ஒற்றைக்கைத் துலையன்
குறுநாவல் ஒற்றைக்கைத் துலையன்
1
தேவிசமுத்திரம் வனபத்ரகாளி கோவிலிலிருந்து திரும்பும்போது மழை நன்றாக பிடித்திருந்தது. கனத்த இருள் கவிந்திருந்ததில் தடம் புலப்படவில்லை. அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டாள். அவள் உள்ளங்கை சில்லிட்டிருந்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தோம். அம்மா நெற்றியிலிருந்து குங்குமம் கரைந்து மூக்கின் மேல் வழிவது இருளிலும் நன்றாகத் தெரிந்தது. காளி கோவிலுக்குப் போய் வரும்போதெல்லாம் அவள் நடையில் ஒரு வீரம் வந்துவிடும். அம்மாவின் தோள் உயரத்திற்கு நான் வளர்ந்துவிட்ட சந்தோஷம் அக்கணத்திலும் என்னைத் துரத்திக்கொண்டே வருவதை நினைத்தேன். நேற்றிலிருந்துதான் இவ்வெண்ணம் தோன்றியிருந்தது. அண்ணன் மூர்த்தியிடமும் அளந்து பார்த்துவிட வேண்டும்.
கரிய இருட்டுத்திரைக்கப்பால் வீடு இருப்பதே தெரியவில்லை. மழை வடிந்தும் மூட்டமாகப் புகை இறங்கியிருந்தது. வீட்டை அடைந்ததும் வெகுநேரமாக துருத்திக்கொண்டிருந்த மூத்திர உணர்வு மறைந்துவிட்டிருந்தது. கிடாய்கள் குளிருக்கு இதமாக திண்ணைச் சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தன. புழுக்கைகள் மழைநீரில் கரையும் மணம் குமைந்தது. மூர்த்தி இன்னும் வரவில்லையென அம்மா திண்ணையைத் துழாவி உறுதிப்படுத்திக்கொண்டாள். “எங்க தொலஞ்சுட்டான் சனியன்.. கரண்ட்டு இல்லையாடா..” முனகியபடியே உள்ளே ஓடினாள். அவள் நடையில் பதற்றமிருந்தது. நான் கொடியிலிருந்த லுங்கியில் தலையைத் துவட்டியவாறே கிடாய்களை பிடித்து கட்டச்சென்றேன். அவை கனத்த உடலை சிலுப்பி உதறிக்கொண்டன. பேட்டரி லைட்டின் வெளிச்சம் பரவியதும் அக்கா முனகும் சத்தம் எழுந்தது. அம்மா அவளை ஆசுவாசப்படுத்த “ராசாத்தீ..” எனக் கூப்பிட்டுக்கொண்டேயிருந்தாள். “இந்தா.. யே..நாந்தான்டீ” என்றாள். அக்கா பயத்தில் மூலையில் உடம்பைக் குறுக்கிக்கொண்டு, உதடுகளைக் கடித்து ‘விம் விம்’ மென அரற்றுவது வீடு முழுதும் அதிர்ந்தது. அம்மா ஜாக்கெட்டுக்குள் வைத்திருந்த குங்குமப்பொட்டலத்தைப் பிரித்துää நெற்றியில் இடுவதற்குள் அக்கா அம்மாவை உதைத்து வெறிகொண்டு அழத்தொடங்கினாள்.
நான் அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். மூர்த்தி செருப்பைக் கழட்டும் சப்தம் வந்ததும் அம்மா அறையிலிருந்து வெளியே வந்து “எங்கடா போன எளவெடுத்தநாயே.. புள்ள இருட்டுல கெடக்குதுல சோத்தத்திங்கிறியா.. பீயத்திங்கிறியா” என்று திட்டியவாறே அவனை நோக்கிச் சென்றாள். மூர்த்தி ஒன்றும் பேசாது தரையில் சொட்டும் ஈரத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.
ராசாத்திஅக்காவுக்கு புத்திபேதலித்ததிலிருந்து இருட்டிவிடும்போதெல்லாம் பயம் பிடித்துவிடும். இருட்டியபிறகு வரும் மழைக்குää பற்கள் கிட்;டித்துக்கொண்டு சுவரை நகங்களால் பிறாண்டியபடி அலறுவாள். சமயங்களில் பயம் பீறிட்டு வலிப்பு கண்டு சரிந்துவிடுவாள். அக்கணங்களில் அவளைப் பாhர்ப்பதற்கே பயமாக இருக்கும். மூர்த்தி அவளுடன் இருப்பதற்குப் பயந்து, எங்காவது ஓடிவிட்டு வலிப்பு அடங்கி அவள் ஆசுவாசமானதும் தான் திரும்புவான். அந்த நேரங்களில் நான் அவளை விட்டு எங்குமே சென்றதில்லை. எங்களிருவரில் எனக்கு மட்டும் எப்போதும் அக்காமீது தனிப் பிரியம் உண்டென்று அம்மா அடிக்கடிச் சொல்வாள். அம்மா சினிமா நடிகை ரேவதியைப் பார்க்கிறபோதெல்லாம் என்னிடம் காட்டி “யேமவ இவளாட்டத்தான்டா இருக்கா..” என்று அலமலந்துபோவாள். ராசாத்தியின் மொந்தை மூக்கு அப்படி நினைக்க வைத்திருக்குமென எண்ணுவேன். நினைவுதெரிந்தது முதல் ராசாத்திஅக்கா பட்டுப்பாவாடையணிந்து தீபாவளிக்கு என்னுடனும் மூர்த்தி அண்ணனுடனும் பட்டாசு விட்டிருக்கிறாள். அதுவும் ஒரு கனவு போலத்தான் என்னுள் தங்கியிருந்தது. பள்ளிமுடிந்து கருவேலங்காட்டுப் பாதையில் வீடு திரும்புகையில் அக்கனவை மூர்த்தியிடம் கூறி சரிபார்த்துக்கொள்வேன். ஆனால் ஒருமுறைகூட மூர்த்தி அந்நினைவுகளை நிஜமென உறுதிப்படுத்தியதில்லை. நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு வருவதை ஒன்றுமறியாமல் தனக்குள்ளே சிரித்தவாறே ராசாத்தி பின்தொடர்வாள். மூர்;த்திக்கு அக்கா மீதிருந்த பயத்தைச் சீண்டுவதற்காகவே அவளை பயம்கொள்ளச்செய்து அவன்மீது ஏவி விரட்டுவேன். அவள் குட்டிநாய் போல மிரண்டு என் சட்டையைப் பிடித்திழுத்து ஒளிந்துகொள்ளத் தவிக்கையில் நான் சிரித்தவாறே அவள் கையை தட்டிவிட்டு விலகியோட முற்படுவேன். மூர்த்தி அவளைக் கண்டு பயந்தொளிந்து கொள்வான். அவளுக்கு மனப்பிறழ்வு அதிகமானதற்குப் பிறகு அவ்விளையாட்டை ஒரு எல்லைமீறி செய்யவதை நிறுத்திவிட்டேன். அக்கா உதடு பிதுக்கிக்கொண்டு தேம்பி அழுவதும் தோளைப்பிடித்து இறைஞ்சுவதும் மனதை உலுக்கிவிடும். அதன்பின் அம்முகத்தைப் பார்ப்பதே குற்றம் புரிந்ததுபோலிருக்கும்.
0
எப்போதும் தன்னக்குள்ளே பேசிக்கொண்டிருந்தவளின்; பாவனைகள் கொஞ்ச நாளில் முழுதும் மாறிப்போனது. அவளின் உலகில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்னவெல்லாம் அவளுடன் பேசுகிறார்கள்? எதற்காகச் சிரிக்கிறாள்? ஏன் அழுகிறாள்? சமயங்களில் நெருப்பைத் தீண்டியதுபோல வெடுக்கெனக் கையைத் தட்டிவிடுகிறாள் என யோசித்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். அம்மாவிடம் அதைப்பற்றி கேட்டதற்கு அது தெய்வங்கள் உலவும் உலகம் என்பாள். தினம் அம்மா சாப்பாட்டைப் போட்டதும் அவள் தன் தட்டின் ஓரத்தில் கொஞ்சம் ஒதுக்கி ‘பாப்பா’வுக்கு என்று சொல்லிச் சிரிப்பாள். அம்மா என்னிடம் சைகைக் காட்டி அது என்னவென்று கேட்கச் சொல்லுவாள். நான் ‘அந்த பாப்பா யாரென’ கேட்டதும் அக்கா கையால் தன் மார்பைத் தட்டி தான் தான் என்றாள். அக்கணமே அம்மாவின் கண்களில் பொலபொலவெனக் கண்ணீர் கசிந்துவிடும்.
ராசாத்திக்கு மருத்துவமனைக்கு கூட்டிப்போகும்போதெல்லாம் அம்மா அப்பாவிடம் சண்டைப்போடுவாள். அம்மாவிற்கு மருத்தவர்கள்மேல் கோரமான பயம் கவிந்திருந்தது. அப்பா குடித்துவிட்டு “ஒனக்கு புள்ள வளக்கத் துப்பில்லாம பேயாட்டம் பிசாசுனு அத கிருக்கு புடிக்க வெச்சுருக்க” என்று திட்;டத்தொடங்கிவிடுவார். தினம் அப்பெரும் சண்டையினூடே நானும் அண்ணணும் படுத்துறங்கிப் போவோம். காலையில் விழித்ததும் எனக்கு மட்டும் முந்தினரவின் கெட்டவார்த்தைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
0
அப்பா உள்ளே நுழைந்ததும் ஈரத்தின் மூத்திர வாடை வீசியது. மழையில் நன்றாக நனைந்திருக்க வேண்டும். நான் அண்ணாந்ததும் அவர் கண்கள் தாழ்ந்தன. அக்கண்களில் எப்போதுமே துருத்திக்கொண்டிருக்கும் பதற்றத்தைக் கவனித்திருக்கிறேன். அம்மா அந்த பதற்றத்திற்குள்ளிருக்கும் ஏதோவொன்றைத்தான் தினம் தேட முயன்று தோற்றுவிடுகிறாளென நினைத்தேன். மூர்த்தி என்னிடம் அம்மா பார்க்கும்படி சைகைக் காட்டினான். அவள் அழுதுகொண்டே சுடுகஞ்சியைத் தட்டில் கொட்டிவிட்டு ஊறுகாயைக் கரண்டிப்பிடியில் அள்ளி வைத்தாள். திடுக்கென்று அப்பா எழுந்து வந்து அவள் தலையில் பலமாக அறைந்தார். “ஏன்டி மூதேவி வூட்டுக்கு வருமுதே ஒப்பாரி வெக்கிற….போயி சாவு” என்றார். அம்மா சோற்றுக்குண்டாவில் விழுவதுபோல சரியத் தெரிந்தவள், சட்டென கொத்தாகச் சரிந்த தலைமுடியைச் சிலிப்பிவிட்டு எழுந்து அவர் கண்களை வெறியோடு பார்த்தாள். அப்பா “என்ன மொறைக்கிற” என்றார். “நா ஓரோரு கோயிலுக்கா எம்புள்ளைய கூட்டிக்கிட்டு கெடந்து அலையிறேன் நீ தேவிடியா வீடா பாத்து மோந்து திரியிறியா” ச்சீய் என்று காரி எச்சிலை சுவரில் துப்பினாள். அம்மாவின் ஆங்காரத்தின் கனம் தாளாமல் அவர் நகர்ந்துகொண்டார். அக்கணம் அம்மாவின் முகத்தில் தோன்றியவொன்று அச்சத்தை மூட்டியது. ஒரு நொடியில் அவரைக் கிழித்து அள்ளியெறிந்து விடுகிற பலம் அவளிடம் உண்டு. எப்போதுமே அவளின் ஒவ்வொரு அசைவுகளும் வீட்டிலிருக்கும் சிறு பூச்சியையும் கண்டுகொள்ளக்கூடியது. ஆவேசம் தணியாது தொப்பெனத் தரையில் அமர்ந்து தட்டிலிருந்ததை அப்படியே அள்ளித் தின்றாள். முகம் கஞ்சியின் சூட்டில் வியர்த்தது. நாசி பெருமூச்சினை வெளித்தள்ளிக்கொண்டிருந்தது. அம்மா முகம் கருத்திருந்ததை சாப்பிட்டு எழும்போதுதான் பார்த்தேன். என் பார்வை விழுந்ததும் சேலைத்தலைப்பை இழுத்து முகத்தைத் துடைத்து மறைத்தாள். படுக்கும்வரையிலும் அவளின் அக்கருத்த முகமும் ஏனோ மூக்குத்தியும் நினைவில் வந்தன. இரவு முழுவதும் சண்டை இருந்ததாகவும் மறுபடியும் அப்பா குடித்துவிட்டு வந்து அம்மாவின் ஜாக்கெட்டை கிழித்துத் தரையில் தள்ளி உதைத்தாதகவும் மூர்த்தி காலையில் கக்கூஸிற்கு போகையில் சொன்னான். அப்பா படுத்திருக்கும் திண்ணைக்கு வந்து பார்த்தேன். அவர் போதையில் வேட்டியவிழ்ந்து டவுசரோடு தரையில் கிடந்தார். பக்கத்தில் கொட்டியிருந்த வாந்தியை அம்மா சுத்தமாகக் கழுவிவிட்டுக்கொண்டிருந்தாள்.
சிறுவயதிலிருந்து அப்பாவைப் பார்க்கிறபோதெல்லாம் ஒரு மிருகத்தின் சாயலே எனக்கு தோன்றும். கல்யாணமான புதிதில் கரிய மீசை, அகன்ற மார்புடன் அய்யனார் போல இருந்ததாக அம்மா சொல்லிக்காட்டுவாள். ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்குப் போகிற போது திண்ணையில் அவரைப் பார்ப்பேன். அவர் சிரித்துக் கூத்தாடுவதெல்லாம் அவருடைய நண்பர்களுடன் மட்டும். எங்கு வேலை செய்கிறாறென்பதெல்லாம் அதுவரையிலும் அம்மாவிடம் கேட்டதில்லை. ஊரணிக்கரை, கருவேலக்காடு ஒத்தக்கிணறுää அய்யனார் கோவில் மைதானம் என எங்காவது அவரைப் பார்க்கிறபோது “என்னடா இங்க நிக்கிற வீட்டுக்கு ஓடுறா” என்;று விரட்டிவிடுவார். இரண்டு மூன்று தடவை பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்ததை அன்றைக்கு வரும்வழியில் அண்ணனிடம், “அப்பா எங்க ஸ்கூலூக்கு வந்தாரு” என ஆவலாகச் சொல்வேன். அவன் அதற்குப் பதிலேதும் கூறாமல் வருவான்.
நான் பிறந்ததுமே ராசாத்தி அக்காதான் என்னை கொஞ்சி மகிழ்ந்தவளென அம்மா நினைவுபடுத்துவாள். பூனையாக என்னையே சுற்றிச்சுற்றி வருவதைப் பார்த்தவர்களெல்லாம் “ராசாத்தி இது ஓம்புள்ளயா” என்று கன்னத்தை கிள்ளிக் கேட்கும்போது அக்கா, எச்சில் வழிய பற்களைக் காட்டி ஆமாமெனத் தலையாட்டி வெட்கப்படுவாளாம். அம்மாவின் முலையை நான் முட்டி முட்டி எத்தணிப்பதை குத்துகாலிட்டு அமர்ந்து பார்த்துவிட்டு, அம்மா செய்வதுபோல என்னை மடியில் போட்டு தொடைகளை ஆட்டியும் யாருமில்லாத தருணத்தில் தன் சட்டைக்குள் தலையை திணித்தும் சிரித்திக்கொள்வாள். அக்கணம் அவளுக்குத் தாளாத பரவசமூளும். பசியாறியவுடன் மாராப்பினுள் முண்டுவது அடங்கி வெளியே நீட்டிய கால்களை ஒன்றன்மீதொன்று போட்;டு தூங்கிப்போவதுவரை பார்த்துக்கொண்டிருப்பாளென அக்காவைப் பற்றி கூறும்போதெல்லாம் அம்மா குறிப்பிடுவாள். குழந்தையின் பச்சை மலம் கசியும் வாசனையை அவள்தான் முதலில் அறிந்துகொள்வாள். மலம் கழிந்ததுமே துடைத்தள்ள மலத்துணி தயாராக வந்துவிடும். தவழ்கையில் அசையும் குண்டிச்சதையைக் கிள்ளிவிடுவதும் திரும்பும்போது முடியை அவிழ்த்து பயமுறுத்தி விளையாடுவதும் அக்காவுக்கு பிடிக்கும்.
நான் வேகமாக வளர்ந்தது அவளை ஏமாற்றம் கொள்ள வைத்திருக்கிறது. குழந்தைமீது குமையும் பால்மணத்தையும்; கழன்றுபோன அத்தருணத்தையும் அவள் தினம் தேடிச்சலித்தாள். அவளைப் பீடித்திருந்த அவ்வுணர்வை என்வென்று புரியாமல் பிதற்றத்தொடங்கினாள். அப்போது அவள் முகம் சட்டென வீங்கி சதைகளில் நீர் கோர்த்ததுபோல் ஆகிவிடும். பாதங்களைத் தரையில் அரிப்பதுபோல தேய்த்து பின் வலி தாளாமல் கத்துவாள். அம்மா தினம் அவளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்போதெல்லாம் சடைப் பின்னலில் வேப்பிலைகளைச் செருகி அனுப்பி வைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது பிரக்ஞை புறவுலகிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்தது. அவளின் அரூபவுலகத்திற்குள் யாரேனும் நுழையும்போது அவளின் மௌனம் உடைந்து அரற்றத்தொடங்கிவிடுவாள்.
ராசாத்திஅக்கா முழுதும் சுயபிரக்ஞையிழந்துவிட்ட பிறகு பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டப்பட்டாள். லெட்சுமி டீச்சர் மட்டும் எப்போதாவது என்னிடம் கேட்டுவிடுவதோடு அவ்விசாரிப்புகள் முடிந்தன. மூர்த்தி அக்காவுடன் பேசுவதே கிடையாது. பயம் அவளிடத்திலிருந்து தள்ளி வைத்திருந்தது. ராசாத்தி பேசுவது அம்மாவுடன் மட்டுமே. அம்மா அவளைக் கொல்லைப்புறத்திற்கு கூட்டிச்சென்று மலம் கழிக்கவைத்து குளிப்பாட்டும்போது, பிறந்தகதை, வளர்ந்தகதை என எல்லாம் அவளுக்கு புரிகிறதென்று சொல்வதை ராசாத்தி இம் கொட்டியவாறே தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருப்பாள். அம்மா சொல்வதையெல்லாம் கேட்பது அவள் ஒருத்திதான். கிணற்றுத் தண்ணீரின் குளிர்ச்சி தலையில் விழுந்ததும் ராசாத்தி நடுங்கிச் சிரிப்பாள். அம்மா, அவளைச் சிரிக்க வைப்பதற்கே அப்படி ஊற்றுகிறாளென எண்ணினேன்.
2
கிளியூர் கருப்பர் கோயிலுக்கு ராசாத்தி அக்காவை அழைத்துக்கொண்டு அம்மா கிளம்பியதும் நானும் வருவதாகக் கூறினேன். மூர்த்தி வருவதற்குத் தயங்கியிருந்தபோதும் கடற்கரையை ஒட்டிய கோவிலென அவன் ஆசையை மூட்டியவுடனே தானும் வருவதாக முடிவெடுத்தான். பஸ் கடற்கரைச் சாலையில் ஏறியதும் கருவேல மரங்களுக்கப்பால் மென் அலைகள் தவழும் கடலை, ஜன்னல் வழியே எக்கிப் பார்த்தவாறு வந்தோம். ஊர்க் கோவில்களின்; மந்திரித்த கயிறுகளெல்லாம் ராசாத்தி கையில் சுற்றி, மஞ்சள் இறங்கி பழுத்துத் தொங்கியிருந்ததைää அவளைப் பார்ப்பவர்கள் அம்மாவிடம் விசாரித்து நலம் பாராட்;டிவந்தனர்.
