மூளை எனும் காலனிய அரசு
டேவிட் ஈகிள் மேனின் Livewired- Inside Story of Ever-changing Brain

தனது எல்லையை வகுத்துக்கொள்ளவும் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளவும் மனிதன் நடத்திக்கொண்டிருக்கும் போரட்டத்தைத்தான் மூளைக்குள் நியூரான்கள் நடத்துகின்றன. ஒரு நாடு அல்லது நகரம் தன்னைச் சுற்றி நடக்கும் போராட்டங்களிலிருந்து காப்பாற்றிக்கொண்டு (எதிர்த்து சண்டையிடுவதும்) அழிவிலிருந்து தன்னை மீள் உருவாக்கம் செய்து கொள்வதை நாம் பார்ப்பதுதான் நம்மால் பார்க்கமுடியாத மூளையின் செயல்பாடு. டேவிட் ஈகிள்மேனின் சமீபத்திய லைவ்வயர்ட்(Livewired) புத்தகம் மூளைப் பற்றிய அறிவியலை இப்படித்தான் தொடங்குகிறது. “படைப்புத்திறன் என்பது இல்லாத ஒன்றை உருவாக்குவதல்ல மாறாக இருப்பதை மறுவடிவமைப்பு செய்வது. அதைத்தான் மூளை நிகழ்த்துகிறது” ஈகிள்மேன் இப்படி மூளையைப் பற்றி லைவ்வயர்ட் நூலில் அழகாகச் சொல்லிக்கொண்டே போகிறார். பொதுவான மருத்துவ அறிவியல் நூல்களிலிருந்து இது தனித்துவமானதாக இருப்பதற்கு, ஈகிள்மேனின் எளிமையான மொழியும் ஆச்சர்யமான உதாரணங்களும் விவரிப்புகளும் காரணம்.
இதுவரையில் நியூரோ பிளாஸ்டிசிட்டி அல்லது பிளாஸ்டிசிட்டி என மூளை நரம்பியலைக் குறித்து பயன்படுத்திவந்த சொல்லாடலையே முதலில் ஈகிள்மேன் நிராகரிக்கிறார். வில் ஜேம்ஸ் பெயரிட்ட பிளாஸ்டிசிட்டி என்பது நாம் பயன்படுத்தும் நெகிழிகளின் (பிளாஸ்டிக்) தன்மையை வைத்தே குறிப்பிப்பட்டது. அதாவது எந்தவொன்றாலும் அழிக்க முடியாதது, அப்படியே அழித்தாலும் அது மறுபடியும் உருமாறிவிடும் என்கிற அடிப்படையின் அர்த்தத்தில். (பிளாஸ்டிக், என்பது சாதாரணமாகத் தோற்றம் அளிக்கும் ஒரு மாயப்பொருள்- ரோலான் பார்த்) ஆனால் ஈகிள்மேன் மூளையின் செயலமைப்பு நெகிழிப்போல் இல்லை பதிலாக மின்தடமாக இருக்கிறது என்கிறார். உதாரணத்திற்கு ஒரு வளர்ந்துவரும் நகரம் தன்னை எவ்வாறு காலத்திற்கேற்ப, கலாச்சாரத்திற்கேற்ப, வளர்ச்சிக்கேற்ப மாற்றிக்கொண்டிருக்கிறதோ அப்படித்தான் மூளையும். அறுவை சிகிச்சையில் மூளையின் பாதி பகுதி நீக்கப்பட்டாலும் மீதிப்பகுதி தன்னைப் புதுப்பித்துக்கொண்டு முன்பிருந்ததைப்போலவே செயலாற்றத் துவங்கிவிடும் என்கிறார்.

