தஞ்சைப்ரகாஷின் கள்ளம்
தஞ்சைப்ரகாஷின் கள்ளம்
பிரக்ஞையை இயக்கும் ஆதார சக்தியான ஆசாபாசங்களில் காமத்திற்கு முதல் இடம் உண்டு. காமம் தன் இருப்பினை எவ்வித சமரசமமுமின்றி நிறைத்துக்கொள்ளும்போது அதன் ஆற்றல், பிரக்ஞையினுள் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி தன் ஆகிருதியை வெளியிடுகிறது. அவ்வாறு வெளிப்படும் ஆற்றல் முனங்கிக்கிடக்கும் படைப்புணர்வைத் தூண்டி ஒளிப்பாச்சலை நிகழ்த்தவல்லது. அதுவொரு பசி. ஆம் புலன்கள் ஒவ்வொன்றுமே நுண்ணிய உயிரிகளால் பின்னப்பட்ட ஒரு பெரும் அடிமைச் சமூகம் இல்லையா? உணர்களில் உருவாகும் வறட்சி சிறுக சிறுக வழு விழந்து மூளையின் செயல்திறனை மழுங்கச்செய்துவிடுகிறது. பிறகு அம்மொன்னைக்கத்தியில் மாமிசம் அறுப்பது போலத்தான் அகம் மாறுபடுகிறது. அகவுலகம் எப்போதும் இதுபோன்ற மொன்னைக்கத்திகளை விரும்புவதில்லை. அதற்கு தேவை கூர் ஆயுதம். காமம் ஒரு கூர் ஆயுதம்.
கலை படைப்புகள் யாவுமே காமத்தின் பிரபஞ்ச வெளியிலிருந்து வெளிப்படும் மின்கற்களிலிருந்தே தோன்றுகின்றன. ஆக காமம் என்பது ஒரு இயங்கு சக்தியா என்றால் ஆம் என்பதே. அதை தட்டையாக காமவுணர்வு என்று பொருள்கொள்வது அல்ல இங்கு சொல்ல வருவது. காமம் ஆசை என்ற ஒன்றின்கீழ் வருகிறது. ஒவ்வொன்றின் மீதும் விழுகின்ற ஆசாபாசங்கள் அப்பொருளின் மீதிருக்கும் (பொருள் என்பது இங்கு அணைத்தையும் குறிக்கும் சொல்)கவர்ச்சியால் சிக்குண்டு தன்னை முழுமுதலாக இழக்கச்செய்கிறது. முதலில் மனம் அதை அடைய முற்படும்போது தோல்வியைத் தழுவும். அத்தோல்வி தன்னளவில் அதை அடைவதற்கான தடத்தை உருவாக்க ஆரம்பிக்கும். அப்போது மனம் புதிய பாதையை அமைப்பது நிகழ்கிறது. இந்நிகழ்வுக்காகவே மனம் தன் இருப்பை அல்லது வாழ்வினை அமைத்துக்கொள்கிறது. நோயாளியாக இருப்பவர் ஆசையாக நினைத்தவொன்றை ருசிப்பதும்ää பார்ப்பதும்ää கேட்பதும் நிகழ்ந்த பின் அவ்வுடல் புதிய சக்தியைப் பெற்று மாற்றமடைவதும் அதேபோல மரணப்படுக்கையிலிருப்பவர் தன் நிறைவேறாத ஆசை இன்னதென கேட்டு பூர்த்திச்செய்து கொண்டு தன் ஆத்மாவை திருப்தியடையவிடுவதும் ஆசைகளின்ää இச்சைகளின்ää தீராத பக்கங்கள் என அறிந்துகொள்ளலாம்.
