தி.ஜாவின் அம்மணி vs நீட்ஷேயின் ஃப்ரீ ஸ்பிரிட்
மரப்பசு – நூல் விமர்சனம்
சமூகம் என்பது சுயத்தாலும் தன்னிலையாலும்( இங்கு எழுவாய் என்பதை தன்னிலை என்று பயன்படுத்திக் கொள்கிறேன்) பிணைக்கப்பட்டிருக்கிறது. சுயம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது எனில் தன்னிலை சுயத்தின்மீது வினையாற்றக்கூடியதாக இருக்கிறது. சுயத்திலிருந்து தன்னிலையும் தன்னிலையிலிருந்து சுயமும் விடுபடுவது சாத்தியமற்றது. சுயம்தான் தன்னிலையை முடிவு செய்கிறது. தன்னிலை சுயத்திலிருந்து விடுபடல் என்பது ஒரு பாவனையே ஒழிய முழுமையான விடுபடல் இல்லை. அது சுயத்தையும் தன்னுடன் துாக்கிக்கொண்டே பறக்கிறது. இதை இன்னும் சற்று ஆழமாக ஸ்டெயின்வொர்த் போன்றவர்கள் “நமக்கு நடப்பதை அமைப்பாக்கம் செய்வது எழுவாயைத்தானே ஒழிய சுயம் அல்ல. நாம் குறிப்பிட்ட அனுபவத்தால் துயரப்படுகிறோம் என்றால், அது எழுவாயின் பகுதியாகிறதே தவிர சுயத்தில் பகுதியாவதில்லை” என வரையறுக்கிறார்கள். தனி மனிதர் என்ற வகைமை சுயம் மற்றும் தன்னிலையின் கூட்டுத்தொகை எனலாம். உதாரனத்திற்கு இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன், “சுயம் சூட்சமமான ஒரு கூண்டு என்றால் தன்னிலை அதன் எல்லைப் பற்றிய பிரக்ஞையுடன் பறந்துத் திரியும் சுதந்திரப் பறவை. சுதந்திரமான தன்னிலை என்பது அதவாது சூட்சமமான கூண்டைவிட்டு வெளியேறும் தன்மை, அந்த சுயத்தை(கூண்டை) தன்னுடன் எடுத்துக்கொண்டே பறக்கிறது என்பதாக அர்த்தம் கொள்ள முடிகிறது.“ அனுபங்களாலே இந்த உலகின் கருத்துருவங்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன என்பதால் இந்த முதல் வகையே நம்முடைய எல்லா அனுபவங்களையும் கொண்டிருக்கிறது.
இதில் இரண்டாம் வகை உள்ளது. அதுதான், நீட்ஷேயின் லட்சிய மனிதனான ஃப்ரி ஸ்பிரிட். அதாவது சுதந்திர ஆன்மா (ஃப்ரீ ஸ்பிரிட் ஐ – இப்போதைக்கு வேறு வார்த்தைகள் தெரியாததால், அக்கதாப்பாத்திரத்தின் பண்புக்கு நெருக்கமாக இருக்கும் என்பதால் இக்கட்டுரையில் இந்த சொல்லையே பயன்படுத்துகிறேன்) சுயத்திலிருந்து விடுதலை அடைவதைச் சொல்லும் லட்சிய வடிவம். இந்த இடத்தில் இந்திய தத்துவச் சிந்தனைகளில் வரையறுக்கப்படும் “சுயத்திலிருந்து விடுதலை பெறுதலைப்” பற்றியும் நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய தத்துவங்கள், விடுதலையை சுயத்துக்கு எதிரானதாக மாற்றுவதில்லை மாறாக சுயத்தையே அழிப்பதைப் பற்றி சொல்கின்றன. யோக நிலை, முக்தி நிலை போன்றவை சுயம் என்கிற ஒன்றி்ன் இருப்பை முற்றிலுமாக அழிப்பதில்தான் தன்னிலையின் விடுதலையை போதிக்கின்றன. பிறகு தன்னிலையையும் அழிக்கப்பட்டுவிடுகிறது. இவை ஒரு தொடர் சங்கிலி. காரணம் சுயம் மனிதனின் கருத்துவங்களால் உருவானது. சரி, இங்கு மரப்பசுவில் நீ்ட்ஷேயின் சுதந்திர ஆன்மா என்கிற பதத்தை அதன் லட்சியத்தின் உன்னத வடிவம் செயல்படுகிற விதத்தை அல்லது செயல்பட முடியும் என்பதற்கான சாத்தியங்களை தி.ஜா எவ்விதம் கையாண்டிருக்கிறார் என்பதை விலங்கிக் கொள்ளவே இக்கட்டுரை முயல்கிறது.
