சமகால சர்வதேசப் புனைவுகளின் போக்கும் தமிழ் புனைவுகளும்-
Style is the physiognomy of the mind. -Arthur schopenhauer
சமீபத்தில் வெளியான ”உன்னதம்” இதழ் தமிழ் வாசிப்புச்சூழலுக்கு முக்கியமான பங்காற்றியிருக்கிறது. நிறைய வெளிநாட்டு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களெல்லாரும் சமகால சர்வதேசப் படைப்பாளிகள். பொதுவாக அயல் இலக்கியங்கள் புனைவுகளில் வேவ்வேறு பரிசோதனைகளை செய்யக் கூடியன. கதையின் போக்கு, கரு, உத்தி, மொழி, கதைசொல்லல் என ஒவ்வொன்றிலும் புது முயற்சிகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். இன்றைக்கு சர்வதேசப் புனைவுகள் எங்கு வெளிவந்தாலும் நமக்குக் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அல்லது உடனே அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகிவிடுகிறது. கடந்த பத்தாண்டு தமிழ் புனைவுகளில் தமிழைவிட பிறமொழி பிரதிகள்தான் அதிகம் இறக்குமதியாகவுள்ளன. படைப்பு மொழியின் சமகால இயல்புக்கு இதுபோன்ற அயல்மொழி இலக்கியங்கள் கூடுதல் வலுவைக் கொடுக்கின்றன. அதாவது ஒரு மொழி எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறதென்பதையும் அதன் பங்களிப்பையும் வேறு மொழி இலக்கியங்களுடன் வைத்து மதிப்பீடு செய்ய முடியும். அதுபோல இன்றைக்கு மொழிபெயர்ப்பைவிடவும் ஆங்கிலத்தில் வாசிக்கின்ற வாசகர்கள் அதிகம். ஆக, இத்தகையச் சூழலில் ஒரு நல்ல வாசகனுக்கு ”படைப்புகள்” குறித்து அதிகமான பரிட்சயம் இருக்கும். அவன் தன் முன்னால் குவிந்திருக்கும் எல்லா மொழி இலக்கியங்கள் குறித்து ஒரு ”தர நிர்ணயத்தை“(standardized) அவனாகவே உருவாக்கி வைத்திருப்பான். (படைப்பாளி வாசகனை மனதில் நினைத்து ஒரு படைப்பை உருவாக்குவதில்லைதான்). அப்படியொரு வாசகனால் உலக இலக்கியப் போக்கையும் தமிழ்கதைகளையும் நன்றாக அலசிப்பார்க்க முடிகிறது. ஒருவகையில் தமிழ்கதையாடல் வளர்ந்ததற்கு இப்படியான ”பிற”மொழிக்கதைகளுக்கும் பங்கு இருப்பதை நாம் மறுக்க முடியாது. பத்தொன்பதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய சிந்தனை, விஞ்ஞான, இலக்கியக் கலாச்சாரத்தால் அடைந்த புதிய மாற்றத்தை நினைவுபடுத்திக் கொள்ளலாம். லத்தின் அமெரிக்கக் கதைகளின் அறிமுகத்துக்குப் பிறகும் போர்ஹேஸ், ஈகோ, ஃபுயண்தஸ், காஃப்கா, மார்குவேஸ் என மேற்கிலிருந்து அறிமுகமான ஆழுமைகளுக்கு பின்பும்தான் நம் புனைவுகள் நிறைய பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்த்தன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இப்படி உள்வாங்கியக் ”கலாச்சாரங்களால்” நம்முடைய மரபான கதையாடல், தொன்மக்கதைகளில் நாட்டுபுறஇ தொல்குடிகதைகளில் மீளுருவாக்கம் நடக்காமல் மாறாக ஒரு ”ஸ்டைலாக”மட்டும் இருந்து விட்டன. அதாவது, புது துணியை அணிந்துகொள்ளும் கிளர்ச்சியில் மட்டும் நிறுத்திவிட்டோம். உலகப் போர்களைப் பற்றி நம்முடைய எந்த புனைவுகளிலும் வாசிக்க முடியாது. இத்தனைக்கும் அமெரிக்கப் புரட்சிக்கு நிகராக தமிழில் காலனியாதிக்கத்துக்கெதிராகவும் சமஸ்தானங்களுக்கிடையேயும் நடந்தப் புரட்சிகள் நிறைய உண்டு.
இதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. ஒன்று, தமிழில் புதிய சிந்தனையிலெழுந்த படைப்புகள் மிகவும் அரிது. இங்கு ’சிந்தனை’ என்பதை சமூகத்தின்மீதான பார்வை, அரசியல் நோக்கு, தத்துவார்த்தம் என வரையறுக்கிறேன். உதாரணத்திற்கு சம்பத்(இடைவெளி), கா.நா.சு, நகுலன், மௌனி, சுந்தரராமசாமி (ஜேஜேசி.கு), பிரேம் ரமேஷ்(மகாமுனி) ஜெயமோகன்(விஷ்ணுபுரம்) பா.வெங்கடேசன்(தாண்டவராயன் கதை)என இவர்களின் ஒருசில படைப்புகளைத் தவிர்த்து மற்ற தமிழ்கதைகள் கிட்டத்தட்ட ஒரு ”வகைமையை” மீறிச் செல்லவில்லை.
