’ என்பது போல தலை எக்கினான். மைக் சப்தத்தில் காதில் விழாததால் அவன் காதைப் பிடித்து “எல்லா பயலுகளும் என்னத்தான் சைட்டடிக்கிறாங்கே” என்றாள் சிரித்தபடி. “ஆமா அவெங்களுக்கு யாரும் இல்ல..” சட்டென்று அவன் சொன்னதை கேட்டதும் பொய் கோபத்துடன் திரும்பிக்கொண்டாள்.
கீற்று தட்டிக்கடியில் மொட்டை போடும் இடத்தில் சிமென்ட் கல்லில் ஒருவர் அமர்ந்து சின்ன பிள்ளையை மடிமீது கிடத்தி வைத்திருந்தார். அவர் கை குழந்தையின் தலையை அழுத்தி பிடித்திருந்தது. புற்றிலிருந்து வெளிவரும் பாம்பாக மூக்கில் சளி வழிவதும் இழுத்துவிட்டுக்கொள்வதுமாக இருந்தது. கண்களுக்குக் கீழே கண்ணீர்த் தடம். அருகில் பெண்ணின் சந்தனம் தடவிய மொட்டை தலையில் பையன் கார் ஓட்டி சிரித்துக்கொண்டிருந்தான். மஞ்சு அதை பார்த்ததும, “அங்க பாருங்க அந்த புள்ளய எப்டி போட்டு அமுக்கிருக்காங்க பாவம்;” முடி இழையிழையாக அக்குழந்தையின் முகத்தில் சரிந்தது.
“ என்ன இவ்வளவு நேரதள்ளி இப்ப முடியறக்குறாங்க” என்றாள். அவன் பதில் பேசாமல் வந்தான். திரும்பிப் பார்த்துபோது கூட்டத்தில் எங்கோ தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
“லங்கரகட்ட எடத்த பாத்துகிட்டு வறீங்களா..ஒங்க கூட்டாளிக நிக்கிறாங்க போல?”
அவன் ராமன் அண்ணன் கையை அசைத்தபடி வருவதைக் காட்டினான். புது வேஷ்டி சட்டை கணக்காக வேகமாக வந்துகொண்டிருந்தார். பள்ளிக்கூடத்திற்குத் தாமதமானதும் ஓடும்; பிள்ளைகளை போலிருந்தது அவரது நடை.
“வேலு ஒங்கம்மா கூப்புடுது பாரு” என்றார். பூ மிதிக்கு அப்பாலிருந்து மெய்யம்மாள் கையை அசைத்து சைகையால் பேசினாள். கூட்;டத்தின் குறுக்காக நடந்து போனார்கள். மதியம் பூ மிதித்து சாம்பலாக இருந்தாலும் அதன் பக்கத்தில் நிற்கும்போது அனல் உடலில் ஏறியது. அனலில் வெப்பம் தண்ணீர் படலம் போல அசைந்தது.
மெய்யம்மாள் சரவணவேலுவிடம் “உள்ள போயி குலசாமிய கும்புட்டு வருவியா ” என்றாள் சந்தேகத்தோடு. அவன் மஞ்சு பக்கம் திரும்பிப் பார்த்தான். “ஓம்பொண்டாட்டிக்கு திர்விழானு வரப்பலாம் தீட்டாயிருமே இன்னக்கி மொனங்க கானமேனு கேட்டேன்’ என்றவாறு மெய்யம்மாள் அவன் கைகளில் எண்ணெயிட்ட மண் விளக்குகளைக் கொடுத்துவிட்டு பெரிய படியேறி உள்ளே சென்றாள்.
அவன் கைகளை விரித்து பார்;த்தவள் விளக்கை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். கொடிமரத்தைச் சுற்றி வயிற்றிலும் நெற்றியிலுமாக வாழையிலை வைத்து மாவிளக்கு உருட்டி குழி செய்து விளக்கு ஏற்றி பெண்கள் படுத்திருந்தார்கள். அவ்விடம்முழுதும் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. விளக்கைப் பற்றவைத்துவிட்டு அதனை உற்றுநோக்கியவாறு அமர்ந்திருந்தாள். தீபத்தின் சிவந்த நாக்கு மேல் நோக்கி எக்கி அலைந்தது. இலைவடிவ நெருப்பினுள் விரல் விட்டு எடுத்தபடி தன்னுள்ளே சிரித்தாள். அவளுக்கு அதன் நீல விளிம்பைத் தொடுவது பிடிக்கும். இரவுகளில் அவன் தூங்கியபின்பு லைட்டை அனைத்துவிட்டு மெழுகுத்திரி ஏற்றி அதன் உயிர் அசைவதை நோக்கியபடி அமர்ந்திருப்பாள். அந்நெருப்பும் அவளருகிலேயே அமர்ந்து அவளை ஊமையாக உற்று பார்த்துக்கொண்டிருக்கிறதென எண்ணுவாள். அதன் வெளிச்சத்தில் சுவரிலிருக்கும் தினசரி காலண்டர் அசையும். திருமணமான புதிதில் கிளர்ச்சியூட்டிய அந்நாட்காட்டி, பின் கொஞ்சம் கொஞ்சமாக தவிப்பையும்ää ஆசையையும் கொடுத்தது. பின்னாளில் நாட்காட்டியின் எண்களைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள்; எரிச்சலே எஞ்சும். விதியைத் தீர்மானிக்கும் அக்காகிதங்களைப் பிடுங்கி வீசியெறிய நினைப்பாள். கிண்ற்றுக்குள் பிய்;த்து துண்டாக்கி கொட்ட வேண்டுமென தோன்றும்.
