ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..
ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..
ஜியாங் ரோங்கின் ஓநாய் குலச்சின்னம் வாசிப்பதற்கு புதிய தரிசனத்தை திறந்துவிடக்கூடிய நாவல். தமிழில் சி. மோகன் மொழிபெயர்ப்பில் அதிர்வு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சீனாவில் மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் சிதைவை ஆழ் மனதில் காட்டி அழிக்கின்றது. ஜியாங் ரோங்கின் முதல் நாவல். தன்னுடைய அறுபதாவது வயதில் இந்நாவலை படைத்துள்ளார். ஆனால் அதற்கு முன் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக செலவிட்டுள்ளார். சீனாவில் உள் மங்கோலியாவின் கிழக்கு உஜ்ம்கியுன் பேனரில் வாந்த நாடோடி மக்களோடு வாழ்ந்து, அறிந்து கொண்ட உலகத்தை காட்டுகிறார். ஒரு வகையில் இது semi Autobigrophical நாவல்.
ஜென் சென் என்ற மாணவன் தனது சக மாணவர்களுடன் ஓலோன்புலோக் என்ற மேய்ச்சல் நில பகுதிக்குள் நுழையும் ஊடே நாவல் விரிகிறது. ஜியாங் ரோங் ஜென் சென்னாக கதாபாத்திரம் வழியாக தெரிகிறார். ஜென் சென்னோடு, யாங் கி மற்ற இரு நண்பர்களும் மங்கோலிய மக்களின் வாழ்வையும் ஓநாய்களையும் அறிய வருகிறார்கள். பசுமையான புல்வெளிகளில் தங்களின் ஆடு, குதிரைகளோடு வாழும் மக்களை விரும்புகிற ஜென்சென் அவர்களோடு ஒருவராக இணைந்துவிடுகிறான். டேஞ்ஞர் என்ற கண்ணுக்கு புலனாகாத கடவுளும், ஓநாய் அவர்களின் குலத்தின் சின்னமாகவும் உள்ளது. அவர்களுக்கு நிலத்தில் புற்களும், ஆடுகளும், குதிரைகளும், மனிதர்களும், ஓநாய்களும் சரிசமமென்பதை டேஞ்ஞர் தங்களுக்கு உணர்த்திருப்பதாக நம்புகிறார்கள். அங்குள்ள தொன்மையான பண்பாட்டையும் மரபையும் பாதுகாத்துவரும் பில்ஜி என்ற முதியவரிடம் ஜென்சென் நட்பு கொள்கிறான். அங்கு இறந்தவர்களை புதைப்பதில்லை ஓநாய்களின் குகை வழியே விட்டு விடுகிறார்கள். அவைகள் திண்பதன் மூலம் இறந்த உடலின் ஆன்மா டேஞ்ஞருக்கு கொண்டு செல்வதாக நம்புகிறார்கள்.
“புல் பெரிய உயிர். எனினும் அது மிக எளிதாக சிதையக்கூடியது. அதனுடைய வேர்கள் ஆழமற்றவை. அதை யார் வேண்டுமானாலும் உண்ணலாம், கொல்லலாம்;. அது இன்னும் குறைந்த நாட்களே வாழும் உயிர். அது மட்டுமே மேய்ச்சல் நிலத்தின் முதன்மையான உயிரி. மனிதன் அதனைவிட அற்பமானவன் தான்.” மேய்ந்து கொண்டிருக்கும் மான்களை குரூரமாக வேட்டையாடும் ஓநாய்களை கண்டு மனம் வருந்தும் ஜென் சென்னிடம் முதியவர் கூறும் வார்த்தைகள் மனதில் பளிச்சிடுகின்றன. உயிர் சுழற்சியின் வட்டத்தை அழிக்கின்ற போது ஏற்படும் பேரழிவை அவர் விளக்குகிறார். ஓநாய்களின் இருப்பின் மூலமே மற்றவர்களின் வாழ்வுக்கான அடையாளம் கண்டெடுக்கப்படுகிறது.
குதிரைகளை வேட்டையாடும் போது ஓநாய் தலைவனின் திட்டத்தின் படி மற்ற ஓநாய்கள் செயல்பட்டு வேட்டையை வெற்றியோடு முடிப்பதை பார்த்து ஜென் சென் சிலிர்த்து விடுகிறான். மங்கோலியர்களின் வாழ்விலிருந்தும், ஓநாய்களின் தந்திரத்திலிருந்தும் கற்பிதம் பெற்ற தந்திர முறைகளை வரலாற்றில் மறைக்கப்பட்டதை உணர்கிறான். ஜென்னும் அவன் நண்பர்களும் சேர்ந்து ஓநாய் குகையிலிருந்து ஒரு குட்டியை எடுத்து வந்து யாருக்கும் தெரியாமல் வளர்க்கிறார்கள். வேட்டை நாய்களுடன் வளர்க்கபட்டாலும் கொஞ்சம் கொஞ்மாக அது தாய்மையின் குனத்தை காட்டுகிறது. ஒரு கட்டத்தில் அவர்களையே தாக்க முற்படுகிறது.
