இன்னொருவன்
இன்னொருவன்
அமிர்தி ராஷன், அதுதான் அவனுடைய சரியான பெயர். ஆனால் எனக்கும் மேன்சனிலிருந்த எல்லோருக்கும் அமிட்டிராஸ் என்றுதான் அப்பெயர் வாயில் நுழைந்திருந்தது. அவன் ‘காணாமல்போவதற்கு’ முதல் நாள் தமிழ்நாட்டிற்கு இரயிலேறியிருக்கிறான். அவனைத் தவிர தன் ஊரிலுள்ள அனைவரும் அவன், காணாமல் போனதாகவே நம்பிக்கொண்டிருப்பதாகச் சொல்வான். “வழி தவறுதல் மட்டுமே காணாமல் போவதாக இங்கு நம்பப்படுகிறது. ஆனால் காணாமல் போவது ஓரு நித்ய யோகநிலை. உன்னோட இடத்தை நீ வெற்றிடமாக்கிவிட்டு வேறொரு இடத்துக்குப் போகும்போது கிடைக்கின்ற தனிமை அபூர்வமானது. நான் எனக்கான இடத்திலிருந்து வெளியேறி, கொஞ்சம் கொஞ்சமாக அது மறைந்து கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன்”. அமிர்தி ஹிந்தி கலந்த தமிழில் சொன்னபோது நான் ஆச்சர்யப்பட்டேன். அவன் இங்கு பாம்பே பவனில் சமையல் வேலை செய்யும் பீகாரி. கட்டிட வேலைக்கும் ஹோட்டல் வேலைக்குமென மேன்சனின் அனேக அறைகளில் பீகார் பையன்களே இருந்தார்கள். தினம் காலையில் சலசலவென எலிக்கூட்டமாக அறையிலிருந்து அவர்கள் இறங்கி ஓடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். இறுக்கமான பேண்ட் சட்டையில்ää ஒருத்தரையொருத்தர் இடித்துத் தள்ளிக்கொண்டுää வாயில் பாக்கு அதக்கியவாறு போய்க்கொண்டிருப்பாhர்கள். எப்போதும் சோர்வுறாத உடல்கள்.
வேலைக்கென்று நான் அலைந்தது இதுவரையிலும் இல்லை. போட்டித்தேர்வுகளுக்கு தயாராவதே எனக்குப் பெரும் அலைச்சலாகப்படும். பிகாம் முடித்ததும் பக்கத்து ஊரிலிருந்த பெரிய கடையொன்றில் அக்கவுன்டன்டாக சில மாதங்கள் இருந்தேன். சிமென்ட், கம்பி, டைல்ஸ் எனக் கட்டிடங்களுக்கு சப்ளை செய்யும் பெரிய கடை. அப்பாவுக்குத் தெரிந்த வயதான முஸ்லிம் பெரியவருக்குச் சொந்தமானது. அவருடைய பையன்கள்ää மருமகன்கள் என குடும்பம் முழுவதும் வேளைக்கு இருவராக நாற்காலியில் மாறி மாறி அமர்ந்திருப்பார்கள். பெரியவர் தொப்பை சரிய பஞ்சுத் தாடியைச் சிக்கெடுத்தவாறு உள்ளறையில் அமர்ந்திருப்பார். சுத்தமாக ஒழுங்கு செய்த தாடி. அவருக்கு தினம் காபி கொடுக்க நுழைகையில் குழைந்து வணக்கமிடுவேன். பெரியவர் மெல்லிய உதட்;டுச் சுழிப்பைச் சிரமத்துடன் கொடுப்பார். மூன்று வேளையும் தொழுத பின்பு குஷன் நாற்காலியில் மறுபடியும் சாய்ந்து கொள்வதோடு சரி. அக்கவுண்டன்ட் என்பது வெறும் பெயருக்குதான். முழுக்கணக்கு வழக்குகளையும் அவர்களே முடித்திருப்பார்கள். பட்டியல் வாரியாக கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்வதும், பிரின்ட் போட்டுக்கொடுப்பதும் மட்டுமே என்னுடையது. தினம் சாய்ந்தரம் பெரியவர் பணக்கட்டுகளைப் பிரித்து, வெவ்வேறு வங்கிகளில் அவர்கள் வைத்திருக்கும் கணக்குகளில் செலுத்தச் சொல்வார். அவர்களுக்கான பணமுடிப்பை எண்ணிக் கொடுத்த அவ்வேலையின் அலுப்பு இரண்டொரு மாதங்களில் அங்கிருந்து என்னை விரட்டிவிட்டது. வங்கித்தேர்விற்கு தயாராகப் போவதாகச் சொல்லி நின்றுகொள்ள முடிவெடுத்தபோது பெரியவர் உடல் குலுங்க சிரித்து, “நம்ம கடையே பெரிய பேங்குதான்” என்று திரும்ப திரும்ப சொல்லி சிரிததவாறு வேலையைப் பாரு எனச் சைகை செய்து உட்கார வைத்தார். அவர்களுக்குக் கொடுக்க நினைத்த எனது அதிகபட்ச தண்டனை சொல்லிக் கொள்ளாமல் ‘காணாமல் போனது’.
நான் பிறந்த ஒரு வருடத்திற்குள் அம்மா இறந்துபோனாள். அக்கா பிறந்ததற்குபின் நான்கு குறைப்பிண்டங்களைப் புதைத்துவிட்டு ஈனமுடியாதவொரு வலியினூடே என்னைப் பெற்றதாக தாத்தா சொல்வார். தெருவில் எங்கேனும் மஞ்சள் அப்பிய வகிடு நிறைந்த நரையுடன் குண்டுப்பெண்களைக் காணும்போது அம்மாவின் படத்துடன் ஒப்பிட்டுக்கொள்வேன். தாத்தா கரகாட்டங்களுக்கும், கச்சேரிகளுக்கும் நாயனத்தைத் துப்பாக்கியாகத் தூக்கிக்கொண்டு செல்லும்போதுஇ அம்மா வேட்டைக்குப்போகும்; கம்பீரத்துடன் பாவாடை சட்டையில் பின்தொடர்ந்திருக்கிறாள். அவர் அம்மாவிற்கும் அதைக் கற்றுக்கொடுத்து ரசித்தவர். அந்நாயனத்தின் காவி உரைத்துணி வெவ்வேறு ஊர்களின் புழுதிக்கறைகளை ஏந்தியவாறு உத்திரத்தில் இன்றும் கிடக்கிறது. எனது முழுவாழ்க்கையும் ஐந்து நிமிட சங்கீதம் கேட்பதில் கரைந்துபோய்விடும். பரம்பரை வழியே பிரதியெடுத்த வித்து அதில் மறைந்திருந்தது. தாத்தா நாயனத்தைத் தொட்டது முதல், தெருத்தெருவாக அலைந்து வாசித்துக்காட்டி பிச்சையெடுத்துää இரவில் சாராயத்துடன் யாரும் சீந்தாமல் இறந்து கிடந்தவரை அவரைத் தொடர்ந்த சாபம் எனக்கும் வந்துவிடக் கூடாதென அப்பா தீர்க்கமாக இருந்தார். கச்சேரிகளில் நாயனத்திலிருந்தெழும் இசையைக் கேட்பதற்காக இரவில் சாமக்காவலனாக சுற்றித்திரிந்திருக்கிறேன். அக்கரிய குழாயிலிருந்து எழும் ஓசையில் சரீரமே துளைகளிட்ட வாத்தியமாக மாறிவிட்டது போலிருக்கும். இசையில் காலத்தை வீணடித்துக்கொண்டிருப்பதாக அப்பா புலம்பத் தொடங்கினார். அவருடனான மோதலில் என்னுடைய எண்ணங்களின் தற்கொலையைத் தடுக்க இயலவில்லை. என் பதிமூன்று வயதில் அவர் இன்னொரு திருமணம் செய்துகொண்டபோது அது அவருடைய பாலியல் தேவைக்குத்தானென உணர்ந்ததிலிருந்து எங்களுக்குள் உரையாடல்கள் அற்றுää மௌனஇடைவெளிகளின் கனம் கூடிவிட்டிருந்தது. அவருடன் செய்வதற்கென்றே விவாதங்களின் ஒத்திகைகள் தினம் எனக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தன. புதிய உறவுகள் எதையும் நான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. என்மீது விழும் கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொள்ளத் தனிமை இடம் தேடிக்கொண்டிருந்தபோதுதான் மேன்சனுக்கு வந்து சேர்ந்தேன்.