இரண்டாவது, உண்மையில் மூளையிலிருந்து எந்தவொரு சிறு தரவுகளும் தொலைவதில்லை. செடிகொடிகளுக்கு உயிர்வாழ ஒளி தேவைமாதிரி, நுண்ணுயிரிகளுக்கு ஒட்டுண்ணி உடல் தேவைமாதிரி மூளைக்கு அன்றாடம் தகவல்கள்தான் உணவு. தகவல்கள் என்றால் வெறுமனே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை என்று அர்த்தமல்ல. மூளை சதா தனது இணைப்பை ஒழுங்கமைக்க, சரிசெய்துகொள்ள, விஸ்தரிக்க புலன்களின் வழியாகக் கிடைக்கும் ஏதோவொரு விருந்தாளிக்காகக் காத்திருக்கிறது. சிறுவயதில் நாம் பார்த்த நமது ஊர் இன்று முற்றிலும் மாறியிருக்கிறது இல்லையா? இன்னும் அது மாறிக்கொண்டே இருக்கும். பிளாஸ்டிசிட்டி என்கிற சொல் மூளையைப் பற்றிக்கூற போதுமானதாக இல்லை. பிளாஸ்டிக் மீண்டும் மீண்டும் மீள் உருவாக்கமடைந்தாலும் அதில் ஏதோவொரு பண்பு குறைவதாக ஈகிள்மேன் கருதுகிறார். அதாவது, பிளாஸ்டிக்கின் வேதி இணைப்பு துண்டிக்கப்படும்போது அது இன்னொரு சிறிய இணைப்பு வட்டமாகிறது. துண்டான இணைப்பு வேறொரு வேதி இணைப்பு. இரண்டும் உயிரற்ற வெவ்வேறு மூலப்பொருள்களாக மாறிவிடுகின்றன. ஆனால் மூளை துண்டிக்கப்பட்ட அடுத்த நொடியிலிருந்து தன்னைத்தானே உயிர்ப்பிக்கத் துவங்குகிறது.
ஈகிள்மேன் இதை விளக்குவதற்குமுன் டிஎன்ஏ பற்றிய ஒரு புதிரை அவிழ்க்கிறார். அதாவது, உயிரினத்தின் தொழிற்பாட்டையும் மரபியல்சார் அறிவுறுத்தலும் பாரம்பரிய பண்புகளும் டிஎன்ஏவின் மூலக்கூறிலும் வேதிப்பிணைப்பிலும் இருப்பதாக வாட்சன் கிரிக் கண்டுபிடித்தது அதன் ஒரு பகுதியை மட்டும்தானேவொழிய டிஎன்ஏ வேதிப்பிணைப்பின் மற்றொரு பகுதியில் என்ன இருக்கிறதென யாராலும் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை, அது வேறு எங்கும் இல்லை. நம்மைச் சுற்றியே இருக்கிறது. அதாவது, ஒவ்வொருவரின் பழக்கங்களும் சூழலும் வாழ்விட தகவமைப்பும் டிஎன்ஏவின் வடிவத்தை நிர்ணயிக்கிறது என்கிறார். உதாரணத்திற்கு குகையில் வாழ்ந்த மனிதர்கள் எவ்வாறு சிந்தித்தார்கள், சமகால மனிதர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என ஒப்புமைப் படுத்தலாம். நாம் சிந்திப்பதும் எதிர்காலத்திலிருப்பவர்கள் சிந்திப்பதற்கும் குகைமனிதன் சிந்தித்ததும் வெவ்வேறானது. நமது சிந்தனையைத் தீர்மானிக்கும் சூழலோடு தொடர்புகொள்ளும் உணர்வு நரம்புகளையே மூளை ஒழுங்கமைக்கிறது. அவற்றை டிஎன்ஏவின் வேதிப்பிணைப்புகளுக்குக் கடத்துகிறது. அப்படியென்றால் நம்மால் எதிர்காலச் சந்ததியை நிர்ணயிக்கப் போகும் வேதிப்பிணைப்பை மாற்ற முடியும் இல்லையா? மூளையின் நியூரான்கள் உடலின் புலன்களின்வழியே இந்த உலகத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றன. எந்த புலன் செயலிழந்துவிடுகிறதோ அதற்கு ஏற்ற மாற்றுப்பணியக்கு வேறொரு புலனை மூளை அமர்த்துகிறது. பார்வையில்லாதவர் தொடுதல் வழியாக, செவியின் மூலம், சுவையின் ஊடே உலகத்தைப் பார்ப்பது இப்படித்தான். கைகள் இழந்தவர் கால்கள் உதவியுடன் வேலை செய்வதும், கால்கள் இல்லாதவர் கைகளை கால்களாக மாற்றிக்கொள்வது என நாம் காணும் அத்தனையும் மூளையின் தகவமைப்பு. இதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதானே எனலாம். ஈகிள்மேன் இந்த இடத்தில் வேறொன்றைக் குறிப்பிடுகிறார். வயலின் கலைஞர் ஒருவர் வேதியியல் துறைக்கு மாறுவதும் இசையை அறிந்திராதவர் இசையைக் கற்றத் தொடங்குவதும் மூளை தனக்குக் கிடைக்கும் தகவல்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் திறன் என்று விளக்குகிறார். அதாவது ஒருவனால் எல்லாவித வேலையையும் செய்யும் ஆற்றலையும் அமைப்பையும் மூளை தயாராகவே வைத்திருக்கும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மூளைக்கு ஒரே மாதிரியான வேலையைக் கொடுக்காமல் இருப்பது மட்டும்தான். மார்டின் ஹைடேக் கூறுவது நினைவுக்கு வருகிறது. Every man as born as many men and dies as a single one .

