பைத்தியத்தனமான பசை- Etger keret
பைத்தியத்தனமான பசை
”தொடாதே” என்றதும் நான் ”என்ன அது?” என்று கேட்டேன்.
”பசை” என்றாள். ”ரொம்ப சிறப்பானது. ஸ்பெசல்”
நான் ”எதற்கு அதை வாங்கினாய்?”என்றேன்.
”ஏனேன்றால் எனக்கு அது தேவைப்படும்” என்றாள். ”எனக்கு ஒட்ட வேண்டியது நிறைய இருக்கிறது”
”இங்கே எதுவும் ஒட்டுவதற்கு இல்லையே” நான் கடுகடுப்புடன் சொன்னேன்.. ”எதற்கு இதுமாதிரி எல்லாம் வாங்குகிறாய். என்னால் உன்னைப் புரிந்து கொள்ளமுடியவில்லை”
”உன்னைத் திருமணம் செய்துகொண்டதும் இப்படித்தான்” என்றவள் குறுக்கிட்டு ”நேரத்தை போக்க” என்றாள்.
சண்டை நடப்பது போல் ஒன்றும் தோன்றவில்லையென்பதால் நான் அமைதியாகிவிட்டேன், அதுபோல அவளும் இருந்தாள். ”இந்த பசை எதற்கும் பயன்படுமா?” நான் கேட்டேன். தலைகீழாக மேற்கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் ஒருவனின் படத்தை எனக்குக்காட்டினாள், , யாரோ அவன் ஷூவின் அடிப்பகுதியில் பசையை ஒட்டியிக்க வேண்டும்..
”பசையை வைத்து ஒருவரை இப்படி ஒட்ட வைக்க முடியாது” என்றேன்.. ”நேராகத்தான் இந்த படத்தை எடுத்திருப்பார்கள். அவன் தரையில் நின்றுருப்பான். மேற்கூரையிலிருப்பது போல லைட்டை தரையில் வைத்து எடுத்திருப்பார்கள். ஒருவேளை ஜன்னல் இருப்பதைக் காட்டி நீ கேட்டலாம், ஆனால் அதுவும் ஒப்பனையாகத்தான் பொருத்திருப்பார்கள்..அதை பார்” என்றேன். அவள் பார்க்கவில்லை. ”எட்டு ஆகிவிட்டது”.என்றாள். ”ஓட வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டு என்னுடைய சூட்கேசை எடுத்துக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். ”நான் வரத் தாமதமாகும். நான்..”
”எனக்குத் தெரியும்” அவள் குறுக்கிட்டாள் ”நீ வேலையில் நன்றாக சிக்கியிருக்கிறாய்”
நான் அலுவலகத்திலிருந்து மின்டிக்கு போன் செய்தேன்.. ”இன்று முழுதும் என்னால் இருக்க முடியாது” என்றேன். ”சீக்கிரம் வீட்டிற்குப் போக வேண்டும்”
” எப்படி வருவ? என்ன விசயம்?”
”ஆமாம். நான் சொல்வது. அவள் ஏதோ சந்தேகிக்கிறாளெனத் தோன்றுகிறது” அவளிடம் நீண்ட மௌனம் நிலவியது. மறுமுனையில் மின்டி மூச்சுவிடுவகைக் கேட்டேன்.
”எதற்கு அவளுடன் தங்கியிருக்கிறாய்” முணுமுணுத்தவாறே நிறுத்தினாள். ”நீங்கள் இரண்டுபேரும் ஒன்றுமே செய்வதில்லையே. நீ அவளுடன் சண்டை போட்டு தொந்தரவுகூட செய்வது கிடையாது. ஏன் இப்படி இருக்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை. எந்தவொன்று உங்களைப் பிடித்து வைத்திருக்கிறது? எனக்குப் புரியவில்லை. உண்மையில் எனக்குப் புரியவில்லை.” அவள் மறுபடியும் சொன்னாள். ”என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை” அவள் அழத் துவங்கினாள்.