மேன்சன் காலனியக் குடியிருப்பைப் போலிருந்தது. பெரும்பாலான அறைகள் காலை பத்து மணிக்குமேல் காலியானதுமே பெரும் வெறுமை சூழ்ந்து கொள்ளும். அறைகளின் பேரமைதி அந்தரங்கவுணர்வை கிளர்ந்தெழச்செய்யும். ஒவ்வொரு அறையையும் ஆபாசமான உடல் நெளிவுகளாகவே உணர்ந்தேன். சட்டென தனிமையுணர்வு பயமுறுத்தும்போது கீழ்தளத்திலிருக்கும் ஜெராக்ஸ் கடைக்குச் சென்று அமர்ந்துகொள்வேன். கண்ணாடிச் சட்டகத்துக்குள்ளிருக்கும் பெண்களின் சிரிப்புகளும் ஓயாத கண்ணசைவுகளும்ää வளையல் மோதல்களும் அவ்விடமெங்கும் சிதறிக்கொண்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் முதல்தளத்தைக் கடக்கும்போது ஜன்னலருகே அமர்ந்திருக்கும் சிட்பன்ட் அலுவலகப்பெண்ணின் மார்பின்மேல் பார்வை தொட்டு மீளும். அமிர்தி என்னைக் கவனித்து சிரித்துக்கொள்வான். பின்பு அவனுக்கும் அத்தளத்தின் படிகளில் ஏறும் லாவகத்தை கற்றுக்கொடுத்ததும் தினம் அவளின் விரிந்த மொடமொடப்பான புடவைகளின் ஒழுங்கல்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டான். அப்படித்தான் அமிர்தி எனக்கு அறிமுகமானான்.
0
அமிர்திக்கு மொழுக்கையான சப்பை முகம். செம்பழுப்பு நிறத்திலிருப்பான். மூக்கு வடிவமற்று வெறும் துளைகள் மட்டுமே கொண்டிருப்பது போலிருக்கும். மயிர்களற்ற மென் இமைகள். அவனிடம் பீகாரிகளுக்கான முகச்சாயல் இருந்தாலும் உற்றுநோக்கினால் நெருங்கிப் பழகிய ஒரு மிருகத்தின் பிம்பம் தெரியும். அவன் குள்ளவுருவம் அப்படி ஞாபகப்படுத்துகிறது என நினைத்துக்கொள்வேன். அவன் அப்பா நேபாளி. அவர் பிழைப்புத்தேடி வந்தபோது பீகாரியான அவன் அம்மாவை திருமணம் செய்திருக்கிறார். அதனாலே அவனுக்கு நேபாளி சாயல் நிழலாகப் பின்தொடர்கிறது. தேங்காய் மூடிகள் போல சிறுத்த பிருஷ்டத்தைத் தள்ளிக்கொண்டு நடக்கையில் கால்கள் வடக்குதெற்காக வளைந்து கோணலான இடைவெளியைக் காட்;டும். குரங்கு எழுந்து ஓடுவது போலத்தான் தோன்றும். பக்கத்து அறையிலிருந்த திருநெல்வேலி அண்ணாச்சி “கொரங்குலேந்து அப்படியே வந்துட்டான்டே” என்பார். சமங்களில் என்னையறியாமல் சிரித்துவிட்டு அமைதியாகி விடுவேன். கைகள் இடுப்பில் செருகியிருப்பது போல தனித்துகிடக்கும். அவன் முதுகு வளைந்திருக்காது ஆனால் குனிந்து நடப்பது போலத்தான் இருக்கும். நான் இதற்காகவே அவன் நடையைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். சிலநேரம் அவன் நிழலில் அவ்வுருவம் தெரிகிறதாவென ஆராய்வேன். ஆனால் எல்லா நிழல்களும் மண்ணில் ஒன்றுபோலத்தான் இருந்தன. வாட்ச்மேன், “இவேன் ஓட்டல்ல குண்டியாட்டிகிட்டு என்ன வேல செய்றான்” என்பார் கேலியாக. உண்மையில் அமிர்தி வேலை செய்வது அப்படித்தான் இருந்தது. ஒருமுறை சாப்பிட்டுவிட்டு கை அலம்பும் இடத்திலிருந்து கிச்சனை எட்டிப்பார்த்தேன். அப்போது அமிர்தி இரண்டு முட்டைகோஸ்களைத் தூக்கிக்கொண்டு சர்க்கஸ் குள்ளர்களைப் போல நடந்து சென்றான். எப்போதுமே அவன்மீது புளித்த பழ வீச்சம் இருக்கும். அத்தகையொரு வீச்சத்தை இராமேஸ்வரத்தில் வடஇந்தியர்களிடம் நுகர்ந்திருக்கிறேன்.
மேன்சனின் மூன்றாவதுதளத்தில் இருக்கும் எனது அறைக்கு அடுத்து அவனுடைய அறை. என்னைப் பார்க்கின்ற சமயங்களில் வறட்டுச் சிரிப்பைக் காட்டுவான். இங்கு அனேக வெளி மாநிலத்தவர்களிடத்தில் இச்சிரிப்புதான் இருக்கும். நான் படித்துக்கொண்டிருக்கையில் என்னருகே நின்று, வாசிக்கின்ற புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டுச் சென்றுவிடுவான். அப்படித்தான் அவனுடன் பேச ஆரம்பித்தேன். அவனுடைய தமிழ்ää குழந்தைகள் திக்கிக்குழறி பேசுவது போலிருக்கும். சிலசமயங்களில் தனிமையில் தொழுவதுபோல தரையில் கவிழ்ந்தபடி காகிதத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். யாரும் தமிழ் எழுதுகிறபோது அவ்வளவு ரசித்ததில்லை. ஊர்ந்து செல்லும் எறும்புகள் போலிருக்கும் அவ்வெழுத்து. தன் தங்கைக்கு எழுதுவதாகச் சொல்லிவிட்டு அதை அப்படியே வைத்;துக்கொள்வான்.
மாதேபுராவின் புறநகரில் உள்ள சிறு கிராமம்தான் அவனுடைய பூர்வீகம். ஆனால் பாட்னா என்றே எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தான். அவ்வூர் நேபாளத்திற்கு அருகிலிருந்ததால் தன்னையொரு நேபாளியாக கேட்பவர்கள் நினைத்துவிடக்கூடுமென்கிற பயம் அவனுக்கிருந்தது. மாதேபுராவின் புறநகர் சிகரெட்டின் சாம்பல் துகள்கள் கொட்டியது போலிருக்கும் என்பான். ஆஸ்பெஸ்டாஸ் தட்டி வேய்ந்த வீடுகள். கதவுகளும் ஜன்னலும் கனத்த போர்வையால் மறைத்துத் தொங்கவிடப்பட்டிருக்கும். அவ்வூரின்மீது செல்லும் ஒரேயொரு தேசிய நெடுஞ்சாலை மட்டுமே அதை நகரத்தோடு இணைத்திருக்கிறது. அந்நெடுஞ்சாலையில் செல்லும் சரக்கு லாரிகள் பகல் நேரங்களில் சிறுநீர் கழிக்கவும்ää சாமப்பொழுதில் இச்சை தீர்க்கவும் அங்கு நின்று செல்லும்.