தி.ஜாவின் பெண் கதாப்பாத்திரங்களை வரிசை படுத்தினால் அதில் அம்மணியை வரிசையிலிருந்து தனியாகத்தான் எடுத்து வைக்க வேண்டும். அதன் பாத்திர படைப்பு முற்றிலும் வேறான ஒன்றாகவும் அவரின் வேறெந்த புனைவுகளின் சாயல்களையும் நினைவூட்டாதவென்றாக இருக்கும். மேலோட்டமான வாசிப்புக்கு அது ஒரு புரட்சிப் பெண் போலவும் சுதந்திர விரும்பியைப் போலவும் வாசகனை ஏமாற்றிவிடக்கூடியது. ஒரு சவாலுக்காக அக்கதாப்பாத்திரம் எவ்வாறு உருவாகியிருக்கிறதென்று அதனுடைய குணவியல்புகளை தனித்தனியாக எடுத்தால் கதாபாத்திரத்தின் ஒவ்வொரு பண்பும் புனைவின் இதர பாத்திரங்களுடன் சரியான கோணத்தில் பிணைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.
அதாவது, அம்மணி கதாப்பாத்திரத்தை மூன்று வழிகளில் அணுக சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, பிரதானப் பாத்திரங்களுடன் அவள் நடத்தும் உரையாடல்கள் மூலம். இரண்டு, எந்த இடத்தில், எந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் சிரிக்கிறாள் என்பதை வைத்து. மூன்று, எல்லோரையும் தொடும் அவளின் எண்ணத்தின் வாயிலாக. இந்த மூன்றும் கதை முழுக்க ஒரே நேர்கோட்டில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதாவது புனைவின் தர்க்க விதிகளை மீறாமல் அவை உருவாகியிருக்கின்றன. கதையை தன்னிலையில் அம்மணி கதாபாத்திரமே விவரிப்பதும்கூட விதியைக் காப்பாற்றும் உத்தியே. இன்னொரு வாசிப்பில் தன்னிலையில் கூறுவதற்கு சுயம்- தன்னிலை மீதான ஊடாட்டத்தை லாவகமாக வெளிப்படுத்தும் காரணியாகக்கூட அவ்வசதியை தி.ஜா பயன்படுத்திருக்கலாம்.
‘Beyond good and evil. Avoid this dangerous moral formula since it would only make us ‘brave lawyers of modern ideas’. ‘Cannot remain attatched to any person even the most beloved’- Nietzhe
தி.ஜாவின் அம்மணி கதாப்பாத்திரத்தை நீட்ஷேயின் சுதந்திர ஆன்மாவுடன் மிகச் சரியாகப் பொருத்த முடியும். அதாவது நீட்ஷே சிந்தனையின் புனைவு வடிவம் அம்மணி. இது நீட்ஷேயின் தாக்கத்தால் உருவாகியிருக்குமா என்றால் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆக, சுதந்திர ஆன்மா என்கிற பதம் நீட்ஷேயின் வழியே ஏற்கெனவே கோட்பாட்டாக்கம் செய்யப்பட்டதால் அம்மணியை நீட்ஷேயின் கோட்பாடு மூலமாகவே நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தி.ஜா அக்கோட்பாட்டு சிந்தனையை பரிசீலிப்பதன் வழியாக சுயம்-தன்னிலையின் மெய்யான சிக்கல்களுக்குள் நுழைகிறார்.