அதாவது ”இவ்வகைமையை” மூன்று வகையில் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, அறப்பண்பை பேசுவதற்காக எழுதப்படுபவை, இரண்டு பின்காலனியத்தில் சிதைந்த நம்முடைய மரபை நினைவுபடுத்துபவை (இதுவும் ஒரு நினைவோடைகளாகத்தானேயொழிய அக்காலனியச்சூழலை விலகி நின்று பார்ப்பதாகயில்லை), மூன்று, உறவு சிக்கல்களின் தன்னனுபவம் கதைகள் (தொன்னுாற்றி ஒன்பது சதவீதம் இந்த வகைமைதான்)இம்மூன்று தலைப்பை இன்னும் விரிவு படுத்தி நிறைய உபதலைப்புகளிலும் வகைப்படுத்த முடியும். இந்த வகைமையில் (genre) கதை சொல்வதன்பென்பதும் நாமாகவே வரையறுத்துக்கொண்டதுதான். அதாவது நம்முடைய நவீன மரபில் இந்த மூன்றும் ஊரிவிட்டன. பொதுவாக நமக்கு நம்முடைய நினைவுகளை, அறமீறிய சம்பவங்களை வாழ்வின் நுண்னனுபவத்தை சுவாரஸ்யமாக சொல்வதில் விருப்பம் உண்டு. இது பழங்கால ’திண்ணைக்கதை”களிலிருந்து பெற்றது..இந்த பாணியைத்தான் நாம் கதை சொல்லத் துவங்கியதும் எடுத்துக்கொள்கிறோம். இது ஒரு உத்தியாக மட்டு வைத்து நம்மிடமிருக்கும் கதைமொழியில் கதைப்பரப்பில் புதிய பரிமானங்களைச் செய்து பார்த்திருக்கலாம். ஆனாம் நிதர்சனம் அவ்வுத்தியைத்தான் நாம் கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறோம். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் கடந்த நுாற்றாண்டில் புழங்கிய மாயயதார்த்தம் மீபுனைவில் கூட பரிசோதனை முயற்சிகள் செய்யவில்லை. ஆனால் அதே சமயம் நம்மிடம்தான் புராண இதிகாச, காவிய மரவுகளும் நாட்டுபுற சொல்கதைகளும்அதிகம். இந்த இடத்தில் மாயயதார்த்த காலச்சாரத்திற்குள் நம் கதைகள் சிக்கியதை நினைவுகூர வேண்டும்.(உலகக் கலாசார்த்தின் முதல் நுகர்வோர் நாம்). தொண்ணுாறிலிருந்து இரண்டாயிரம் வரைக்கும்(அதற்கு பின்பும்கூட) உள்ள கதைகளை வாசித்தால் இதை உணரலாம். சட்டென எல்லாக் கதைககதாப்பாத்திரங்களுக்கும் இறகு முளைத்து பறக்கவாரம்பித்துவிடும்.! பிரேம் ரமேஷைின் கட்டுரையும் கட்டுக்கதையும் நுாலில் யதார்த்தம் பற்றி இப்படி சொல்கிறார் ”ஒரு கலாசாரத்திற்கு இயல்பாக உள்ள ஒன்று மற்றொரு கலாசார்த்திற்கு வினோதமாகஇ மயாத்தன்மையாகத் தோன்றலாம். ஒரு அறிவுமுறைக்கு யதார்த்தமாகக் தோன்றும் ஒரு நிகழ்வு வேறொரு அறிவுமுறைக்கு மந்திரத்தன்மை உடையதாகத் தோன்றலாம். இந்தப் பிளவுபட்ட மாறுபடும் நிகழ்வு மற்றும் மயாம் என்பது உன்னிப்பாகக் கவனிக்கும் பொழுது ஒவ்வொரு மன அமைப்பிற்குள்ளுமே நிகழ்ந்தபடி இருக்கும் என்பதை அறிய முடியும்”. என்னைப் பொறுத்த வரை, நம் யதார்த்த வாழ்வில் நடக்கும் அபத்தம்கூட ஒரு மாயயதார்த்தவகைதான். நாம் அதை எப்படி புரிந்துகொள்கிறோமென்பதுதான் முக்கியம்.