‘அப்பா சிறுவயதிலிருந்து பாட்;னாவிலுள்ள ஆசிட் தொழிற்சாலையில் வேலை செய்தார். கழிவறைகளுக்குப் பயன்படுத்தும் ஆசிட்களைத் தயாரிக்கும் இடம். பாட்னாவிலிருக்கும் அத்தொழிற்சாலையிலிருந்துதான் பீகாரின் பெரும் பகுதிகளுக்கு ஆசிட் பாட்டில்கள் செல்லும். அவருக்கு அதன் அமிலக்கரைசல்களில் படியும்; கழிவுகளைச் சுத்தம் செய்கின்ற வேலை. நேபாளத்திலிருந்து வந்தபோது அவர் அங்கு சேர்ந்துவிட்டார். எனக்கு நினைவு தெரிந்தது முதல் அவருக்கு ஒரு வயதான தோற்றமே முகத்திலிருந்தது. அழியாத சித்திரம் போல. என்னைப் போல குள்ளமாக இருப்பார்.’ சொல்லிவிட்டு அமிர்தி என்னை உற்றுப்பார்த்துச் சிரித்தான்.
‘அவர் எப்போதாவதுதான் எங்களைப் பார்க்க வருவார். ஆசிட் கழிவுகளில் கிடப்பவர்களுக்கு அதன் அமில நெடி நுரையீரலுக்குப் பழகிவிட்டிருந்தது. அவர்களுக்கு வேறு எவ்வித வாசனைவுணர்வும் இருக்காது. அவ்வேலையை அவரால் போதையில்லாமல் செய்ய முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆசிட்டுகளில் கலக்கப்படும் ஸ்ப்ரிட்டை குடிக்கப் பழகிக்கொண்டார். அப்பழக்கம் அங்கு வேலைசெய்யும் பெரும்பாலானவர்கிளிடமிருந்தது. எந்நேரமும் அவர் உடல் தீயாக எரிந்துகொண்டேயிருக்கும். வீட்டிலிருக்கின்றபோது ஸ்ப்ரிட் பாட்டிலைக் குடிப்பதைக் கண்டு மருண்டிருக்கிறேன். அவரது தொண்டை அரித்து, மூச்சுக்காற்றில் தீ மணம் பரவியிருந்தது. அதன்பின் அவரால் வேலைக்குச் செல்ல முடியாமல் போனது. தினம் ஸ்ப்ரிட் பாட்டில்களைத் தேடிக் கிளம்பிவிடுவார். வீட்டில் இருந்த கொஞ்ச காலத்திற்குள் அவர் மெலிந்து உருமாற ஆரம்பித்தார். கட்டிலில் படுத்திருக்கும்போது அவரையறியாமலே மலம் வெளியேறிக்கொண்டிருந்தது. ஆறுமாதத்திற்குள் மலம் முழுதும் சளியாகவும் கெட்டி ரத்தமாகவும் மாறியபோதுதான் கவனித்தோம். மாதேபுராவிலுள்ள மருத்துவமனையில் சேர்த்ததும் அது மலப்புழை புற்றுநோயின் முற்றிய நிலை என்றார்கள். பிறகு பாட்னா மருத்துவக் கல்லூரியில் அவருக்கு அறுவைசிகிச்சை நடந்தது. இடுப்புப் பகுதியில் மலம் வெறியேறுவதற்காக சிறு துளையிட்டு அதன்கீழ் மலம் விழுவதற்கு அதற்கென்றிருந்த பிரத்யேகப்பையை பொருத்திவிட்டார்கள். சிகிச்சை முடிந்த வீட்டிற்கு வந்தபோது மலவுணர்வு எடுக்கும்போதெல்லாம் கழிவறைக்குச் சென்று அமர்ந்துவிடுவார். இடுப்பில் தொங்கும் மலப்பை அவரை அருவருக்கச்செய்தது. சட்டென அழத்தொடங்கிவிடுவார்.
சிகிச்சைக்குப்பிறகு அவரின் தலைமயிர்;கள் இழையிழையாக உதிர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முழுவதும் கொட்டி குழந்தையின் மென்மயிர்களாக மாறியது. நாக்கும் கண்களும் வெண்ணிறமாக மாறிவிட்டிருந்தன. வீட்டில் ஜன்னலுக்குக் கீழே பழைய சாமான்கள் கட்டிய சாக்கு மூட்டைதான் அவருக்கு படுக்கை. பழைய ரேடியோ ஒன்றை இறுகப்பிடித்துக்கொண்டு பாட்டுக்கேட்டுக்கொண்டிருப்பார்.’.
அமிர்திää புழுவில் எத்தனை வகையோ அத்தனையையும் பார்த்திருப்பதாகச் சொல்வான். அவன் அப்பாவின் உடம்பிலேறி நெளியும் புழுக்களைப் பிடித்து கொல்வதுதான் அவன் சின்னத் தங்கைக்குப் பிடித்தமான வேலை என்றான் சிரித்தபடி. ‘அவள் காலை விடிந்ததும் புழுக்களைப் பொறக்கி வைத்திருந்து எழுந்ததும் என்னிடம் காட்டிச் சிரிப்பாள். புழுக்கள் அவரின் பிருஷ்ட்டத்திலிருந்து நெளிந்து இறங்கிக்கொண்டிருந்தன. அவருடலின் துர்நாற்றத்திற்கு நாங்கள்; கொஞ்சம் கொஞ்சமாக பழகிவிட்டிருந்தோம். சின்னவள் பள்ளிக்குப் போகிறபோது நாற்றம் அவளிடமிருந்து மற்றவர்களை முகம் கோணச்செய்திருந்ததாக என்னிடம் சொல்லி அழுதாள். ஒருநாள் அந்நாற்றம் கோரமாக வீச ஆரம்பித்துää பக்கத்து வீடுகளிலிருந்தவர்கள் முகத்தைப் பொத்திக்கொண்டு கத்தியபோதுதான் அவர் உடல் முழுவதையும் புழுக்கள் தின்றுää வெளியே தள்ளிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன்.’ அமிர்தி சொல்லும்போது அவன் நாசித் துடிப்பில் இன்னும் அவ்வாடை எஞ்சியிருப்பதுபோல எண்ணினேன்.