மூளையின் காலனியாதிக்கம்
ஈகிள்மேன் மூளையின் செயல்பாட்டை காலனியாதிக்கத்துடன் ஒப்பிடுகிறார். ஒரு நாட்டை பிறிதொரு நாடு எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறதோ அப்படித்தான் மூளை தன்னுடைய எல்லைகளை, அதாவது பார்த்தல், கேட்டல், உணர்தல், பேசுதல் போன்றவற்றிற்கு பாதகம் ஏற்படாமல் அல்லது ஏற்படின் அதை எவ்வாறு நிவர்த்தி செய்துகொள்வதென்கிற அவசரத்துடன் எப்போதும் முனைப்புடன் விழித்திருக்கிறது. பிரான்ஸ், தென்அமெரிக்காவை காலனியாதிக்கத்துக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகளை ஈகிள்மேன் விளக்கும்போது, பிரிட்டிஷ் நம்மை காலனியாதிக்கதுக்குள் வைத்திருந்தது நினைவுக்கு வராமலில்லை. அதாவது, காலனியத்தை விரிவாக்க அந்த அரசு எவ்வாறு தனது இருப்பை நிறுத்திக்கொள்ள, தனக்கான வசதியை முதலில் தனது நாட்டிலிருந்து கொண்டு வருகிறது(பிரிட்டிஷ்காரர்கள் அவர்களுக்கான அத்யாவசியத் தேவையை முதலில் இங்கிருந்து பெறவில்லை மாறாக இறக்குமதி செய்துகொண்டார்கள்). பார்வை இழப்பானதும் தொடுதல் வழியாக உடனே உணர்வுகள் பார்வை மண்டலத்தை இயக்க ஆரம்பிக்கின்றன. ஒருவேளை காலனிய அரசுக்கு அவ்வாறு இறக்குமதி செய்துகொள்ளுதம் மார்க்கம் திடீரென்று தடைபடும்போது, ஒருவர் தொடுதல் உணர்வையும் இழக்க நேரிடுகிறார் என்றால்(பக்கவாதம் மாதிரி) உடனே சப்தங்களால், சுவை மூலமாக, அசைவின் வழியாக, தீண்டப்படுவதன் ஊடே பார்வை மண்டலம் இயக்கத்தை, காலனிய அரசு தனது அன்டை நாடுகளிலிருந்து அல்லது அடிமைப்படுத்தப்போகும் நாட்டிலிருந்து , எந்த வழியிலாவது, தனது உயிர்வளத்தைத் தொடங்குவதுபோல மூளை செயல்படும்.