“கருப்பேங்கிட்ட கூட்டிபோறிகளாத்தா செரியாபோகும் தெயிரியமா போங்க”
கோவிலைச் சுற்றி உப்புமணல் பாவிய நடைபாதை. மஞ்ச அரளிச்செடிகளில் பட்டுக்சரிகை ஜாக்கெட்டுகள் கிழிந்து தொங்கின. மொட்டைப் பனை மரங்களுக்குக் கீழே நிற்கும் கருத்த வேல் கம்பிகள் வளையல்களை அணிந்து மண்ணிலிருந்து கையை நீட்டுவது போலிருந்தன. கால்கள் புதைந்து எழுவதை ராசாத்தி ரசித்தபடியே வந்தாள். கோவிலுக்கு வந்திருந்தவர்களிடம் அம்மாää அவர்கள் கதைகளை கேட்டுக்கொண்டிருந்தாள். அங்கிருந்த ஆல மர விழுதில் நானும் மூர்த்தியும் அமர்ந்திருந்தோம்.
பூஜைக்கு அழைக்கின்ற போது சாய்ங்காலம் முடிந்து இருட்டிவிட்டிருந்தது. பெரிய மீசை பூசாரி ராசாத்தியின் சடையைப்பிடித்து கன்னத்தில் அறைந்து அரற்றினார். அவள் ‘வீய்ய்’ யென்று அலறுவது கோயில் முழுதும் அதிர்ந்தது. பின்புறமாக நின்று கழுத்தை பிடித்து, காய்ந்த செடி வேர்களைக் கொத்தாக அவள் முதுகில் கீறினார். அக்கா உதட்டை கடித்து அழுதாள். வெகுநேரம் கேவிக்கொண்டு அமர்ந்திருந்தவள் சட்டென எழுந்து, “சிறுக்கி முண்ட ஒங்கழுத்த அறுக்குறேனா இல்லயானு பாருடீ… தேவிடியா நாயே” என்று அப்பாலிலிருந்து மொட்டைப்பனை மரத்தினை நோக்கி ஓடினாள். அம்மாவும் பூசாரியும் அவளை இறுகப்பிடித்து அமர்த்தினார்கள். மூர்த்தி என்னை இழுத்துச்சென்று மரத்திற்குப் பின்னால் நிற்க வைத்துக்கொண்டான். அவன் கண்கள் கலங்கி நீர் முட்டியது. ராசாத்தி அசந்து சரிந்த பின்னே அவள் பக்கத்தில் போனோம்.
அம்மா ஒயர்கூடையிலிருந்த புது தாவணி சட்டையை அவளுக்கு அணிவித்துää பழையதை அங்கிருந்த புதரில் கிழித்து வீசிவிட்டு மொட்டைப்பனை மரத்தைப் பார்த்து கைகள் கூப்பினாள். பூசாரி அம்மாவின் முகத்தைப் பார்த்தவாறே வந்து நின்றார். மாரில் வெண் ரோமச்சுருள்களுக்குள் கனத்த வேர் கட்டிய மாலை கிடந்தது. அம்மா அவரிடம் ராசாத்தி அக்கா பற்றிக்கூறியதும் ஒருகணம் கண்களை மூடி, சன்னமான புதிய பார்வையில் “இது ஒன்னும் பன்னறதுக்கு இல்ல” என்றார் குரல் தணிந்து. அம்மா அக்கணமே விசும்பியழுதாள். மூர்த்தி அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டான். “ஊருல பொம்பள குறிகாரிக ஏதும் போச்சுனா பாத்து கேட்டுக்க. இனி இங்க கொண்டுவர ஒன்னு ஆகாது” என்று கூறிவிட்டு கிளம்பினார். அப்போது அவர் நடை சீராக இருந்தது.
கருப்பர் கோவிலுக்குப் போய் வந்த பிறகு அம்மா நம்பிக்கையிழந்துவிட்டிருந்தாள். முகமெல்லாம் நீர் கோர்த்திருந்தது. வீடு முழுவதும் மௌனம் ஆளரவமற்ற வெயிலில் கிடக்கும் ஆறுபோல கனத்திருந்தது. எந்நேரமும் சண்டை மூள்வதற்கான முகாந்திரங்கள் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன. எந்தவொறு மாதமும் இல்லாத வகையில் ராசாத்திக்கு உதிரப்போக்கு அதிகரித்திருந்தது. அதன் காத்திரத்தில் பயம் பீடித்து சுணங்கிக்கிடந்தாள். சிறுவயதில் ராசாத்தி அக்கா வயசுக்கு வந்தபோது அவளின் உதிரத்துணிகளை அம்மாவிடம் காட்டிக் கேட்டிருக்கிறேன். அவள், அது மூலக்கட்டி என்று சொல்லி மறைத்திருந்தாள். அக்காலங்களில் அவள் வலியில் புரண்டு அழுவதும் வடியும் இரத்தத்தைக் கண்டு மருள்வதும் என்னவென்று புரியமாமல் நானும் அழுததுண்டு. அப்படியொரு வலியிலே அவள் கிடக்கிறாளென நினைத்துக்கொண்டேன். அன்றைக்கு அக்கா கோவிலில் பேசிய வார்த்தைகள் என் பிரக்ஞையைக் கலைத்திருந்தன. ஏதேதோ கெட்ட வார்த்தைகள் அம்மாவிடமிருந்து கேட்டிருந்தபோதும் அன்றைக்கு ராசாத்தியின் தோற்றம் எனக்கு வன பத்ரகாளியை நினைவுபடுத்தியது. கை கால்களில் மண் ஒட்டியிருக்க உடலில் வியர்வை வீச்சத்தில் தலைமுடியெல்லாம் விரிந்துää காளியை போல உக்ரமாக இருந்தாள். ஒருவாரம் என் எண்ணமெல்லாம் புதிய கதைகளாக நிறைந்தன. காலையில் எழும்போதும், பள்ளிக்கூடத்திற்கு நடக்கும்போதும் என தனிமையைச் சூழ்ந்து அக்கதைகள் உருவாகிக்கொண்டேயிருந்தன.
இரவுகளில் தூக்கம் பிடிக்கவில்லை. கொல்லை திண்ணையில் சென்று அண்ணனுடன் படுத்துக்கொண்டேன். அக்கா அறையிலிருந்து கரிய உருவம் வருவதுபோலிருந்தது. பக்கத்தில் வந்ததும் அது அக்காவென உறுதிப்படுத்தினேன். அவள் என்னை எழுப்பிவிட்டு கிணற்றடிக்கு சென்று அமர்கிறாள், சிறிது நேரத்தில் அழத்தொடங்கியதும்ää அம்மா தலையை விரித்தபடி முருங்கைக்கொம்பை கையில் எடுத்துவருக்கிறாள். அம்மாவின் நாக்கு நீண்டு தொங்கியிருந்தது. அக்கா அம்மாவைப்பார்த்து பயந்து அலறுகிறாள். திடுக்கிட்டு எழுந்தேன். உடம்பு வியர்த்து பாய் நனைந்து பிசுபிசுத்திருந்தது. நிலா வெளிச்சம் ஓட்டு வழியே வழிந்து கொண்டிருந்தது. பக்கத்தி;ல் அண்ணன் படுத்திருந்தது அவ்வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. மூர்த்திக்கு புதிதாக முளைத்திருந்த பூனைமீசையில் வியர்வை பூத்து முத்து முத்தாக வரிசையாக இருந்தன. அக்கா இருந்த அறை பூட்டியிருந்தது. வெளியே திண்ணையில் அம்மா தூங்காமல் பிரமை பிடித்ததுபோல அமர்ந்திருந்தாள். அன்று முழுதும் நான் விடிகிற வரை அமர்ந்தேயிருந்தேன்.
காலையில் விழித்தபோது சட்டென வெளிச்சம் கிறீயது போல விடிந்திருந்தது. வெகுநேரம் தூங்கிப்போயிருந்தேன். மிக அன்யோன்யமான குரல் கனவில் கேட்டதுபோல உணர்ந்தேன். தூய வேட்டி அசைய கால்களை ஆட்டியபடி பெரியப்பா உள்ளறையில் அமர்ந்து அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்ததும் போர்வையை உதறி, வேகமாக எழுந்தமர்ந்துகொண்டேன். பெரியம்மா முஷ்டியை இடுப்பில் மடித்தவாறு அம்மாவைப் பார்த்து நின்றுகொண்டிருந்தாள். அம்மாவின் முகம் அழுது ஓய்ந்திருந்தது. முன்பெல்லாம் அடிக்கடி வருவார்கள். பெரியப்பா அப்பாவின் ஒரே அண்ணன். ஆனால் சித்தப்பா, பெரியப்பா மகன்களென பங்காளிவழிகளில் எல்லோருக்குமே ஆண் பிள்ளைகள் தான். பெரியம்மாவிற்கும் ஒரே பையன் என்பதால் வம்சத்திலே ராசாத்திஅக்கா ஒருத்திதான் பெண். அதனால் அவள்மீது அவர்களுக்குப் பிரியம். அவர் முகம் அப்பாவின் தெளிந்த உருவத்தைக் காட்டக்கூடியது. சமயங்களில் அம்முகம் காட்டும் கவர்ச்சிக்காகவே அவரைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அவர் ஓர் அழகான பேச்சுவியாபாரி என்று அப்பா சொல்லுவார். அதற்காகவே அம்முகம் அப்படியொரு பாவனையைக் கொண்டிருக்க வேண்டும். எந்தவொன்றுக்கும் அதன் மூலத்தைத் தெரிந்துவிடுவார். பின் அதன் அச்சாரத்தினை அவர் அறிந்துவைத்த அறிவோடு உரசி எடைபோட்டு மதிப்பிடுவார். அம்மதிப்பீடு எப்போதுமே சரியாக இருக்கும்.
பெரியப்பா ஒரு பெரும் கதைச்சொல்லி. என் பால்யவயதில் வீட்டிற்கு வரும்போதெல்லாம் இரவு வெகுநேரம் விழித்திருந்து எனக்கும் மூர்த்திக்கும் கதைகள் நிறையச் சொல்வார். அவரிடமிருந்து மட்டும் எப்படி இத்தனை கதைகள் பிறக்கின்றன என எண்ணி வியந்திருக்கிறேன். அக்கதைகளால் வருப்பில் என்னைச் சுற்றியும் நண்பர் சூழ்ந்துவரத்துவங்கினார்கள். அவரின் கதை சொல்லும் பாவனைகளை அவதானித்து, அதற்கென மூன்று வௌ;வேறு நிலைகள் இருப்பதாகக் கணக்கிட்டிருந்தேன். கதையின் தொடக்கம் கதவைத்திறந்து புகுவதுபோல ஆரம்பமாவதாகவும் அதன் வேகம் அடுத்தடுத்து மலையுச்சியை நோக்கி ஏறி, பின் மெல்லத் தணிந்து மென்காற்றாக வருடுவதும் இறுதியில் ஓசையின்றி பாம்பின் வால்நுனியாக அது வெளியேறிவிடுமென்று அச்சொல் முறையைப் பகுத்திருந்தேன். ஒவ்வொரு முறையும் அவரின் கதைகள் ஒலிக்கத்தொடங்கியதும் பிரக்ஞையில் இக்காட்சிகள் வரிசைக்கிரமாக வரத்தொடங்கிவிடும்.
அப்பா விருட்டென துண்டை காற்றில் வீசியபடி வெளியேச் சென்றார். அவர் முனங்கிய சொற்கள் அவர் பின்னால் விழுந்தன. அப்பாவிற்கு என்றைக்குமே பெரியப்பாமேல் வெறுப்பு உண்டு. அப்பாவின் கனத்;த குரலுக்கு பெரியப்பா காட்டும் உதாசினப்பார்வையே அவரை நிலைகுலையச் செய்துவிடும். அதன்பின் ஆகங்காரம் தாளாது வெளியேறிவிடுவார்.
பெரியம்மாவைப் பார்த்ததும் நான் தாழ்ந்த குரலில் “பெரியம்மா” என்றேன். அவள் சிரித்தவாறே அடுக்களைக்குள் சென்றாள். உள்ளிருந்து வளையல் குலுங்களும் அம்மாவின் மூச்சொலிகளும் வந்தன. நேற்றிரவும் சண்டை மூண்டிருந்திருக்குமென ஊகிக்க முடிந்தது. பெரியப்பா என்னிடம் “சந்தோசு_ ஒன்ன கேட்டுடே இருக்கான்டா” என்று கேட்டபடி மரக்கட்டிலில் சாய்ந்தமர்ந்தார். நான் அவர் முகத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தேன். அவர் பார்வை ராசாத்தி அக்காவைத் தேடியது. ராசாத்தி வீட்டுக்குள் நுழைந்திருக்கும் அந்நிய மணத்தினை நுட்பமாக ஆராய்ந்து கண்டுணர்ந்த பின்னே மெல்லத் தலைப்படுவாள். பரிட்சையமானவைகள் அவளின் ஆழ்மனதில் பொதிந்து கிடக்கும். அதைத் தேடியலைந்து பெற்றுக்கொள்ளும் வரை காத்திருக்க வேண்டும். சமயங்களில் சிலமணி நேரம் கடந்து அவர்களைக் கண்டுணர்ந்த பின் கண்களில் படபடப்புடன் நகர்ந்துவந்து கைகளைத் தொட்டுப் பிடிப்பாள். முகத்தில் கூச்சமும் நளினமும் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டிருக்கும்.
அன்றைக்கு ஸ்கூலுக்கு போவதுபோல பாவனையோடு நானும் அண்ணனும் யூக்கலிப்டஸ் காட்டுக்குள் சுற்றித்திரிந்துவிட்டு மதியமே திரும்பி விட்டோம். அம்மா என்னைப் பார்த்து திடுக்கிட்டு “என்னடா” என்றாள். “பிராக்டிகல் கிளாஸ் இன்னைக்கு” என்றேன். மூர்த்தியும் அதையேச் சொன்னான். பெரியப்பா வந்துவிட்டால் எனக்கு மனம் களிப்புற்றிருக்கும். அவரிடம் எப்போதுமே புதிய கதைகள் நிறைய உண்டு.
அடுக்களையில் இட்லி வெந்துகொண்டிருந்தது. மதியத்தில் எப்போதாவதுதான் அம்மா இட்லி அவிப்பாள். பெரியம்மா தண்ணீர் தெளித்து குழித்தட்டுகளை கவித்தெடுத்துக்கொண்டிருந்தாள். முந்தின இரவில் மீந்த கறிக்குழம்பு கொதிக்கும் மணம் குமைந்ததும் பசியுணர்வெடுத்தது. மூர்த்தியுடன் சேர்ந்து ஆடுகளுக்கு வேப்பந்தழைகளை வெட்டி கயிற்றில் முடிச்சிட்டுவந்து உள்ளறையைப் பார்த்தேன். காலையில் வெளியே சென்ற பெரியப்பா அதன்பின் தென்படவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் அவருக்காகவேப் பாதையை வெறித்திருந்தார்கள். ராசாத்தி குளித்து மஞ்சள் அப்பி, பெரிய மனுசியாகத் தெரிந்தாள். அவளருகே சென்று அமர்ந்து “அக்கா பெரியப்பாவ பாத்தியா…” என்று கேட்டேன். அவள் என்னிடம் ஊருக்கு போகப்போவதாக சொல்லிச் சிரித்தாள். பெரியம்மா அப்படி சொல்லியிருக்க வேண்டும். அவள் அப்போதுதான் பெரியம்மாவிடம் பேச வருவாள். புதிய சட்டையின் இறுக்கத்தில் மார்பினை அனிச்சையாக தட்டிவிட்டுக்கொண்டிருந்தாள். அப்படிச்செய்வதை மறுத்துச் சொல்லித்தரத் தெரியாமல் பார்வையை விலக்கிக்கொண்டேன்.
பெரியப்பா தொந்தியசைய வேகமாக நடந்தபடியே ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு வந்தார். அருகாமையில்தான் அது வயதானவள் எனத் தெரிந்தது. தலையில் நரைமுடிகள் வரிவரியாக கோடிட்டிருந்தன. கண்களில் மை அப்பிய தடம். ஆனால் மை இட்டிருக்கவில்லை. நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவளுக்காகத்தான் எல்லோருமே காத்திருந்தார்கள். மார்புச்சேலை விலகி முலைகள் பிதுங்கி ஜாக்கெட்டுக்குள் திமிறிக்கொண்டிருந்தன. அவளின் மெல்லிய உடலில் முலைகள் மட்டுமே இருப்பதுபோல் பட்டது. அதை மூர்த்தியும் கவனித்திருப்பானெனவும் அதைத் தெரிந்துகொள்கிற கள்ளத்தனமும் எனக்குள் பரபரத்தது. சட்டென என் புலன்களில் கூர்மையை உணர்ந்து அதை மறைத்துக்கொள்கிற பிரயத்தனத்தில் தள்ளி அமர்ந்துகொண்டேன். புடைத்த மூக்கின்மேல் கல் பதித்த இரண்டு மூக்குத்திகள் கனமாக சரிந்திருந்தன. கொண்டையில் மட்டும் செம்;பட்டையேறிய மயிர். ராசாத்தியை அவள்முன் அழைத்துவந்து அமரச்செய்ததும் அவ்விடத்தில் உண்டான மென் அதிர்வையும் அக்குறிகாரியின் முகம் அனைத்தையும் ஊகித்துக்கொள்ள விழையும் துடிப்பையும் கவனித்தேன். வெற்றிலையில் கொட்டைப்பாக்கைப் பரப்பி ராசாத்தி அக்காவைப் பார்த்தவாறு அவள் பேசத்தொடங்கினாள். பாடல் போல அக்குறிகாரியின் பாஷை ஒலித்தது. ராசாத்தி எதற்காகவோ அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
பச்சை இனம் வாழ்ந்து முடித்து
பறவை இனம் செத்து விழுந்து
பாஷைகள் தெரியாமல்
கண்ணில் நீர் வழிய
பசியோடு நிற்கும் அவனுக்கு
பருக்கை வேண்டாம் குலம் காணும்
கண்கள் வேணும்…..
பெருமூச்சினை விட்டபடி சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் தொடர்ந்தாள்
அக்கினி இல்லை
ஆண் குறியுமில்லை
சுக்கிலம் வழிந்து வாழ்வினை அழித்து
கல்லென படிந்து நிற்கும்
கன்னியின் முகம் பாராது
குலத்தின் கண் குருடாகப் போனது
ஒவ்வொரு பாடலையும் ஐந்து முறை பாடிக்காட்டினாள். ஐந்தாவது முறையில் அதன் ராகம் மாறியிருந்தது. அது மனதைப் பிசைவதுபோல அழுத்தியது. அம்மாவின் முகம் சிவந்து நாசித்துளைகள் துடித்தன. பெரியப்பா மட்டும் அவளின் பாடல் தனக்கு விளங்கிவிட்டதுபோல சற்று உடலைத் தளர்த்தி எல்லோரின் முகத்தையும் ஒருமுறை பார்த்தார். நான் அவளருகே சென்று அமர்ந்தேன். அப்பெருத்த சரீரத்திலிருந்து வியர்வையின்; உப்பு வாடை வீசியது. புதிதாக ஜனித்த உயிர் போலிருந்தாள். பெரியம்மா அடுக்களையிலிருந்து இட்லியும் பருப்பு துவையலும் இலையில் மடித்து வந்து கொடுத்ததும் அப்படியே வாங்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு இட்லிகளை விண்டு விழுங்கத் தொடங்கினாள். துண்டு துண்டுகளாக தொண்டைக்குள் இறங்குவதை உற்றுநோக்கினேன். நல்ல பசி இருந்திருக்க வேண்டும். பெரியப்பா உள்ளறையில் அம்மாவிடமும் பெரியம்மாவிடமும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்.