‘பெரிய தங்கைதான் அப்பாவுக்கு ரொட்டி சுட்டு ஊட்டிவிடுவாள். குடல் இளகுவாக வெளியே தள்ளும்படியான உணவு மட்டுமே கொடுக்க வேண்டும். அங்கு பால் அதிகம் கிடைக்காது. தண்ணீரில் ஊறவைத்த ரொட்டிதான். அவருக்கு முடிந்தவரை ஒரு ரொட்டியாவது எங்களால் கொடுக்க முடிந்தது. கொஞ்சநாளில் அவரே தட்டை மார்பில் வைத்து சாப்பிடப் பழகிக்கொண்டார். மலப்பை நிரம்பியதும் கழுவி உலர்த்தி செருகிவிடுவேன். அது ஒருமுறைக்கு மட்டுமே பயன்படுத்த மருத்துவமனையில் கொடுத்தது. அதேபோன்று பாலிஸ்டர் துணியில் நான்கைந்து பைகளை அம்மா தைத்து வைத்திருந்தாள். அப்பாவால் எழுந்து நடக்க முடியாது. அடியெடுத்து வைக்கின்ற உணர்ச்சிகூட இல்லாமல் விழுந்துவிடுவார். சிறுநீர் வெளியேற டியூப் பொருத்தியிருந்தது. கொஞ்ச நாளில் நானே அவரின் குறியில் டியூப்பை செலுத்தக் கற்றுக்கொண்டேன். அது மாட்டு வால் போல தடித்திருக்கும். அப்பெருத்த டியூப்பை எப்படி அச்சுருங்கியக் குறி உள்வாங்கிக்கொள்கிறதென நினைத்துக்கொள்வேன். தொங்கிக்கிடக்கும் அக்குறியினைப் பிடித்துச் செலுத்தும்போது அவர் உடல் நடுங்கி தன் அதிகபட்ச எதிர்ப்பை காட்டும். அன்றைக்கு அவரைக் குளிக்க வைக்க கட்டிலைவிட்டுத் தூக்கியது போது காய்ந்த பீயின் கனத்திற்கு உடல் சுருங்கிவிட்டிருந்தைக் கவனித்;தேன்.’ அமிர்தியின் குரல் உடைந்து தணிந்தது. அதன்பிறகு அடுத்த நாள் காலை அவனது அம்மா அமிர்தியை எழுப்பி ஈக்கள் அவர் முகத்தில் மொய்ப்பதைக் காட்டியிருக்கிறாள். அருகே அவன் சென்று தொட்டபோது அவர் உடல் விறைத்திருந்திருக்கிறது.
‘எங்கள் ஊரில் எங்களைப் போன்றவர்களுக்கு வீட்டில் யாரும் இறந்துவிட்டால் சிரமம் தான். பக்கத்தில் யாரும் அப்போது இறந்து போயிருந்தால் நல்லது. ஒன்றுமில்லாதவர்களுக்கும் சடங்கிற்கு பல்லாயிரம் செலவாகும். நாற்பத்தைந்து மைலுக்கு அப்பால் எங்கள் சமூகத்தை சேர்ந்த நல்ல வசதியான என் தாத்தாவின் சிநேகிதரிடம் பணம் வாங்கிää வாடகை டிரக் வண்டி பிடித்து கொண்டுசென்று அடக்கம் செய்து முடித்தோம்.’
“அதற்கப்புறம் நீ அங்கிருந்து கிளம்பிட்டியா” என்றேன்.
“முதல்ல இக்பால தேடிப் போனேன். அவன்தான் ஹோட்டல் வேலைக்குச் சேர்த்துவிட்டான். அப்போதே எனக்கு எங்காவது ஓடிவிட வேண்டுமென்றிருந்தது. வாழ்க்கையைக் கண்டு பயம் பீடித்திருந்தது. என்னை நானே தொலைத்துக்கொண்டு திரிந்தேன். சாப்பாட்டிற்கும் வேலைக்கும் அலையும் போதெல்லாம் தங்கையின் ஞாபகம் வரும். வாரணாசியில் கொஞ்ச நாள் துணிக்கடையில் இருந்;தேன். அந்த சம்பளமெல்லாம் ஒருவரின் பசிக்கே போதவில்லை. இக்பாலுக்குத் தெரிந்துவனொருவன் இங்கு ஹோட்டலில் வேலை செய்வதாகச் சொல்லியிருந்தான். அவன் திரும்பி வருவதற்காக வாரணாசியிலே காத்திருந்தேன். இங்கே மூன்று வேளை சாப்பாடும் சம்பளமும் நன்றாகக் கிடைப்பதாகத் தெரிந்தபோதே இங்கு வருவதற்கு முடிவெடுத்துவிட்டேன்.”. அமிர்தியின் முகம் தெளிவதை உற்று நோக்கினேன்.
0
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் எல்லோரும் மேன்சன் மாடியில்தான் இருப்போம். பீர் பாட்டில்கள் ஒவ்வொன்றாக காலியாகிக்கொண்டிருக்கும். எனக்கு காலிபாட்;டில்கள் உருண்டோடுவதைப் பார்ப்பது பிடிக்கும். ஒருவித விடுதலையுணர்வு அடைந்துவிட்டதைப் போல அக்கரிய பாட்டில்கள் கிடப்பதாக நினைப்பேன். தமிழ்நாட்டில் நன்றாக மதுப்புழக்கம் இருப்பதையும் குடிப்பதற்கான முழுச்சுதந்திரம் பெற்றிருப்பதையும் அவன் அடிக்கடி குறிப்பிடுவான். நான் ஏனோ அவனுடன் குடிப்பதை விரும்பினேன். அன்று ஒருநாள் மட்டும் அறைகள் முழுதும் வெற்றிடமாகக் கிடக்கும். பீகாரிகள் ஒன்றாகக் கூடுவது அன்றுதான். அவர்களின் உருவமும் முகவமைப்பும் இந்தியாவின் இன்னொரு பகுதியென ஒன்று இருப்பதை எனக்கு நினைவூட்டியது. ஆம் அதுதான் இந்தியா. இது அத்தலையின் வால் அல்லவா?
ஒருத்தொருக்கொருத்தர் அவர்கள் பாஷையில் கிண்டலடித்துக் கொள்வதும் பக்கத்து ஹோட்டல்களில் இருக்கும் பிரச்சனையை பற்றி பேசுவதும் அதற்கு ஏதாவது தீர்வு சொல்வதுமாக அமிர்தி மத்தியில் அமர்ந்திருப்பான். நான் அவனிடம் என்ன பிரச்சனை என்று கேட்பேன். அதிகமும் சம்பள பாக்கியும், திருட்டுபலியாகவும் அது இருக்கும். அவன் வேறு மாநிலங்களில் நடந்தவற்றை நினைவுகூர்ந்து அப்பிரச்சனையை முடித்துவைப்பான். மற்ற நாட்களில் மாடியில் ஆள்நடமாட்டம் இருக்காது. குடும்பத்தை விட்டு விலகி தனியறையிலிருக்கும் சில வயதுபோனவர்கள் சல்லாபிக்க வருவதுண்டு. இருதயசாமி அப்படி வருபவர்தான். அவர் அமிர்தி வேலை செய்யும்; பாம்பே பவனில் சப்ளையர். ஓட்டலில் தினம் அதிகாலையில் எச்சில் பாத்திரங்கள் குவிந்துகிடக்கும் கழிவறைக்குள் கோமதியுடன் இருப்பதாக அமிர்தி என்னிடம் சொல்வான். சமயங்களில் பாத்திரங்கள் மோதும் உலோகவொலி அவன் செவிகளில் எதிரொலித்து அன்று முழுதும் அவனை நிதானமிழக்கச் செய்துவிடுமென்பான். கோமதிமீது அமிர்திக்குப் புலன் தீண்டல் உண்டு. மார்பில் தங்காத அவளின் முந்தியையும்ää முன்தள்ளிய சிவந்த வயிறையும் அவன் பார்வையில் மோதியபடியே வேலை செய்வதாகக் கூறியிருக்கிறான். ஒருநாள் விடிகாலையில் ஹோட்டலுக்குக் கிளம்பிச் சென்றவனை அவள் ஸ்டோர் ரூமில் பிடித்து அணைத்திருக்கிறாள். அக்கணம் சுயமிழந்து அவன் அவளின் பசிய மாமிசங்களில் லயித்திருக்கிறாhன். பால் டின்களுடன் உள்ளே வந்த இருதயசாமி அக்காட்சியைக் கண்டதும் ஆத்திரம் பீறிட்டு அமிர்தியை கழிவறைக்குள் உதைத்;துச் சாத்திவிட்டார். கோமதி சரிந்த புடவையை அள்ளிக்கொண்டு அங்கிருந்;து ஓடிவிட்டாளாம். அமிர்தி கழிவறைக்குளேயே மதியம் வரை கத்திக்கொண்டே கிடந்தான். அன்று இரவு முழுவதும் விதைகள் வீங்கி எழமுடியாமல் நாய்போல சுருண்டு படுத்திருந்ததைப் பார்த்தேன். அப்போதிருந்தே இருதயசாமிக்கு அவன்மீது வெறுப்பு. அவனைச் சீண்டத்தொடங்கினார். அவனைப் பார்க்கும் போதெல்லாம் “ஏஞ்சரக்கு கேக்குதா பொளைக்க வந்த நாய்க்கு..பீயத்திண்ணுடா..” என்று அவன் முகத்திற்கு நேராக காறித்துப்பிவிட்டுச் செல்வார்.