இரண்டாவது, கதைக்களம். பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணிக்கு பிறகு நம் கதைப்பரப்பு அவ்வளவாக தமிழ் மண்ணைத் தாண்டிச் செல்லவில்லை. குறைந்தபட்சம் இந்திய பிராந்தியத்தைகூட.இதில் பிரச்சனையென்னவென்றால் நமக்கு அந்நிய நிலத்தையும் அந்நிய பெயர்களையும் தமிழில் வாசித்து பழக்கமில்லை. அவர்களெல்லாம் மொழிபெயர்ப்பு வழியில் மட்டும்தான் வரவேண்டும் என வாசிப்பு வகைமைகளை சுருக்கிக் கொண்டுள்ளோம். இதில் இன்னொரு காரணமும் உண்டு நம்மிடம் யதார்த்தவாதக் கதைகள் குவிந்து கிடப்பதாக நம்முடைய படைப்புபிரக்ஞை உருவாக்கி வைத்திருக்கிற “கிளர்ச்சி“. அதாவது நம்மைச் சுற்றி எழுத வேண்டிய யதார்த்தவாதம் இயல்புவாதம் விளிம்பிலக்கியம்…என நிறைய இருக்கிறதாக நம்பிக்கொண்டிருப்பது. இந்த விமர்சன அர்த்தம் யதார்த்தக் கதைகள் மீது அல்ல யதார்த்தக் கதைகள் எவ்வாறெல்லாம் எழுதப்பட்டிருக்கலாமென்பதே. சமீபத்தில் இரண்டு நாவல்கள் வாசித்தேன். All the light we cannot, see slaughters house 5 இரண்டும் உலகப் போர் காலச்சூழலை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. முந்தையது முழுக்க முழுக்க யதார்தத்திலும் இரண்டாவது முழுக்க முழுக்க பின்நவீனத்துவபாணி கதைசொல்லல். சயின்ஸ் ஃபிக்ஷ்ன் ஸ்டைல். இரண்டுமே அதனதன் கதைசொல்லலில் பிரமாதமான வாசிப்பையும் படைப்பூக்கத்தையும் அளிக்கக் கூடியன.அதே போல் உன்னதம் இதழில் பிரசுரமான கருப்புப் பெட்டி black box வித்யாசமான சிறுகதை. மரபார்ந்தக் கதைசொல்லிலிருந்து விலகி, அதே சமயம் புனைவுத்தளத்தின் சாத்யங்களைக் காட்டுகிறது. வீழ்ந்த விமான ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப் பெட்டியைப் போன்ற தொழில்நுட்பத்தைக் கொண்ட ஒரு பெண் உளவாளிதான் கதாப்பாத்திரம். இதே இதழில்தான் கிறிஸ்டன் ருபேன் என்கிற அறிமுக எழத்தாளருடைய கதையை சமீபத்தில் நியூயார்க்கர் இதழ் கொண்டாடியதைப் பற்றியும் விமர்சிக்கப்பட்டுமுள்ளது.
இன்றைக்கு சமகால பிறமொழிப் புனைவின் எல்லைகளை வேவ்வேறு விதங்களில் விஸ்தரிக்கபடுகின்றன. விநோதப் புனைவு ((speculative fiction)), வரலாற்றுப் கதாப்பாத்திரங்களை புனைவுக்குட்படுத்தல், சயின்ஸ் ஃபிக்ஷ்ன், ஃப்யுக் (fugue) வடிவ நாவல்(இசைக் கோர்வை), குழந்தைகளுக்கான நாடகங்கள் (லுாயிஸ் சாசரின் சைடுவே ஸ்டோரிஸ்), கிராபிக்ஸ் நாவல், தொன்மங்களை புனைவாக்கல், வரலாற்றை மாயவினோதமாக்கல் என பல்வேறு வடிவங்களில் புனைவுகள் எழுதப்படுகின்றன. ஏன் இந்திய மொழிகளில்கூட உண்டு. மலையாள இளம் எழுத்தாளர் அமல் என்பவர் கிராபிக்ஸ் நாவல் எழுதியிருக்கிறார். அருணி காஷிப்பின் The house with a Thousand stories அசாம் நாவல் சாதாரண, நம்மிடம் புழங்கிய பழையக் கதைதான். கதை 1990லிருந்து அசாம் ஐக்கிய விடுதலை இயக்கப் பின்னணயில் (ULFA நிகழ்கிறது, கதைக்கூறலில் மொழியைக் கையாள்வதில் அசாதாரணமாக படைக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே மாயம், கனவு, என்கிற பழைய பாணிகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? பிற துறைகளைப் பற்றியக் கதைகள் நம்மிடம் மிகவும் குறைவு. ஏன் சுஜாதாவைத் தவிர சயின்ஸ்ஃபிக்ஷ்ன் கதைகளே சொல்லும்படியாக இல்லை. ஆனால் இலக்கியத்தில் கவிதை மட்டும் வேவ்வேறு வடிவங்களையும் கூறுமுறையையும் பரிசோதனை செய்து வருகிறது. அப்படி நிறைய கவிதைகளை அடையாளம் காட்ட முடியும்.