அவள் குறிபாடிவிட்டு போன அடுத்தநாளே குலசாமி கோவிலுக்குச் செல்வதாக அம்மா முடிவெடுத்தாள். அப்பாவிடம் கேட்டதற்கு அக்கோவில் சிதிலமடைந்து கிடப்பதாகவும், சுத்தம் செய்து பூசை செய்வதெல்லாம் ஆகாத காரியமென்றும் முடிவாகக் கூறிவிட்டார். அம்மாவிற்கு அப்படி விட்டுவிடுவது சரியில்லையென்றும் தங்கள் மூதாதையர்களின் குலசாமியைக் காண்பதற்காகவேணும் அவர்களுக்குச் சொந்தமான அந்நிலத்திற்கு போகவேண்டுமென இரவு முழுதும் பினாத்திக்கொண்டேயிருந்தாள். இரவு எல்லோரும் அமர்ந்துகொண்டு அப்பாவை சம்மதிக்க பேசினார்கள். பெரியப்பா அம்மாவிடம் தான் சிறுவயதில் பார்த்திருந்த குலசாமியின் புடைத்த மீசையும் உருண்ட கால்களும் கொண்ட கற்சிலை இன்னும் தன் நினைவில் தங்கியிருப்பதாகச் சொன்னார். மூர்த்தி சாப்பிட்டதுமே தூங்கிப்போயிருந்தான். நான் மட்டும் இருளுக்குள் காண்டா விளக்கின் தழலசைவில் கண்கள் மிரள அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அடுத்தநாள் பள்ளி முடிந்து வந்ததுமே புதிய பட்டுப்பாவடை சட்டையணிந்து கையில் கட்டப்பையைப் பிடித்துக்கொண்டு ராசாத்தி அக்கா ஊருக்கு தயாராகக் கிளம்பி நின்றிருந்தாள். அம்மா மூர்த்தியை ஆடு, கோழிகளுக்கு தீவனம் போட துணையிருக்கச் சொன்னதால் அண்ணன் மூஞ்சிசுருங்கிவிட்டிருந்தது. எனக்கு அவன் வராதது நல்லதென்றே தோன்றியது. அப்பா வெறுப்புடனே சம்மதித்திருந்தார்.
சயனந்தோப்பூருக்குச் செல்லும் கடைசி பஸ்ஸிற்காக நமணசமுத்திரம் வந்தபோது இருட்டிவிட்டிருந்தது. சயனந்தோப்பூரில்தான் எங்களின் ஆயிரம் வருடத்திய குலசாமியான ஒற்றைக்கைத் துலையன் கோவில் உள்ளது. சிறுவயதிலிருந்து எத்தனையோ முறை பெரியப்பா வீட்டிற்கு வரும்போதெல்லாம் அக்குலசாமிக் கதையைக் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட அக்கதை பத்துவருடங்களாக ஒவ்வொருமுறையும் சொல்லப்பட்டுää பின் அது முடியும் முன்னே நான் தூங்கிப்போவதும் அடுத்தநாள் எழுந்து, அதன் தொடர்ச்சிக்காக அந்த இரவு விழித்திருப்பதும் பிறகு அதுவும் முடிந்துவிடுவதற்குள் தூங்கத்திலாழ்ந்துவிடுவதுமாக அக்கதை உருண்டுகொண்டிருந்தது. எஞ்சிய அம்மீதிக்கதை என்னுள்ளே விரிந்து பிரக்ஞையை வியாபித்து வேவேறு கதைகளாகிவிட்டிருந்தன. தூக்கத்தினூடே கேட்கவியலாதுபோன அம்முடிவற்ற கதையினை அன்றைய பயணத்தில் பெரியப்பாவிடம் கேட்டுவிடுவதென அமர்ந்திருந்தேன்.
3
பெரியப்பா என்னிடம் சொன்ன துலையனின் பூர்வ கதை:
இருக்குவேளர் வம்சத்தின் கடைசி மன்னான புதிவிக்ரமகேசரியின் போர்ப் படையில் துலையன் இருந்தான். புதிவிக்ரமகேசரியின் பாட்டனான பரதுர்கமர்தனனும் முப்பாட்டனான நிருபகேசரியும் வம்சம் வம்சமாக தங்கள் இனத்தைப் பல்லவர்களின் அரண்களாகவும் விதந்தோதலுக்காகவும் சுய அழிப்பு செய்துகொண்டும், அவர்களைப் பாரதத்தில் முடிசூடா ராஜ்யமாக உருவாக்குவதற்காக துணையிருந்தனர். அடுத்துவந்த பராமபிராமன் சோழ அரசி அநுபமாவின் அழகில் பிரக்ஞையிழந்து சோழர்களோடு உறவிட்டுக்கொண்டான். அவ்வுறவும் சில நாளில் அவனுக்குக் கசப்பை மூட்டியது. அவனைச் சிற்றரசன் போலல்லாது ஒரு படையூழியனாகப் பாவித்ததே அவ்வெறுப்புக்குக் காரணமென்றார்கள். அவன் மறுபடியும் பல்லவர்களுடன் சேர்ந்து சோழர்களை விரட்ட பிரயத்தனமெடுத்து, பல்லவச் சிற்றரசர்களைக் கொடும்பாளுருக்கு வர அழைப்புவிடுத்தான். அச்சூழலில் கொடும்பையில் அரியணையேறிய அவனின் வாரிசான புதிவிக்ரமகேசரிக்கு அதொரு குழப்பத்தையே விளைவித்திருந்தது. தன் தாய் அநுபமாவினால் வளர்க்ப்பட்டவனென்பதால் அவளின் சொற்கள் மட்டுமே அவனுள் எஞ்சியிருந்தன. குருதி சுண்ட அடிமை விசுவாசியாக பல்லவர்களின் காலடியில் நூறாண்டுகள் கிடந்தும் ராஜ்யத்தின் ஒருகாணி நிலம்கூட தம்மினத்திற்காக ஒதுக்கவில்லையென்கிற வெறுப்பும் தந்தையின் விசுவாசத்தனத்தால் மறுபடியும் பல்லவர்கள்ää கொடும்பபைக்குள் தழைப்பதை அவன் விரும்பவில்லை. அவர்களை வேருடன் அழித்தொதுக்குவதற்கான ஆற்றல் கற்புஜங்களையுடைய யசவக குலத்தவர்களாலே முடியுமென விக்ரமகேசரி நம்பியிருந்தான். காடுகளில் வேட்டையாடும் யசவர்களின் தந்திரோபதியங்கள் அவன் படையை வலுப்படுத்த உதவின.
துலையன் யசவகுலத்தின் கடைசிப் பிறப்பு. யசவகுலம் அவர்களின் வேட்டைக்குணத்திற்காகவே இருக்குவேள மன்னர்களின் போர்ப் படையில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஆயுதங்களைத் தோள்களில் தாங்கியவாறு நிலம் அதிரப் பாய்ந்துவந்து எதிரியின் உடலைப் பிளந்துபோடும் அக்குரூரத்தாக்குதல்கள் அக்காலத்தில் வடதிiயிலிருந்து வந்த சாளுக்கியர்களையே பயந்தொழியச் செய்ததாகச் சொலவடை இருந்தது. இருக்குவேள அரசர்களின் மீது யசவர்களுக்கு ராஜவிசுவாசம் உண்டு. அவர்களின் ஒவ்வொருவராக அம்மன்னனின் பட்டாளங்களுக்குள் குடிபுகத்தொடங்கின.
வேட்டையர்களாக இருந்த யசவர்களின் தலைமுறைகள் வழிவழியாக மன்னர்களின் சைனிக்களுடன் இணைந்தபின்பு போர்வாழ்வு அவர்களுக்குச் சலிப்புற்று மறுபடியும் வனத்திற்குத் திரும்பிவிடாதிருக்க நகரக் குடியினங்களுக்குள் மணபந்தம் செய்வித்து குடும்ப வாழ்க்கைக்கு மாற்றப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு ஆண்மகனும் காமபோகத்தில் திளைத்து வீரதேஜஸினை இழந்து மழுங்கிக்கொண்டிருந்தார்கள். விரகதாபத்தில் கூர்பெற்ற தங்களின் ஆண்மையை செயலூக்கமாக்க வழித்தெரியாது போகத்திலேயே கழித்து சுயதிருப்பியுற்றிருந்தனர். உடலில் ஆண் குறியைத்தவிர ஏனைய உறுப்புகள்; வலுவற்றுப் போயிருந்தன. வேட்டையாடிய கால்களில் நரம்புகள் அட்டைகளாக சுருண்டு நோய்க்குறியைக் காட்டின. குலச்சாபம் பீடித்ததாக எண்ணிஇ தலைகளை தாங்களே கொய்து மாண்டுவிழுந்தனர். அவ்வம்சத்தில் இறுதிப் பிறப்பான துலையனை, போதைகொள்ளும் ஸ்தனங்களின் மாமிச வாடையிலிருந்தும், கலவியுச்சங்களின் சிணுங்களில் சுகித்துவிடாமலிருக்கää பெண்வாசனையற்று வனத்தினுள்ளேயே வளர்த்தனர். அவன் கண்விழிக்கு முன்பே முலைப்பாலிலிருந்து பிரித்துவைக்கப்பட்டான். பிறவியிலே குரல்நாண்களற்ற ஊமையென்பதால் தன் தாயைப் பற்றி யாதொரு கேள்வியும் எவரிடமும் கேட்கவில்லை. அவனின் சொற்கள் ஒலியற்றுக் கனத்து அவனுக்குள்ளேயே அமிழ்ந்துகிடந்தன. அவனின் கோபம், குரோதம், குரூரங்கள் அவனுடலில் விஷமாக சிருஷ்டித்திருந்தன. துலையனைத் தங்களின் முப்பாட்டர்கள் வழிவந்த தெய்வமாக நினைத்து, ராஜ்யத்திற்கு ஒப்புக்கொடுத்திருந்தனர். துலையனின் கால்கள் கற்தூண்களாக உருண்டிருக்கும், எருமைகளின் விலாவெழும்புகளாக மார்பு பளபளப்புடன் மின்னும். தாடியின் வெண்மயிரை நீவியவாறு புறங்கழுத்தில் சடை முடிகள் அலைய அவன் வருவதைக் கண்டு நெஞ்சம் பதறாதவர்கள் இல்லை. துலையனுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது என்றும் அவன் பிறந்த கதை பலதும் இன்னும் இருப்பதாக நம்பிக்கை அவர்களிடத்தில் உண்டு.
0
வல்லூறுகள் வட்டமடித்துக்கொண்டிருக்கும் கொடும்பையின் காவிரிப்படுகை விரிந்த போர்க்களத்தின் வழியே இளுவத்தி நுழைந்தாள். கூர்கற்கள் பாவிய செம்மண்பாதை அவளின் கால்களை இடறச்செய்தன பின் அப்பாதையினூடே இருக்கும் இடைவெளிகளில் தேடி நடக்கத்தொடங்கினாள். செந்நிறமணல் கொண்ட நிலத்தை அவள் அப்போதுதான் பார்த்தாள். தம்மூதாதையர்கள் இவ்வூரைப்பற்றி செவிவழியாகக் கூறியிருந்தும் நேரில் காணும்போது வேறுவிதமான பிம்பத்தை அவளுக்கு அளித்தது. இளுவத்தி வடதிராவிடத்திலிருக்கும் குறிபாடும் குறவஞ்சி இனம். அவள் வம்சத்தில் பிறக்கும் ஏழாவது பெண்பிள்ளைகள் அக்குலத்தின் ஆதித்தொழிலான குறி சொல்லலுக்காக நாடோடிகளாக அனுப்பப்படுவார்கள். அப்பெண்களின் குறிகளுக்குத் தப்பாத கணக்குகள் மூலமே தங்கள் இனமழியாது தழைத்திருந்ததாக அம்மூதாதையர்கள் நம்பிக்கைகொண்டிருந்தனர். அவர்களுக்கு மொழிகள் இல்லை. பாஷையற்ற பாடல்களில் காட்டும் சைகைகளிலே அக்குறிப்புணர்த்தல் பிறிதொருவரால் அறியமுடியும். வௌ;வேறு நிலங்களில் திரியும் குறவஞ்சிகளுக்கு அவர்களின் குறிகளால் வம்சம் பிழைத்த மன்னர்கள் தம் நாடுகளில் இறையிலி நிலங்கள் கொடுத்திருந்தனர். பின் அதுவே அவர்களின் பூர்விக நிலங்களானது. சித்திரையை அடுத்த நான்கு மாதமும்ää மார்கழிக்கு பின்னும் அவர்கள் குறிபாடும் காலங்கள். மற்ற நாட்களில் ஆடுகளை மேய்த்துää பால் பீச்சி விற்றார்கள். வெண்கலத்தில் இசைக்கும் வாத்யம் போல் இளுவத்தியின் குரலில் சங்கீதம் உண்டென்று அவளிடம் குறிகேட்டவர்கள் சொல்வதுண்டு. நற்குறிகளுக்கொரு ராகமும் அபசக்குறிக்கு பிறிதொன்றாக அப்பாடல் இருக்கும்.
நிலங்களதிர குதிரைகள் சென்றபோது அந்நிலத்திலெழுந்த செந்நிறப்புழுதி அவள்மீது படர்ந்தது. சூழ்ந்திருக்கும் மலைக்குன்றுகளிலிருந்து பச்சை இலையின் பசிய வாசம் குமைவதை உணர்ந்தாள். கொன்றை மரங்களுக்கும் சொரிந்த பன்னீர் பூக்களுக்கும் நடுவே அவளுக்கான பாறையைத் தேடிக்கண்டாள். மரங்களிலிருந்து தளிரிலைகள் அசைவது போன்று கிளிகள்; திசைகிழித்துப் பறந்தன. கனத்த இரும்பு ஆபரணங்களை கழுத்திலும் காதிலும் அணிந்து செல்லும் பெண்களைக் கண்டு வியந்துää தன் மரவாபரணங்களைக் கலைத்து அவற்றை வாங்கியணிந்துகொள்ள வேண்டும்போலிருந்தது.
இளுவத்தி வந்துசேர்ந்த புதிதில் அவளை தேசமற்றதொரு பறவையாகவே இவர்கள் பாவித்தனர். பறைசனங்களிலிருந்து பிராமனனினம்; வரை அவளை தங்கள் அருகாமையிலிருந்து ஒதுங்கிக்கொண்டனர். அவளின் கரிய மேனி அருவருப்பையும், பளீரென்ற சிரிப்பு அம்மணக்குண்டிச் சிறுவர்களுக்குப் பயத்தையும் கொடுத்தது. அவள் ஓட்டிவந்த கிடாய்கள் இளம்கன்றுகள் போல முதுகு புடைத்து பெரிதாக இருப்பதாகவும், சில குஞ்சுத்தாடி வைத்தியர்களை ஞாபகப்படுத்துவதாகவும் பேசிக்கொண்டார்கள். இளுவத்தி ஒவ்வொரு பார்வையாக சந்தித்து தனக்குள் சிரித்துக்கொண்டாள். இளம்பெண்கள் இளுவத்தியின் முலைமீது கொண்ட ஆற்றாமையால் அவளை விரட்ட பிரயத்தனமெடுத்தார்கள். குழந்தையீன்ற பெண்கள் அவளின் பிருஷ்டத்தின் மென்னசைவினைக் கண்டு பதறி மார்பில் தொங்கும் தம் தாலிவளையத்தை இறுகப் பிடித்துக்கொண்டதும் உண்டு. விவசாயக்குடிநிலத்திலிருந்த சனங்கள் தங்கள் தொடைகளை தட்டி சப்தமெழுப்;பி அவளை வனத்திற்குள் சென்று விரட்டிவிட்டுவந்தார்கள். இளுவத்தி ஆயிரம் உயிர்கள் ஜனிக்கும் வனத்திலிருந்து வந்தவளென அவர்களுக்கு அறிந்திருக்கவில்லை. அவளின் சீழ்கையொலி கேட்டு, குடிலுக்குள் சுருண்டிருந்த கிழவிகள்ää அது முன்னெப்போதோ கேட்ட குறிக்காரிகளின் இனவொலியென்றும் அவர்களில் ஒருத்தி மறுபடியும் வந்துவிட்டாளென்றும் அறிந்துää அம்மக்களுக்கு அவள் எதிர்காலத்தை கனிக்கும் ஆதியினமென உண்மையை உரைத்தார்கள். பாணர் யசவர் பிராமணர் என ஒவ்வொரு இனக்குழுக்குடில்களாக அவள் நுழைந்து வெளியேறினாள். யசவர்கள் அவளைக் குடில்களின் நுழைவிலே நிறுத்திää ‘இது போர்ச்சாலையின் அடிமையினம் என்றும் தங்களினத்தைத் தவிர பிறிதொருயினத்தின் இளம்பெண்ணைப் புழங்கவிட அனுமதிப்பதில்லை’ என்றும் எச்சரிக்கை செய்தனர்.
0
இளுவத்தி கொடும்பைக்குள் நுழைந்த சேதியறிந்த அரண்மனை ஊழியர்கள்; அவளைத் தேடிவந்து, குத்துவாள் மரியாதை செலுத்தி அரச சபைக்கு அழைத்துச்சென்றார்கள். அவள் அவைக்குள் நுழைந்ததுமே அவளின் மேனியிலிருந்து கசியும் பச்சை மணத்தை முகர்ந்தவிட்ட அரசி அநுபமா, தன் மகன் விக்ரமகேசரியின் நேர்பார்வையிலிருந்து விலக்கி, கனத்த திரைச்சீலைக்கு அப்பால் நிற்கவைத்து குறிபாட ஆக்ஞையிட்டாள். அவளின் குறிபாடலும் சைகை மொழியும் அரச சோதிடருக்கு மட்டுமே புரியக்கூடியதாகவும் மற்றனைவர்களுக்கும் அதில் எத்தகைய சந்தேகமும் கேட்கமுடியாததாகவும் இருந்தது. அவ்விடத்திற்கு வந்துசேர்ந்த துலையன் திரைக்குப்பின்னால் அவளின் கண்மூடிய மோனநிலையைக் கண்டு ஒருகணம் திகைத்தான். முதலில் அதொரு கருஞ்சிலையென்றே எண்ணியவன் இளுவத்தியின் குரல்வளை நாகம் இரை விழுங்குவதைப் போன்று அசைவதைக் கண்டு மருண்டான். அவளின் பாடலுக்குள் எழும் முனகல் தவிப்பைக் கூட்டியது.
மன்னன் தன் குலதெய்வமாக பூஜித்துவரும் ஆவுடையனை விடää தற்போது அவனின் மனத்துள் பொங்கியெழுந்திருக்கும் வஞ்சமும் அதன் எதிர்கால நியாயங்களும் பரிபூரணமாக முடிந்திட, ஆவுடையனைத் தரையில் கிடத்தி அவன் நெஞ்சில் தன்னொற்றைக்கால் பதித்து நிற்கும் காளியை முதலில் பூஜிக்குமாறு இளுவத்தி பாடலொன்றை சைகை மொழியில் காட்;டினாள். அவ்வாறு தவறினால் போர்முடியும் தருவாயில் நீயும் உம்மக்களும் இந்நகரத்தோடு அழிந்துபோக நேரிடும் என எச்சரிக்கைக் குறியையும் கொடுத்தாள். இலையுதிர் காலத்திற்கு முன்னே மலைகளுக்கப்பால் வெற்றிக்குறியாக மயில்கொன்றைகள் பூத்துச்செறிந்திருந்திருக்கின்ற திசையைக் காட்;டியதும் அவைகூடம் சந்தோசத்தில் ஆர்ப்பரிப்பெழுந்தது. அதற்குள் ஆயுதசாலைக்கு அந்நற்குறியின் செய்தி எட்டி பெருமுரசுகள் இசைக்கப்பட்டன. பேரொலிகள் கேட்டு குதிரைகள் குளம்பால் நிலத்தை உதைத்து மிரண்டன. நடப்பவையாவற்றையும் வெறுப்புணர்வோடு அவையின் மூலையிலமர்ந்து வெண்தாடி நீவியவாறு –ஒரு கிழ வல்லூறு அமர்ந்திருப்பது போல- சாமரபிராமன் கேட்டுக்கொண்டிருந்தார்.