இவ்வுலகில் ஒவ்வொரு தேடல்களுமே பசியுணர்வால் தூண்டபடுவதே. அவ்வுணர்வு சதா தோன்றிக்கொண்டிருக்கின்றவரையில் பிரக்ஞை இயங்கிக்கொண்டிருக்கும். இங்கு பால்வேட்கையைச் சுற்றி வளைத்து சொல்ல வரவில்லை. அதுவும் ஒரு பசியுணர்வு என்றே கூற விழைகிறேன். அப்பசி கிடைக்காதபட்சத்தில் மனம் முழுதும் அகங்காரம் நிறையும். அகச்சுவையற்ற படைப்பு மனம் படைப்பூக்கம் வெளிபடுத்தவியலாது செயலிழக்கும். பால்வேட்கை எத்தகைய கலை சாதனத்திற்கும் உந்து சக்தி. சிற்பம், இசை, கவிதை, நாவல், நாட்டியம் என ஒவ்வொரு கலை சாதனத்திலும் காமம் பெரும் படைப்புச் சக்தியாக இருந்துகொண்டிருப்பது மறுப்பதிற்கில்லை.
0
கலை என்கிற வடிவம் ஓவியத்திலிருந்தே பெறப்பட்டிருக்க வேண்டும். மனிதன் தன் முதல் சம்பாஷனையை ஓவியத்திலிருந்துதான் தொடங்கினான். அவனின் உரையாடல், துக்கம், கோபம், விருப்பம், சந்தோசம் என அணைத்தும் அவ்வூடகத்தின் வழி கடத்தப்பட்டிருக்கிறது. மனிதன் பரிணாமம் அடைந்த பின்னும் அக்கலையின் பிரமிப்பூட்;டும் வளர்ச்சி இன்னும் தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. உரையாடல்களாக தொடங்கிய ஓவியங்கள் பின் எண்ணங்களின் படிமங்களாகவும் உணர்;ச்சிகளின் செழுமைகளாகவும் தன்; ஒவ்வொரு எல்லையையும் விஸ்தரித்தது. காலத்திற்கேற்ப அக்கலை தன்னளவில் பின்பு அதனோடு மோதும் மற்ற மரபுகளை ஊடுபாவி எவ்வளவிற்கு அகண்டு தன்னை வளர்த்;துகொண்டதோ அவ்வளவிற்கு வீழ்ச்சியையும் ஏற்படுத்திக்கொண்டது. ‘வீழ்ச்சி’ என்பதை நாம் இங்கு கவனத்தில் வைப்போம்.
தென் தமிழகத்தில் முதன்மையான ஓவியக்கலை என்பது தஞ்சாவூர் பாணி தான். அதன் தோற்றமும் வளர்;ச்சியும் அதனை மற்ற ஓவியங்களிலிருந்து மாறுபட்ட வடிவாக காட்டியது. தஞ்சையை ஆட்சியசெய்த நாயக்கர், மராட்டிய காலங்களில் அக்கலை இருட்டடிக்கப்பட்டு, துண்டாடப்பட்டு நலிவுற்றது என்பது வரலாறு. அத்தகையக் காலக்கட்டத்தில் ஆந்திராவில் பாமினி சுல்தான்களால் வீழ்த்தப்பட்ட விஜயநகர பேரரசின் வீழ்ச்சியின் எதிரொலிப்பு அத்தேசத்தவர்களை (தெலுங்கு )பாரதமெங்கும் புலம்பெயரச் செய்திருந்தது. அவ்வழியில் வந்த ராஜூக்கள் என்கிற வைனவர்களின் தெலுங்குச்சிந்;தனையும் தஞ்சாவூர் ஓவியங்களுடன் புனைந்து புதிய பாணியிலான சித்திரப்படஓவியம் (கிராப்ட் ஒர்க்) உருவாகக் காரணமானது. இன்று தஞ்சாவ10ர் ஓவியங்கள் எனக்கூறப்படும் கண்ணாடித்துண்டுகளால் ஒட்டப்பட்ட ஓவியசித்திரப்படமானது (கண்ணாடி கொலோஜ் ஓவியங்கள்) இவ்வாறுதான் தோன்றியது. பின்பு பரவிய ‘நவீன யுகம்’ என்கிற மாயை ஏற்படுத்தியச் சிதைவுகளில் கலைää பண்பாடுää இசை வரிசையில் இச்சித்திரக்கலையும் தன்னை மாய்த்துக்கொண்டது. விளைவுää கலையை வளர்த்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை வௌ;வேறு தொழில்களை நோக்கி திருப்பியது.