சமகாலக் கதையாடல்கள்
இந்த இடத்தில் எண்பது தொண்ணுாறுகளில் தமிழில் கதையாடல்களில் நிகழ்ந்த மாற்றங்களையும் விவாதங்களைம் நினைவுபடுத்திப் பார்க்கலாம். ஏற்கனவே எழுதப்பட்டு வந்த நவீனத்துவக் கதைகளும் அதன்பின் உண்டான பின்நவீனத்துவம் பின் அபை்பியல் பாணியும் இக்காலக்கட்டத்தில் புதிய வடிவமாக எழுந்தன. தமிழவன், நாககர்ஜூனன், பிரேம் ரமேஷ் போன்றவர்கள் இதைத் தொடங்கி வைத்தார்கள். கதை என்பது யாது என இந்த இரு அமைப்புகளிலிருந்து கலாச்சாரமுரண் உருவானது. அதாவது வாழ்க்கையின் அனுபவத்தை அதன் நுண்ணர்வுகளைச் சொல்லி தரிசனத்தை ஏற்படுத்துவது, சமூதாயத்துடன் (அதிகம் உறவுகளில்) தனிமனித அகம் கொள்ளும் முரண், வடிவக்கச்சிதம் என நவீனத்துவ தமிழ்க் கதை பேசியது.(இதுவும் தமிழ்கதையாடல்களுக்காக கரைந்து மாற்றியமைக்கப்பட்டதுதான்). அன்றைக்கு எழுதிய முன்னோடிகளிலிருந்து இப்போதிருக்கும் ஆளுமைகள் எஸ்.ரா, ஜெயமோகன் வரை இப்பட்டியல் உள்ளது. சுந்தரராமசாமியே இப்பாணியை ஜே.ஜே சில குறிப்புகளில் உடைத்திருக்கிறார். விதிவிலக்கம்-புதுமைப்பித்தன். இவரை வேறொரு இடத்தில் வைத்துதான் மதிப்பிட வேண்டும்.
அடுத்ததாக பின் அமைப்பியல் பின் நவீனத்துவத்தில் தமிழவன்இ நாகர்ஜூனன் போன்றவர்கள் கதையென்பதை “மனிதன் நிஜத்துடன் கொள்ளும் ஒருவகைக் குறியீட்டுத் தொடர்பு, கற்பனையை அறிவு சந்திக்கையில் உருவாகும் மையம். சுருக்கமாக “கதை தனிமனித நனவிலியின் சமூகக் கூட்டு உற்பத்தி” அதாவது இருமுரண்களுக்கிடையிலுருக்கும் இடைவெளியில்தான் கதையாகப் பிறக்கிறது. அதோடு கதை சொல்லல் படைப்பவனும் வாசிப்பனும் சேர்ந்த உலகம்”என புரிந்து கொள்ளலாம். பிறகு விமர்சனத்தில் இன்னும் ஆழமான பார்வையை சுட்டிக்காட்டினார்கள். உ.ம்- 1) யதார்த்த நாவல் உண்மையை சமூகத்தில் நடப்பதாகச் சொல்வதாக வேஷம்தான் போடுகிறது. அதாவது யதார்த்ததில் நடப்பதை அப்படியே சித்தரிப்பதில்லை மாறாக கதைசொல்லியின் அரசியல் குறுக்கீடாக நிகழ்கிறது. யதார்த்த வாழ்க்கையை ஓர் அடையாளமாக வைத்து சில ”சிந்தனைகளை” முன் வைக்கிறது. 2) நாம் வேறு கதையிலான நிலை வேறு என புரிந்து கொண்டால் கதையைக் கேட்கும்போது கதையில் சொல்லப்பட்டதும் சொல்லப்படாததும் நமக்குத் தெரியும் (தமிழவன் கட்டுரைகள் பக் 64இ188) அதாவது இங்கு சொல்லப்படாததற்கு விடுபடல் என்கிற அர்த்தம் அல்ல, இல்லாத இடைவெளி கதைசொல்லியின் அரசியலை குறிக்கிறது.
இக்காலத்தில் பிரேம்-ரமேஷின் கதைகளும் கட்டுரைகளும் பின்நவீனத்துவ முறையில் நிறைய பரீட்சாரத்தங்களை செய்தன. இவர்கள் ”எல்லாமே கதைசொல்லல்தானென” வரையறுத்தார்கள். நாம் கதைகளுக்குள் வாழ்கிறோம். இதிலிருந்து விடுபட இன்னொரு கதையைக் கட்டமைக்கிறோம். இந்த புனைவுவெளிதான் சமூதாயத்தையும் பன்பாட்டையும் அறிதல்களையும் உருவாக்குகிறது. அதாவது எல்லாச் சமூகங்களும் தமது மூல உற்பவத்தை புனைவுகளுடனம் தொன்மங்களுடனும் தொடங்குகின்றன(பிரேம் –ரமேஷ் கட்டுரைகள் பக் 170). இதைப் இப்படி புரிந்துகொள்ளலாம் ஒரு புனைவு இன்னொரு புனைவின் மேல் உருவாகிறது. திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் இந்த புனைகதைகள் வழியாக இன்னொரு பார்வை அஃதில் மேல் விழுகிறது. இன்னொன்று இவர்கள் தமிழில் பல யதார்த்தக் கதைகள் “உணர்தல் முறை” கதைகூறல் உத்திகளில் மட்டும் அமைந்துள்ளதையும் குறிப்பிடுகிறார்கள்.