காலக்குறியானது சுபதருணத்தை தந்திருந்தமையால் மன்னர் அவளுக்கு தினை, கம்பு, சோளம் தருவித்து அனுப்பிவைத்தான். அரண்மனையிலிருந்து கூடைகூடையாக தானியங்கள் வனத்திற்கு வந்திறங்கிய சேதியறிந்த சனங்கள் அவளை வேடிக்கை பார்க்க வந்து நின்றார்கள். பறைசனத்துப்பிள்ளைகள் அத்தானியங்களைப் பசியோடு நின்று பார்த்ததும் அவள் அருகில் அழைத்து ஒரு கூடை கொடுத்தாள். அதற்கு அப்பிள்ளைகள் மறுத்து விலகிக்கொண்டது அவளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.
0
தினம் நான்காம் சாமத்தில் இளுவத்தி குண்டுமணிகளை உருட்;டினாள். எண்ணிக்கை விழும் கணக்கைக் கூட்டி அவ்வெண்ணிக்கையின் வழி துர்சாபம் பீடித்திருக்கும் திசையிலிருக்கும் வீட்டில் குறிபாடச் சென்றாள். அக்குறிப்பாடல் ராகத்தின் ஏற்றயிறக்கங்களிலே அச்சூனியத்தின் வீரியத்தை புரிந்துகொள்ளமுடியும். பின் அவள் காட்டும் சைகைகள் அவர்களின் சொப்பனங்களில் காட்சியாக வந்து அவர்களை எச்சரிக்கை செய்து ஆச்சர்யத்தைக் கொடுத்தன. ஒவ்வொருவராக அவளிடம் தங்களுக்குக் குறிபாடுமாறு வேண்டியழைத்தும் இளுவத்தி பதறி நெஞ்சில் கையைவைத்து மறுத்துவிட்டாள்.
4
தேனிமலையடிவாரத்தில் தழைத்த பசும்புற்கள் புதிய பச்சைத்திரையைப் பாவியதுபோல விரிந்திருந்தன. முந்தினயிரவின் மீந்த பனிக்குமிழ்கள் ஊடுருவும் சூரியவொளியை ஆயிரம் கண்ணாடித் துண்டுகளாக மாற்றி கண்களைக் கூசிக்கொண்டிருந்தன. ஆடுகள் மேய்வதை பார்த்தவாறு அமர்ந்திருந்த இளுவத்தி அவ்வழியே வந்த துலையனின் கண்களில் தட்டுப்பட்டாள். அவளின் மச்சம் கொட்டிய கழுத்துச் சதையும், மார்புக்கச்சை பிதுங்கத் தளும்பிருக்கும் முலைமாமிசங்கள் அவன் பிரக்ஞையைச் சிதறடித்தன. அக்கணமே துலையனுக்கு அவள்மீது மோகதாபம்; கசிந்தது. தினம் ராப்பொழுதுகளில் ஊருக்குள் குறிப்பாடலிலொலிக்கும் அக்குரலின் கார்வையில் நித்திரையிழந்திருக்கிறான். அவளொரு மலைநாட்டுப் பறவையினமாக இருக்கக்கூடும் என எண்ணியிருந்தான். இளுவத்தி அவன் பார்வையிலிருந்து அகன்று அருகிலிருந்த பாறையினோரம் குதித்து இறங்கினாள். பச்சை நாரிழையால் இறுக்கி முடிச்சிட்டிருந்த கேசம் துள்ளி அலைந்தது. கேசத்தின்; நுனியில் பன்னீர் பூவொன்றை செறுகியிருந்தது கரிய காட்டுச்செடி மலர்ந்திருப்பது போலிருந்தது. துலையனின் கண்கள் அவள் முதுகெங்கும் மொய்ப்பதை அறிந்தவள் கையில் பிடித்திருந்த ஓலைக்குறும்பை பதற்றத்தில் இறுக்கிக்கொண்டாள். அவன் அவளின் மார்புக்கூட்டை பொத்தியிருக்கும் கச்சைகளின் மணத்தை நுகர ஏங்கினான். பனங்காய்களாக அம்முலைகள் அதனுள் ஒளிந்துகொண்டு அவனைச் சீண்டின. அதன் பச்சைக் காம்பைத் தட்டிவிடத் தோன்றியது அவனுக்கு. துலையனின் செருப்பின் முனகல் நெருங்குவதை அறிந்தவள் தன் கைகளால் துள்ளும் அடிவயிற்றை மறைத்துக்கொண்டாள். அக்கணமே அவனும் அவளின் கை நுழைந்த திசைக்குள் புகுந்து வந்தான். அவ்வூருக்கு வந்த நாளிலிருந்து துலையனைப் பற்றி பலதும் அறிந்திருந்தவளுக்கு அப்போதுதான் நேரெதிரான சந்திப்பு கூடிற்று. தலைப்பாகையும், காதில் மின்னும் கடுக்கனும் குருவிவால் போன்ற சிறுத்த வெட்டு மீசை நீண்டு நுழைந்திருக்கும் வெண்தாடியும் ஒரு குலவீரனை வார்த்திருந்தது. ஒருகணம் விக்கித்துப் பார்த்தாள். கருங்கல்போன்ற மார்பின் சுருண்ட ரோமங்களுக்குள் பச்சை மையில் சிவ லிங்கம் தெரிந்தது. காவல் தெய்வம்போல இடது தோள்பட்டையில் நீண்டவாள் சாய்த்திருந்தான்.
அவள் கண்களிலிருந்த எச்சரிக்கையுணர்வு சிறு பூச்சிபோல சிறகடிப்பதைக் கண்டு துலையன் புன்னகைத்தான். சட்டென இருள் கவிந்துவிட்டது போன்ற அத்தருணத்தை தவிர்க்க அவள்ää தன் ஆடுகளைத் தேடியவாறு மூன்று விரல்களை உதட்டினருகே குவித்து ‘க்யோ’ வென சீழ்கை எழுப்பினாள். மலையடிவாரத்தின் புதரிலிருந்து கிடாய்களின் பதில் எதிரொலித்தது. அவளின் அடுத்த சீழ்கை வராததால் அவை மறுபடியும் ‘ப்யேர்ர்’ என நாவை சுழட்டியடித்தவாறு மேலே ஏறிவந்தன. அவள் மார்பில் கைவைத்து சிரித்தாள். ஆட்டுக்குட்டியொன்று துள்ளிவந்து அவளின் முலைகளை முட்டி மடியில் தலையைச் சிலிப்பிவிட்டு திரும்பி ஓடியது. அக்காட்சி அவனை திக்கென அறைந்தது. அவனின் அந்நியவாசத்தை அறிந்த ஆடுகள் ‘ப்ர்ர்’எனத் திரும்பத் திரும்ப ஒன்றையொன்று பார்த்துக் கத்தியவாறு கால்களால் நிலத்தை உதைத்தன. துலையன் நின்றுகொண்டிருக்கும்போதே இளுவத்தி ஆடுகளையோட்டிக்கொண்டு ஒற்றைப் பாதையில் திரும்பி நடந்தாள்.
எப்போதும் ஆயுதசாலைக்குள் கிடப்பது துலையனுக்கு அலுப்பைத் தந்தது. உலோகங்களின் உரசல் செவிகளை மோதியபடியும் கனத்த இரும்பின் மணம் நாசியை நமச்சனம் செய்வதும் அவனுக்கு வெறுப்பை மூட்டியிருந்தன. கருக்கலில் திரளும் கருத்த மேகங்களைப் பார்க்கையில் இளுவத்தியின் நினைவுகள் எழுந்து அவனைப் போதையூட்டியன. கனத்த வெட்டறுவாளை வீசியவாறு வனத்திற்குள் அலைந்தான். செருப்புத்தடம் அவளுக்குத் தன் நினைவையும், வெட்டுண்ட மரஞ்செடிகள் தன் தாளாத தாபத்தினையும் குறிப்புணர்த்துமென எண்ணிக்கொண்டான். தினம் தேடிச்சலித்து அன்று சந்தித்த மொட்;டைப்பாறையில் வந்தமர்ந்தவன் மலைக்கப்பால் சூரியன் மறைவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டெனக் கிடாய்களின் சீக்குவாடை அருகாமையில் வீசியது. குதூகலம் பீறிட சரிவிலிறங்கி நிலம் அதிர ஓடினான். புதர்மண்டிய பாறைப்பொந்தில் இளுவத்தி ஆடுகளை அடைத்துவிட்டு பாறையின் மேல்மடிப்பின் மீது தாவியேறி இன்னொரு சிறு பொந்துக்குள் உடும்புபோல ஊர்ந்துசென்றாள். அவன் கால்கள் எழுப்பிய ஒலி அவ்விடத்தில் எதிரொலித்ததும் அவள் சட்டென்று திரும்பி தன் நீலக்கண்களை உருட்டிப் பார்த்தாள். அவ்விருளுக்குள் நீலக்கண்கள் மின்;னின. தொலைவில் துலையனின் உருவத்தைக்கண்டவள் ‘ஊய்ய்’ என சப்தமெழுப்பிக் கைகளை அசைத்து விரட்டியனாள். அப்போது கருமுலைகள் பக்கவாட்டில் ஒன்றையொன்று முட்டி அசைவதைக் கண்டான். கரிய உருவமாக அவள் பாறையின்மீது அவள் அமர்ந்திருப்பது கனத்த தேன் கூட்டினை ஞாபகப்படுத்தியது. துலையன் பிரக்ஞையின்றி வெறித்தவாறு நின்றிருந்தான்.
அப்பாறைமுகப்பில் வந்து நின்றவன் தனக்கும் காலக்குறியொன்றைப் பாடுமாறு வேண்டினான். இது குறிக்குகந்த காலமன்று என அவள்ää சைகைமொழி பேசினாள். அவன் ஒன்றும் புரியாது குழந்தையாக நின்றுகொண்டிருந்தான். குறிசொல்லும் காலமல்லாதபோது தன் குடியைத்தேடி வருபவர்களுக்கு எதுவாயினும் கொடுத்தனுப்ப வேண்டும் என்கிற குல விதியை உணர்ந்தவள், துலையனை அவ்விடத்திலே நிற்கச்செய்து, பனையில் முடைந்த கவலத்தில் தேன் கலந்த சோளக்குருணை உருண்டைகளை எடுத்துவந்து தந்தாள். துலையன் ஒன்றுமறியாது அதைவாங்கி நுகர்ந்தான். இளுவத்தி ‘விக்’ கெனப் பற்கள் காட்டி சிரித்து சட்டென வாய் பொத்திக்கொண்டாள். பின் அவற்றை வாங்கி, விண்டு தேனில் தொட்டு சாப்பிடுவதுபோல பாவனைச் செய்துகாட்டினாள். தேன் பட்;டதும் அம்மஞ்சள் உருண்டைகள் தீயில் சுட்டது போல கருஞ்சிவப்பாக மாறிவிட்டிருந்தன. துலையன் மறுபடியும் அத்தேன் மணத்தை நுகர்ந்துவிட்டு விழுங்கினான். அவள் அவன் தொண்டைக்குழியை உற்றுப் பார்த்தாள். அருகாமையில் கல்பதிந்த அவளின் சிறுத்த மூக்கின் மடிப்புகளைக் கவனித்தான். சிறிய விச வண்டு போன்று அது அம்மூக்கில் அமர்ந்திருந்தது.
5
பௌர்ணமிக்கு பிறகான மூன்றாம் நாளில் புதிவிக்கிரமகேசரி பல்லவர்களுக்கெதிரான தன் நரித்தனத்தை அவிழ்த்தான். கோட்டை கொத்தளங்களிலிருந்த போர்வீரர்கள் ஒன்றும் அறியாது திகைத்திருந்தனர். விக்கிரமகேசரியின் மன எண்ணங்களை என்றோ கூடுவிட்டு கூடுபாய்ந்தறிந்திருந்த துலையன் அத்துரோகத்திற்கான முதல் சமிக்ஞையைத் தானே நிறைவேற்றுவதாக ஒப்புவித்தான். பல்லவ அரண்சூழ் கோட்டைகளுக்குள் இரைமீது பாயும் கழுகாகத் துலையனின் படைகள் விழுந்தன. சட்டென மூண்ட இருக்குவேளர்களின் வெஞ்சினத்தினைக் கண்டு மிரண்ட பல்லவர்கள் நிலையிழந்து போனார்கள். காவிரி மணற்பரப்பில் பல்லவசைனிக்கள் துலையனின் ஆயுதங்களோடு மோதும் பேரிரைச்சல் ஆற்றுபடுக்கையை அதிரச்செய்தது. அவ்வெளியெங்கும் சூனியம்; பீடித்து, ஒவ்வொரு உடலும் துலையனின் ஈட்டியில் செறுகிச் சாய்ந்தன. கண்களில் வெஞ்சினம் எரிய, மத்தகம் போன்ற புஜங்களால் துலையன் ஒவ்வொருவராக முட்டித்தள்ளி நகர்ந்துகொண்டிருந்தான். தன்மீது விழும் அம்புகளை இளுவத்தியின் கூர்விழியோடு ஒப்புமை செய்து புன்னகைத்தான். அறுபட்டு முண்டமாகச் சரியும் உடல்களைக் காணும் கணங்கள் குரூரக்களிப்பு உண்டானது. அவள் பிம்பம்; ஆழ்மனதில் தோன்றும்போதெல்லாம் ஆறாப்பபசியுணர்வு எடுத்தது. அப்போர்க்களமே பெரும் பசிக்கான கவளங்களாக அவன் முன் விரிந்திருப்பது போலுணர்;ந்தான். குருதி பீறிட குவிந்த சதைப்பிண்டங்களை அள்ளி சமுத்திரத்தில் வீசி, தன் ஆதியினத்தின்மேல் விழுந்திருந்த சாபத்தையழித்து விட்ட திருப்தியோடு இளுவத்தியிருந்த வனத்திற்குள் சடசடவென நடக்கத்தொடங்கினான்.
வனம் முழுதும்; கூகைகளும் குருவிகளும் அரற்றிக்கொண்டிருந்தன. போர்வெறியடங்காது உறைந்த குருதிவாடையோடு வந்துநின்ற துலையனைக் கண்டு இளுவத்தி திடுக்கிட்டாள். அவனை விரட்ட எத்தனித்தவள் அவன் முகம் கொண்டிருந்த வாகையுணர்வைக் கண்டு அமைதியானாள். போர்வெற்றிக் களிப்பினை துலையன் அவளிடம் ஊமை பாஷையில் சொல்லிக்காட்டி பெருமிதம் கொண்டான். அக்கணம் அவனொரு மிருகத்தின் சாயலிலிருந்ததாகப் பின்னால் இளுவத்தி தன் பாறைக்குள் குறிப்பாடலொன்றில் எழுதியிருந்ததாக சனங்கள் சொல்லிக்கொண்டார்கள். துலையனின் போர் வெறியைத் தணிக்க எண்ணியவள் பாறை உச்சியில் தொங்கும் தேன்கூடுகளை நோக்கி, மூங்கில் குடுவையை முகுகில் கட்டிக்கொண்டு பாறையின் மடிப்புகளில் விரல்களால் பற்றி ஏறத் தொடங்கினாள். அவளின் இடுப்பும் கால்களும்; சட்டென ஏறுவதற்கு இலகுவாக விரிந்தன. அவளின் இறுகி புடைக்கும் பிருஷ்டங்களும் தொடைச்சதைகளின் அசைவுகளும் குதிரையின் பாய்ச்சலை நினைவு படுத்தியது. அவளைப் பார்க்கும் கணங்கள் அவளொரு மானுடம் என்கிற பிரக்ஞையே ஏற்படவில்லை.
தேன் வழியும் மூங்கிலைக் கொடுத்ததும் தாகம் அணையப் பருகிமுடித்தான். அப்போது அவளின் கரிய மேனியில் தேனின் பச்சைமணம் வீசியது. தாடிமயிர்களில் தேன் சொட்டி நிற்கும் துலையனை பார்த்த கணம் தன்னுடலில் மோகம் கசிவதை அறிந்து அவள் திடுக்கிட்டாள். தேள் தீண்டிய வலி புலன்களில் எடுத்தது. முலைகள் கனத்துவிட்டது போல் ஆனதும் அவ்விடத்தில் அதற்குமேல்; நிற்கவியலாது விறுவிறுவென பாறைப்பொந்தினை நோக்கி நடந்தாள். துலையன் அவளைப் பின்தொடர்ந்தவாறு கத்திக்கொண்டே சென்றான். இளுவத்தி வனத்துக்கப்பால் கையைக்காட்டி இருள் கவிவதை உணர்த்தி வெறியேறச் சொன்னாள். துலையனின் சொற்களற்ற கூவல் அவ்வனமெங்கும் எதிரொலித்து பறவைகளின் கீச்சல்களை அடங்கச்செய்தது. தேன் பருகிய போதையில் நிலையிழந்து திரும்பினான்.
வெற்றிக்களிப்பின் பேரிரைச்சல் அரண்மணை ஆயுதசாலையில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. உடல் சுருங்கி சாய்ந்தமர்ந்திருந்த யசவர்களின் முப்பாட்டன் தன் குலத்தின் ஆன்மாவை விழித்தெழச்செய்துவிட்ட பூரிப்பில் துலையனைப்பிடித்து அவன் மார்பில் குனிந்து முத்தமிட்டார். அவன் உடலெங்கும் குமைந்த தேன் வாசனை கிழவனை பதறச் செய்தது. அடுத்தகணமே அவ்விடம் முழுவதும் தேன்மணம் கமழ்வதை யாவரும் அறிந்தனர்.
0
முதல்முறையாக துலையனின் பிரக்ஞையின் ஆழத்தில் ஆக்கத்தின் வடிவம் உண்டானது. ஆக்கம் அவனின் இயக்க சக்தியைத் தூண்டச் செய்தது. உலகம் ஆக்கப்பட்டதன் மூலக்கூறுகள் புலப்பட்டுவிட்டதும் இயற்கையின் கவர்ச்சியைக் கண்கள் விரிய நோக்கினான். அத்துனை காலமும் அழித்தல் தொழில் செய்த, அவனின் ஆத்மா எரிச்சலுற்றது. ஆனால் அவ்வெண்ணம் தோன்றிய கணப்பொழுதிலே அவ்வழித்தலே ஆக்கத்தின் பிறிதொரு வடிவம்தாம் என அறிந்தான். அவனின் மூதாதையர்கள் ஆக்கம் தோற்றுவிக்கும் மாயபிம்பத்தில் உழன்று அதன் ஆகிருதியை அறியாது செத்தொழிந்ததை நினைத்து வருந்தினான். மனதில் சிந்தனைகள் சூழ ஆயுதக்கிடங்கின் வெளிமாடத்திற்கு வந்து நின்றவன் இருள் கவிந்த பெரும் நிலப்பரப்பைப் பார்த்தான். நிலவொளியில் ஆயதசாலைக்கப்பால் வெண்தாமரைகள் மலர்ந்திருக்கும் பாறைச்சுனை தெரிந்தது. பசுவொன்று தன் நாசியை அசைத்து நீர் அருந்திவிட்டு ஒற்றைத் தாமரையை நுகர்வதைக் கண்டான். அவன் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. அப்போது இளுவத்தியின் அருகாமையுணர்வு ஏற்பட்டது.