முதலில் அம்மணி எப்போது தன்னுடைய சுதந்திர ஆன்மாவை கண்டடைகிறாள் என்று பார்க்கலாம். சுதந்திர ஆன்மாவுக்கு நேரெதிரான ஒரு கதாப்பாத்திரத்திலிருந்துதான் அதன் விடுபடல் துவங்குகிறது. பறத்தலை உந்தித் தள்ளும் விசை போல. அவள் தன்னுடைய பால்ய வயதிலிருந்து கண்டு மாமாவைப் பார்த்தே வளர்கிறாள். அவளை வசீகரித்த முதல் ஆளுமை அவர். அவருடைய அழகு, அந்தஸ்து பற்றியெல்லாம் அவள் நினைக்கவில்லை. அவர் சாய்வாக அமர்ந்திருப்பது, சுற்றி சீடர்கள் நிற்கும் விதம், பேசும் தோரணை என ஒவ்வொன்றையும் ரசித்துக்கொண்டிருக்கிறாள். முதன் முதலில் கண்டுவின் கால் அழுக்கைத் துடைப்பதும் அந்த உந்துதலில்தான். கண்டுவின் பேராகிருதி ஆழமாக அவளுள் வேர் விடுகிறது. ஆனால் மிக அருகில் கண்டு அவள் எதிர்பாராதவொன்றாக இருக்கிறார். எப்படியென்றால், கண்டுவின் மகள் இளமையில் விதவை ஆனதும் மொட்டை அடிக்கப்பட்டு மூலையில் அமர்த்தப் படுகிறாள். மெத்தப் படித்தவராக இருந்தாலும் கண்டு அதைத் தடுக்கவில்லை. தன்னுடைய அத்வைத அறிவுக்குள்தான் இருக்கிறார். இரண்டு, தன்னுடைய புகழை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சிஷ்யன் ஒருவனை அவமானப் படுத்துகிறார்.
“எப்படி ஒருவனுக்கு வெறுக்க மனசு இடம் கொடுத்திருக்கும்? எப்படிச் சாத்தியம்? நடுத்தெருவில் ஒருவனை அவமானப்படுத்த அவருக்கு என்ன உரிமை?” என்று அம்மணி அதிர்ந்துபோகிறார்.
இந்த இரண்டு சம்பவங்களும் அவளை கண்டுவின் அதிகாரவயமான ஆளுமைக்கு (Authoritarian Personality) எதிராக சுதந்திர ஆன்மாவை தேர்ந்தெடுக்க காரணியாகின்றன. கவனிக்க வேண்டியது, இந்த இரு காரணிகளுக்கும் பின்னால் கண்டு மாமா என்பவர்தான் இருக்கிறார்.
கண்டுவால் அவமானப்படுத்தப்படும் விச்வம் என்பவரை நினைக்கின்றபோதுதான் அம்மணி முதன் முதலில் எல்லோரையும் தொட வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறாள். “அவருக்கு தடவி கொடுக்க வேண்டு போலிருக்கிறது“ என்கிறாள். அவமானத்தைத் துடைத்துவிட நினைக்கும் இதே ஆதுாரத்தை கடைசியில் ப்ரூஸ் என்கிற இராணுவ வீரனைத் துரத்திக் கொண்டிருக்கும் “அவமான எச்சிலை“ துடைத்துவிடும் நிகழ்வுடன் பொருத்த முடியும். அதாவது முதன் முதலில் தொட துளிர்த்த எண்ணமும் கடைசியில் அது முடிவதும் ஒரே லட்சிய வடிவத்துக்குள் இருக்கும். விச்வம் அவமான சம்பவத்துக்குப் பிறகு அவள், “எல்லோரையும் தொடப் போகிறேன் தழுவிக் கொள்ளப் போகிறேன் தொடாமல் பற்றாமல் பேசப் போவதில்லை. யாரை பார்த்தாலும் தொடாத வரையில் சரியாகப் பார்க்காதது போல இருக்கு. தொட்டாத்தான் யாரையும் கொஞ்சமாவத புரிஞ்சிக்க முடியும் போலிருக்கு. பிறத்தியாரும் என்னைத் தொட்டாத்தான் எனக்குக் கொஞ்சம் திருப்தியாக இருக்கு“ என்கிறாள்.
தொடுதலைவிட அனுபவத்தைப் பெறுவதில் வேறெந்த புலன்களுக்கும் உடனடித்தன்மை இல்லை. இதை விரிவாக சுந்தர் சருக்கை தன்னுடைய “அனுபவத்தைப் புரிந்துகொள்ளுதல்“ கட்டுரையில் விளக்கியிருக்கிறார். அக்கட்டுரையில் அவர் தீண்டுதலை முக்கியமானதாக முன் வைக்கிறார். தீண்டுதலே அனுபவத்தின் அவசியமான பண்பை வெளிபடுத்துவதாக இருக்கிறது. அதாவது தீண்டுதல் உடனடித்தன்மையைக் கொண்டிருப்பது போலவே அனுபவமும் உடனடித்தன்மை கொண்டதாக இருக்கிறது என்கிறார். பார்த்தலில் பார்ப்பதற்கும் பார்க்கப்படுவதற்கும் இடையே உள்ள தொலைவு தீண்டுதலில் தீண்டுபவர், தீண்டபடுவது இடையே இல்லை என்கிறார்.