”அழாதே மின்டி” என்றேன். ”கவனி” நான் பொய்யாகச் சொன்னேன், ” யாரோ வருகிறார்கள். நான் போக வேண்டும். நிச்சயமாக நாளை வருகிறேன். நாம் பேசலாம்”
நான் வீட்டிற்கு சீக்கிரமே வந்து சோ்ந்தேன். கதவை நெருங்கியதும் ஹலோ எனக் குரல் கொடுத்தேன், ஆனால் அங்கு எந்த பதிலுமில்லை. ஒவ்வொரு அறையாகச் சென்றேன். அவள் எங்குமே இல்லை.. அடுப்படி மேடையில் தீா்ந்துபோன பசை டியுப் கிடந்து. அமா்வதற்காக நாற்காலியை இழுக்க முயற்சித்தேன் வரவில்லை. அவள் தரையுடன் அதை ஒட்டிவிட்டிருந்தாள். பிரிட்ஜை திறக்க முடியவில்லை. இழுத்து சாத்தி ஒட்டப் பட்டிருந்தது.
இதுபோன்றவையெல்லாம் அவள் எப்படி செய்கிறாளென்று பார்க்க முடியவில்லை. எப்போதுமே அவள் காரணத்துடன் இருப்பவள். தொலைபேசியை எடுப்பதற்காக வசிப்பறைக்கு வந்தேன். அவள் தன் அம்மா வீட்டுக்கு போயிருக்க வேண்டும். என்னால தொலைபேசி வாங்கியை எடுக்க முடியவில்லை. அதையும் அவள் பசை வைத்து ஒட்டியிருந்தாள். மூர்க்கத்துடன், கிட்டத்தட்ட என் பாதம் உடையுமளவிற்கு தொலைபேசி மேஜையை ஓங்கி உதைத்தேன். மேஜை அசையவே இல்லை. அப்போதுதான் அவள் சிரிக்கும் சப்தம் கேட்டது. எனக்கு மேலிருந்துதான் அந்த சப்தம் வந்தது. நான் அண்ணாந்தேன், உயரமான வசிப்பறையின் மேற்கூரைமீது, பாதம் ஒட்டியபடி அவள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தாள். திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன். ”என்ன கருமம், உனக்கு மூளை குழம்பிவிட்டதா?” அவள் பதில் சொல்லமால் வெறுமனே புன்னகைத்தாள். அந்த நிலையில் அவளுடைய புன்னகை மிகவும்இயல்பாக உதடுகள் புவியீா்ப்புக்கு இசைவாக வளைந்திருந்தது. ”கவலைப்படாதே” என்றேன். ”நான் உன்னை இறக்கிவிடுகிறேன்” ஷெல்பிலிருந்து சில புத்தகங்களை இழுத்தேன். அடுக்கிவைக்கபட்டிருந்த என்சைக்ளோபீடியாவின் சில பாகங்களைக் குவித்து உயரமாக்கினேன். .”இது கொஞ்சம் சிரமம்தான்” என்று சொல்லிக்கொண்டே சரியாக நிற்க முயற்சித்தேன். அவள் இப்போதும் சிரித்தவாறே இருந்தாள். எவ்வளவு முயன்றும் அவளை இழுக்க முடியவில்லை. கவனமாக பிடித்துக்கொண்டேன். ”கவலைப்படாதே” என்றேன். ”உதவிக்கு பக்கத்திலிருப்பவா்கள் யாரையாவது தொலைபேசியில் கூப்பிடுகிறேன்”
’நல்லது” சொல்லிவிட்டு சிரித்தாள். ”நான் எங்கேயும் போக மாட்டேன்”. அப்போது நானும் சிரித்துவிட்டேன். அவள் அழகாகவும் அதே சமயம் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பதால் பொருத்தமற்று வித்யாசமாகவுமிருந்தாள். அவளுடைய நீண்ட கூந்தல் கீழ்நோக்கி அசைந்தாடியது. அவளுடைய முலைகள் அவ்வெண்ணிற ஆடைக்குள் இரண்டு கண்ணீா்த் துளிகள் உருண்டு நிற்பது போலிருந்தன. மிக அழகாக. நான் மறுபடியும் அப்புத்தகக்குவியல் மீது ஏறி அவளைப் பிடித்து முத்தமிட்டேன். சட்டெனப் புத்தகக் குவியல் சரிந்ததால் தடுமாறி, கீழே தரையில் ஊன்றாமல் அவளைப் பிடித்தபடி அந்தரத்தில், அவள் உதடுகளைப் பற்றிவாறே ஊசலாடத்துவங்கினேன்.