இவ்வரிசையில் பா.வெங்கடேசனின் கட்டுரையையும் (மௌனி மீதான வாசிப்பு கட்டுரையில்) பார்க்கலாம். கவிதைப்பிரதியிலிருந்து கதைப்பிரதியைப் பிரிப்பது அதன் ”செயல்தளம்”( Functional level) என்கிற ஒரு சொல்லை பயன்படுத்துகிறார். அதாவது மொழித்தளத்துக்கும் (language level ) மொழிதலுக்கும் narration level இடையயுள்ள செயல்தளம்தான் Functional level கதையை முழுமையடைச்செய்கிறது. ஆனால் இந்த செயல்தளம் தன்னிலையால்அவ்விடத்திற்கு உயர்த்தப்படாமல் மொழித்தளத்திலே சிதறுவதையும் குறிப்பிடுகிறார். இன்னொன்று, நாவலின் தனித்துவம் என்பது நிறுவனவயமாக்கப்பட்ட கோட்பாடு, விஞ்ஞான, தத்துவங்கள் மீது விவாதப்புள்ளிகளை வாசகனின் மனதில் எழுப்புவது.. அதாவது, இறுகிப் போன உலகப் பார்வைமீது ஆசிரியர் மையத்தகர்ப்பு செய்கிறார். இது நாவலாசிரியனின் பிரத்யேகப் பார்வையில் அமைவது என்கிறார்.(உயிர்கள் நிலங்கள் பிரதிகள்- கட்டுரை பக்163) இக்கூற்று நாவலின் தனித்துவத்துக்கு முக்கியமான ஒன்று.
இதே சமயம் நவீனத்துவக் கதையாடலில் தொண்ணுாறுகளிலிருந்து இப்போது வரை நிறைய கருத்துகள் அதன்மீது திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக இவ்விவாதங்களில் ஜெயமோகன் ஏற்படுத்தியத் தாக்கம் முக்கியமானது. இருவகையில் அதன் விளைவுகளை பிரிக்கலாம்.
ஒன்று, படைப்பாக்கம் மீது எழுத்தாளனுக்கு இருக்கும் சிருஷ்டி நிலைப் பற்றியது. அதாவது படைப்பு ஆழ்மனதின் வெளிபாடெனச் சொல்லிவந்ததை இன்னும் அழுத்தமாக வளப்படுத்தினார். கிட்டத்தட்ட ஃப்ராய்டிய சிந்தனைபோல.
இன்னொன்று, வாசகனுக்கும் பிரதிக்குமான உறவையும் புரிந்துகொள்ளும் விதத்தையும் மீள மீளச்சொல்லி ஒரு வரையறையை உருவாக்கினார்.
அந்த வரையறைகள்
அ) மொழிநடையில் ஏற்பட்ட மாற்றம். (இதற்குமுன் சுந்தரராமசாமி) அதுவரை புழங்கிய தட்டையான, வெகுஜன நடை கூர்மையான லயத்துடன் வெளிப்பட்டது இதில் மிகப்பெரிய உச்சத்தை செய்து காட்டியவர் ஜெயமோகன்.. ஆ)பிரதியை எப்படி வாசிக்க வேண்டும், படைப்பு என்பது ஒரு (ஆழ்மனதின்)அனுபவம், வாசகன்-ஆசிரியன் அகவய உறவு இ) படைப்புச்செயல்பாடு- ஒரு படைப்பானது ஆசிரியனின் அனுபவம், அகவயமான, மானுடத்தின் உணச்சிக்கூறுகளை பரிசீலித்தல், சீண்டல்…
மேற்கண்ட இந்த மாற்றங்கள்தான் தமிழக்கியத்தில் நிகழ்ந்தவை. ஆனால் இன்று நாம் வாசிக்கும் எழுதும் படைப்புகள் இக்கூறுமுறைகளின் பண்முரண்களிலிருந்து உருவாகியவையா என்கிற கேள்வியை நாம் எழுப்பிக் கொள்ள வேண்டும். அதாவது மரபுக்கும் மண்ணுக்கும் திரும்புவதைத்தான் பின்நவீனத்துவமும் பின் அமைப்புமே குறிப்பிட்டதே தவிர அதை மறுதலிக்கவில்லை. ஆனால் அது(பின்நவீனத்துவம்) மரபின் எதைப் ”பற்றி பேச” யத்தனிக்கிறதென்பதை கவனிக்க வேண்டும். மரபை மீறுவதுமே மரபுதான். மரபு என்பதே வேவ்வேறு முரணியக்கங்களின் கூட்டு நனவு. பின்நவீனத்துவப் பார்வை என்பது உலகை இன்னொன்றாகப் பார்க்க வைப்பதுதான். மறுப்பதல்ல. (இன்றைக்கு சமூதாயத்தின் மீதான மையநோக்கு பார்வையே ஒரு பின்நவீனத்துவம்தான் என்பது வேறு விசயம்) ஆக அதுவும் பார்வை என்கிற அளவுகோலில்தான் வரும்.(இந்த இடத்தில்தான் புதுமைபித்தனை நாம் நினைவுகூர வேண்டும். உண்மையில் புதுமைபித்தன் கதைகூறல் ஒரு பின்நவீனத்துவ அனுகுமுறைதான்)