இந்திய சமூக அகத்துக்குள் தொடுதல் என்கிற செயல் அதன் சுயத்தை கோட்பாட்டளவில் கட்டமைத்திருக்கிறது. அம்மணியின் சுதந்திர ஆன்மா அந்தக் கட்டமைப்பை மீறுவதிலிருந்தே முதலில் தொடங்குகிறது. பெரியம்மாவுடன் சுற்றும்போது கையைப் பற்றிக் கொள்கிறாள். “ஏன் யாரையும் தொடாமலிருந்தோம்? தொட்டிருந்தால் எத்தனையோ பேர் நண்பர்களாயிருப்பார்கள்”.
பரிட்ச்சார்த்தத்தை முதலில் ஜட்ஜ் வீட்டுப் பெண்ணை நெருக்கமாகத் தொட்டுப் பேசத் துவங்கி அவளிடம் அன்யோன்யமாக மாறிவிடுவது. பிறகு ஆசிரியரிடம் அடி வாங்கிய மாணவனைத் தொட்டு சமாதானமடையச் செய்வது. இந்த இரண்டு பரிட்ச்சார்த்தங்களும் அவளுக்கு புதிய அனுபவங்களை அளிக்கின்றன. முக்கியமானது என்னவென்றால், அவள் எல்லோரையும் தொட முனைகிறாளே தவிர தீண்டுதலில் ஈடுபடவில்லை. ஒன்றைத் தீண்டுபவர் அதால் தீண்டப்படுவதில்லை. ஆனால் தீண்டுவதைவிட தொடுதலில் இரண்டு உடல்களும் சமச்சீரான உறவைக் கொண்டிருக்கின்றன, அதன் குணம் இரண்டு திரவியங்களின் உள்ளார்ந்த இணைவை கொண்டிருக்கிறது என்ற சுந்தர் சருக்கையின் விவாவதத்தை எடுத்துக் கொள்ளலாம். அம்மணி தொடும்போது அதன் எழுவாயாக இருக்கிறாளென்றால் தன்னைத் தொட அனுமதிப்பதில் பயனிலையாக இருக்கிறாள். இந்த இரு பண்புகளையும் பெறும்போது அவள் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட சுயத்திற்கெதிராக தன் தன்னிலையை எதிர்வினையாற்ற அனுமதிக்க முடிகிறது.
மூன்றாவது தொடுதல் கோபாலியிடம். கண்டு மாமாவுக்கு மிக நெருக்கமாக நம்மால் கோபாலி கதாப்பாத்திரத்தை வைக்க முடியும். கோபாலி மிகப் பெரிய சங்கீத சாகரம். கண்டுவைப் போலவே கோபாலியையும் அவள் துாரத்திலிருந்தே பார்த்திருக்கிறாள். அவரிடம் தன் பெரியப்பா மகள் திருமணத்திற்குக் கச்சேரி பண்ண முடியுமா என்று கேட்கப் போகிறாள். அவள் தொடுவதும் கோபாலியைத் தொட அனுமதிப்பதும் மிக இயல்பாக அங்கு நிகழ்கிறது. ஒரு கட்டத்தில் கோபாலி அவளை தன்னுடன் சென்னைக்கு வந்து இருக்க சம்மதம் கேட்கிறார். கோபாலியுடன் இருக்கப் போவதுதான் அவளது சுதந்திர ஆன்மாவிற்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு. அம்மணி சம்மதிக்கிறாள். தனி வீட்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
கோபாலியுடன் இருக்கும் இந்தக் காலத்தில்தான் அவளுடைய சுதந்திர ஆன்மா முழுமையாக உருவாகத் துவங்குகிறது. அவளது போக்கை விமர்சிக்கும் பெரியம்மா, பெரியப்பாவிடம் அதை நியாயப்படுத்த பிரயத்தனப்படுகிறாள். கோபாலியைப் பொறுத்த வரை அம்மணியின் இருப்பு, அவருடைய பாட்டும், அதற்குக் கிடைக்கும் மரியாதை, புகழ் என அத்தனையையும் காட்டி விதந்தோதிக்கொள்ளவதற்கு மட்டுமே. அவள் மற்றவர்களுடன் பேசுவதையும் மற்றவர்கள் அவளுடன் பேசிக்கொண்டிருப்பதையும் அவர் வெறுக்கிறார். அன்மையிலிருந்து பார்த்த கோபாலி அருகில் கடுமையான சுயவிரும்பியாகவும் சந்தேகிப்பவராகவும் இருப்பதை அம்மணி அவதானிக்கிறாள். அவளது லட்சியம் வெறும் சல்லாபத்திற்கு தீண்டப்படுவளாக இருப்பதல்ல. இன்னொன்று இங்கு புரிந்து கொள்ள வேண்டியுள்ளது கோபாலி உடன் இருப்பதைத் தேர்ந்தெடுப்பதும் அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான். கோபாலியிடமிருந்து விலக ஆரம்பிக்கிறாள். இதை அவருமே புரிந்து கொண்டிருந்தாலும் பட்டாபியுடன் அவளுடைய நெருக்கத்தை வெறுக்கவே செய்கிறார். இது சிறுவயதில் கண்டுவிடம் பார்த்த அதே அதிகாரவயமான ஆளுமை(Authoritarian Personality) அவரிடமும் இருப்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.