ஓநாய்கள் ஒரு பருவக்காலத்தில் மேய்ச்சல் குறையும் போது மனிதர்களை தாக்ககூடுமென்றும், மீதமிருக்கின்ற குதிரைகளை வேட்டையாடிவிடுமென்றும் அவற்றில் சில ஓநாய்களை மட்டும் அழித்தொதுக்கம் செய்யவது டேஞ்ஞரின் ஆனை என்று ஓநாய்கள் சிலவற்றை பிடிக்க பொறி வைக்கிறார்கள். பொறியில் கால்களை மாட்டிக்கொள்ளும் ஓநாய்கள் தங்களது சிக்குண்ட ஒரு காலை கடித்து கத்தறித்துவிட்டு தப்பி விடுகின்றன. ஓநாய்களின் போராட்ட குணத்தை பார்த்து ஜென் சென் ஆர்ச்சர்யமடைகிறான்.
ஜென் சென் வளர்க்கும் ஓநாயின் வளர்ச்சியும் ஓலோன்புலோக்கின் அழிவும் ஒரு சேர நிகழ்கிறது. கலாச்சார புரட்சியின் நடவடிக்கையாக சீனாவின் இராணுவம் மேச்சல் நிலத்துக்குள் நுழைகிறது. மேய்ச்சல் நிலத்தினை காப்பதென்று ஓநாய்களை வேட்டையாடி கொன்று குவிக்கிறார்கள். பெட்ரோலும், குண்டுகளும், துப்பாக்கி சத்தங்களும் பிரதேசமெங்கும் பரவுகிறது. நாடோடி சமூகம் அழயத் துவங்குகிறது.
இந்நாவலின் மையம் எனக்குள் நமது பழைமையான மேய்ச்சல் மக்களையும், விளை நிலங்களையும் மீட்டெடுத்தது. இன்று அத்தகைய நிலங்களும் வாழ்க்கையும் நாகரிக வெறியாட்டத்தில் காணாமல் போயிருக்கிறது. என்னுடை பால்ய வயதில் மேட்டுப்பட்டியில் எருமைகளை மேய்த்தபடி என் வயதொத்த பையன்கள் திரிவதை பார்த்திருக்கிறேன். என்றாவது காய்ச்சல் வந்து வீட்டில் இருக்கின்ற போது அம்மாவுக்கு தெரியாமல் அவர்களுடன் சுற்றி திரிந்திருக்கிறேன். இப்போது அப்படியான மனிதர்களையும் மேய்ச்சல் சமூகத்தையும் காணமுடியவில்லை. நிலங்களை அழித்தொதுக்கியதும் அனைத்தும் மாறிவிட்டிருக்கிறது. இனி அப்படியான காலங்கள் வாழ்க்கையில் என்றுமே திரும்பப் போவதில்லை.
எதை நாம் தீமை என நினைக்கிறோமோ அதன் பக்கத்திலிருக்கின்ற போது தான் நம்முடைய ஒழுக்கமும், இருப்பும் வளர்ந்து வரும். நாகரிகத்திற்காக அவை அழிக்கப்படும் போது நமது ஒழுங்கும் கட்டவிழ்ந்து போவதென்பது உறுதி. எங்கெ உயிர் சுழற்சி நின்று போய் கலாச்சாரம் செழிக்கிறதோ அந்த தேசம் தொன்மையை இழந்துவிட்டிருக்கிறது.
நாவலின் இறுதியில் ஓலோன் புலோக்கிற்கு வரும் ஜென் சென், அது பாலைவனமாக மாறியிருப்பதை பார்க்கின்றான். அன்று இராணுவம் புகுந்த போது ஓநாய்களெல்லாம் முயல்கள் போல அஞ்சி நடு;ங்கி செத்து குவிந்ததை நினைக்கிறான். மங்கோலிய மேய்ச்சல் நிலம் கோரமாக உருமாறியுள்ளது. கடைசி பக்கங்களை படிக்கின்ற போது என் இதயம் படபடப்புடன் துடித்ததை உணர்ந்தேன். கைகள் நடுங்க நான் ஒவ்வொரு வரியாக கடந்து போனேன். மண்ணில் புதையுன்டிருக்கும் சுதை சிற்பமாக இந்நாவல் நமக்கு கிடைத்துள்ளது. சி.மோகன் அவர்கள் மொழியாக்கம் நாவலினூடே எளிதாக கொண்டு செல்கிறது. ஓநாய் குலச்சின்னம் தமிழுக்கு தந்திருக்கும் அழியா சிற்பம்.
1 Comment
முற்றிலும் உண்மையான வார்த்தைகள். நாகரிகத்தின் பேரால் மனிதன் இயற்கையை அழிக்கிறான். இயற்கையின் அழிவில் மனிதனின் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் அழிகிறது என்பதை உணர்வதற்குள் எல்லாம் கை மீறி போய்விடுகிறது. இந்த நாவல் படிக்கவும் மிகவும் சுவராசியமாக இருக்கிறது.