மேலே சொன்ன இந்த இரண்டு விதமான(நவீன-பின்நவீன) கதைகூறல்களிலிருந்தும் நாம் புதியயொன்றைக் கண்டுபிடித்தோ அல்லது மறுத்தோ முயற்சித்தோ கதைப்பரப்பை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி அவ்வளவாக நிகழவில்லை. நவீனத்துவ அமைப்பைத்தான் நாம எடுத்துக்கொண்டோம். இன்று எழுதப்படுகின்ற படைப்புகளும் விமர்சனங்களும் இதே வரையறைக்குள்தான் உருவாகியிருக்கின்றன. இவ்வரையறைகள் எல்லாம் படைப்பு செயலில் மிக முக்கியமானதுதான் என்றாலும் அது, பிரதியைப் புரிந்துகொள்வதிலும் அல்லது படைப்பாக்கத்திலும் இன்றைக்கு வாசிக்கும், எழுதும் வாசகஃபடைப்பாளிகளுக்கு மதிப்பிடு சார்ந்த குறுகிய வட்டத்தை அளித்திருக்கிறது. குறிப்பாக தன்னுடைய ”நாவல் கோட்பாடு” நுாலில் நாவல் பற்றிய வரையறைகள் மற்றும் யதார்த்தவாதக் கதைகள் பற்றி ஜெயமோகன் கூறுவது. உண்மையில் அவர் வரையறுத்தவை நவீன தமிழிலக்கியத்திற்கு அளப்பறியப் பங்காக இருந்தாலுமே அது அவருடையஇ அன்றைக்கு அவரின் படைப்பு மனதை ஒட்டியஇ அன்றைக்கிருந்த தமிழக்கியத்தின் போக்கை விமர்சிக்கும் ஒரு படைப்பாளியின் தனிப்பட்டக் கருத்துகள் (individual conception) அவை ஒருசில வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் உவப்பானதாக இருக்கலாமென்பதும் படைப்பிலக்கியத்தின் பல்துறையில் அது ஒரு ”கூறு” என அந்நுால் பற்றி பெரிய விவாதமும் அவ்வளவாக எழவில்லை. (உ.ம் அந்நுால் குறித்து சி.மோகனின் விமர்சினம் போன்ற ஒருசிலதைத் தவிர (1996 காலச்சுவடு கட்டுரை)). இன்றைக்கு எழுதப்படுகின்ற கதைகளும் மதிப்பீடுகளும் இந்த நவீனவரையறைகள் சார்ந்து எழுதப்பட்டு அக்கருத்துருக்கு கூடுதலாக வளம் சேர்கிறதேவொழிய அதை மறுபரிசீலினைச் செய்யவில்லை.(இது ஜெயமோகனுக்கு மட்டுமல்ல மேலே சொன்ன மற்ற் படைப்பாளி, விமர்சகர்களுக்கும் பொருந்தும்).
மேற்சொன்னதை இரண்டு விதத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஒன்று, ஓர் இலக்கிய ஆளுமையின் கருத்தை வரையறையாக அப்படியே எடுத்துக்கொள்வது, இன்னொன்று, அதையொட்டி பிற கருத்துகள் எழாமல் அலலது எழுந்ததைப் புறந்தள்ளி விடுவது. இது இரண்டுமே அது ”வரையறையாக” பரிணாமம் அடையக் காரணம். எப்படியிருப்பினும் இந்த ஸ்கூல் ஆப் தாட்ஸ் தவிர படைப்பாக்கத்தில் இருக்கிற ”பிற சிந்தனைகளையும் கருத்துருக்களையும்” அறிந்துகொண்டால்தான் தமிழ் கதையாடல்களின் போக்கு மாறும். அதே சமயம் முழு முற்றாக இரண்டாயிரத்துபத்தில் எழுதியவர்களை- அதவாது மேலே சொன்ன நவீனத்துவக் காலக்கட்டத்தில்- மறுதலித்துவிடவும் முடியாது. உதாரத்தனத்துக்கு பாலசுப்ரமணியம்பொன்ராஜின் சமீபத்தியக் கதைகள் தமிழ் புனைவில் பல்வேறு சாத்தியங்களை பரிசோதித்துள்ளது. வெறும் சுயானுபவம், யதார்த்தவாதக் கதைகூறலிலிருந்து வெளியேறி தன்கென ஒரு உலகைக் கட்டமைக்கிறது.