ஒவ்வொரு மாதமும் நாட்கள் தள்ளி போகாமல் உடைந்து புதுக்கணக்கைத் துவக்கும். அம்மாதங்கள் வேகமாக முடிந்துவிட வேண்டும். ஆளிலில்லாத பெரும் பொட்டல் வெளியை பார்த்துக்கொண்டிருக்கும்போது பெரும் துக்கம் அடிவயிற்றை கவ்வும். பின்பு அவ்வெறுமை அவளுடன் இணக்கமானது. வாழைக்குலையை வெட்டித் தள்ளுவது போன்றதொருக் காட்சி பிரக்ஞையில் எழும். நெஞ்சைப் பிடித்துக்கொள்வாள். பின்னால் அவ்வருவருப்புணர்வையும் நேசிக்க ஆரம்பித்தாள். கணக்கைத் துல்லியமாகச் சொல்லத் தொடங்கினாள். ஒவ்வொரு முறையும் கலவிமுடிந்ததும் தொற்றிக்கொள்ளும் பதற்றம், அவன் முகத்தில் அவிழும் சிறுபிள்ளத்தனப் புன்னகையில் உடைந்துவிடும். அவனின் ஸ்கலிந்தம் உள்ளே நிறையும்போதெல்லாம் பயம் அடிவயிற்றைத் தாக்கும். அதன் வெப்பம் உடல் முழுவதும் பரவுவதாக நினைப்பாள்.
கோவில் கொடிமரத்தைச் சுற்றி வீரப்ப செட்டியாரும் அவர் குடும்பமும் சேர்ந்து விதவிதமாக மலரில் தரையில் அலங்காரங்கள் செய்திருந்தார்கள். சம்மங்கியில் பூக்களைப் பரப்பி அன்னப்பறவை போலவும், சென்டிப்பூக்களில் மஞ்சள் நிற சிவலிங்கத்தையும், இரண்டு மயிலை அதற்கு இருபுறமும் மலரால் நிறுத்தியிருந்தார்கள் மயில் கொண்டைக்கு கோழிக்கொண்டைகள் செறுகியிருந்தது. மரிக்கொழுந்து வாசம் மண்டபம் முழுவதும் பரவியிருந்தது. மஞ்சுக்கு பூ அலங்காரங்களை சரவணவேலிடம் காட்டி அவன் செல்போனில் போட்டோ எடுத்துக்கொள்ளச் சொன்னாள். திடுதிடுவென்று பெண்கள் கலைந்து ஈரச்சேலையுடன் அங்கிருந்து பால்குடம் சுமந்தவாறு மாரியம்மன் கோயிலை நோக்கி சாமி வந்து ஓடினார்கள். அவர்களுடே அவளும் சென்றாள்.
கூட்டம் நேரம் ஆக ஆகப் பெருகி வந்தது. ‘என்றைக்கும் கருவறையில் அமைதியாய் அமர்ந்திருக்கும் அம்மன் தானே. ஏன் இன்றைக மட்டும் அவளைப் பார்க்;க இத்தனை கூட்டம்? கருவறையில் அவளின் அலங்கார சொரூபத்தை பார்க்கனும். பார்த்ததுமே மனதிலிருக்கும் கனம் உடைபடவேண்டும்.’ மஞ்சு நினைத்துக்கொண்டாள். அடி எடுத்து வைக்க முடியாதபடி தடம் முழுக்க நெருக்கம். ஒவ்வொருத்தரையும் தள்ளி நடக்க வேண்டியருந்தது. திருநீறு வாடையும் வியர்வை வீச்சமும் பரவியிருந்தது. தன் முதுகிற்குப் பின்னால் ஆயிரம் கண்கள் விழிப்பது போலிருந்தது. துளைத்தெடுக்கிற பார்வை. சரவணவேலின்; கைகளை இறுகபற்றியிருந்தும் மனம் காற்றின் போக்கிற்கு தாழ்ந்து பறக்கும் காதிதமாக இருந்தது. முதுகுப் பள்ளத்தை யாரோ உற்றுப் பார்ப்பது போல உணர்வு. சேலை தலைப்பை இழுத்து போர்த்திக்கொண்டாள். பின் அப்படி செய்ததை நினைத்து தனக்குள்ளே திட்டிக்கொண்டு எடுத்துவிட்டாள்.