பட்டாபி கோபாலிக்கு நேர் எதிரான முனையிலிருக்கிறான். இயல்பானவன். சமூகத்தின் பழைய கட்டமைப்பில் வளர்ந்தவன். யதார்த்தமான அவனுடைய பண்பு அவளை விரும்ப வைக்கிறது. பட்டாபியிடம் எந்த போலி பாவனைகளும் இல்லை. ஆனால் அவனும் பண்பாட்டு ஒழுக்க விதிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான். அம்மணி அவனது விலங்கை விடுவிக்க நினைக்கவில்லை. அதை ஒரு கீறல் அளவு கோடிட்டுக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். தி.ஜாவின் கிட்டத்தட்ட அத்தனை புனைவுகளிலும் இந்த கீறல் இருக்கும். அதாவது விதிகளின்மீது விதிகளுக்கு வெளியே இருப்பவர்கள் மிகப் பெரிய உபாசனையை செய்துவிட மாட்டார்கள். அவர்களுடைய உலகில் அந்த விதிகள் இல்லாமலிருக்கும் அவ்வளவுதான். அந்த இல்லாமலிருப்பதற்கான எல்லா தர்க்க நியாயங்களும் சரியாகவே புனைவு விதிக்குள் கட்டப்பட்டிருக்கும். பட்டாபி அவளுடன் இருப்பதில் அறம் சார்ந்த சிக்கல் எழுவதைச் சுட்டிக்காட்டி இருவரும் திருமணம் செய்துவிடலாம் என்றதும் அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பெரிதாக சிரித்துக் கொண்டிருப்பாள்.
அதிகாரவயமான ஆளுமையில் சிக்கிக் கொள்ளுதல்
சுதந்திர ஆன்மா அல்லாத அம்மணியை நாம் கற்பனை செய்து பார்ப்போம். அம்மணி யாரைப் பார்த்தும் சிரிக்க மாட்டாள். யாரையும் தொடவோ அல்லது பிறத்தியார் தன்னைத் தொட அனுமதிக்கவோ செய்யமாலிருப்பாள். தன் அழகைப் பற்றி அறியாதவளாக இருப்பாள். அறிவுத்தனமான உரையாடல்கள் கிடையாது. உலக அனுபவம் இருக்காது. கணவனைத் தவிர வேறு யாரையும் நம்பாத தைரியம். ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக மரமான கட்டமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். யாரேனும் தன்னிடம் மீறி நடந்துகொண்டால் தொடுபவரைப் பொறுத்து கோபமோ, மூரக்கமோ, பரிதாபமோ காட்டுகிறவளாக இருந்திருப்பாள்.