0
கள்ளம் நாவல் இதுபோன்ற நசிந்த சித்ரப்படக்கலைஞன் ஒருவனின் வாழ்விலிருந்துதான் தொடங்குகிறது. பரந்தாமராஜூ தன் தந்தை மீனாட்;சி ராஜூவைப் போல பாட்டன் பூட்டன் வரைந்து வைத்த-ஆலிலை கண்ணன், ராமன் சீதா- ஓவியங்களை அப்படியே பிரதியெடுத்து விற்று வியாபாரக் கலைக்கு எதிரானவன். கவிதைகள் புனைபவன். யதார்த்ததின் ரசனையில் லயித்திருப்பவன். சேரிகளில் இருக்கும் ராஜூ பெண்களின்மீது காமம் கொள்பவன். வெறும் கண்ணாடி ஒட்டுக்களான பழைய ஓவியக்கலை பானியை எதிர்க்கிறான். அதுää தனித்தன்மையற்ற கீழ்புத்திச்சிந்தனையுடையது என்கிற எண்ணம் அவனுக்கு. எனவே அப்படியொருத் தொழிலை செய்வதில் விருப்பமில்லாததால் வீட்டிலிருந்த வெளியேறிவிடுகிறான். அவனுக்கு எப்போதும் சிதைந்த மராட்டிய அரண்மனையின் இருட்டு முடுக்குகளுக்குள் தொழில் செய்யும் வேசிப்பெண்கள்மீது நாட்டமிருக்கிறது. அவர்களின் வாழ்வினூடே எழும் யதார்த்தங்களை அவன் தரிசிக்கிறான். ஜம்னா அப்படிவந்தவள். அவளின் பூர்வீகம் மலைப்பொருட்கள் விற்று திரியும் இனம். வேசியாக அரண்மணையில் உலற்கிறாள். கொங்கணிää டேர்ககரிää மராட்டியம் என பலமொழி பேசும் பெண்கள், அட்டைகளாக சுதைச்சுவர்களின் ஊர்ந்துகொண்டிருக்கிறார்கள். உடல் வேட்கைக்கு மட்டும் இயக்கம் கொள்ளும் அவளின் ஆத்மாவை பரந்தாமன் மீட்டெடுத்து திருமணம் செய்துää சேரிவீதியினுள் குடித்தனம் புகுகிறான்.
அரண்மனையிலிருக்கும் ஒவ்வொரு பெண்களும் அவன் மேல் பரிவு காட்டுகிறார்கள். ஜம்னா அரண்மனையின் பாபி என்கிற வேசிக்கு வேலைக்காரியாக இருப்பதை விடுத்துää பரந்தாமனுடன் சேரியில் நிம்மதியாக வாழத் தொடங்குகிறாள். அன்றாட வாழ்வாதாரத்திற்காக பரந்தாமன் அவன் பரம்பரைக் கலைத் தொழிலான கண்ணாடி ஒட்டு ஓவியங்களைச் செய்கிறான். அவன் அப்பாவைப் போல அல்லாமல் சுயமாக அவ்வோவியங்களில் தன் தனித்தன்மையைக் காட்டுகிறான். அக்கலை நுட்பத்தைக் காணும் சேரிப் பெண்களுக்கும் அவற்றை பயிற்று விக்கிறான். அவர்களின் மறுக்கப்பட்ட அல்லது அடக்கிவைக்கபட்ட காமம் உணர்வுகளைத் தூண்டுவதன் வழியே கலையை வெளிக்கொணர்கிறான். பழைய புராதண மரபுக் கலைகளை உடைத்து புதிய கலை வடிவத்தை அவர்களினூடே உருவாக்குகிறான். அவ்வூரில் பிரமாண்டமான வால்முனி சுதைச் சிலையை சேரிப் பெண்களின் துணையுடன் செய்து காட்டுகிறான். இறுதியில் அவனைச் சுற்றியிருக்கும் சேரிப் பெண்கள் ஒவ்வொருவரும் அக்கலையை அறிந்துகொள்கிறார்கள். பின்பு அவர்களிடமிருந்து பரந்தாமன்ராஜூ வெளியேறிக் கிளம்புகிறான்.