கதை
பொதுவாக ”கதை” என்பதை இப்படிச் சொல்லலாம்- கதையை ”அறிந்துகொள்ள” முயற்சிப்பது பிறகு அதை நோக்கியத் ”தேடல்”, பிறகு ”கண்டுபிடித்தல்” இந்த மூன்றும் ஒன்றையொன்று நிறைவு செய்யும் போது ஒரு வெளி உருவாகிறது. அதில் படைப்பாளி தன் கதையைக் கண்டடைகிறான்இ அதனுள் அதுவரை அவன் கேட்ட பார்த்த அறிந்த விவாதித்த குறுக்கீட்ட அத்தனையையும் நிகழ்த்த முனைகிறான். இந்த ”நிகழ்த்த” என்பதுதான் கதையாக முழுமை பெறுகிறது. இந்த ”நிதழ்தலில்”தான் ஒரு படைப்பாளி முழுமையான கதைநோக்கி வெளிப்படுகிறான். இம்மூன்று நிலைகளில்தான் நனவு நனவிலி மனங்கள் செயல்படும். நிகழ்தலுக்கு பிறகு படைப்பாளி கதையின் முழு வடிவத்தைப் பெறத் துவங்கிவிடுவான். அதன்பின்பு நனவு மனதால் அதைக் கட்டமைத்துஇ படைப்பூக்கத்துடன் இயக்க(play)) ஆரம்பித்துவிடுவான். பெரும்பாலான கதைகள் இந்த ”தேடல், கண்டுபிடித்தலில்” என இருநிலைகளுக்குள்ளே உருவாக்கபட்டு முழுமையற்றிருக்கும். ஒரு நல்ல வாசகன் அதை எளிதில் கண்டுகொள்வான். உண்மையில் ”நிகழ்தலி”ல்தான் கதை என்பதையே படைப்பாளி சென்றடைகிறான். அதற்கு முன்புவரை அப்புதினம் வெறும் சொற்களால் மொழியால் ”நிகழ்தலு”க்காக உண்டான தடம்(platform). இந்த இடத்தில் கதை முழுக்க முழுக்க நனவிலியில் இயங்கவில்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டமைப்பு பற்றி வேவ்வேறு படைப்பாளிகளுக்கிடையே மாறுபட்டக் கருத்து இருக்கலாம். ஒவ்வொருவரும் தனக்கான வடிவமான அதைச் சொல்ல முடியும். மொழியும் சொற்களும்தான் மாறும் ஆனால் மையப்புள்ளி ஒன்றுதான்.
இரண்டாயிரத்து பதினைந்துக்குப் பிறகு தமிழில் நிறையக் கதைசொல்லிகள் வெளிப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியான வருடங்களை (2016,2017,2018 2019ம்) சிறுகதைக்கானக் காலம் என்றே சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட ஐநுாறு கதைகளுக்கு மேல் நுாலாக வெளிவந்திருக்கக்கூடும். தம் முதல் சிறுகதை நுாலுடன் ”இளம் படைப்பாளிகளென” இருபது அல்லது இருபத்திஐந்து பேர் வரை அறிமுகமானார்கள். இவர்கள் அனைவரும் தீவிர இலக்கியத்தை நன்கு அறிந்தவர்கள்.பன்முக வாசிப்பு, மொழிக்கூர்மை, சிறந்த கதைசொல்லல் என அனைத்து தகுதியும் உள்ளவர்கள். தாங்கள் சிறுகதையின் நீண்ட மரபின் நீட்சியென்கிற பிரக்ஞையும் உண்டு. ஆனால் அவர்களின் அத்துனைபேரின கதைத் தேர்வும் ஒன்றிரண்டு தலைப்புக்குள் வந்துவிடக்கூடியவைதான். சுயானுபவங்கள், உணர்ச்சிமீறல்கள், உறவுமுரண்கள், பால்யவாழ்க்கைகள். அதாவது அவர்களைச் சுற்றி நடக்கும்வாழ்வு யதார்த்தங்கள் அப்படியே அவர்களின் பிரதிகளானது.(இக்கட்டுரையாசியரின் நுால் உட்பட).அன்றாட வாழ்க்கைச் சம்பவங்கள் கதைகளாக இருக்கின்றன. ஒரு நல்ல வாசகன் “இதெல்லாம் நான் தினமும் பார்த்துக்கொண்டிருப்பதுதானேஇ இதற்கு முன் எத்தனையோ கதையில் படித்துவிட்டேனே” என்கிறான். ”சரி மேலதிகமாக நான் என்ன கண்டுகொள்ள முடியும்?” . இங்கு மீண்டும் ஒன்றை நினைவு படுத்திக் கொள்கிறேன். எந்த வாசகனையும் மனதில் வைத்து படைப்பு வருவதில்லை. நார்மன் மெய்லரில் மேற்கோல் ஒன்றை ஃபுயண்ட்தஸ் இப்படி விவரிக்கிறார்- ”நுாலை எழுதும் முன்பு உங்களுக்கு இருத்தல் இல்லைஇ உங்கள் நுால் என்னவாக இருக்கிறது என்பதுதான் நீங்கள், நுாலால் எழுதப்படுகிறீர்கள்”. நடக்கும் சம்பவத்தை மாற்றிப் பார்ப்பதுதான் படைப்பாளியின் பங்கு. அவன் அங்கிருக்கும் பார்வையாளர்களில் ஒருவன் தான். அதன்மீது அவனுடைய சுயமதிப்பீடுகளை வைத்து உரையாடப் பார்க்கிறான். அப்போது அதற்கான எதிர்வினை ஒன்று அவனுக்குக் கிடைக்கிறது. அது அவனுக்கு எதிரனாதகாவும் இருக்கலாம் அல்லது அதுவரை தெரியாததாகவும் இருக்கலாம். உண்மையில் இந்த ”எதிர்வினை”யைப் பெறுவதுதான் அவனுக்கு புனைவு கொடுக்கும் செயல்.