இருதயசாமி மேன்சனில் எல்லோரிடமும் தன்னைப் புனிதாத்மாவாகவே காட்டிக்கொண்டார். வாரம் இருமுறையாவது அவரது அறைக்கு உறவுக்காரப்பெண் என்று ஒப்பனை பூசிய தொழில்காரிகள் வருவதுண்டு. அறையின் புழுக்கம் தாளாமல் மொட்டை மாடிக்கு அழைத்து போய்விடுவார். தண்ணீர் தொட்டியினருகேயிருக்கும் குண்டு பல்பினை கழட்டியதும் அவ்விடம் இருள் சூழ்ந்துவிடும். அன்றைக்கு அமிர்தி என்னிடம் அவனுடைய கதைகளைக் கூறிக்கொண்டிருந்தபோது இருதயசாமி தன் பெருத்த உடலுக்குள் இளம் பெண்ணொருத்தியை மறைத்தபடியே மாடி ஏறிவந்தார். எங்களைக் கடந்தபோது அவள் ஒப்பனைகளின் வாசனை எனக்கு போதையூட்டியது. மாடி இருள் கரிய மோகினியாக தனக்குள் வருகிறவர்வர்களை உடனே இழுத்து அணைத்துக்கொள்ளும். எங்களை கண்டதும் “கீழ போங்கடா… என்னடா பன்றீங்க இங்க” என்றார். நன்றாகக் குடித்திருந்தார். இருளிலும் அவர் நெற்றி வியர்வை வழிவது தெரிந்தது. என்னையும் பீகார்க்;காரனாக நினைத்து ஏகவசனத்தில் அவ்வூரை திட்டத்தொடங்கினார். அவள் தாளாத சிரிப்பில் இருந்தாள். அவள் ஆபாச சிரிப்பிற்காகவே கெட்டவார்த்தைகளை முனங்கினார். அவ்வார்த்தைகளே அவரை கிறக்கமூட்டுவதாக எண்ணினேன். அமிர்தி படியிறங்குவது போல் பாவனை செய்தவன் சட்டென பூனை போல சிமென்ட் கட்டையைப் பிடித்து எக்கியவாறு என்னையும் அழைத்துக் காட்டினான். அவர்கள் தண்ணீர் தொட்டிக்கு கீழே படுத்திருந்தார்கள். இருதயசாமியின் கதர் வேட்டி சட்டை கொடியில் அலைந்தது. அவரின் இயக்கம் ஒரு கொலையை மென்மையாகச் செய்ய ஆயத்தப்படுவது போன்றிருந்து. நான் அமிர்தியின் தோளில் சாய்ந்திருந்ததேன். அவன் உடலின் வெப்பம் மெல்ல அதிகரித்தது. சட்டென்று அவன் தரையில் கிடந்த பல்பினை மாட்டிவிட்டு கீழே ஓடினான். பளீரென பொங்கிய வெளிச்சத்தில் இருதயசாமி திடுக்கிட்டு திரும்பினார். திரைகிழிந்தததுபோல வெளிப்பட்ட காட்சியால் அதிர்ந்துபோயிருந்தேன். நிர்வாணமாக என்னை நோக்கி வருவது தெரிந்ததும் படிகளில் பதறிவிழுந்து அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டேன். பின் வெகுநேரம் அவர் மூச்சிரைக்க ‘தேவிடியா பயலுகளா.. பொளைக்க வந்த எடத்துல பொத்திகிட்டு இருக்க மாட்டிங்களாடா..’ எனக் கத்திக்கொண்டிருந்தார். அமிர்தி விழுந்து விழுந்து சிரித்தான். கண்கள் சுருங்கிää மூக்கின் நுனி மடங்கி விரிந்தது. பாக்;கு அறைத்து கறைபடிந்த அவன் பற்களில் சிரிப்பு வித்யாசமாக இருக்கும்.
0
அன்றைக்கு அதிகாலையில் சண்முகம் என்னை உலுப்பி விசயத்தைக் கூறினான். நான் போவதற்குமுன் விஷ்வாவும் இன்னொரு ஹோட்டல் சர்வரும் அமிர்தியை அரசுமருத்துமனையில் விச்ராந்தியாகப் போட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள். அமிர்திக்கு வயிற்றுப்போக்கு எடுத்திருக்கிறது. ஹோட்டலிலே மயங்கி சரிந்திருக்கிறான். எப்போதுமே அவன் சாப்பிடுவது முந்தினயிரவு மீந்தவைகளைத்தான். அதன் ஊசிய வாடை வயிற்றைப் புரட்டுமென்கிற உணர்வின்றி சப்பாத்தியில் குழைத்து தின்றுகொண்டிருப்பான். தினம் காலையில் கழிவறைக்குள் நுழைகின்றபோது அவ்வுணவின் அமில நாற்றத்தையும் பீங்கான் ஓரத்தில் சிதறியிருக்கும் உணவுத்துணுக்குகளையும் கண்டிருக்கிறேன்.
ஜென்ரல் வார்டில் தலைக்கு மேல் துருக்கம்பி தெரியும்; சிமென்டில்லா மேல்கூரையைப் பார்த்தவாறு அமிர்தி படுத்திருந்தான். என் முகம் தென்பட்டதும் மெல்லத் தெளிந்தான். அவசர அவசரமாக வார்டு ஓபியை முடித்துவிடுவதற்காக நுழைந்த மருத்தவரைக் கண்டதும் கட்டிலில் அமர்ந்தவாறே கையைத்தூக்கி சலாம் வைத்தான். அவர் நிச்சயம் திடுக்கிட்டிருப்பாரென்று தோன்றியது. அது உண்மையில் குரங்காட்டியின் சொற்களுக்கு குரங்கு செய்யும் வித்தைபோலிருந்தது. நான் அவன் முகத்தை ஏறிட்டேன். வயதானவர்களுக்கே உரிய பாவனையில் இருந்தது. மருத்துவமனைக்கு வெளியே இருந்த இட்லிக்கடையில் டிபன் வாங்கிக்கொடுக்க அழைத்துச் சென்றேன். வியப்பாக மருத்துவமனையைப் பார்த்தவண்ணம் என் கைகளைப் பிடித்து நடந்தான். அவனுக்குத் தன்னுடன் நடப்பவர்களின் விரல்களைப் பற்றிக்கொள்ளும் பழக்கம் உண்டு. சாப்பிடும்போது இரவு அவனுடன் தங்கும்படி கேட்டுக்கொண்டான். பகல் முழுவதும் சிந்தனை பீடிக்கப்பட்டிருந்தான். ‘மனிதன் நோயாளியான பின்பு அவன் அகவுலகில் சற்று மாறுபாடு அடைகிறான். மெல்ல அவன் பார்வை அவனை நோக்கித் திரும்புகிறது’ என்றான்.