இன்னொன்று, நாம் ஒரு பொருளை பார்த்ததும் அல்லது அதன் சப்தத்தைக் கேட்டதும் அது எது என நாம் உணர்கிறோமெ அந்தவொன்றை நாம் அக்கணத்தில் பார்த்து மூளை நமக்குச் சொல்வதில்லை மாறாக அது ஏற்கெனவே நம்முடைய மூளையின் நினைவுக்கிடங்கிலிருந்து புலன்கள் வழியாக வெளிப்படுகிறது என்பதை நம்மை ஆச்சர்யமூட்டுகிறது. அதாவது, ரிவர்ஸ் பிராசஸ், எப்படியென்றால், பொதுவாக நாம் எதைப் பார்க்கிறோமோ அங்கிருப்பது தீ அதைத் தொட்டால் சுடும் என நமக்கு எப்படி உத்தரவு வருகிறது? அதை நாம் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறோம். மாங்காயை நறுக்கி உப்பு காரம் போடும்போதே நமக்கு உமிழ்நீர் சுரப்பது என்பது நாம் ஏற்கெனவே அதை அனுபவித்திருப்போம் அந்த அனுபவத்தை அக்காட்சி மறுபடியும் மீட்டுகிறதேவொழிய அக்கணத்தில் அது நமக்கு புதிதாக மூளைக்குப் போவதில்லை. குழந்தைப் பருவத்தில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் குழந்தைகள் கடித்து, நக்கி, தொட்டு, உடைத்துப் பார்க்கும் அனுபவங்கள்தான் அதன் பண்பை வாழ்வின் கடைசி வரைக்கும் மூளையில் சேகரித்து வைத்திருக்கிறது என்பது ஈகிள்மேனின் கூற்று.
கனவுகளுக்கு புதிய விளக்கம்
கனவுகளுக்கு பல வல்லூநர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உளவியலில் அது மிக்பெரிய கச்சாப் பொருளானது நமக்குத் தெரியும். ஈகிள்மேன் அதை வேறுவிதமாக விளக்குகிறார். பூமியின் சுழற்சி காரணமாக இரவு பகல் மாறும்போது நம்முடைய பார்வை மண்டலம் முதன்முதலில் பாதிப்புக்குள்ளாகிறது. அதாவது, இரவு ஒரு நாளின் பன்னிரெண்டு மணிநேரத்தை எடுத்துக்கொள்கையில் வேறு எந்த புலன்களையும்விட பார்வை மண்டலம் பதற்றத்துக்குள்ளாகிறது. உறக்கத்தில் உடல் ஒருவித சமநிலைக்கு வரும்போது நமது மற்ற புலன்கள்(செவி,நாசி,தசைகள்) விழித்தேதான் இருக்கின்றன அதுபோலவே பார்வை மண்டலமும் விழித்திருக்கிறது ஆனால் இருள் காரணமாக அதனால் செயலாற்ற முடியவில்லை. தன்னுடைய எல்லைக்கு(பார்வை மண்டலத்திற்கு) சிக்கல் நேரிடுவதால் அதைக் காப்பாற்றிக்கொள்ள எதிர்வினையாற்றத் துவங்குவதே மூளையின் மின்தடத்திற்குள் நிகழும் கனவுகள். அதனாலயே கனவுகளில் நம்மால் முழுக் காட்சியை, தொடர் செயல்களை, சில இடங்கள் என முழுமையான சித்திரத்தைப் பார்க்க முடிகிறது. கலங்களான, உருவிழியானவைகள் கனவுகளில் வருவதில்லை. பிறவியிலேயே பார்வையற்றவர்களுக்கு அவர்களது மற்ற புலன்கள் வழியாக கனவுகள் காட்சிகளாக வராவிடினும் வேறுவித அனுபவங்களை பிரதிபலிக்கும் என ஆய்வுகளை தருகிறார். உதாரணத்திற்கு நாய் குரைப்பதுமாதிரி, இடி சப்தம், வித்யாசமான தீண்டல் உணர்வுகள் என அவர்களுக்கு கனவுகள் எழும்.