கிட்டத்தட்ட மரகதம் இதே குணவியல்புகளுடன்தான் இருக்கிறாள். அம்மணியின் சுதந்திர ஆன்மா அற்ற இன்னொரு ஆளுமையாகத்தான் மரகதத்தை பொருத்திப் பார்க்க முடிகிறது. மரகதத்தைச் சந்திக்கிறபோது பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது அம்மணிக்கு. “கண்ணைப் பறிக்கிற கருப்பு. பளார் என்று கன்னத்தில் அறைகிறது அழகு. குழந்தை மழமழப்பு. இவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று இவளுக்குத் தெரியுமா? தன் முழு உடம்பையும் எப்போதாவது ஒரு பெரிய கண்ணாடியில் பார்த்திருப்பாளா?” என்று அரற்றிக் கொள்கிறாள். பிறகு அவளிடம் “நீ ரொம்ப அழகுனு உனக்குத் தெரியுமோ?” என்று மறுபடியும் மறுபடியும் கேட்கிறாள். மரகதம்மீதான அவளுடைய அக்கறையும், நினைவுகளும், பிரமிப்பும் அவளை பச்சயைப்பன் சரியாக காப்பாற்றுவனா என்கிற பரிதவிப்பு என அத்தனையும் அம்மணியின் சுதந்திர ஆன்மாவின் லட்சியத்தை ஆட்டம் காண வைக்கிறது. அதன்பிறகு அவளுடைய வாழ்வின் ஓட்டம் முழுக்க தன் தன்னிலைக்குள் மரகதத்தைச் சுமந்து கொண்டே அலைகிறாள். மரகதத்தை பௌதீக உலகின் மரபால் கட்டமைக்கப்பட்ட ஆன்மா எனலாம். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் மரகதம் அம்மணியின் வேறொரு வடிவம். இயல்பான, யதார்த்த உலகின் மரபு, பண்பாட்டு கட்டமைப்புகளுக்குள் சுதந்திரமாக இருக்கும் ஆன்மா. அந்த கட்டமைப்புக்குள் இருக்கும் ஆன்மாவிடம் மிக நெருங்கி தன்னைப் பற்றி அது என்ன நினைக்கிறது என்று சோதித்துப் பார்க்கிறாள்(மரகதத்தை தன் வீட்டிலேயே இருக்க சம்மதம் கேட்கிற இடம்). மரகதத்தின் சந்திப்புக்கு பிறகு பிரக்ஞையிலிருந்து அவளை முழுமையாக உதிர்க்க முடியவில்லை. அவளுடைய இருப்பு அம்மணியின் சுதந்திர ஆன்மாவை தொந்தரவு செய்கிறது. அம்மணி பாரீஸில் விபச்சாரியாக பரிட்ச்சித்துப் பார்ப்பதெல்லாம் அந்த ஆன்மாவின் உச்சபட்ச செயல்பாடு. இன்னொரு எல்லையின் உச்ச வரை அது சென்று மீள்வது.
ஒரு கட்டத்தில் இந்த சுதந்திர ஆன்மா என்பது அவள் விரும்பாத சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட சுயத்திற்கு எதிரான தன்னிலை என்பதாக நடிக்கிறதே தவிர அது சுதந்திர ஆன்மாவின் உண்மையான தன்னிலை இல்லை. அதாவது அவளுடைய தன்னிலை சுதந்திர ஆன்மாவுக்காக சில வாழ்வனுபவங்களைத் தேர்ந்தெடுக்கிறது, கட்டமைக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் அவளுடைய சுதந்திர ஆன்மா என்கிற தன்னிலை ஒரு சுயமாகி விடுகிறது. இப்போது இந்தச் சுயத்தின்மீதான இன்னொரு தன்னிலை அவளுக்கு உருவாகிறது. அவளுடைய சுதந்திரமான தன்னிலைக்குள் இன்னொரு சுயமும் தன்னிலையும் இருக்கின்றன. இந்த இடத்தில்தான் தி.ஜா நீட்ஷேயின் சுதந்திர ஆன்மா என்கிற கோட்பாட்டிலிருந்து விலகுகிறார். அதன் உண்மையான பிரச்சனை பாடுகளுக்குள் வருகிறார். தன்னிலை தன்னை கட்டமைக்கிறபோது ஒரு நிலைக்கு மேல் அது தன்னை இன்னொரு சுயமாக மாற்றிக்கொண்டே ஆகும் என்கிற விதியை நினைவுபடுத்துகிறார். ஆஷிஸ் நந்தி கூறுவது போல சுயம்- சுயம் அல்லாத இரண்டுக்குமான வரையறையில் “சுயம் அல்லாதவை எத்தனைக்கெத்தனை சுயத்தின் பகுதியாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை சுயம் அல்லாதவை சுயத்தின் பகுதியாக இருக்கிறது. சுயம் பெரும்மளவில் சுயத்தையும் அதனுள் மற்றமையையும் கொண்டிருக்கிறது. அதே சமயம் மற்றமை பெருமளவில் மற்றமையையும் அதனுள் சுயத்தையும் கொண்டிருக்கிறது” என்கிறார்.