நள்ளிரவில் வெளி வராண்டாவில் கொசுக்கடியில் சுருண்டு படுத்திருந்த என்னைப் பக்கதிலிருந்தவர் உசுப்பி, நாராசமான குரல் வந்த திசையைச் சுட்டிக் காட்டினார். “டயேரியா கேசு கூட வந்திருக்கது யாரு” நான் பள்ளிக்கூட டீச்சரைப் பார்ப்பது போல எழுந்து நின்றேன். “அப்பவே வேற வார்டுக்கு மாத்தறேனு சொன்னேன்ல. போயி பாரு பெட்டெல்லாம் நாறிக்கெடக்கு ச்சீ…” கோணலாக முகம் சுளித்தாள். அமிர்தி படுத்திருந்த கட்டிலில் கடலைமாவைக் கரைத்துவிட்டரைப்போல மலம் வழிந்திருந்தது. அவ்விடம் முழுவதும் நாற்றம் குடலைப் புரட்டியது. மெல்லிய வெளிச்சத்தில் சிலர் தூக்கம் கலைந்தமர்ந்து என் வருகைக்காக ஏகவசனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். பீக்குண்டிக் குழந்தையைப்போல அவனை அப்படியே கழிவறைக்கு தூக்கிச் சென்றேன். வாலில்லாத பெரிய சைஸ் பல்லிபோலிருந்த அவன் குறி சுருங்கிக்கிடந்தது. அதைப் பார்த்ததும் அவன் மெல்ல இமைவிரித்து என்னைக் கண்டு சிரித்தான். பேண்டை கழட்டிவிட்டு துண்டு அணிவித்து படுக்கவைத்தேன். நான்கு நாட்களாக மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டாக நகர்ந்துகொண்டிருந்தோம். ஒருவித சூனியம் அவன் முகத்தில் பரவிவிட்டிருந்ததை அறிந்து இரவோடு இரவாக சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து காணாமற்போனோம்.
0
மருத்துவமனையிலிருந்து திரும்பிய சிலநாட்களில் அவனுடனான பழக்கம் இன்னும் நெருக்கமடைந்தது. அவனுடன் நெருங்கிவிட்டபிறகு அவன் உருவம், பாவனைகள் மேலிருந்த ஒவ்வாதவுணர்வு விலகிவிட்டிருந்தது. அவனே என்னில் ஒரு பகுதியாக இருந்தான். உருவம் அப்பாலிருக்கும்போதே வித்யாசத்தைக் கொடுக்கிறதென அறிந்தேன். அவன்மீது குமைந்த வாசனை என் நாசியில் உழன்றுகொண்டே இருந்தது.
அமிர்தியை மீமிசல் கடற்கரைப் பக்கமிருக்கும் கிருஷ்ணராஜ பட்டணத்திலிருந்த அக்கா வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். பேருந்தில் ஏறியதமே ஒவ்வொரு பார்வையும் ஒருகணம் எங்கள்மீது உரசிச்சென்றன. வெகுநேரம் பேசிக்கொண்டே வந்தவன் அப்படியே தூங்கிப்போனான். மாமாவுக்குக் கடலில் மீன்பிடி தொழில். அமிர்தியை கடலுக்கு கூட்டிச்சென்றேன். மாமா, “என்னடா கூர்க்காகூட சுத்திட்டுருக்க” என்றார். அக்கா என்னைப் பார்த்ததும் பூரித்துப்போனாள். “சங்கரா” என்றாள். அது அவள் மட்டுமே கூப்பிடும் முறை. அவள் முகம் அம்மாவின் சாயலுக்கு மாறிக்கொண்டிருந்தது. தோளைப் பிடித்து “வீட்டுக்கு போனியா” என்று விசாரித்தாள். அவள் கண்கள் எல்லாவற்றையுமே யூகிப்பது போலிருந்தது. அமிர்தியின்மீது பார்வை விழுந்ததும் முகம் அந்நியப்படுவதைக் கண்டேன். அக்கணம் அவள் வேறொருத்தியானாள்.
மதியம் அக்கா எங்களுக்கு பொரித்த மீனும்ää குண்டரிசி சாதமும் செய்து கொடுத்தாள். இறால் நறுக்கிப் போட்டுச் செய்திருந்த தோசையை அமிர்தி விரும்பிச் சாப்பிட்டான். கையில் எடுத்து முகர்ந்து, கெட்டிப் பாலில் கடைந்த பிரட்டைப் போலிருப்பதாகக் கூறினான். அதற்கு அக்கா “தமிளு பேசுமா இது” என்றாள். நான் வேகமாக தலையாட்டிவிட்டு ‘ரொம்ப நல்ல பையன்’ என்றேன். சாய்ந்தரம் கடைத்தெருவில் மீன் பக்கோடா வாங்கித் தின்றபடி கரையோரமாக நடந்தோம். அலைகளில்லாத கடல் பெரிய ஏரியைப் போலிருந்தது. அவன் கோசி நதியை நினைவுகூர்ந்தான். “அது இதுபோல் அமைதியாக ஒருநாளும் இருக்காது. நதிகளில் அவள் அகங்காரம் பிடித்தவள்” என்றான். அவன் எண்ணம் ஏதோவொன்றை துழாவுவியதை உணர்ந்தேன். அவன் பேசிக்கொண்டே வந்தான். “எங்களின் தலைக்குமேல் அது எப்போதுமே நாகம்போல் படமெடுத்துக்கொண்டிருக்கும். அதன் விஷம் பெருகியதும் பீறிட்டு வெளித்தள்ளிவிடுமென அம்மா சொல்வாள்” மண்ணில் புதைந்து கிடக்கும் மீன்களை உதைத்தெறிந்தபடியே நடந்தோம். வெண்சங்குகள் உடைந்த மணற்பரப்பில் நடப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. கடல்மேல் நிற்கும் படகுகளை எண்ணிக்கொண்டிருந்தான். அங்கிருப்பவர்களின் அன்றாட வேலைகளை பற்றிக்கேட்டறிந்தவன் “உங்களுக்குக் கடல் பெரிய வியாபார நிறுவனம் இல்ல..?” என்றான். இரவு முழுவதும் கடலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். மாத்திரையில்லாமல் தூக்கம் வரமால் புரண்டக்கொண்டேயிருந்தான். “இங்கிருந்து கடல் வழியா போனா பிகாருக்கு சீக்கிரம் போயிடலாம்” என்றான் சிரித்துக்கொண்டே.
