நடைபாதை- Etger keret
பாதை
எட்கர் கரிட்
எப்போதும் போல ஒருவாரம் கழித்துதான் நான் வந்து சேர்ந்தேன். ஒருபோதும் சரியானத் தேதியில் வந்ததில்லை. முதல் நினைவுதினத்திற்கு வந்தபோது அங்கிருந்த அனைவரும் வெறித்தவாறும் துக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டும் நின்றார்கள். அம்மா கண்ணீருடன் என்னைப் பார்த்தவள், புன்னகைத்து நான் எப்போது படிப்பை முடிக்கப் போகிறெனெனக் கேட்டாள். நான் அதை வெறுப்தாகச் சொன்னேன். எவ்வகையிலும் அந்த நினைவுதினம் என் ஞாபகத்துக்கு வருவதில்லை, அது எளிதாக நினைவுபடுத்தக்கூடியதாக இருந்த போதிலுமே. டிசம்பர் 12 பன்னிரெண்டாவது மாதத்தில் பன்னிரெண்டாம் தேதி.
ரோனனின் சகோதரி பெலின்சன் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், அவர் தன் பணியிலிருக்கும் போதுதான் உன்னுடைய இதயம் செயலிழந்தது. ரோனன், நீ இறந்துவிட்டதை மதியம் இஸாரிடம் சொல்லும்போது நான் கேட்டேன்.
ரோனன்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டது: “பன்னிரெண்டாவது மாதத்தில் பன்னிரெண்டாம் தேதியில் பன்னிரெண்டு மணிக்கு. உன்னால் உணர முடிகிறதா? இது என்னவொரு எண் வரிசை?” அவன் சத்தமாகக் கிசுகிசுத்ததை நாங்கள் எல்லோரும் கேட்டோம். “சொர்க்கத்தின் நிமித்தம் போலுள்ளது”
“வியக்கக்கூடியதுதான்” இஸார் முணுமுணுத்தான். “அவன் உயிர் சரியாக பன்னிரெண்டு நிமிடம் பன்னிரெண்டு நொடிக்கு நின்றிருந்தால், அவர்கள் அவனை மரியாதை செய்ய ஒரு அஞ்சல் வில்லையே வெளியிட்டிருப்பார்கள் என என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும்”
இதை நினைவு கூர்வது உண்மையில் எளிதானதுதான். நான் குறிப்பிடுவது நாம் யோம் கிப்பரில் திருடிய நாளை.. அவர்கள் உனக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கிவந்த பூமராங்கை சிறுவர்களாக இருக்கும்போது நாம் பூங்காவில் நின்றபடி அதை வீசினோம். பிறகு அது திரும்பவே இல்லை. ஒவ்வொரு வருடமும் இங்கு வருகிறேன். கல்லறைக்கு முன் நின்றவாறு ஏதாவது சிலவற்றை நினைவுகூர்கிறேன், சிலவற்றைத் தெளிவாகவும். நாம் அப்போது ஐந்து பியர் பாட்டிகளை குடித்து முடித்திருந்தோம், நீ மேலும் மூன்று வோட்காவையும் குடித்தாய். அன்றிரவுக்கு அது போதுமானதாகத்தான் உணர்ந்தேன். போதைதான் ஆனால் பரவாயில்லை. நீ? நீ மிதமிஞ்சிய போதையிலிருந்தாய். பப்பிலிருந்து நூறு மீட்டர் தொலைவிலிருக்கும் உன்னுடை அறைக்குக் கிளம்பினோம். நாம் இருவருமே சாம்பல் நிற ரெயின்கோட் அணிந்திருந்தோம், அதை இருவரும்தான் நடைபாதைக் கடையொன்றில் வாங்கியது. நீ மிகவும் தடுமாறினாய், தொலைபேசி கம்பத்தில் கூட உன் தோள்பட்டை மோதியது. இரண்டு அடி பின்னால் வந்து முழித்துப் பார்த்தாய்- எப்படியொரு பார்வை அது. நான் கண்களைத் மூடிக் கொண்டேன், மதுவின் கரும் புகையுடன் என் கீழிமைகள் சேர்ந்து சுழல்வது போலிருந்தன. நீ என்னிலிருந்து வெகுதூரத்தில் நின்றாய், வேறொரு நாட்டில், சொல்லப்போனால் சட்டெனக் கண்கள் திறந்ததும் அவ்வெண்ணம் என்னை பயமூட்டியது, பிறகு சரியான சமயத்தில் நீ இன்னுமொரு ஓரடி சமன்குலைந்து பின்னால் தடுமாறி விழ நேர்வதற்குள் நான் உன்னைப் பிடித்துதேன். நீ தலையைத் திருப்பி என்னைப் பார்த்து சிரித்தாய், குழந்தைகள் புதிய விளையாட்டொன்றை கண்டுபிடித்தது போல.
“நாம் ஜெயித்துவிட்டோம்” நீ சொன்னாய் நான் உதவியதற்;காக. நீ எதைப் பற்றி பேசுகிறாய் என்று எனக்குத் புரியவில்லை. பிறகு நாம் கொஞ்ச தூரம் நடந்தோம். நீ மீண்டும் அது போலவே செய்தாய். உன்னுடைய உடல் முன்னோக்கி சரிந்துபோது சரியாக பத்தாவது கணம் உன் முகம் நடைபாதையில் மோதுவதற்குள் நான் உன்னுடைய கோட் காலரைப் பற்றினேன்.
“ரெண்டு” என்றாய். பின்பு என்னை நோக்கி, “ரொம்ப நல்லது.. நடைபாதைக்கு வாய்ப்பே இல்லை.”