அம்மணியின் சுதந்திர ஆன்மா என்கிற தன்னிலை இன்னொரு சுயமாக மாறிவிடும் போது அவள் அதற்கு வினையாற்ற முடியாமல் தத்தளிக்கிறாள். செய்வதறியாமல் தடுமாறுகிறாள். நீட்ஷேயின் சுதந்திர ஆன்மா என்கிற லட்சிய மனிதன் இயல்பான கட்டமைப்புக்குள் தடுமாறிப்போவான் என்பதை அம்மணி மூலம் தி.ஜா செய்து பார்த்துவிடுகிறார். இந்த இடத்தில் அதாவது, அம்மணி வடிவமைத்துக்கொண்ட சுதந்திர ஆன்மா எந்த அதிகாரத்திற்கும் அடங்காத சுதந்திர தன்மையாக ஓர் எல்லையில் அதுவே தன்னளவில் அதிகாரவய ஆளுமையின் வடிவத்தை அடைந்துவிடுவதை அவதானிக்கலாம்.. கட்டுக்கடங்காத சுதந்திரத் தன்மை இன்னொரு அதிகாரமாக (Authoritarian Personality) வளர்ந்து விட்டிருக்கிறது. அது அடைந்த வடிவத்தை அவள் சிதைக்க வேண்டும். இன்னொரு தன்னிலையை உருவாக்க வேண்டும்.
அம்மணி நாடு திரும்பியதும் மரகதத்தைப் பற்றி விசாரிக்கிறாள். அவள் கோபாலியின் சல்லாபத்திலிருந்து தப்பித்து வெளியேறிவிட்டது தெரிந்து மரகதத்தைத் தேடிச் சென்று பார்க்கிறாள். வீட்டில் மரகதத்தைக் கண்டதும் அவளது மனவோட்டம் இவ்வாறு உள்ளது “நானும் பேசாமல் அவளைக் கண்டு பெறாமைப் பட்டுக் கொண்டிருந்தேன். வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நான் இருபது முப்பது நுாறு இருநுாறு என்று நெருக்கம் கொண்டது, பிறர் மனதில் புக மறுக்கிற, புக முடியாத கல்லாங்காய்ப் பட்டுப் போன கரளையா புரியவில்லை. எனக்கு இத்தனை நுணுக்க புத்தியுண்டா? இத்தனை பரிவு சாத்தியமா? பச்சையப்பனிடம் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கிற எல்லையற்ற கற்பனையும் பாவனையும் சாதாரணப் பெண்ணின் கட்டுப்பாடு மாதிரி தோன்றுகிறது. ஆனால் நினைத்து நினைத்து, அந்த உணர்வில் புகுந்து பார்க்க முயன்றபோது, புகுந்து பார்க்கச் சற்று முடிந்தபோது, முதுகுத்தண்டு ஒரு கணம் சுண்டிச் சிலிர்த்தது.“
ஏன் அம்மணி வேறு எங்கும் செல்ல நினைக்காமல் மரகதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏன் அவள் ப்ரூஸிடம் இருப்பதை விரும்பவில்லை? எதற்காக இறுதியில் பட்டாபிக்கு கடிதம் எழுத வேண்டும்? காரணம் அம்மணி சுதந்திர ஆன்மாவிடம் தோற்றுப் போகிறாள். மரகத்ததின் சுதந்திரமும் பட்டாபியின் யதார்த்தமுமே அவளை அம்முடிவை எடுக்க வைக்கிறது. ப்ரூஸை விரட்டிய எச்சில் அவமானத்தைப் போல இந்த இருவரது பிம்பங்களும் அவளை விடாது விரட்டிக்கொண்டிருக்கின்றன. சுதந்திர ஆன்மாவின் அதிகாரமையத்திலிருந்து விடுபட்டு யதார்த்த வட்டத்துக்குள் நுழைத்துக் கொள்ள முயல்கிறாள். அப்படி செய்வதன்மூலம் மட்டும்தான் சுதந்திர ஆன்மாவிடமிருந்து வெளியேற முடிகிறது. ஆக, அம்மணியை தோற்கச் செய்வதன் மூலம் நீட்ஷேயின் ஃப்ரீ ஸ்பிரிட் சிந்தனையிடம் தி.ஜா வெற்றி பெறுகிறார்.
————–