பார்வையற்றவர்களால் பிரெய்லி எழுத்தை வாசிக்கும்போது விரல்களின் உணர்வுகள் விழிகளுக்கு இணையாக மாற்றம் பெறுவதைச் சுட்டிக்காட்டி ஈகிள்மேன், காதுகேளாத பார்வையற்றவர்களால் தங்களைக் கடந்துபோகும் ஆம்புலன்ஸை கவனிக்க முடியும் என்கிறார். நமது தோல் உணர்வு மண்டலம் சப்தங்களோடு மிக நெருக்கமானத் தொடர்புடையது. பார்த்தலும் கேட்டலுமின்றி தீண்டப்படுவதன் மூலமாக, தொடுவதன் வழியாக நம்மால் உரையாட முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக நவீனக் கலாச்சாரம் நமக்கு தீண்டுவதையும் தீண்டப்படுவதையும் நமது தோல் உணர்வு மண்டலங்களுக்கு அளிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டது.
மூளையின் ஞாபகத்திறன் கூகுள் தேடுபொறியைவிட அபாரமானது. நம்மால் துல்லியமாக சிறுவயது நினைவுகளுக்குள் பயனிக்க முடியும் அதேபோன்று எதையும் அவ்வளவு எளிதாக மறக்கும் தன்மையும் மறக்க முடியாத தன்மையும் மூளை வைத்திருக்கிறது. Eternla sunshine of the spotless Mind படத்தில் காதலர்கள் பிறிவதற்காக தங்கள் நினைவுகளை அழித்துக்கொள்ளும் தொழில்நுட்பத்தைக் காட்டியிருப்பார்கள். உண்மையில் மூளையில் நினைவுகள் அழிவதே இல்லை என்பதுதான் ஈகிள்மேனின் வாதம். புற்றுநோய் செல் மாதிரி அது எங்காவது நினைவின் துகள்களை ஒளித்து வைத்திருக்குமாம். அதுபோல சிறுவயது நினைவுகளை துல்லியமாக விளக்கும் வயதானவர்களின் ஞபாகத்திறனின் பின்னோக்கிய பயணமும் மூளை தன் நினைவுகளை புதுப்பிக்க தானே நிகழ்த்தும் முயற்சி. ஐன்ஸ்டினின் கடைசி வார்த்தை எனும் கட்டுரை ஒன்று உண்டு. உலகின் புதிர் குறித்து அவர் அழிக்கப்போகும் இறுதிச் சூத்திரம் என்னவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் மருத்துவமனையிலிருக்கும் ஐன்ஸ்டினின் சொல்லுக்காக காத்திருந்தபோது அவர் தன் தாய்மொழியில் கடைசியாக சில வார்த்தைகள் பேசியிருக்கிறார். அங்கிருந்த செவிலியருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும் பாவம் என ரோலான் பார்த் எழுதியிருப்பார்.

பயோநிக் (Bionic) எனும் உயிர்எந்திரங்களின் காலம்
பயோநிக் என்பது வெறுமனே ரோபா எனும் எந்திரத்தைச் சுட்டுவதில்லை. நம் உடலையே எந்திரனாக மாற்றும் அறிவியல் வளர்ச்சியின் அடுத்த கட்டம். அதாவது, உடல் உறுப்புகளில் இனி எது செயலிழந்தாலும் அவற்றை மூளையின் நியூரான்களுடன் இணைக்கும் தொழில்நுட்பத்திற்கு அறிவியல் வளர்ந்துள்ளது. புத்தகத்தின் இரண்டாம் பகுதி முழுக்க ஈகிள்மேன் இதை விரிவாக, ஆராய்ச்சியில் கிடைத்த அனுபவங்களுடன் பகிர்கிறார். ஏற்கெனவே பக்கவாத நோயால் பாதிக்கப்படுவர்களின் குரல் நாண்களை இயக்கும் தொழில்நுட்பத்தை நாம் அறிந்திருந்தாலும் ஈகிள்மேன் இதில் பார்வையற்றவர்களைப் பார்க்கச் செய்வதும், காது கேளாதவர்ளுக்கு சப்தங்களை உணர்த்தவும் பேசவியலாதவர்களை பேச வைக்கும் தொழில்நுட்பங்களை பகிரந்துகொள்கிறார். மேலும் நியூரோபிராஸ்தடிக் டிவைஸ் மூலம் முடங்கிப்போன