அந்தியொழுகும் வேளையில் குயிலின் கூவல் போல அவளின் குரல் அவன் ஆதியினக் கூர்மையை மழுங்கச்செய்தது. அக்குரல் அவன் செவிக்குள் ஓடும் ஒவ்வொரு கணமும் நிலம் முட்டி வெளியேறும் புழுக்களாக காமம் வெளிவந்துகொண்டிருந்தன. தினம் பேயுறக்கம் கொள்ளும் துலையனுக்கு அவளின் சுருண்ட கேசமும், புடைத்த நாசியும் அடங்காவேசியின் உருவமாக வந்தது. அவனின் பெருத்த உடல் காற்று புகுந்ததுபோல கனமற்றுப் போனது. கனவுகளில் அவளின் முலைகள் மலர்வதன் காட்சிகள் தோன்றுவதும் அக்கரிய ஸ்தனங்கள் தோலுரிந்த பாம்பாக அவன்மீது விழுவதுமாக அலைக்கழித்தன. கனவிலிருந்து வெளியேறிக் குதித்துத் திடுக்கிட்டு எழுந்தான். அப்போது அவன் உடலிலிருந்து வெண்திரவங்கள் சொப்பன ஸ்கலிதமாக வெம்பித்துடித்துக் கசிந்தது.
6
அன்றைக்கு அதிகாலையிலே துலையன் ஆயுதசாலையிலிருந்து வனத்தை நோக்கிக் கிளம்பிச்சென்றான். மலையடிவாரத்தை அடைந்ததும் சுனையில் நீர் அருந்திக்கொண்டிருந்த அவளின் ஆடுகள் தலைதூக்கிப் பார்த்து குட்டைவாலினை சிலிப்பி அசூயை காட்டின. கொன்றைமரத்தினடியில் சருகுகளுக்குள் இளுவத்தி மார்புக்கச்சை அவிழ்த்துப் படுத்திருந்தாள். சரிந்த இடையின் கூர்வளைவுகளில் வியர்வை பூத்திருந்தன. தலைக்குச் சாத்தப்பட்ட கைமீது முலைகள் ஆசுவாசமாக ஒன்றொடொன்று மோதிக்கிடந்ததைக் கண்டான். அவளுடலிலிருந்து பன்னீர் மலர்களின் கசங்கல் மணம் குமைந்தது. கால்களின் மென்மயிர்கள் நீர் வடிந்து ஒட்டியிருந்தன. அவள் அப்போதுதான் சுனையில் குளித்திருக்க வேண்டும். அவ்வுடலினருகே அமர்ந்தவாறு அதன் மணத்தை நுகர்ந்தான். அவனின் வெப்ப மூச்சின் தீண்டலையுணர்ந்த இளுவத்தி பதறியெழுந்து கைகளை மார்பில் அறைந்து ‘வ்யீ’ எனக் கூவினதும் நிலம் அதிர அவ்விடத்தின் மௌனம் உடைந்தது.
இளுவத்தி கால்களை எடுத்துவைத்ததுமே துலையன் அவளின் இடையைச் சுற்றிப் பிடித்து இறுக்கினான். அவனின் தகித்த உடலின் அருகாமை அவளுக்குத் தேனின் மணத்தை மூட்டியது. பாசிபடிந்த கரும்பாறையின் ஈரத்தை உணர்ந்தவள் அவனின் உடல் மீது தன் மார்பைத் தழுவினாள். நான்கு விழிகளிலும் ஒளி பீறிட்டதும் அக்கணத்திற்குப் பின்னான நாளிiகைகள் புள்ளிகளாக பாய்ந்து சென்றன. மனம் நுண்துகள்களாக உடைந்து பேதலித்து வெளியேறிக்கொண்டிருந்தது. பிரக்ஞை மீண்டதும் தான் இன்னதென்று அறியாது செய்துகொண்டிருந்ததை அறிந்து சட்டென விலக்கிக்கொண்டாள். அவளின் முகம் பதற்றம் கண்டிருந்தது.
இளுவத்தியின் அலறல் பறவையின் அகாலக் கூவல் போல் ஒலித்தது. துலையன் அவ்வொலியை பொருட்டாக்காது அவளின் கூந்தலைப் பற்றினான். முடிச்சிட்ட கூந்தல் நழுவி அவன் முகத்தில் விழுந்தது. அதனுள் கமழ்ந்த வியர்வையின் பசியூட்டு வாசம் புலன்களுக்குள் ஊடுருவிச்சென்றன. இளுவத்தி பற்களால் அவன் முதுகெலும்பைக் கடித்து பிய்க்க பிரயத்தனமெடுப்பது அவனை மேலும் கிளர்ந்தெழச் செய்தது. அவனை வீழ்த்த அவள் பிரயோகிக்கும் ஒவ்வொரு அசைவுகளும் போர்க்களத்தை ஞாபகமூட்டின. தன் குலத்தின்மீது துர்சாபம் விழுந்துவிடுமென பிதற்றினாள். அவனுடலிலிருந்து எம்பி விழுந்து தன் இரத்தம் வழிந்த பற்களைக்காட்டி விரட்;ட எத்தனித்தவளின் ஆடைகளை உருவியெறிந்தான். அம்மணமாகிவிட்ட இளுவத்தி தரையில் தலையை மோதி, உடல் துடித்து நெளிந்தாள். அவள் உடலில் ஈரம் பிசுபிசுத்து வடிந்தது. முலையின் குலுங்கல் அவனை போதையுறச்செய்தன. பாம்புகள் புணர்வது போலொரு பிரமை அவனுக்கு பரவியது. அப்பிரமையில் நிலைத்திருந்தவன் சட்டென தரையில் விழுகின்ற பிரக்ஞையின்றி ஒருகணம் அவளுடலையே வெறித்துப்பார்த்தான். பதறியெழுந்த இளுவத்திää அவிழ்ந்திருந்த வாளால் அவன் கையில் ‘சக்’ என இறக்கினாள். குருதி பீறிட துலையனின் வலது கரம்ää வெட்டுபட்ட துதிக்கையாக மண்ணில் புரண்டு துடித்தபோது அவனின் புடைத்த குறியிலிருந்து விந்திரவம் தரையில் பீய்ச்சியடித்துக்கொண்டிருந்தது. அக்கணம் வரை விரகதாபத்திலிருந்த அவனுக்கு, வெட்டுண்ட கையை ஒரு உயிரியென்றே நம்பத்தோன்றியது. இளுவத்தியின் கைகளில் தன் குல வாள் குருதி கசிய வாயைப் பிளந்திப்பதைக் கண்டான். தன் ஒற்றைக்கையால் இளுவத்தியினைப் பிடித்து தரையில் மோதி காலால் மிதிக்க முற்பட்டவனை புறந்தள்ளிவிட்டு காட்டுப் புதர்களுக்குள் புகுந்து பாறையேறி தப்பித்து ஓடினாள். ஆத்திரம் தாளாத துலையன் அவ்வனம்; முழுவதும் குருதி வடியும் வெட்டுண்ட கையை வீசியெறிந்து ஓலமிட்டான்.
குருதி கசிந்த ஒற்றைக்கையும் துவண்ட ஆண்குறியுமாக சவக்களை பீடிக்க நகருக்குள் பிரவேசித்த துலையனைக் கண்ட மக்கள் அஞ்சி நகர்ந்தனர். அப்படியொரு பிறழ்வுற்ற முகபாவத்தை அவர்கள் அதற்குமுன் பார்த்திருக்கவில்லை. அவனுடலின் சதைகள் சூம்பிப்போய்விட்டிருந்தன. அடியெடுத்து வைக்கவியாலாத வண்ணம் கால்கள் நடுங்கின. தன் ஊனமுற்ற உடலை யாரும் கண்டுவிடாது ஆயுதத் தளவாடக்கிடங்கில் மறைத்துக்கொண்டான். துலையினின் நிர்மூலத்தையறிந்த சனம் ஆயுதசாலையைச் சூழ்ந்து புலம்பியழுதனர். ஒரு குருரக் கனவாக நிகழ்ந்த அக்காட்சியை அவர்களின்மீது இடிபோல நொறுங்கிச் சரிந்தது. பெண்கள் தன் பிள்ளையைப் பறிகொடுத்தாக மார்பினை பியத்துக்கொண்டு அழுதது அவன் தவிப்பை தூண்டியது. தன்னருகே யாரொருவரையும் அணுகவிடவில்லை. சொற்களற்ற ஊமைக் குரல் அச்சத்தை ஏற்படுத்தியது. தளவாடக்கிடங்கிலிருந்து அவனை வெளிக்கொணர அவர்கள் செய்த பிரயத்தனங்கள் வீணாகின. அவனுடலிலிருந்து வெறியேறிய குருதி அவ்விருட்டறையெங்கும் மாமிச வீச்சத்தைப் பெருக்கியது. ஆயுதசாலையில் எதிரொலித்த ஓலத்தினை செவிமடுக்காது புதிவிக்ரமகேசரி வெற்றிக்களிப்பில் மூழ்கியிருந்தான். அன்றிரவு வனத்தினுள் கூகைகளின் கீச்சலொலி அதிகரித்து பெரும் அலறலாக மாறிக்ககொண்டிருந்தது. துர்சாபம் கவிந்ததன் அறிகுறி அம்மக்களை நிம்மதியிழக்கச் செய்தது.
வலதுகை தொங்குவதுபோன்றெதொரு பிரமை அவனிடமிருந்து அகலவில்லை. வெட்டுண்ட தந்தம் போல் அது பொத்தென நிலத்தில் விழுந்தது நினைவில் அகலாது துன்புறுத்தியது. இருளில் தன் ஒற்றைக்கை நிழல் அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த ஊனநிழலைப் பார்க்கும் கணங்கள் அவனுள் அருவருப்பு மூண்டது. தரையில் சரிந்து விழுந்தான். ஆங்காரம் பெருகி வழிந்தோடியது. ஒரு கையின் இழப்பில் மொத்த உடலின் பருமனுமே குறைந்துவிட்டது போலிருந்தது. வெளியே இருள் கனத்த திரையாக இறங்குவதை வெறித்தவாறே அமர்ந்திருந்தான். ஒவ்வொரு காட்சிகளாக மனம் திரும்பவும் அவ்வேட்டையை துலக்கமாகக் காட்டியது. அவளின் மார்புகளும் பிருஷ்டமும் அவன் முன் தோன்றி பயமுறுத்தின. கால்கள் அவனையல்லாமல் தனி உயிரியாக துடித்தன. வாசலில் ஒரு கருமையான உருவம் அசைவதைக் கண்டான். மெல்ல அது அவனை நோக்கி வந்தது. துதிக்கையில்லாத தந்தம் மட்டுமே கொண்ட ஆண் யானை அது. காது மடலிலையை விசிறியவாறு மூளியாக நின்றிருந்தது. குருதி வடியும் அதன் அறுபட்ட துதிக்கையின் சதை கொழகொழவென தொங்கியபடி, வலியுடன் வந்து நிற்கும் அதனை யானையென்றே அவனால் கண்டுணரமுடியவில்லை. வாய் பிளந்து பிளிறியது. செந்நிறப் பள்ளத்தினுள் நாக்கு ஒரு குழந்தைபோல கிடந்தது. அதன் மத்தகத்தின் மேல் ஒற்றை இறகை மட்டும் கொண்ட பருந்தொன்று பறந்து அமர்ந்திருந்தது. சட்டென எழுந்து அப்பிரமையிருந்து வெளியேறி சுனை நோக்கி ஓடினான்.
தினம் துதிக்கையிழந்த யானை அவனைத் தேடி வருவதும் வாயைப் பிளந்து நிற்பதுமாக அவனை இம்சிக்கத் தொடங்கியது. தன்னூள் ஊறியெழுந்த காமம் பயந்தொளியும் பாம்பாக சுருண்டுகொள்வதன் தன்னிரக்கம் அவமானப்படுத்தியது. புலன்களின் சுவைகள் மழுங்கிப்போயின. உலகத்துடனான பற்றுதல் அறுந்து, உடலிலிருந்து வெளியேறிய வேட்கை அதன் வெற்றிடத்தை உண்டாக்கிவிட்டிருந்தது. அவ்வெற்றிடங்களிலெல்லாம் அகங்காரமும் கொந்தளிப்பும் நிறையத்தொடங்கின. துவண்டு கிடந்த குறியினை அறுத்தெறிந்துவிட எண்ணித் தோற்று அடங்கினான். அறுபட்ட தோள்பட்டை கருமையாக மாறிக்கொண்டிருந்தது.
0
துலையன் இரவில் விழிக்கத்; தொடங்கினான். பகல் முழுவதும் ஆயுதங்களின் உலோகவாசனையில் உழன்றவாறு தன் வெட்டுண்டக் கை விழுவதற்கு முந்திய கணத்தின் அவன் புலன்களில் உதிர்ந்து கொண்டிருந்த அக்காமவுணர்வின் தீண்டலும் அதனை அழித்தெறிந்த அவளின் அகங்காரத்தையும் நினைத்து வெம்பிக்கொண்டிருந்தான். தினம் அவ்வூர்ச்சனங்கள் அவனிருக்கும் தளவாடக்கிடங்கை வெறித்தவாறிருந்துவிட்டு பின் சலித்துப் போய் உறங்கச்சென்றனர். துலையனுக்கு தன் முண்டமான இடது தோளைப் பார்க்கும் கணங்கள் குற்றவுணர்வும் ஆத்திரமும் மூண்டது. தன் கையை வெட்டியெறிந்த உடைவாளினை வெறித்தவாறு அமர்ந்திருந்தான். போர்க்களத்தில் அவ்வாள் சீவியெறிந்த தலைகளையும் முண்டமாக அவ்வுடல்கள் தக்கதக்கவென நான்கைந்தடிகள் நடந்து சரிந்துவிழுவதும் அவனினைவில் வந்தன. புடமிட்ட பொன் போலிருந்த அதன் கைப்பிடி மின்னியது. பிடிக்குள் கையை நுழைத்து தடவினான். இளுவத்தியின் முலைப்பள்ளம் நினைவில் எழுந்தது. சட்டென வாளை நிலத்திலூன்றி எழுந்து வெளியே வந்தான். குளிர் காற்று உடலை பொத்தெனத் தாக்கி வீசியது. இருள் கவிந்த வனம் மதமிறங்கிய கொம்பன் யானை போல படுத்திருப்பதைக் கண்டான். அடியெடுத்து வைத்ததுமே உடல் நடுக்கமுற்றது. தன் இரத்தம் உறிஞ்சிய பறவையொன்று அவ்வனத்தினுள் அமர்ந்திருப்பதாக எண்ணினான். அவளின் வாசனை இன்னமும் தன் நாசியினுள் தங்கிவிட்டிருப்பதும் அவளைப் புணரும் வரை அது இறங்கிச் செல்லாதெனவும் அறிந்தான்.
0
வனம் தன்னுள்ளே நிலவொளியை விரித்திருந்தது. உள்ளே நுழைந்ததுமே அவனின் கண்கள் அவ்விருளுக்குப் பழகி துலக்கமாகத் தெளிந்து காட்டின. பறவைகளின் இறகசைவுகளும் சர்ப்பங்கள் புரள்வதும் செவியில் துல்லியமாக விழுந்தன. அவளிருந்த பாறைப்பொந்தினருகில் உடல் வியர்த்து நின்றான். அவளின் மூச்சொலி கேட்கவில்லை. சுனை, உச்சிப்பாறை, கொன்றை மரத்தடி எனத் தேடிச்சலித்து அடங்கினான். அவ்வனமெங்கும் அவனின் துண்டான கை இறைந்திருப்பது போலிருந்தது. அக்கைகள் உடும்புகளாக ஊர்ந்து செல்கிற பிரமை. மலைச்சரிவில் கிடந்த பள்ளத்தில் ஒன்றொடொன்று சரிந்தமர்ந்திருந்த இளுவத்தியின் கிடாய்களைக் கண்டான். அவைகள் அவனின் வாசனையை அறிந்து காது மடல்களை அடித்தன. அதனருகே சென்று ஒருகணம் உற்று நோக்கியவன் சட்டென அதன் ஒவ்வொன்றின் தலையையும் வெட்டிவீசத் தொடங்கினான். முண்டமாகக் குருதி பீறிட இருளுக்குள் ஓடி விழுந்தன. சில முண்டமாகவே அவனிருந்த திசையில் பாய்ந்து வந்து மோதின. வெட்டுண்ட தலைகள் நாவைத் தலதலவென அடித்தவாறு உருண்டோடியதைக் கண்டு அவன் தன் ஆத்திரம் தீர்த்துக்கொண்டான். வெட்ட வெட்ட ஆடுகள் அவ்விடமெங்கும் பெருகிக்கொண்டேயிருந்தன. வெட்டிச்சலித்த துலையனுக்கு முண்டங்களிலிருந்து குருதிக்கொப்பளித்தெழுவதைக் கண்டதும் தன் கையின் ஞாபகம் வருவதை உணர்ந்தான். அக்கணமே வனத்திலிருந்து வெளியேறினான்.
துலையனின் குருதி கசிந்த நிலங்கள் பாழ்பட்டுப் போகத்தொடங்கின. கொடும்பையின் மீது மழைகளற்ற நிர்மூலவானம் கவிந்தது. அந்நிலத்தில் தழைத்த புதர்கள் கருநிறமாக மாறியதற்கு அவனின் சாபம் விழுந்ததன் உக்கிரம்தானென மக்கள் எண்ணினர். காவிரியில் நீர் நின்று மீன்கள் செத்தொதுங்கி அவ்விடமெங்கும் அழுகல் நாற்றமெடுத்தது. பசுக்களும், ஆடுகளும் சதையிழந்து எலும்பு துருத்தலாக மாறிக்கொண்டிருந்தன. வனத்தில் பறவைகளின் கீச்சொலிகள் அற்றுபோயின. எல்லையிலிருந்த மயானத்தின் சாம்பல் புழுதிகள் ஊருக்குள் வீசுவதைப் பார்த்து சனங்கள் துவண்டுபோயினர். ஒருவராலும் துலையனை ஆயுதக்கிடங்கிலிருந்து வெளியே அழைத்து வர இயலவில்லை. ஊர்ச்சனங்கள் அரண்மனையிலிருந்த புதிவிக்ரமகேசரியை அழைத்ததற்கு தன் தாய் அநுபமாவின் சொற்களிலிருந்து ஆக்ஞை வராதவரையில் அவனைக் காணமுடியாதெனக் கூறிவிட்டான். இருப்பினும் கொடும்பையின் மீது விழுந்திருக்கும் துர்சாபத்தினைப் போக்க யாகம் செய்வதாக உறுதியளித்தான்.