மேன்சனுக்குத் திரும்பியபோது மற்றவர்களின் பார்வைகளிலிருந்த கூர்மையை மெதுவாகத்தான் அறிந்தேன். என்னைப்பற்றிய கதைகள் மேன்சனில் உருவாகிவிட்டிருந்தன. என்மீதே சுயவெறுப்பு ஏற்பட்டது போலிருந்தது. வாட்ச்மேன் நேரடியாகவே அமிர்தியுடன் எனக்கு ஓரினஉறவு இருப்பதாக கேள்விப் பட்டேனென்றார். அவரிடம் என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றேன். அதன்பின்பு தினம் என் தனிமைக்குள் நுழைந்து புதுவிதமான பாலியல் கதைகளை அப்பெரியவர் கூறத்தொடங்கினார். அவரின் உரோமம் மண்டிய செவிமடலும்ää கண்ணில் தொங்கும் சதைப்பையும் பயமுறுத்தின. கதைகள் சொல்லும்போது அவர் நம்பமுடியாதவொரு வயதாக குறைந்துவிட்டிருந்தார். சில கதைகள் அவரின் ஏக கற்பிதங்கள். “இந்தக் குள்ளப்பயல பின்ன எதுக்கு கேஷியரு அவ்ளோ சம்பளம் குடுத்து வெச்சுருக்காரு…” நான் அமைதியாக இருந்தேன். “இந்தத் தாயொளிகளும் ஒருத்தன ஒருத்தன் அதான செஞ்சுகிட்டு கெடக்கரானுவ நா பாக்காததா?” என்றார் புதிதாக கண்டுபிடித்தவொரு பூரிப்பில். அவரின் பேச்சினூடே கண்களில் அடையமுடியாதவொரு தவிப்புணர்வு தென்படுவதைக் கவனித்தேன். சட்டென அவரின் வயதும், தனிமையும்; மீண்டுவந்தது. அவர் பார்வையிலிருந்து அகன்றுவிடப் பிரயத்தனப்பட்டு சமாளித்து விலகினேன். அமிர்தியைப் பார்க்க முடியாதவொரு சங்கடத்திற்குள் உழன்று தவிர்த்து வந்தேன்.
பெரும்பாலும் அறையில் தனியனாக அமர்ந்து சுவரை வெறித்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். குரூரக் கற்பனைகள் மொய்க்கும். விபூதிப்பட்டை பூசிய கேசியர் அமிர்த்தியுடன் நிர்வாணமாக ஓட்டல் ஸ்டோர் ரூமில் புரள்வது போலவும், அவனின் பழுத்த நிறம் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாக மாறுவது போலவும் அடுக்கடுக்காக காட்;சிகள் வந்துவிழுந்தன. அறைக்கதவைப் பிடித்தவாறு நிற்கும்போது அவனின் மென்தோலின்மேல் எதையோ முகர்ந்து ஆராய்ந்துவிடுதைப் போல பதறினேன். அவன் எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அந்த வார ஞாயிறுயிரவுவரை என்னுடைய போக்கில் தெரியத்துவங்கிய மாற்றங்களை அவன் அறிந்ததும் என்னிடம் வந்து விசாரித்தான். சொல்லத்துவங்கும்போது இருந்த பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியதை உணர்ந்தேன். அவன் எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்து, முடித்ததும் அழுக்குத் துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் கிளம்பிச் சென்றான். அவனுக்கிருந்த மதிய இடைவேளையில் பதினைந்து நிமிடம் துவைத்துவிட்டு ஒருமணி நேரமாவது கண்ணயர்ந்து படுக்கின்ற தருணம் அது.
எப்போதுமே அமிர்தியிடம் எவ்வித தன்னிரக்க ஒப்பனையையும் அடையாளம் காணமுடியாது. அவன் மீது ஒரு கோரமான நிழல் மட்டும் படர்ந்திருந்திருக்கும்;;. ‘உங்களுக்கு வாழ்க்கைக்கான அத்தனையும் இங்கேயே இருக்கு. இங்க ஈசியா இருக்கலாமில்ல..’ அவன் அதிகமாக என்னிடம் சொல்வது இது. மொழியை இழந்து, உறவை இழந்து, மண்ணை இழந்து வந்தவனின் சோகம் அவனோடு கலந்திருந்தது. அவன் அறையில் இந்திய வரைபடமொன்று அழுக்குடன் ஒட்டுப்போடப்பட்டு மாட்டியிருக்கும். அதில் இந்திய எல்லைகள் ஸ்கெட்ச்பென்சிலால் மேலும் அழுத்தி தீட்டப்பட்டிருக்கும். யாருமில்லாத நேரத்தில் அவன் அவ்வரைபடத்தையே வெறித்துக்கொண்டு அமர்ந்திருப்பான். அப்படியொரு தருணத்திலே அவனை முதன் முதலில் பார்த்ததாக ஞாபகம். சிலநேரம் ஏதோவொரு பேச்சிலும்ää அவனுடைய வீட்டின் ஞாபத்திலும் அவ்வரைபடம் பக்கம் திரும்பி விடுவான். அப்போது அவன் விரல்கள் தமிழ்நாட்டிலிருந்து பீகாருக்கான இரயிலாக மாறிவிடும். பீகாரை தொட்டதுமே ஊரை அடைந்துவிட்டதாகச் சிரிப்பான்.
“இந்தியா மேப்பில் உருவம் ஒன்று நிற்பதாகத் தெரியுதா..?” என்றான். நான், “ஆமா, பாரத மாதா மாதிரி.” என்றேன். அவன் “இயேசுவுவை சிலுவையில் சாத்தியது மாதிரி எனக்குத் தெரியுது” என்றான். சட்டென என் எண்ணங்களைச் சிலுப்புவது போல அதன் பக்கத்தில் கைகளை நீட்டி அவ்வாறு செய்து காட்டியதும் நான் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தேன். அவனுடைய சிந்தனை எப்போதுமே என்னை ஆச்சர்ய மூட்டக்கூடியது.
0
ஒருசில இரவுகள் வெறுமையைப் போக்குவதற்கும் மனம் சிதைவடைந்து விடாமலிருக்கவும் அவன் பழைய ஹிந்தி பேப்பர்களை புரட்டிக்கொண்டிருப்பான். இரவு மட்டுமே அவனுக்குரியது. அவனுடைய அறையின் முட்டை பல்பின் மஞ்சள் வெளிச்சம் வராந்தா வழியே கசிந்திருக்கும். வெளிச்சம் தெரிவதைக் கண்டு நான் அவனறைக்கு போனதும் முகம் பூரித்து சந்தோசமாகப் பேசத் தொடங்கிவிடுவான். அமிர்தியின் அப்பா இறப்பதற்கு முன்புää பாட்னாவில் அவர் வேலை செய்த ஆஸிட் தொழிற்சாலையில் அவன் சேர்ந்திருக்கிறான். தயாரித்து முடித்த பாட்டில்களைஇ சரக்கு லாரிகளுக்குப் பிரித்து வைக்கும் வேலை. குளிரூட்டப்பட்ட பெரிய குடோன். சுமேஷ் யாதவ் என்பவர்தான் கூலி வேலைக்கான கான்ட்ராக்டர்.
இரவு முழுவதும் வாகனங்களுக்கு சரக்குகள் ஏற்றிக்கொண்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பெட்டிகளைப் பிரித்து அதனதன் கடைகளுக்கு தேவையானதை அனுப்பி வைப்பதைத் தவிர வேறொன்றும் நுணுக்கமில்லை என்றான். எந்த வேலையும் அமிர்திக்கு மூன்றாம் நாளிலே புழங்கிவிடும். அவனைப் போல இருநூறு பையன்கள் வேலைச் செய்திருக்கிறார்கள். வெள்ளிகிழமையிலிருந்து திங்கள் வரை வேலையின் நூறு மடங்கு கூடுதலாக இருக்கும். சனி ஞாயிறு லீவு கிடைத்தால் வீட்டிற்கு போய் விடலாம். குடோன் மூலையில் ஒதுங்கிய இடத்தில் ஆளுக்கொரு இடமாக தார்ப்பாய் விரித்தக் கூடாரம் அமைத்து படுத்துக்கொண்டிருக்கிறான். மழை பெய்தாலும் ஒழுகாத கனத்த பாய் என்பதால் வசதிக்கு ஒன்றும் குறைவில்லை.