0
பத்தொன்பதாம் நூற்றாண்டு காலக்கட்டதில் தஞ்சை ஆண்ட மராத்திய மன்னர்களால் கட்டப்பட்டதுதான் கல்யாண மஹால் என்கிற அரண்மனை. இது திருவையாறு பக்கத்தில் உள்ளது. மராத்திய மன்னர்களுக்கு ஏராளமான மனைவியர்கள் உண்டு. அவர்களின் வக்கிரமான பாலுறவு வேட்கைக்கு, பூப்படையாத சிறுமிகளும்கூட பலியாணதாகச் சொல்லபடுவதுண்டு. அவர்களுக்கு ‘கல்யாண மஹால் மகளிர்’ என்றே அழைக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் சிவாஜி (1832-1855) தன் இருபதுக்கு மேற்பட்ட மனைவிகளும் கணக்கற்ற வைப்பாட்டிகளுடன் இங்கு இருந்துள்ளார். அவரின் கால்த்திற்கு பிறகும் ‘கல்யாண மஹாலுக்கு’ அடிமைப் பெண்களை பிடித்துச் சென்றிருக்கிறார்கள். அதற்கென்றே அதிகாரிகளும்ää அலுவலர்களும் அப்போது இருந்ததாக ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘தமிழகத்தில் அடிமைச் சமூகம்’ என்கிற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளம் நாவல் வாழ்வின் ஒரு பகுதியையும் பண்பாட்டையும் காலக்கட்டத்தையும் வரலாற்றின் நீட்சியை மறு உருவாக்கம் செய்கிறது. நாவலில் பேசப்படும் ஓவியத்தை மீட்டெடுத்தல், கலையை மறுவுருவாக்கம் செய்தல் என்பன பொதுபுத்தியிலிருந்து விலகி உள்ளீடான எழுத்தாளனின் பார்வையில் அமைந்துள்ளது. இதைத்தான் மரபைக் குறிக்கீடு செய்தல் கேள்விக்குட்படுத்துதல் என இப்போதுள்ள வாசகன் பெற்றுக்கொள்ளும் அனுபவம். மாறாக முதன்மை கதாப்பாத்திரமான பரந்தாமனிடம் சேரிப் பெண்கள் கொள்ளும் வேட்கை திரும்ப திரும்ப நிகழ்வது வாசகனுக்குள் ஒருவித சலிப்பை இன்று ஏற்படுத்தக்கூடும்தான். இதற்கு காரணம் ஆசிரியர் அவ்வேட்கையைப் பற்றி முதலிலே மேலதிகமாகச் சொல்லிவிட்டு அப்பெண்களின் உணர்ச்சிகளை மட்டுமே தொட்டுச் செல்கிறார். அல்லது அவர்கள் மேல் பரந்தாமன் என்கிற கலைஞனே வெளிப்படுகிறான் என்று சொல்லலாம். நாவலில் பரந்;தாமன் பாத்திரத்திற்கு நேரெதிரான கதாப்பாத்திரம் என எதுவும் உருவாகி அப்பாத்திரத்துடன் குறுக்கு வெட்டாக மோதவில்லை. சரளா அவ்வாறு தோன்றும் எதிர் நிலை (இன்னொரு) கதாப்பாத்திம் என்றாலும் ஆசிரியர் அதன் இருப்பை பிரக்ஞையுடன் நகர்த்திக் செல்கிறார். அவள் பேசுவது செயற்கையானää எளிய நாடகீகமானதாக உருவாகிவிடுகிறது. ஜம்னாவும் அவ்வாறே ஆசிரியனால் உடைக்கப்பட்ட மற்றுமொரு கதாப்பாத்திரம். இந்த கதாப்பாத்திரங்கள் தன்னளவில் உருவாகி வளர்ந்திருந்தால் அவை பேசும் வாழ்வும்ää தோற்றுவிக்கும் சித்திரங்களும் நாவலை பரந்துபட்ட வாசிப்பிற்கு எடுத்துச் சென்றிருக்கும். ஆனால் இவற்றையும் மீறி கள்ளம் நாவல் இன்றைக்கும் வாசிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் நான் மேலே சொன்ன காமம் சார்ந்தும் ஓவியக்கலை சார்ந்தும் பொதுபுத்தி சிந்தனையிலிருந்து விலகிய அவரது பார்வைதான். இதுவே தஞ்சைப்ரகாஷை இன்றும் வாசிக்கத் தேவையானதாகப் படுகிறது.