பூத்தட்டுகள் செல்லும் பாதையினூடே நுழைந்தவள் கர்ப்பவாசலில் வந்துநின்றாள். செம்பட்டுச் சரிகை விசிறிபோல விரிந்திருக்க, அப்போது சமைந்த சிறு பெண்போல அம்மன் அமர்ந்திருந்தாள். வேட்டிவிரித்த தடுப்பில் பூக்கள் குவிந்திருந்தன. உதடு சுழித்து சிரிப்பதுபோன்ற பாவனை. சிறிய கரிய உள்ளங்கையைத் தூக்கி காட்டியிருந்தாள். அதன்மீதும், விரல்களிலும் பூக்கள் சொரிந்திருந்தன. அதன் அலங்காரங்கள் கண்களை சொறிந்தன. கருவறைக்குள் பெண்மையில் வாசனை குமைவதை உணர்ந்தாள்.
தேர் சுற்றி நிலைக்கு வந்து நின்றிருந்தது. தேர்வடம் பக்கவாட்டில் பாம்பு போல சோர்ந்து கிடந்தது. தொப்பைப்பூசாரி உச்சவ விக்ரகத்திலிருந்து மாலையைப் பிய்த்து கூட்டத்தில் எறிந்துகொண்டிருந்தார். அவள் அண்ணாந்து தேரைப் பார்த்தாள் அதன் பளபளப்பும், உடலை முறுக்கியிருக்கும் மிரட்சியும், தனக்கு எதிரில் யாரும் இல்லை என்ற திமிரில் நிற்பது போலிருந்தது. மொடமொடவெனப் பறந்துகொண்டிருந்த அவள் புடவை சப்தமிட்டது. அதை ராட்சஸ இறகாக நினைத்துக்கொண்டாள். ஒருகணம் பெரும் பறவையாகப் பறந்து தேர்மீது அமர்ந்துவிட்டு வந்தாள்.
இருட்டியதே தெரியவில்லை. தெருப் பாதைகளில் விளக்கு தோரணைகளின் வண்ணவெளிச்சங்கள் இறங்கியிருந்தன. வீட்டிற்கு வரும் வரையில் அவளுக்குள் பதற்றம் இருந்துகொண்டேயிருந்தது. தவிப்பும் குதூகலமும் ஏன் இப்படி முட்டி நிற்கிறது? மாடியறையில் நுழைந்ததும் சேலையைக் கலைந்து மாற்றுச்சேலையை மாற்றி கட்டிலின்மீதமர்ந்தாள். ஜன்னல் கதவினை திறந்ததும் வெளிக்காட்சி அவளை அத்திசைக்கு மீட்டியது. இருளில் மரங்களுக்கப்பால் மின்மினிகள் மொய்ப்பதுபோல விளக்கொளிகள் கோவில் மைதானம் முழுதும் நிறைந்திருந்தன. பாட்டுச் சப்தம் ஓய்ந்து கனத்த மௌனம் வியாபித்திருந்தது. ஒருகணம் அவ்வெண்ணம் அவளுள் எழுந்தது. கருவறைக்குள் அம்மன் அலங்காரங்களுடன் தனிமையில் அமர்ந்திருக்கிறாள். நித்தியத் தனிமை. மனம் அத்தனிமைக்கு ஏங்கியது. பின்பு அவ்வெண்ணத்தைத் தவிர்க்க பார்வையை, கிணற்றடியை நோக்கிக் குவித்தாள். கண்ணாடி பதித்தது போல வெளிச்சம் மின்னியது. மேலே அண்ணாந்தாள். உடையாத முழுநிலவு தென்னைக்கப்பால் சீமை பசுவின் பால்போல கெட்டி வெண்மையில் தெரிந்தது. நிலா வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு சட்டென நீண்டிருந்த தென்னைப் பாலைக் குறுத்தின் கூம்பை கண்டதும் நெஞ்சு படபடத்தது. அது நீண்டு அவளை எட்டிப்பார்ப்பது போலிருந்தது. கையை சேலைக்குள் கொண்டு சென்று மேல்வயிற்றின் மீது வைத்துக்கொண்டாள்.