உன்னுடைய வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம், ஒவ்வொரு அடிக்கும் நீ தானாகவே நடைபாதையில் விழ நேர்வதும் நான் உன்னைப் பிடித்துக்கொண்டுமிருந்தேன், ஒருமுறை பெல்ட்டை, பிறகு முழங்கையை, முடியை. ஆனால் ஒருபோதும் உன்னைத் தரையில் விழ விடவில்லை. “ஆறாவது முறை” நீ சொன்னாய் பிறகு “ஒன்பது” என்றாய். இந்த விளையாட்டை நாமே முடித்துவிட்டோம். இருவரும் தோற்காமல்.
“பூஜ்யத்தில் நிறுத்திவிடலாம்” நான் உன் காதில் மெல்ல கிசுகிசுத்தேன், பிறகு நாம் அப்படித்தான் செய்தோம். அதே சமயம் நாம் வீட்டை அடைந்துவிட்டிருந்தோம், உண்மையில் ஆச்சர்யமாக இருபத்தி ஒன்றிலிருந்து பூஜ்யம்வரை வந்திருந்தோம். நடைபாதையை அப்படியே விட்டுவிட்டு நாம் வீட்டிற்குள் வந்தபோது உன்னுடை அறைநண்பன் உள்ளே டிவி பார்த்துக்கொண்டிருந்தான்.
“நாம் எல்லாத்தையும் முடித்துவிட்டோம்” உள்ளே நுழைந்ததும் நீ சொன்னாய். அவன் கண்ணாடிக்குள் விரலை விட்டு கண்களைத் தேய்த்தவாறே நாம் அருவருப்பாக தோன்றுகிறோம் என்றான். நான் முகத்தைக் கழுவ குழாயைத் திறந்தேன். இன்னும் சிறுநீர் கழிக்கவில்லையென நீ கத்துவது கேட்டதும், கழிவறையிலிருந்து வெளியே வந்து பார்த்தேன், பேன்ட் முழங்காலுக்கிடையில் மாட்டியதில் சரிந்து பின்னிக் கிடந்தாய்.
“நான் இன்னும் மூத்திரம் போகவில்லை, நீ என்னைத் தூக்கி விடு” அவனிடம் சொன்னாய். “உன்னை நம்ப மாட்டேன். அவனை மட்டும் தான். அவன் தான் பிடித்துக்க வேண்டும்” என்னைச் சுட்டிக் காட்டினாய். “அவன் தான்”
“அப்படியொன்றுமில்லை” நான் உன் அறைநண்பனிடம் சொன்னேன். “இப்படி நாங்கள் அதிகம் அனுபவப்பட்டிருக்கிறோம்” நான் உன் கைப் பற்றித் தூக்கினேன்.
“நீங்கள்லாம் மோசமான பைத்தியங்கள்” அவன் திரும்பி தன் டிவி ஷோவுக்குள் மீண்டான். நீ சிறுநீர் கழித்துவிட்டிருந்தாய். நான் மறுமடியும் குழாயைத் திறந்துவிட்டேன். படுக்கையறைக்குச் செல்வதற்குள் மீண்டுமொருமுறை நீ தடுமாறினாய், நான் பிடிப்பதற்குள் சட்டென்று நாம் இருவருமே தரையில் விழுந்தோம். “நீ பிடிச்சுடுவனு நினைச்சேன்;” சொல்லிவிட்டு சிரித்தாய்.
“கவனி” மறுபடியும் எழ முயற்சித்து “விழ நேருமேன்ற பயத்தை இழந்துவிட்டேன். பயம் போய்விட்டது”என்றாய்.
உன்னுடைய கல்லறக்கருகே இரண்டு குழந்தைகள் நடுகல்லை நோக்கி டென்னிஸ் பந்தை குறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு குறுக்கேயிருப்பதாகத் தோன்றியது. அவர்களில் ஒருவன் சரியாக அதிகாரியினுடைய நடுகல் மீது எறிந்துவிட்டால் அது அவர்களுக்கு ஒரு பாய்ன்ட் என்றான், ஒருவேளை பயிற்சிவீரனின் நடுகல்லில் விழுந்தால் அது கல்லறைக்கு வெற்றியாம். அவர்கள் உன் நடுகல் மீது எறிந்தார்கள், பந்து எம்பி என் கையில் சிக்கியது. நான் பிடித்தேன். அவர்களில் ஒரு பையன் என்னை நோக்கி பயத்துடன் வந்தான்.
“நீங்கள் இராணுவ விரரா?” நான் இல்லையெனத் தலையாட்டினேன். “எங்களுடைய பந்தை எடுத்துக்கலாமா?” அவன் மேலும் இரண்டடி என்னருகே வந்தான். அவனிடம் பந்தைக் கொடுத்தேன். நடுகல் அருகே சென்றவன் அதை உற்று நோக்கினான். “எஸ்எஃப்சி என்றால்?” பந்தை உருட்டிக்கொண்டிருந்தனிடம் திரும்பிக் கேட்டான்.
“எக்ஸ்க்யூஸ் மீ எஸ்எஃப்சிங்கிறது அதிகாரியா இல்லை சாதாரண படைவீரனா?” “நிச்சயமாக அதிகாரி தான்” என்றேன். “முதல் நிலை சிறந்த கமென்டர் என்பது அதன் அர்த்தம்”
“சரி” அவன் சத்தமாகச் சொல்லி பந்தை மேல் நோக்கி எறிந்தான். “எட்டு ஏழு” அவனுடைய நண்பர்கள் கத்திக்கொண்டு ஓடினார்கள். “நடுகல்லில் எறிந்துவிட்டோம் நடுகல்லில் எறிந்துவிட்டோம்” பிறகு அவர்களில் இருவர் உலகச் சாம்பியனானது போல கத்தியபடி குதிக்கத் துவங்கினர்.