சரி, கதையாடல் சார்ந்தப் பிரச்சனைகளுக்கு எதெல்லாம் காரணமாக இருக்க முடியுமெனப் பார்க்கலாம். 1, பிற கருத்துருக்களை அப்படியே பின்பற்றுவது(imitate).
2, படைப்பாளியின் தனித்துவப் பார்வை இன்மை (lack of Unique vision))
1,இந்த கதையாடல்உத்திகளால் இப்போது எழுதப்படுகின்ற கதைகளின்போக்கு மாறுபட்டிருக்க வேண்டும். நாம் எதையும் அப்படியே உள்வாங்கவும் பின்பற்றவும் செய்ய வேண்டாம் அதனோடு நம் மதிப்பீடுகளை உருவாக்கினால் போதும், புதிய போக்கு உருவாகும். இதற்கு எதிர்மறையாக ஒரு வரையறைகளை அப்படியே ”பின்பற்றுவதால்” சிந்தனையிலும் வடிவத்திலும் கதைகூறலிலும் தனக்கெனவொரு பாணியை(மொழிநடை அல்ல) உருவாக்கததால் ஒரு போக்கை மறுக்கும் புனைவுகள் எழுவது அரிதாகவே ஆகிவிடும். மேலே குறிப்பிட்ட அத்தனை இளம் எழுத்தாளர்களும் (இக்கட்டுரையாளர் உட்பட) இதையொட்டியே(ஒரேமாதிரியான) படைப்பு மனதைப் பெற்றிருக்கலாம் என்னும் ஐயம், அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு மிக சீக்கிரத்திலே ஏற்பட்டுவிடும்
2, நாம் எழுதும் கதைகள் அனைததும் காலங்காலமாக எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வரலாற்றைப் பார்த்தால் இதே சம்பவங்கள் ஜாதியப் பிரச்சனை, வர்ணம், முதாலித்துவம், உறவுசிக்கல்கள் எல்லாம் அப்போதிருந்து நடந்துகொகண்டேயிருப்பது தெரியும்.. அன்றைக்கு பாரதி பார்த்த பார்வைக்கும் நாம் சமூகத்தை நோக்குவதற்கும் வித்யாசம் கண்டிப்பாக உண்டு. வ.வே.சுவின் (பார்வை)கதைக்கும் இப்போதுக்குமான இடைவெளி அதிகம். இந்தக் காலம் மாற்றம் என்பதே ஒரு படைப்பாளியின் சமூகத்தின்மிது கொள்ளும் பிரத்யேகப் பார்வையில் உள்ளது. அதவாது காலமும் வரலாற்று நிகழ்வுகளும் அப்படியேதானுள்ளன அது நகர்வதாகவும் கலாச்சார மாற்ற நிகழ்வதாக நாம் கொள்வது நம்முடைய தனிப்பட்டகூட்டு பார்வையால்தான். அன்றையிலிருந்து இன்றைக்கு வரை சமூகத்தை ஒரேவிதமான பார்வையில் நோக்கினால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்! அச்சமூகத்திலுள்ள அத்துனை கலைகளின போக்கும் அப்படியே நிற்கும். இந்த ”பார்வை”தான் ஒரு படைப்பாளியின் தனித்துவமாக பிரதிபலிக்கப்படுகிறது. அன்றைக்கு சொன்ன அதே கதையைத்தான் இன்றும் சொல்லப் போகிறோம் பார்வைதான் வேறு. உண்மையில் இந்த விஷன் தான் கதை. பிரச்சனையென்னவென்றால் பார்வை அப்படியே இருக்கிறது. அதாவது தனிமனிதனின் புனைவில்(கற்பனையில்) பொதுமையான பார்வை(ஏற்கனவே சொல்லப்பட்ட) விரிந்திருக்கிறது. இதைப் பற்றி பேசும்போது பிரச்சனை அதனுடைய யைமத்தில்தான் போய் முடியும். எல்லா படைப்புளுக்குமே முதுகெழும்பாக ஒரு core தான் இருக்கமுடியும். அது அவனுடைய core value. (மையம் என இப்போதைக்கு இப்படிச் சொல்லலாம்) இதுதான் படைப்புகளில் வெளிப்படும் இது தற்காலிகமாக(அ) நிரந்தரமாக ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துகளால் கட்டப்பட்டிருக்கும். மையம் (core) தானாகவே உள்வாங்கும்போது அதன் பழைய மதிப்பீடுகளெல்லாம் உதிர்ந்து மாறத் துவங்கும். இது பன்முக வாசிப்பிலும் அனுபவத்திலும் கலாச்சாரமுரணிலும் பரிசோதனைமுயற்சியிலும்தான் சாத்தியம்.
(2018ல் எழுத்தாளர் எஸ். செந்தில்குமார் தொகுத்த சிறுகதைகள் குறித்த கட்டுரை நூலுக்காக எழுதியது)