7
பௌர்ணமியன்று நகரத்தின் மத்தியில் அக்னி யாகபீடம் கட்டப்பட்டு தீக்கங்குகள் ஏற்றப்பட்டன. அந்நகரெங்கும் தீயின் வெப்பம் தகித்தது. துலையனின் கருவுருவம் வெளிவருமெனவும் வெப்பச்சலனத்தால் நீர் மேகங்கள் உடைத்துவிடுமெனச் சனங்கள் நம்பிக்கைக்கொண்டிருந்தர். முழுநிலவுவரை யாகம் தொடர்ந்தும் துளிச் சலனம் கூட நடக்காததைக் கண்டு புதிவிக்ரமககேசரி அக்னியை நிறுத்தச் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான். அதுவும் அவனின் சாபமென்றே சனம் பயந்துபோனது. தினம் அந்திசாயல் தொடங்கியதும் சனங்களுக்கு அச்சம் மூண்டுவிடும். அடங்காத ஆத்திரத்துடன் துலையன் வனத்தினுள் புகுந்து அக்குறிகாரியைத் தேடி ஓலமிடுவதும் பின் உக்கிரம் தாழாது ஒவ்வொரு மிருகங்களாக வெட்டிசாய்ப்பதையும் நெஞ்சமதிரக் கேட்டவாறு விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
அன்றைக்கு அவனுடல் முழுவதும் விரியன் பாம்புகள் இழைவதுபோலொரு உணர்வெழுந்தது. வாளினை தன்னுடலில் வீசி அதைத் தட்டிவிட்டான். அப்போதுதான் அப்பிரமை அது தனக்கு அவள் மறுபடியும் வனத்தினுள் வந்துவிட்டதைத் தெரிவிக்கும் அறிகுறியெனப் புரிந்தது. வனத்தை நோக்கிப் பயணமானான். உச்சிப்பாறையின்மீதிருந்த பொந்தில் அவளின் அசைவு தென்பட்டது. அதன் விளிம்பில் நின்றவாறு அப்பொந்தினை நோக்கி கத்தத்தொடங்கினான். அவன் குரலின் தவிப்பு காற்றில் கரைந்துபோனது. அவள் உடும்பாக தன் உடலை ஒடுக்கிக்கொண்டு கிடந்தாள். அவள் உடலின் கருமை பளபளப்புடன் அசைந்தபோதும் துலையனின் ஒளி மங்கிய கண்களுக்கு புலப்படவில்லை. அவனின் ஊமையழுகை அப்பாறைகளில் பட்டு எதிரொலித்ததும் அவள் தன் குற்றவுணர்வினை நினைத்து புனைந்துகிடந்தாள். துலையன், தன் காமத்தை மாயமாய் சிருஷ்டித்தவளும் அதன் அடங்காத தீ நாவினை வெட்டியெறிந்தவளுமாகிய இளுவத்தியின் தேகத்தின் மீது, தன் மூதாதையர்களின் மழுங்கிய ஆண்மையைப்போன்றே தன் புலன்களையும் உருவாக்கிவிட்டதற்காகவும், பசித்த அவன் வீரம் இம்மண்ணில் பிச்சையேந்திக்கொண்டிருப்பதாக அவளைச் சாபமிடுகிறேன் என்று அவ்விடத்தில் நின்றவாறு தன் சுக்கிலத்தை பீய்ச்சியடித்து விட்டு நிலத்தில் செறுகியிருந்த வாளினைச் சுழற்றித் தன் கழுத்தில் வீசினான். அவனின் முண்டவுடல் விதிர்த்து விதிர்த்து சில அடிகள் ஓடிச்சென்று சுனையருகே விழுந்தது. சுனையை பார்த்தவாறு அவன் முகம் நோக்கியபடியே உயிர் வெளியேறியது. அவனின் குருதி பாறை தெறித்தபோது இளுவத்தி வெறியே வந்து அவனைத் தேடினாள்.
0
கொடும்பையின் மேய்ச்சல் நிலங்களில் வெப்பம் தகிக்கத்தொடங்கியதும் பாம்புகளும் எலிகளும் ஈரம் தேடி அலைந்து ஊருக்குள் வந்தன. தண்ணீர் தேங்கியிருக்கும் மறைவிடங்களைத் தேடி மிருகங்களும் மனிதர்களும் மொய்க்கத் தொடங்கினர். புழுதிநிலமாக மாறிவிட்ட அவ்வூரைவிட்டு சனங்கள் வௌ;வேறு இடங்களுக்குக் குடிபெயர நகர்ந்தனர். சிலர் பல்லவர்களைக் கொன்றழித்தக் குருதி காவிரியில் செந்நிறமாக ஓடியதுதான் என்றும் துலையனின் துர்சாபம் அம்மண்ணில் விழுந்ததுதான் என்றும் புலம்பினர். சகுனம் பார்த்துää குறிகேட்டு, பில்லிசூனியங்கள் கடைபிடிக்கும் பழக்கங்கள் அத்துடன் வழக்கொழிந்து போனது. நகரத்தில் நுழையும் மாயவித்தைக்காரிகளை நிர்வாணமாக்கி விரட்டியடித்தனர்.
புதிவிக்ரமகேசரி மூவர் கோவிலைக் கட்டி முடித்ததுமே இருக்குவேளர் மரபு சரியத்தொடங்கி, சோழச் சிற்றரசர்களின் குடைக்குக்கீழ் மாறியது. துலையனின் இறப்பு தம்மினத்தின் துர்சகுணமென சத்திரியர்கள் எண்ணினர். பருந்துகள் வனத்தினுள் புதைந்துகிடந்த அவனின் முண்டவுடலைத் தோண்டி வெளித்தள்ளியிருந்தன. காய்ந்த மலம் போன்றிருந்த அப்பிணத்தைத் தங்கள் பிள்ளைகளின் கண்களில் படாமல் மலையடிவாரத்திலே வைத்து எரியூட்டினர். ஒவ்வொரு சிற்றரசர்களுக்கு துலையினின் கதைப்பாடல் சந்ததிகளாகக் கூறப்பட்ளன. எந்தச் சிற்றரசனும் அவனைப் போலொரு வீரனைத் தன் படைகளில் சிருஷ்டித்துக்கொள்ள அதன்பிறகு முயலவில்லை. துலையன் ஆதியினத்தின் கடவுளானான். அவனின் கற்சிலைகள் நூறுவருடங்களுக்குப் பிறகு பிரகனதியன் என்றொரு சிற்பியால் வடித்தெடுக்கப்பட்டு நிறுவப்பட்டது. கூலிச்சனங்கள் அவனின் சிலைக்குப் பூசை செய்தனர். அவனுடலின் தகிக்கும் விரகதாபத்தைச் சந்தனம் கரைத்து பூசியும் கிடாய்கள் வெட்டியும் தணித்தார்கள். ஆனால் அவனின் அடங்காத தாபம் தகித்துக்கொண்டேயிருந்தது. அக்கோயிலைச் சுற்றியிருக்கும் நிலங்கள் விளைச்சல் அற்று என்றும் வெப்ப மூட்டப்பட்டதாகவே கனன்றது. சுதைச்சுவரைச் சுற்றிக் கரையான் பெருகி அரித்ததில் கோயில் சிதிலடையத்தொடங்கியது. கருவேல முட்கள் மண்டிய அவ்விடத்தில் யாரும் நுழைய விரும்பவில்லை. சாராயம் காய்ச்சுவதற்கும், அவசரகாலத்திற்கு காமபோகத்தினை கழிப்பதற்கு ஏற்றதாக அவ்விடம் மாறியது. சில்வண்டுகள் எந்நேரமும் அங்கிருக்கும் மரப்பொந்துகிளல் அமர்ந்து காது கிழியக் கத்திக்கொண்டிருக்கும். காட்டுச்சிலந்திகளுக்கு பனைமரத்திலிருந்து துலையினின் வாள் தூக்கிப் பிடித்திருக்கும் ஒற்றைக்கைவரை விசாலமான வீட்டைக் கட்டிக்கொள்ள முடிந்தது. நாய்கள் அவனின் உருண்ட காலைச் சுற்றி வந்து முகர்ந்துவிட்டு சாவகாசமாக சிறுநீர் கழித்தன. காலகாலமாக சிறுவர்கள் துலையின் நீண்ட உருண்ட குறியை உடைத்தெடுக்க முயன்று தோற்றிருந்ததன் தடம் அங்கிருந்தது.
8
கருவேலமரங்கள் மண்டிய புதர்களை அரிவாளால் ஒதுக்கியவாறு அப்பாவும் பெரியப்பாவும் ஊர்க்காரர்களுடன் பேசிக்கொண்டே முன்னே செல்ல, நான் வசம்புச் செடிக்குள் தத்தியபடியிருந்த காடைக் குஞ்சினைக் குனிந்து பார்த்தவாறே வந்தேன். அதை எப்படியாவது எடுத்து வைத்துக்கொள்ளலாமாவென்று எண்ணம் தோன்றயதும்; பின் அக்குஞ்சினை ஒளிந்தவாறு எதிர்நோக்கியிருக்கும் பாம்பை நினைத்து அவ்வெண்ணத்தைக் கலைத்துவிட்டேன். காற்றில் பனையோலைகள் சடசடவென முறியும் சப்தம் வந்தது. தலைக்குமேல் உயர்ந்திருக்கும் பனைகளை அண்ணாந்தேன். பிரண்டைக்கொடிகள் பச்சைப்பாம்புகளாக அதைச்சுற்றி படர்ந்திருந்தன. ஒருகணம் அப்பச்சை நுனிகள் மெல்லிய அசைவைக் கண்டு திடுக்கிட்டேன். தூரத்தில் தெரிந்த மொட்டைமரமொன்றில் பொந்திற்குள் கிளி ஏதும் இருக்கிறதாவென அதைச்சுற்றி ஓடும் பாதையின் லாவகத்திற்கு தலையைச் சாய்த்தபடியே வந்தபோது சட்டென நிழல் கவிந்த மரங்களுக்குள் நுழைந்துவிட்டவுணர்வு எழுந்தது. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் ஒருவாறு அமைதியிலிருந்தார்கள். பாதையை மறைத்து நின்றவர்களை விலக்கிவிட்டு என்னவென்று எக்கியபோது புற்றுக்கு நடுவே நின்ற துலையனின் சிலை கண்ணில் பட்டது பார்த்த கணம் மிரண்டு நிமிர்ந்தேன். உடைந்த வாளும்ää முட்டை விழியும், வயிற்று மடிப்புகளும் எனக் கோரமான சிற்பமாக நின்றது.
பெரியப்பா கைகளை குவித்ததும் உதடுகள் முணுமுணுத்தன. மெல்ல அச்சிற்பத்தின் அருகே போய் நின்றேன். அதன் முனையுடைந்த ஆண்குறி கண்களை உறுத்தியதும் சட்டென என்னை யாரும் கவனிக்கிறார்களாவென பார்வையை அலையவிட்டேன். ஒரேமாதிரி அத்துனை பேரும் பீடியைப் பற்ற வைத்து இழுத்துக்கொண்டிருந்தார்கள். துலையன் எதற்கு நிர்வாணமாக நிற்கிறான் என்கிற கேள்விக்கு பதில் புரியாமலும் அப்பாவிடம் கேட்பதற்கு பயமாகவும் இருந்ததால் வெறுமனே அவ்விடத்திலே அச்சிலையை உற்று நோக்கியவாறிருந்தேன். முயங்கிக்கொண்டிருந்த சில்வண்டுகளின் ரீங்காரம்; ஒருநொடி நின்றதும் பொட்டல் வெளியின் கனத்த மௌனம் திடுக்கிடச்செய்தது. அப்பா ஏதோ கணக்குப் போட்டவாறு அமர்ந்திருந்தார். துலையனைச் சுற்றி சிறு சிறு தெய்வங்களின் இடிந்த சுதை மண்டபங்களிருந்தன. ஊர்க்காரர்கள் வெயிலுக்கு தம் உடல்களை மறைந்துக்கௌ;ள அம்மண்டபத்திற்குள் குறுகி நின்றார்கள். அவர்கள் முகங்களில் வெறுமை ஊறிக்கிடந்தது. “ஆவணிக்கு மொத வெள்ளியா பாத்து குறிங்கய்யா…” என்றார் சுருட்டுப் புகைத்த கிழவன். கன்னத்தில் சுருட்டுக்குழிகள் மடங்கி விரிந்தன. எல்லோரும் அவர் பக்கம் திரும்பியதும் கிழவன் விரல்களை எண்ணிப்பார்த்து தேதியைச் சொன்னார். பெரியப்பாவுக்கும் மற்றவர்களுக்கும் அதில் திருப்தியேற்பட்டது. பிறகு ஒருவாறு எல்லோரும் பூசைக்கான ஏற்பாடுகளைப் பற்றிப் பேசியபடி காலால் சருகுகளை ஒதுக்கிக்கொண்டிருந்தனர். நான் துலையனுக்கு அருகில் சிதறிகிடந்த உடைந்த சுதைச்சிற்பங்கள் ஒவ்வொன்றாக கவனித்தேன். வயதான அச்சுருட்டுக்கிழவனைப் போலவொன்றும், அப்பத்தாவின் பழைய படமொன்றிலிருந்த உருவத்தினையொத்த சிலதும் அருகருகே இருந்தன. அவைகள் துலையனின் குடும்பங்களாக இருக்கலாமென யாரிடமும் கேட்டக முடியாமல் ஊகித்துக்கொண்டேன். சட்டென அவ்விடத்தில் சுருட்;டின் கசப்பு மணம் குமைந்ததும் குமட்டலுணர்வு எடுத்தது. பின்னால் வந்து நின்ற சுருட்டுக்கிழவனின் தள்ளாத உடலைக் கண்டு திடுக்கிட்டேன். கிழவன் ஒற்றைக்கைத் துலையன் சிலையை ஒருகணம் தவிப்புடன் பார்த்தபடி நான் இருக்கின்ற பிரக்ஞையின்றி தன் தொங்கிப்போன மீசையினை நீவிவிட்டுக்கொண்டு பொக்கை சிரிப்பினைக் காட்டினான். அப்பா என்னிடம் கிழவனை அழைத்து வருமாறு சைகை செய்தார். துலையன் சிலையைப் பார்த்தவண்ணமிருந்த கிழவனை அழைக்கத் திரும்பியபோதுதான் காற்றில் அளைந்துகொண்டிருந்த அக்கிழவனின் இடப் பக்கச் சட்டையைக் கவனித்தேன். கிழவனுக்கு ஒற்றைக்கை மட்டுமே இருந்தது.
0
மூவரும் வீடு திரும்பும்போது மதியம் ஆகிவிட்டிருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததுமே நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த ராசாத்தியிடம் பெரியப்பா மகன் மணி ஏதோ பேச எத்தனித்துக்கொண்டிருந்தான். மணி எங்களைப் பார்த்ததும் சிரித்தான். எனக்கு மட்டும் தனியொரு சிரிப்பைக் கொடுத்தான். மணிக்கு மூர்;த்தியைவிட என்மீதே விருப்பம் அதிகம். சின்னவயதிலிருந்தே அக்காவின் பைத்திய முகத்தைப் பார்க்கப் பயந்து வீட்டிற்கு வருவதில்லை. என்னிடம் வந்து “கோயில கண்டுபுடிச்சிட்டியாடா” என்றான். நான் ஒருவாறு தலையை ஆட்டிவைத்தேன். மணி பாலிடெக்னிக் போய்க்கொண்டிருந்தான். அடுத்த வருடம் என்னையும் அங்கு சேர்த்துவிடுவதாக பெரியப்பா சொல்லியிருந்தார். அவன் முகத்திலும் மீசை ஊhரத் தொடங்கியிருந்தது. அவனுக்கு பெரியம்மா போல வட்ட முகம்.
ராசாத்தி அக்கா பயந்தவாறு நெற்குருது அறையினுள் தன்னுடலை ஒளித்துக்கொண்டிருந்தாள். புதிய இடம் அவளின் பயவுணர்வை அதிகப்படுத்தியிருந்தது. நான் அவள் குறுகிக்கிடப்பதை அப்பாவிடம் காட்டினேன். அவர், “நம்மூடுதான்டீ…தம்பி இருக்கான் பாரு” என்று அவள் தலையை வருடிவிட்டார். எனக்கு, நான் பார்த்த சிலையையும் அக்கிழவனையும் பற்றி அவளிடம் கூறவேண்டிய ஆவல் முட்டிக்கொண்டிருந்தது. அவள் முகத்திற்கு நேராக அமர்ந்து அவள் கண்களைப் பார்த்தேன் அவை அதிர்ந்துகொண்டிருந்தன. மூக்கின்மீதிருந்த புதிய மூக்குத்தி அழகாக மின்னியது. பெரியம்மா அணிவித்திருக்க வேண்டும். அவள் என் முகத்தைப் பார்த்து மென் சிரிப்பைக் காட்டினாள். துலையன் சிலை தூரத்தில் ஒரு காட்டுக்குள் இருப்பதையும் அதை சுத்தப்படுத்தி பூசை செய்யப் போவதாகவும் கிடாய்களெல்லாம் வெட்டப்போவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தபோது அவள் கைகள் நடுங்கத் தொடங்கின. புதிய வீட்டின் பயம் இன்னும் அவளுக்குள் அகலவில்லை. “ராசாத்தி பெரிய கோயிலாக்கும் அது. முன்ன ராஜாலாம் அங்க வந்திருந்தாங்க” என்றான் மணி. அவன் முகத்தைக் கண்டதும் அவள் உதட்டைப் பிதுக்கி அழ முயன்றாள். நான் அவளைச் சமாதானப்படுத்த தோள்மீது கையை வைத்ததும் சீறியெழுந்து, என்னைத் தள்ளிவிட்டு உள்ளே நகர்ந்தாள். அவள் முகம் விகாரமாகி ஒரு விலங்கின் பாய்ச்சலாக மாறிவிட்டிருந்தது. அதன்பின் அவளுக்கருகே செல்லவில்லை.
பெரியப்பா வீட்டிற்கு வருவதற்கு முந்தின இரவு பேருந்து பயணத்தில் கேட்;ட துலையனின் உருவத்தை என் கற்பனையில் உருவாக்கியிருந்ததும் நிஜத்திலிருந்த சிலையுருவமும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டு என்னுள் வௌ;வேறு காட்சிகளாக அடுக்கடுக்காகச் சரிந்தன. துலையனின் முட்டைக்கண்களும் அணில்வால் மீசையும் புடைத்த மார்பில் விழித்திருந்த மார்புக்காம்பும் என் பிரக்ஞையிலிருந்து எழுந்து வந்தபடியே இருந்தன. அவ்வப்போது அதன் உடைந்த குறியைப் பற்றய எண்ணத்தை பொய்யாக மறைத்தாலும் தனிமையில் அது என்னைக் கிளர்ச்சியூட்டவேச் செய்தது. மெல்ல என்னுணர்வுகளில் அதன் வசீகரம் உரசுவது தெரிந்ததும் தலையணையில் முகத்தைப் பொத்தி கவிழ்ந்துகொண்டேன். மீண்டும் மீண்டும் துலையனின் பிம்பம் என்னுள்ளிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. அருகே மணி நன்றாகத் தூங்கிப்போயிருந்தான். ராசாத்தியின் மூச்சொலி அறையில் சீராக வந்துகொண்டிருந்தது. அவள் புதிய இடத்திற்கு பழக்கப்பட்டுவிட்ட பிறகே அப்படி மூச்சுவிட்டுத் தூங்குவாள். பெரியப்பா அப்பாவிடம் நான்காவது முறையாக பூசைக்கான செலவுக்கணக்கை சரிபார்த்தார். அப்பா வெறுப்பாகவே அமர்ந்திருந்தார். முட்டை பல்பின் வெளிச்சத்தில்; இருவரும் அமர்ந்து கசங்கிய காகிதமொன்றை விரித்து பார்த்துக்கொண்டிருந்தனர். தவளை கத்தல் அடங்கியடங்கி எழுவதுமாக இருந்தது.
வெளியே தெரு விளக்கு வெளிச்சத்தில் திண்ணையிலமர்ந்து பெரியம்மாவும் அம்மாவும் நெடுநேரம் உறவுக்கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள். சுவரில் சாய்ந்தவாறு புரண்டபடி இருப்பது பெரியம்மாதான் என ஊகித்தேன். அம்மா உள் அறையின் இருளைக் கவனித்தவாறும், இடைவெளியினூடே குரல்கள் இடைவெளிவிட்டு தாழ்ந்து ரகசியமாகப் பரிமாறிக்கொள்வதுமாக இருந்தாள். பெரியம்மா ஏதோ சொன்னதற்கு அம்மா சட்டென வாய்பொத்தி சிரித்தாள். பெரியம்மாவின் சிரிப்பில் இருந்த வசீகரத்ததை காலையில் கண்டது அப்போது நினைவில் வந்தது. அம்மா அவளிடம் தான் கேட்ட துலையன் கதையினை கிசுகிசுத்தும் சப்தமாகவும் ஏறயிறங்க சொல்லிக்கொண்டிருந்தாள். பெரியம்மா சில இடங்களில் தான் கேட்டறிந்ததையும் குறிப்பிட்டு சரிபார்த்தவாறே வந்தாள். அம்மாவின் கண்களும் நாசியும் கதை சொல்வதற்கான தகவமைப்பினைப் பெற்றிருப்பதை அவதானித்தேன். இளுவத்தி தொலைந்த கதையினை அவள் கூறத் தொடங்கியதுமே என் புலன்கள் விழித்தெழுந்தன. மெல்ல இருளுக்குள் புரண்டு அம்மாவின் குரலுக்கு செவிமடுக்க நகர்ந்தேன்.