அடைமழை பெய்து முடித்த ஒரு பின்னிரவில் களைப்பு தாளாது பாய்க்குள் தூங்கிக்கொண்டிருந்த அமிர்தியின் தொடைமீது கனத்த உருவமொன்று கவிந்ததில் திடுக்கிட்டு விழித்திருக்கிறான். அவனின் உருவப்பட்ட பேண்ட் துணியால் கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருந்தது. இருளில் அக்கரிய உருவத்தினை அடையாளம் காணமுடியவில்லை. அவன் யூகத்தில் அது கான்ட்ராக்டர்தான் என்றான். கத்தமுடியாமல் அவன் வாயை அறைந்து பொத்திவிட்டார். இரவு முழுவதும் அவரின் உடலுக்குள் கிடந்திருக்கிறான். காலையில் அவன் முகம் வீங்கிவிட்டிருந்ததாகச் சொன்னான். ஒருகணம் நான் உலுக்கித் தள்ளப்பட்டேன். அவனுடைய மௌனம் கனத்திருந்தது. மெல்லிய விசும்பலோடு மூக்கின் நுனியை தட்டிவிட்டுக்கொண்டான்.
ஒவ்வொருநாளும் அக்கதையின் காட்சி வடிவங்கள் விசித்திரமான கனவாக உருமாறி இரவுகளை விழித்திருக்கச் செய்தன. அக்காட்சிகளைக் கற்பிதம் செய்யும்போது என் உணர்வுகள் கிளந்தெழுவதை அறிந்து திடுக்கிட்டு என்னை சபீத்துக்கொண்டேன்.
0
தீபாவளிக்கு அவனுக்கு பத்துநாட்கள் லீவு கிடைத்தது. இங்கு வந்த இரண்டு வருடத்தில் இம்முறைதான் இத்தனைநாள் கிடைத்திருந்தது. மாதேபுராவிற்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தான். கையில் வைத்திருந்த பணத்தில் துணி, பாசி, தோடு, பொட்டுப்பாக்கெட்டுகள் என விதவிதமாக வாங்கியதை என்னிடம் காட்டினான். அவனுடைய சின்னத்தங்கை ருதுவாகியிருந்தாள். அவ்;வார இறுதியில் பீகார் பையன்கள் -அதுவரை நான் பார்த்திராத பல பேர்- அவனைப் பார்க்க வந்திருந்தார்கள். அன்றைக்கு இரவிலிருந்து எனக்குத் தொடர்ச்சியாகக் துர்கனவுகள் வரத்தொடங்கின. அமிர்தி முகம் உப்பி சீழ் கசிவது போலவும்ää சிக்கு பிடித்த தலையோடு நகரத்தில் உலவுவது போலவும் கனவுகள் பயமுறுத்தின. அவன் இல்லாதபோது உருவாகும் தனிமையை நினைத்து அஞ்சினேன். என் கனவுகளைக் கேட்டதும் அதுபோல பெருங்கனவுகள் தனக்கு வருவதில்லை என்றும் ஆழ்ந்த கனவுகள் எப்போதுமே தன்னை பயம் கொள்ளச் செய்துவிடுவதாகக் கூறினான். இங்கு வந்த புதிதில் இரவுகளில்ää அவன் தங்கையை லாரியில் வந்த சிலர் கற்பழித்துக் கொன்று போட்டுவிட்டுச் சென்றது போல கோரமான கனவுகள் வந்திருக்கின்றன. பின் அக்கனவை நினைத்துப் பெரும் மன அழுத்ததிற்கு உட்பட்டு அல்ப்ராக்ஸ் மாத்திரைகள் எடுக்கத்தொடங்கியிருக்கிறான். இங்கு கொத்தடிமைகளாக வந்திறங்கிய அத்துனை வடநாட்டினரும் அம்மாத்திரைகளைத்தான் தூக்கத்திற்கு பயன்படுத்துவதாகச் சொன்னதும் நான் அதிர்ந்துவிட்டேன். ஒரு நாளைக்கு இப்படி எவ்வளவு மாத்திரைகளை அவர்கள் விழுங்குகிறார்களென மனதில் கணக்கிட்டு சலித்துக்கொண்டேன். “என்னால் அதை நிறுத்த முடியவில்லை. பைத்தியம் பிடிக்காமலிருக்க ஒரே வழி அதுதான்” என்றான். மாத்திரைதான் தனக்குப் பிடித்த முதலாளி எனவும் அது சோர்வில்லாத வேலை தரும் நிறுவனம் என்றும் என்னிடம் அடிக்கடி கூறுவான்
அடுத்தவாரம் நானும் அவனுடன் சென்னை வரை சென்றேன். மற்ற ஹோட்டல்களிலிருந்து பத்துப்தினைந்து பீகாரிகள் ஊருக்குப் போவதற்காக இருந்தார்கள். “உபி யில நல்ல சம்பளத்துக்கு வேலை இருக்கு. கிடைத்தால் போய் விடுவேன்..”என்றான். நான், “அப்போ மறுபடியும் நீ இங்கிருந்து காணாமப் போகப் போற” என்றேன். அவன் சிரித்தபடி நான் சொன்னதைப் புரிந்து கொண்டான். அமிர்தியை அனுப்பிவிட்டு அன்றே இரவோடு இரவாக ஊருக்கு வந்து சேர்ந்தேன். மிக மோசமானதொரு தனிமைப் பயணம் அது. அந்திவேளையில் படுத்தெழுந்தது போலவொரு வெறுமை மனதுக்குள் சூழ்ந்திருந்தது. அவனுடைய மகிழ்ச்சியும்ää ஊர் போகின்ற சந்தோசமும் அவனது தவிப்பை கொஞ்சமேனும் மறைத்தாலும் பதைபதைப்பை காட்டிக்கொண்டேயிருந்ததைக் கவனித்தேன்.
அறைக்கு வெளியே செருப்பை கழட்டும்போது என்னையறியாமல் அவனிருந்த அறையின் ஜன்னல் பக்கம் வந்தேன். சுவரில் இந்திய வரைபடம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. வீசியெறிந்த பேண்ட் சட்டைகளும் கிழிந்த பாயும் அவ்வறையில் சிதறிக்கிடந்தன. குளிர்க் காற்று முதுகினுள் நுழைந்து வியர்வையை உலர்த்தியதும் உடல் சில்லென்றானது. அவ்வறையின் மௌனம் அச்சமூட்டியது. விரல்களில் அவன் கைகள் தீண்டுவது போலிருந்ததும் திடுக்கிட்டு குனிந்து பார்த்தேன். அவனின் ஸ்பரிசங்கள் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தன. தனிமை இறுகியது. ஆழ்மனவுலகில் சட்டென என் உணர்ச்சிகள் தூண்டப்பட்டன. என்னவென்று புரியாமல் துழாவுகிறேன். மனம் அடங்காது எக்கித் தவித்தபடி எதையோ அணைத்துக்கொள்ளத் துடிப்பதை அறிந்து திடுக்கிட்டேன். குற்றவுணர்வும் குறுகுறுப்பும் மாறி மாறிப் பாய்ந்தது. மறுபடியும் மறுபடியும் என் மனம் எதையோ பற்றுவதும் பின் உடல் முழுவதும் சிலிர்ப்பதுமாக இருந்தது. பற்றுதல். அணைப்பு. அந்தரங்கம். தனிமை. ஒருகணம் என் முகம் கண் முன்னே வந்துபோனது. ஆம் அது நானாக இருந்த இன்னொன்று. கைகள் நடுங்கவே ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டேன்.
1 Comment
Great story!Great writer!