தசைகளை இயக்க வைக்கும் முறைகளும் இதில் சாத்தியம். பயோசிப் மூளை நரம்புகளில் எந்த உணர்வு மண்டலத்துடன், அதாவது உதாரணத்திற்கு செவிக்கானத் தகவல்களை வேறு எங்கிருந்து அனுப்ப முடியும் என்பதும் அது எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் விளக்குகிறார். அதாவது, ஒரு கை இழந்த ஒருவருக்கு வைக்கப்படும் எந்திரவடிவ கை ஆனது, பார்வை நரம்புகளுடனான தொடர்புடன் மூளையின் உத்தரவை உடனே செயலாற்றும் என்கிறார். ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்று நினைத்ததுமே எந்திரக்கைகள் அதை செயல்படுத்திவிடும் அளவிற்கு தொழில்நுட்பம் மாறிவிடும். மூளையின் கட்டமைப்பை மனிதன் தனக்குத் தேவையான சாதனங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடும். காரின் இன்ஜின் அமைப்பை(Dark Knight படத்தில் வரும் பைக் மாதிரி.) மூளையின் நியூரான்களின் தகவமைப்பைப்போல உருவாக்கலாம். கண்முன் மெய்நிகர் உலகை உருவாக்குவது இப்போது நடந்துகொண்டிருப்பதுபோல விர்ச்சுவல் ரியாலிட்டியில் மனிதன் உலவுவது சாதாரணமாகக்கூடும். ஒரே நேரத்தில் அலுவலகம், வீடு என மனிதன் தனது மெய்நிகர் மாதிரியுடன்(அவதார் படத்தில் பார்த்ததுபோல) வாழும் அனுபவத்தைப் பெறுவான். அதைவிட ஓர் ஆண் பெண்ணின் மெய்நிகர் மாதிரியையும் பெண் ஆணின் மெய்நிகர் மாதிரியையும்கூட உருவாக்கும் சாத்தியம் இருக்கிறது. ஒரே நேரத்தில் பல நூறு போர்வீரர்கள் மெய்நிகர் உலகில் நிற்க முடியும். இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது நம்மால் கற்பனை செய்ய முடிகிறதென்றால் மூளையின் பாய்ச்சலை நம்மால் உணர முடிகிறதென்று அர்த்தம்.
அமெரிக்கா கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய மார்ஸ்ரோவரின் செயல்வடிவம் மூளை நியூரான்களைப் புரிந்துகொண்டதன் துல்லியமான வெளிப்பாடு என்கிறார் ஈகிள்மேன். பயோநிக் யின் அபரித வளர்ச்சி இனி உலகின் போக்கை மாற்றும் என்பது அவரது நம்பிக்கை. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் நாம் முடிவு செய்வதில்லை நமது நியூரான்களே அவற்றைத் தேவையானளவிற்கு எடுத்துக்கொண்டு வினையாற்றுகிறது. அதாவது, இந்த உலகம் ஒவ்வொருவர் பார்வையில் அவரவரது மூளையின் தகவமைப்புக்கேற்றார்போல தோன்றும் பிம்பமே. அப்படியென்றால் ஒவ்வொருவரும் இந்த உலகை தங்களுக்குரிய பிரத்யேக மூளையின் வடிவமைப்பிலேயே காண முடியும் இல்லையா? மூளை தன நரம்பு மண்டலத்தால் புலன்களை கட்டுபடுத்துவதின் வெளிப்பாடுதான் வெளியே நாம் அனுபவிக்கும் காலனிய அதிகாரத்தின் விளைவு. இந்திய தத்துவத்தில் கருத்துவாதம் முன் வைக்கும், “பொருள்கள் நம் எண்ணத்தில் மட்டுமே இருக்கின்றன, புறஉலகம் என்று உண்மையில் இல்லை. எண்ணத்தைத்தாண்டி அப்பால் ஒன்றும் இல்லை” என்பதுபோல நியூரான்கள் எந்திரயுகத்தை நிர்ணயிக்கும். அதன் சாதக பாதகங்களுக்கு நாம் தயாராகவே இருக்க வேண்டும்.