0
கொடும்பை வனத்திலிருந்து கிளம்பிய இளுவத்தி வடதிசையை நோக்கிப் பயணமானாளாம். நிலத்தில் விழும் அவளின் நிழல் துலையனின் உருவமாக கால்களைப் பற்றியவாறு பின்தொடர்வதாகப் பயந்தாள். நிழல்கள் மீது இருந்த அச்சம் அவளைப் பகல்களில் வனங்களுக்குள்ளே பதுங்கிக்கொள்ளச் செய்திருக்கிறது. கொடும்பையை விட்டு வெதுதொலைவுக்கப்பால் நகர்ந்தும் அவ்வச்சம் அவளைத் தொடர்ந்துகொண்டேயிருந்ததாம். இருளில் நிலவு பளபளக்கும் சுனைகளில் தாகம் தீர நீர் அருந்தியும் பசியுணர்வு அவளைப் புரட்;டிக்கொண்டேயிருந்திருக்கிறது. தோள்கள் துருத்தி, வற்றியிருந்த அவளின் அப்புதிய உருவத்தை யாரும் கண்டறியமுடியவில்லை. பாறையுச்சிகளில் தேன்கூடுகளை தேடியலைந்தாள். மரப்பட்டையாக மாறிப்போன அவளுடலின் அடிவயிற்றில் மட்டும் குளுமை படர்வதை புரியாது தொட்;டுப் பார்த்துக்கொண்டாள்.
இளுவத்தி முப்பது நாட்கள் கால்நடையாக நடந்து வடக்குத்திசையில் புதிய ஊரினை அடைந்திருக்கிறாள். அவ்வூருக்குள் காலக்குறிகளுக்கான சமிக்ஞை ஏதும் அவளுள்ளே புலப்படாதிருந்ததை எண்ணி அதிர்ந்தவள் இரவு அங்கிருந்த ஒரு மலைக்குகைக்குள் தங்கிக்கொண்டாள். அப்புதியவூர் சூனியம் கவிந்திருப்பது போல பச்சை நிலங்கள் இல்லாமல் பெரும் வெறுமையோடு விரிந்துகிடந்ததை காலையில் கண்விழித்ததுமே பார்த்திருக்கிறாள். சவங்கள் எரிக்கும் மயான வெளிபோல அவ்வூர் இருந்தது. தொலைவில் நாரைகள் பறந்து திரிவதைக் கண்டதும் அவ்விடம் நோக்கி விரைந்தவள் அங்கு சேறுகலங்கிய ஆற்றை அடைந்து தன் தாகவுணர்வு முழுதும் தீரும் வரை அள்ளிப் பருகிவிட்டு கரையிலிருந்த ஒற்றை மரத்து நிழலில் கைகளை மடக்கி சுணங்கிப் படுத்துக்கொண்டாள். அப்போது தன் கைகளில் ஓடும் நாடியினுள் இன்னொரு பிண்டம் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தை உற்று கேட்டாள். சட்டெனப் பதறி தன் வயிற்றைத் தொட்;டுப்பார்த்து அழத் தொடங்கினாள். அதன் பிறகு அவளை யாரும் பார்க்கவில்லை. கடைசியாக அந்த ஆற்றங்கரையில்தான் இளுவத்தியின் கால்தடம் பதிந்திருந்ததாக ஊர் சனங்கள் கூறியிருக்கிறார்கள்.
0
காலையில் எழுந்ததும் அக்கதையைப் பற்றிய சிந்தனைகள் மொய்த்துக்கொண்டிருந்தன. அம்மாவிற்கும் பெரியம்மாவிற்கும் நடக்கின்ற பேச்சு அதிகமும் துலையன் இளுவத்தி கதையாகவே இருந்தது. இரவு அவர்கள் பேசிக்கொண்டதற்குபின் அக்கதை என் கனவில் காட்சிகளாக பரிமாணமெடுத்திருந்ததை மலம் கழிக்;கின்றபோது யோசித்துக்கொண்டிருந்தேன். பிரக்ஞை முழுவதும் சூனியம் நிறைந்ததாக மனம் குழப்பத்திலாழ்ந்துபோனது. கள்ளிப் புதருக்குள்ளிருந்து மணி இருமும் சப்தம் வந்தது. அவன் மலம் கழித்துää எழுவதற்கான சமிக்ஞை. புதிதாக சிகரெட் பழக்கமும் வந்துவிட்டது. எனக்கும் சிகரெட் புகைக்க வேண்டுபோலிருந்தது. இரவு பூசையில் பார்த்துக்கொள்ளலாமென அவ்வெண்ணத்தைக் கலைத்துவிட்டேன். நடந்து வரும்போது மணியிடம் துலையன் கோவிலைப் பற்றி விசாரித்ததற்கு அவன், “நாங்க சின்ன வயசுல கோலிக்குண்டல்லாம் அங்கதான் போடுவோம்..பயலுக புள்ளங்கல அங்க கூட்டிவருவாங்கே” என்றான் என்னை ஏறிட்டு சிரித்தபடி. “தொலையஞ் சாமிக்கு குஞ்சு ஒடச்சது என் ப்ரண்டுதான்..”
0
பெரியப்பாதான் பூசை நடத்துவதற்கு பிரம்மப் பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு அது ஊர் கௌரமாகவும் மாறிவிட்டிருந்தது. அப்பாவின் மனம் அவரிடமிருந்து விலகியே வந்தது. பூசைக்கென்று இருக்கும் சாமியாடிகள் வரவழைக்கப்பட்டார்கள். சிக்குப்பிடித்த சடைமுடிகளை சுருட்டி வைத்த தலைகளோடு இரு சாமியாடிகள் காலையில் திண்ணையில் அமர்ந்திருந்தனர். சுருட்டிய சடைமுடிமீது காவித்துண்டு போர்த்தியிருந்தார்கள். காதுகளிலும் மூக்கிலும் செம்பு வளையங்கள். மரப்பட்டைபோல முடியில் சிக்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. கனம் தாளாமல் தலையை சுவரில் சாய்த்திருந்தார். அரைமணி நேரத்திற்கு மேலாக பெரியப்பாவும் அம்மாவும் அவர்களோடு பேசி முடிப்பதற்குள் வயதேறிய சாமியாடி இரு கவுளி வெத்திலைகளை முடித்திருந்ததை நான் ரகசியமாக மணியிடம் சுட்;டிக்காட்டினேன். இளவயது சாமியாடி பெரியப்பாவிடம் ஒவ்வொரு மறுப்பு சொல்லுக்கும் இடையே வயதேறிய சாமியாடியிடம் பதில் கேட்பதுபோல உசிதம் வாங்குவதும் அதற்கு அவ்வயதேறிய சாமியாடி சரி என்பதாக தலையை ஆட்டுவதுமாக அமர்ந்திருந்தார்.
“எந்த சாமியா இருந்தாலும் அதுக்குன்னு குடுக்கறதுக்கும் சொல்றதுக்கும் ஒரு கணக்கு மிச்சமிருக்கும். அது நம்ப சொல்ற சாமியாடிக்கு கட்டுப்பபடாது” என்றார் இளவயது சாமியாடி. அப்போது பெரியப்பா பேச முற்படுவதற்கு கிழ சாமியாடி கையால் சைகையிட்டு தான் பேச இருப்பதாக அமர்த்தினார்.
“ஒத்தக்கை சாமியாடிகளா பாத்தாதத்தான் உண்டு. வீரசத்தரம் பக்கம் ஒரு ஆளு இருந்த ஞாவகம் இருக்கு. போயித்துட்டு கேட்டுட்டு வாங்க” அப்போதுதான் வயதேறிய அக்கிழ சாமியாடி பேசினார். சொற்கள் கனீரென வந்து விழுந்தன. அதற்குப் பிறகு அங்கிருப்பது உசிதம் இல்லை என்பது போல அவர் இளவயது சாமியாடியின் தோளைத் தொட்டு கிளம்புவதற்கான சமிக்ஞை கொடுத்தார். அம்மா அவர்கள் இருவருக்கும் வெத்திலையில் பணம் வைத்துக் கொடுத்தாள். பெரியப்பா பூசை நாளன்று வருமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டு வழியனுப்பினார்.
ராசாத்திஅக்கா வீட்டுடன் நன்கு பழகிவிட்டாள். கொல்லைக்கும்ää திண்ணைக்குமென நடந்து திரிந்தாள். அம்மாவுக்கு அவள் முகம் தெளிந்திருப்பதாகத் தோன்றுவதாக அப்பாவிடமும் பெரியம்மாவிடமும் சொல்லிக்கொண்டேயிருந்தாள். ஆனால் அவள் எப்போதும் போலிருப்பதாகவே எனக்குப் பட்டது. அவள் கண்களிலும் விரல்களிலும் இருக்கும் சிறு பதற்றத்தை அங்கும் கண்டுகொண்டுதானிருந்தேன். பெரியப்பா வீரசத்திரத்தில் சடமுடி பூசாரிகள் கூறிய ஒத்தக்கை சாமியாடியைப் பார்த்துவிட்டதாகவும் போன் நம்பரை வாங்கிவிட்டுää பூசைக்கு நாள் குறித்திருப்பதாகவும் போனில் தெரிவித்தார். அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் பெரும் மனபாரம் கனிந்துவிட்டது போலானது. அம்மா லேசாக அழக்கூடச் செய்ததை பெரியம்மா தொட்டு நிறுத்தினாள். அப்போது அப்பா சட்டென தரையைத் தேய்த்தெழுந்தவர் பெரியம்மாவிடம்ää “ஒங்கவூட்டு புள்ளய இப்படித்தான் போட்டு ஊரு நாற காட்டிக்கிட்டு இருப்பிகளா…அதுக்கு என்னவானாலும் இருந்துட்டு போகட்டும் அப்படியே விட்டுத்தொலைங்க” என்றார் உரத்துக் கத்தியபடி. அம்மா அவரைத் தடுக்க முயன்றபோது ஓங்கி தலையில் அடித்தார். பெரியம்மாவுக்கு என்ன செய்வதென்று அமைதியாக இருந்தாள். நான் மணி முகத்தில் தோன்றும் பதற்றத்தைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்தச் சண்டைக்கு பின் அப்பா எப்போது வேண்டுமானலும் வீட்டைவிட்டு கிளம்பிவிடுவதுபோலவே இருந்தார்.
ஒத்தக்கை சாமியாடி இரண்டு விஸ்கியும் ஒரு ரம்மும் கேட்டிருந்தார். அவ்வளவையும் அவர்தான் குடிப்பாரா என்று அம்மா ஆத்தாத்துப் போனாள். அவர் கிடாவெட்டுக்கே வருவதாகச் சொல்லியதால் அவரைப் பார்க்கிற ஆவல் எல்லோருக்கும்போல எனக்கும் பெருகியிருந்தது. இங்கு வந்ததிலிருந்தே இம்முறை நான் காணும் ஒவ்வொரு மனிதர்களும் எனக்கு ஆச்சர்யமும் அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். எல்லாவற்றையும்விட துலையனின் முரட்டுருவம. பெரியப்பாவின் வீட்;டில் தூங்கிய மூன்றுநாளும் இரவில் யாரோ ரோட்டைத் தேய்த்தவாறு நடந்து செல்லும் செருப்பொலி எனக்கு மட்டுமே கேட்டது.
துலையன் கோவிலிருக்கும் சயனந்தோப்புக்குள் ஜேசிபியை வரவழைத்து அங்கிருந்த முள்புதர்களை அகற்றுவதை ஊரணிக்கரை முக்கில் நின்றவாறு ஊர் ஆட்கள் தங்களுக்குள் முணுமுணுத்தவாறு பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அப்போதுதான் ஜேசிபியையே பார்ப்பது போல பட்டது. எந்திர யானைபோல வெட்டிய தழைகளை நீண்ட துதிக்கைக்கரண்டியால் அள்ளித் திணித்துக்கொண்டிருந்தது. பாதையை அடைத்தவாறு மண்டியிருந்த சீமைகருவேலங்களை சிலர் கட்டியடுக்கி வைத்திருந்தார்கள். முதல்நாள் பார்த்த காடைக்குஞ்சைத் தேடினேன். அத்தடமே அழித்தொதுக்கி வேறொரு இடம்போல மாறிவிட்டிருந்தது. துலையன் மிக அருகே இருப்பதுபோலத் தெரிந்தான். வெயில் சுள்ளென கரிய உடலில் விழ, கருத்த மனிதவுருவம் நிற்பது போல தோன்றிற்று. வெகுநேரம் அவனை பார்க்க ஒக்காமல் அவன்மீதிருந்து பார்வையை விலக்கிக்கொண்டேன். அதுவரை தொலைவிலிருந்தே கவனித்து வந்த அப்பா துலக்கமாகத் தெரிந்த அச்சிலையை ஒருகணம் உற்றுநோக்கிவிட்டுப் பின் விலகினார். ஒவ்வொருத்தரும் துலையனருகே வந்து நின்று பார்த்துச் செல்வது பெரியப்பாவிற்கு உள்ளுர களிப்பைக் கொடுத்தது. அவர் குரலில் வேகம் இன்னும் கூடிற்று. அப்பா வீட்டிற்கு செல்வதாகச் சொல்லிவிட்டு நடந்தார். நான் அப்பா போவதையேப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
9
துலையன் கோவில் பூசை நாளன்று காலையிலேயே மூர்த்தி வந்துவிட்டான். அவனிடம் நான் கேட்ட கதைகளையெல்லாம் உடனே சொல்லவேண்டும் போலிருந்தது. மணியுடன் சேர்ந்து அன்றைக்குத் தேவையானதை சந்தையில் வாங்கினோம். அத்தனைபேரும் துலையன் கோவிலில் வந்து சேர்ந்தபோது இருட்டிவிட்டிருந்தது. பங்காளிகள் பனிரெண்டு வீட்டார்களுக்குமான சாதி பூசையாக இருந்தாலும் துலையனையும், சாமிவந்து ஆடும் ஒத்தக்கை சாமியாடிiயையும் பார்ப்பதற்காகவே சித்திரைவிழா போல கூட்டம் கூடியிருந்தது. உச்சி நிலவுக்காக எல்லோரும் காத்திருந்தோம். மரங்களில் கட்டப்பட்டிருந்த டியூப்லைட் வெளிச்சத்தில் சாமியானா பந்தலுக்கடியில்; அமர்ந்தபடி ஆண்கள்ää குவியல் குவியலாகக் கிடந்த இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டுகளை உரித்துக்கொண்டிருந்தார்கள். அண்டாவில் பச்சரிசி வெந்து நுரை விட்டதும் மணியும் நானும் இறக்கி வைத்தோம். “வீட்டுலர்ந்து எதுனாலும் பொம்பள ஆளுக தொடாம எடுத்துட்ட வாங்கய்யா” என்று பெரியப்பா சமையல் நடக்குமிடத்தில் எச்சரித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு பங்காளி வீட்டிற்கும் ஒன்றென பன்னிரெண்டு கிடாய்கள் இருந்தன. மரத்தில் கட்டப்பட்டிருந்த வேப்பந்தழைகளைக் கிடாய்கள் வழித்துத் தின்று முடித்திருந்தன. சில முரட்டுக் கிடாய்கள் மட்டும் கோவித்துக்கொண்ட கிழவர்கள் போல கால்களை மடக்கி அமர்ந்தவாறு பார்வையை நேர்குத்திட்டு எங்கோ வெறித்திருந்தன. அடிக்கடி கிடாய்கள் நாவை சுழட்டி எழுப்பும் கணைப்பு, இசை வாத்திய மீட்டுவதுபோல அடித்தது.
அம்மா ராசாத்தியை அழைத்து வந்து அங்கு போடப்பட்டிருந்த கொட்டகையில் உட்கார வைத்திருந்தாள். ராசாத்தியின் கண்களில் தோன்றும் நடுக்கத்தை அவளைப் பார்க்காமலே உணரமுடிந்தது. அவள் உடல் காய்ச்சலாகச் சுடத்தொடங்கியிருக்கும். கனத்த இருளுக்குள் துழாவுவதுபோல கண்கள் அலைந்துகொண்டிருக்கும். இங்கு இருக்கும் எல்லாமுமே அவளுக்கு அந்நியம்.
ஆணும் பெண்ணுமற்ற அர்த்தநாரி ஒருத்தியை அழைத்துவந்திருந்தார்கள். அவளின் அதீத பாவனையையும், வெளித்தெரியும் சிவந்த வயிற்றையும், முலைகளையுமே அங்கிருந்த அத்தனை பேரும் வெறித்துப் பார்த்திருந்தர்ர்கள். அவளுக்குள்ளிருக்கும் சிறு பெண்மை அவர்கள் பார்ப்பதைக் கண்டு பொங்கிக்கொண்டிருந்தது. இளுவத்திக்கான சடங்கை அவளை வைத்து நடத்துவதற்காகவே அழைத்திருப்பதாக மணி என்னிடம் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. துலையன் கதையில் இளுவத்தி ஒரு அரவாணியா என அதிர்ந்தேன். அச்சந்தேகம் என்னை இம்சித்தது. அங்கிருந்த ஒவ்வொருவராக அரவாணிச் சடங்கு எதற்காகவெனக் கேட்டேன். பெரும்பாலானவர்கள் பொதுவாக அதொரு சடங்கு என என் கேள்வியை முடித்துவிட்டு நகர்ந்தார்கள். மணியிடம் கேட்டபோது அவன், “மாமுண்டி தாத்தாட்ட கேக்கலாம்” என்றான். கூட்டத்தில் அவரைத் தேடி நடந்தோம். இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவிட்டிருந்ததால் பகல் போலவே இருந்தது. கரிய இருட்டுக்குள் நடந்துவரும் ஒவ்வொருவரும் துலக்கமாகத் தெரிந்தார்கள். மாமுண்டி புளிமரத்தடியில் சுருட்டுப் புகையுடன் அமர்ந்திருந்தார். அவர் முகத்தை நோக்கியதும் அதிர்ந்து போனேன். முதன்முதலில் துலையன் கோவிலைத் தேடிவந்த அன்று ஒற்றைக்கையுடன் நின்ற சுருட்டுக்கிழவன் தான் அது. என் முகத்திலோடும் அதிர்ச்சியைச் சீண்டுவதுபோல சிரித்தார். மணி அவரிடம் என்னை இருக்கச் சொல்லிவிட்டு சென்றான். காலுக்கடியில் குடித்து மிச்சம் வைத்த பிராந்தி டம்ளர் விளிம்பில் ஊர்ந்த கட்டெறும்பைத் தட்டிவிட்டு சொல்லத்தொடங்கினார்.
துலையனின் காம தாபத்தினை முறிப்பதற்காக உணர்ச்சிகளற்ற பெண்ணான அரவாணியை அவன்முன் நிறுத்தி பூசை செய்வது ஒரு வழிமுறையென்றும்; இன்னொன்று, சிவனும் சக்தியும் ஒன்றிணைந்த வடிவான அர்த்தநாரியின் முன் எந்தவொரு வீரனின் குணங்களும் அடங்கிபோய்விடுவதால் துலையன் நெஞ்சில் எஞ்சியிருக்கும் காமகுரோதங்களை மட்டுப்படுத்துவற்கான வழியாகவும் அப்பூசை நடக்கிறதென்று சொன்னார். மெல்ல அவரிடம் விளக்கமாக் கேட்க நெருங்கித் தயங்கி அமர்ந்தேன். சட்டென வெண்மீசை நீண்டதுபோலொரு சிரிப்பில் என் தயக்கத்தை இலகுவாக்கினார். நானும் சிரித்துவிட்டு அமர்ந்துகொண்டேன். இளுவத்தி கதையை நான் அறிந்தவரை சொல்ல முற்பட்டதும் அச்சுருங்கிய கண்கள் மெல்லத் தெளிந்தன. என் கற்பனையில் யூகித்த அவளுருவத்தைக் கேட்டு பிரமித்தார். அவர் எதுவும் பேசாமல் என்னைப் பேச வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் சுருட்டு புகைப்பதாகவே தெரியவில்லை. அணில் குஞ்சைப் பிடித்து கொஞ்சுவது போல உதடுகளில் ஒத்தியெடுத்தார். சுருட்டின் மணம் சுவாசத்திலிறங்கி அடிவயிற்றில் கசப்பதை உணர்ந்தேன்.
இக்கதைக்கும் இன்று நடக்கும் சடங்கிற்கும்ää இதற்காக வந்தமர்ந்திருக்கும் ராசாத்திஅக்காவை இதனுடன் இணைப்பது எதுவெனப் புரியவில்லையென்றேன். அப்போது அவர் கூறியது என்னை அப்படியே பிரமை பிடிக்கச் செய்தது. கிடாய்களை வெட்டுவதென்பது துலையனின் ஆன்மாவை விழித்தெழச் செய்யும் சமிக்ஞைதான் என்றும், எழுந்துவரும் அவனின் ஆன்மா காமஆங்காரத்துடன் இருக்கும்போது அவன்முன் நிற்கும் அர்த்தநாரியைக் கண்டு பீறிட்டு கத்தத் தொடங்கும் அக்கணம் அந்த அர்த்தநாரிக்கே தெரியாமல் அவளின் ஆழ்மனம் அவனுடன் மோத முற்படுவதே இங்கு நடக்கப்போகிறதென்றார். அம்மோதல்கள் மனித பிரக்ஞைக்கு புலனாகாத வெளியில் நடந்துகொண்டிருக்கும். நான் பீதியுற்று அமர்ந்திருந்தேன். என் மௌனத்தைப் பார்த்தவர், “அந்த உலகத்தில்தான்; உன் அக்கா உலாத்திக்கொண்டிருக்கிறாள்” என்றார். அர்த்தநாரியின் ஆண்மனம் அவளையும் பெண்மனம் துலையனையும் மட்டுப்படுத்தி நிச்சலத்திற்குக் கொண்டுவரும். அதொரு கணித விளையாட்டு என்றார். நான் குழப்புணர்வில் பீடிக்கப்பட்டிருந்தேன். அப்பால் தெரியும் கோவில் மைதானத்தைப் பார்த்தேன். கதைகளை; ஒன்றையுமறியாது பருவமெய்திய சிறுமி போல அச்சடங்குகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் அரவாணியின் முகம் எனக்கு இளுவத்தியை நினைவூட்டியது. சுருட்டுக் கிழவன் என் தோள்பட்டையில் தன் மொன்னைக்கையால் மோதி என்னைத் திசைமீட்டி கிளம்பு எனத் தலையசைத்தார். மாட்டு கொம்பு முட்டியது போல் வலியெடுத்தது.
சரியாக ஒரு மணிக்கு நிலவு துலையனுக்கு நேர்குத்தாக வந்ததும் சாமியாடி குரலை உயர்த்தினார். முதல் கிடாயை அரவாணி பூசையிட்டுக் கொடுத்தாள். அவளிருந்த இடத்திற்கு ராசாத்தியை கொண்டுவந்து அமர்த்தினார்கள். அவளைச் சுற்றி பட்டுப்புடவை சாத்தப்பட்;டிருந்தது. அக்கா அதனுள்ளிருந்துதான் கோவிலைப் பார்க்க வேண்டும். அருகே அவளை வரவிடாது பிடித்திருந்தார்கள். கிடாய் தலையில் நான்குமுறை தண்ணீரைத் தெளித்தபோதும் தலையைச் சிலுப்பாமல் பூசாரியை வெறித்;து நின்றுகொண்டிருந்தது. அதன் கண அசைவுக்காகக் காத்திருந்தோம். சட்டென உடல் முறிவதுபோல சடசடவென சிலிப்பி உதறியதும் ‘அக்’ கென அரிவாள் கழுத்தில் விழுந்து தலை உருண்டது. சாமிவந்து ஆடிய ஒத்தக்கை சாமியாடியை நோக்கி முண்டமான ஆட்டைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அவர் இரத்தத்தைக் குடிப்பதைக் காண எக்கினேன். வேட்டியால் அதைத் தடுத்தபோதும் சாமியாடியின் பற்களில் சிக்குண்ட சதையைக் கண்டேன். அக்கணம் ஒத்தக்கை சாமியாடியின் கண்கள் மிரண்டு வெளித்தள்ளுவதுபோல துருத்தியிருந்தன. ஒவ்வொரு கிடாய்களாக வெட்டுண்டு விழுந்ததும் அவர் ஆடியபடி கத்திக்கொண்டு, ஆட்டின் முண்டவுடலை நோக்கி ஓடிவருவதும் அவரின தாகம் அடங்காமலே அதைப் பிரித்துச் செல்வதுமாக இருந்தார்கள். அப்போது ‘வீய்’ என்று கத்தல் ஒலி நெஞ்சை அறைந்தது. ராசாத்தி அக்கா சேலை சரிய எழுந்து கத்தினாள். அவள் உடல் விதிர்த்தெழுந்தது. புடவையை போர்த்தி அவளை ஆசுவாசப்படுத்த முயன்றும், கத்துவது அவ்விடமெங்கும் யட்சி குரல் போல கேவியது. அம்மா இறுக்கிப் பிடித்திருந்தாள். அக்கா உடல் சரிந்து கீழே விழுந்ததும் அவளைத் தூக்கிப் போகச் சொல்லி சாமியாடி சைகை செய்தார்.
கிடாய்கள் தோலுரித்து கொத்துச் சதைகளாகக் கிழித்தொதுக்கினார்கள். துடித்துக்கொண்டிருக்கும் உயிர் அடங்குவதற்குமுன் அச்சதைகள் அவித்தெடுக்கப்பட்டன. ஒத்தக்கை சாமியாடிதான் முதலில் சாப்பிட்டார். மணி எனக்கும் மூர்த்திக்கும் தனித்தனியே தட்டில் கறியையும் பிராந்தியும் கொண்டுவந்தான். அதைக் கண்டதும் மூர்த்திக்கு எழுந்த தயக்கத்தைக் கவனித்தேன். “நீ சாப்புடு” என்றேன். முதல் மிடறு பருகுவதில் தான் அத்தயக்கம் கூடியிருந்தது. அதன் பிறகு மூன்று பேரும் கறியைத் தின்றபடி பிராந்தியை காலிசெய்துகொண்டிருந்தோம். பெரியப்பா அப்பாலிலிருந்து எங்களைப் பார்ப்பதாக பிரமை பிடித்திருந்தது எனக்கு. அடிக்கடி சுற்றுமுற்றிப் பார்த்தவாறிருந்தேன். சட்டென சுருட்டின் மணம் குமைவதை உணர்ந்தேன். மாமுண்டி கிழவன் ஞாபகம் வந்தது. கண்கள் இறுக்கித் தேடினேன். டியூப் லைட்டடியில் குழுவாக ஆட்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் தென்படவில்லை.
காலையில் வெகுநேரம் அக்கா தூங்கிக்கொண்டிருந்தாள். அடுத்தடுத்த இரண்டு நாட்கள் அவள் தூக்கத்திலேயே கிடந்தாள். கண் விழிக்கும் போது மெல்ல முனகுவதும் பின் தூங்கிப்போவதுமாக இருந்தாள். குற்றவுணர்ச்சியில் அப்பாவின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்தேன். நானும் மூர்த்தியும் மணியுடன் பைக்கில் சுற்றியலைந்தோம். துலையன் கோவிலிருந்த மைதானத்தைப் பார்த்தேன். உச்சி வெயிலில் பருந்துகள் அகாலத்தில் கூவியபடி அலைந்தன.
10
காலையில் பெரும் அலறல் கேட்டு திடுக்கிட்டு விழித்த போது, அண்ணனும் பெரியப்பாவும் அரை நிர்வாணமான உடலை கொல்லைக் கிணற்றிலிருந்து தூக்கி வெளியே வைத்தார்கள். அது அக்காவின் உடல். ஊர் சனமெல்லாம் வீட்டில் கூடிவிட்டிருந்தது. நான் பதறியெழுந்து ஓடினேன். அம்மா பைத்தியம் பிடித்தது போல அரற்றினாள். “அய்யோ சாமியீ…. எம்புள்ள…… தொலையா” அம்மா எழுந்து மண்ணை வாரி மார்பில் போட்டுக் கொண்டாள். “கொணமாக்கிருவேனியே… இப்பிடி கூட்டிபோயிட்டியே..யே சாமீ” மார்பு எலும்பு உடைந்து போகும்படி அடித்துக்கொண்டழுதாள். அன்றைக்கு இரவுதான் அக்கா எழுந்து பேசியிருக்கிறாள். எப்போது கிணற்றுக்குள் விழுந்தாளென யாரும் பார்க்கவில்லை.
அக்காவுடலை தென்னங்கீற்றில் படுக்கவைத்திருந்தார்கள் அப்போதும் அந்த முகம் என் அக்காவே இல்லை வேறுயாரோ என்று தான் நினைக்கத் தோன்றியது. அவள் இப்படியில்லை அவள் கண் வேறுதிசையில் உருண்டிருக்கும்ää உதடுகள்; மடித்து ஓரத்தில் கோணலாக எப்போதும் கம்பி போல எச்சில் வழிந்து கொண்டிருக்கும்;. சிரிப்பும் அழுகையும் எப்போது வருமென்று சொல்ல முடியாத முகம். இது அவளில்லை. என்னால் அழ முடியவில்லை. உயிரற்றுகிடந்த அந்தப் புதிய முகத்தை பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பா உடல் நடுங்கிச் சரிந்தார். வாயில் எச்சில் வழிய அவர் அழுவதை அன்றுதான் பார்த்தேன். அவரின் முகத்தைப் பார்க்கப் பார்க்க என் வயிற்றை பிசைந்து அழுகை பீறிட்டது. அப்பாவுக்கு இப்படியெல்லாம் நடக்குமென முன்னே தெரிந்திருக்க வேண்டும் அதனாலே அவர் மனம் எதிலும் ஒப்பாமலிருந்தது. அக்காவின் ஈர நைட்டியை அவிழ்த்து புதிய உடை அணிவித்தார்கள். பெரியப்பா ஈமச்சடங்கைச் செய்ய ஆட்களை ஏவிக்கொண்டிருந்தார். பிரம்மை பிடித்ததுபோல அமர்ந்து அத்தனையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பெண்கள் முற்றத்துக்குள் நுழையும்போதெல்லாம் அழுகை பீறிட்டெழுந்தது. மூர்த்தி அப்பா கைகளைப் பிடித்து வெளியே அழைத்துப்போனான். அம்மாவைச் சுற்றி தலைவிரித்து அழும் பெண்கள் கூடினார்கள். அக்காவின் புதிய முகம் மீண்டும் மீண்டும் என் மனதில் எழுந்துவந்தது. அவளைக் குளிக்க வைத்து கட்டிலில் கிடத்தினார்கள். மஞ்சள்பூசி, நெற்றியில் பெரிய பொட்டு இட்டுää ஜிமிக்கி தோடும் சரிந்துகிடக்க வேறொருத்தியாகத் தெரிந்தாள்.
மணி என் தோளைத் தொட்டான். நான் அவன் முகத்தை நோக்காமல் விம்மினேன். புங்கை மரத்தடிக்கு அழைத்துச் சென்றான். ப்ளாஸ்;டிக் நாற்காலிகளை வண்டியிலிருந்து இறக்கிக்கொண்டிருந்தார்கள். மரத்து நிழலில்; பிச்சையப்பன் அண்ணன் மூங்கிலை சீவிக்கொண்டிருந்தார். நான் ஒரு பிணம் போல அங்கு நின்றேன்.
திடீரென வீட்டிற்குள்ளிருந்த பெரும் ஊளைச் சத்தம் கேட்டது. அப்பா இடுப்பை பிடித்திழுத்தவாறு வெளியே தள்ளிக் கொண்டுவந்தார்கள். பெரியப்பாவை அப்பா தாக்கியிருக்கிறார். என்னுள் ஆங்காரம் வெளிப்பட்டு உந்தி தள்ளியதும் கட்டுப்படுத்திக்கொண்டேன். அப்பா மறுபடியும் அழுதபடி அவரை அடிக்க ஓடினார்.
சடங்கு முறை செய்ய என்னை மூர்த்தி அழைத்தான். யாரோ என் முதுகைத் தட்டி கொண்டு சென்றார்கள். அம்மா நிலைப்படியில் சாய்ந்தவாறு கிடந்தாள். அவள் முகம் உயிர் இல்லாமல் சவம் போலிருந்தது. தூரத்தில் பார்த்துவிட்டு பெரியம்மா அவள் தோளை உலுக்கி என்னைக் காட்டியதும் அம்மா நிமிர்ந்தாள். என்னை பார்த்த கணத்தில்; உயிர் வந்தது போல “தம்பீ” என்று நெஞ்சை அடித்துக் கொண்டாள். நான் ஓடி அம்மா மடியில் புதைந்து அழுதேன். எத்தனையோ வருடங்களுக்கு பின் அவள் மடியில் அன்று தான் படுத்தேன்.
நான்கு நாட்கள் வீட்டை சூனியம் பீடித்திருந்தது. படுத்தெழுந்தால் தலை கனத்துச் சரிவது போலிருக்கும். அம்மா எந்நேரமும் தேம்பியபடியே இருந்தாள். அவள் குரல் கெட்டித்து போயிருந்தது. அப்பாவை இங்கிருந்து ஊருக்குக் கூட்டிப்போய்விட பெரியம்மா மூர்த்தியிடம் சொன்னாள். எனக்கு அங்கிருந்த ஒவ்வொரு அறையும் கிணற்றடியும் அச்சத்தை ஏற்படுத்தின. மெல்ல வெளியே வந்தேன். மூட்டமான சிந்தனையில் நடக்கத் தொடங்கி ஊரணிக் கரை வரை வந்துவிட்டிருந்தேன். பாலத்து சிமென்டு கட்டையில் அமர்ந்திருந்தவர்கள் என்னைக் காட்டி ஏதோ பேசுவது போலிருந்தது. அங்கிருந்து பார்த்தால் துலையன் கோவில் தெரியும்.
புளிய மரத்தடியில் நின்றவாறு துலையன் கோவிலைப் பார்த்தேன். கருவேல மரங்களும் பனைகளும் மண்டியிருந்த நிலம் மழித்தெடுக்கப்பட்டு, மைதானம் பாவிய செம்மண்ணில் வெயில் சுள்ளெனத் தெறித்து மினுமினுத்தது. குங்குமத்தை அள்ளிப் பரப்பியதுபோன்ற பொட்டல் வெளி. கிட்டத்தட்ட பத்து ஏக்கருக்கு நிகரான நிலம். ஊரின் மற்ற இடங்கள் செம்பாறையாகத்தான் கிடந்தன. ஆனால் இது மட்டும் உழுதுபோட்டது போல பொல பொலவென்றிருந்தது. ஓரத்தில் கரிய மேனியுடன் துலையன் ஒற்றைக்கையைத் தூக்கியவாறு வெறித்திருந்தான். அவனுக்கப்பால் பழைய புதர்கள் இன்னும் அப்படியே இருந்தன. உண்மையில் அவ்விடம் இப்படிப் பெரியதானதாவென வந்த முதல்நாள் எனக்குத் தோன்றவில்லை. ஊரின் எத்திசையிலிருந்து நோக்கினாலும் அந்நிலம் தெரிவதுபோல தோன்றிற்று. சட்டென ஓர் எண்ணம் மனதில் தோன்றி வெறியேறியது. இந்நிலத்திற்காகத்தான் இத்தனை பூசை பிரயத்தனங்களை பெரியப்பா நடத்தினாரா? ஒருகணம் உடல் உலுக்குவதுபோல எழுந்தது. இனி இந்த நிலத்தைப் பார்க்கக்கூடாதெனத் திரும்பிக்கொண்டேன்.
என் தோளின்மீது மெல்லியத் தொடுகையை உணர்ந்து திடுக்கிட்டு திரும்பினேன். வெட்டியான் தள்ளாடியபடி நின்றிருந்தார். பீளை பொங்கிய கண்களுடன் என்னை நோக்கினார். முகத்தில் பிராந்தியின் வெப்பம். அமிலத்தைக் குடித்ததுபோலொரு நெடி அவர் சுவாசத்தில் எரிந்தது. அக்காவின் கடைசி சதை எறிவதுவரை அருகிலிருந்து பார்த்தவர். எதற்காக என்னை நோக்கி நிற்கிறாரெனப் புரியவில்லை. அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம், வேட்டி துண்டு அன்றைக்கே கொடுத்தாகிவிட்டது. தள்ளாட்டத்துடன் மறுபடியும் தோளைத் தொட்டு “அது சின்ன புள்ள..” என்றார். நான் ஆமாம் என்பதுபோல தலையாட்டினேன். தலையைத் திருப்பி துலையன் கோவிலைப் பார்த்து கும்பிட்டுக்கொண்டார். அச்செய்கை என்னை பயத்திழாத்தியது. அங்கிருந்து நகர்ந்துவிட முயன்றும் என் உடல் அவ்விடத்திலிருந்து நகராமலிருப்பதை உணர்ந்தேன். “பொணத்த எரிச்ச ரவைக்கு என்னால தூங்க முடியல சாமீ…கர்ப்பமான புள்ளய எரிச்சமாரி கனவு…நெஞ்சு தூக்கித் தூக்கிப் போடுது..” எனக்கு பீதியேற்பட்டது. நான் உடனே போய்விடவேண்டுமெனத் துடித்தேன்.
“ஏதாச்சும் சங்கதி உண்டா” என என்னுடைய பதிலை எதிர்பார்த்தார். நான் இல்லை என்றேன். கையைக்கூப்பி இறைஞ்சி பணம் கேட்டார். பாக்கெட்டிலிருந்த இருபது ரூபாய்த் தாளைக் கொடுத்ததும் முணுமுணுத்தவாறே நடந்தார்.
ஆயிரம் வருடத்தியக் கதைக்குள் சொல்லப்படாத ஒன்றாக ராசாத்திஅக்காவும் இணைந்துவிட்டதுபோலொரு எண்ணம் தோன்றிற்று. இனி இக்கதை அவள் வரைக்கும் நீளும். துலையன் கதை, நூற்றாண்டுகளைத் தாண்டி, இப்படி ஒவ்வொன்றையும் தொட்டு, தன் காலத்தை நீட்டித்துக்கொள்ளும். ராசாத்திஅக்காவின் இருண்ட அறையாக பிரக்ஞை முழுதும் வியாபித்துக்கிடக்கும் இக்கதைகள் நிறைந்த அறையைச் சாத்தி பூட்டிவிட்டாலொழிய இதிலிருந்து விடுபடமுடியும் என்று எண்ணினேன்.
எதிரே மணி பைக்கில் வந்துகொண்டிருந்தான். வெகுநேரம் என்னை தேடிச்சலித்த அயர்ச்சி அவன் முகத்தில். ஏதும் போசாமல் வண்டியில் ஏறினேன். அங்கிருந்து பஸ் ஸ்டாண்டு பாதைக்கு திருப்பி ஆக்ஸிலேட்டரை திருகினான். அவன் தோளை இறுகப்பற்றினேன் என் பிடி அவிழ்வது போலிருந்தது. இன்னொரு கையை சிரமத்துடன் தூக்கி தோளில் போட்டுக்கொண்டேன். திரும்பி பார்த்துவிடக் கூடாதென மனதுக்குள் சொல்லியபடியே இருந்தேன். என் முதுகினை ஒற்றைப் பார்வை துரத்திக்கொண்டே வந்தது…