பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’
இறந்துபோன நிலங்கள் சொல்லும் அந்நிலங்களின் கதை
பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ குறித்த விமர்சனம்.…..
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே அவனின் நிலத்திற்கான வரலாறும் தொடங்கிவிடுகிறது. ஒவ்வொரு சமூகமும் தோன்றுவதும் அவை தங்களுக்கு ஆதாரமான இருப்பை அமைத்துக்கொள்வதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் காலமாற்றங்கிளிலொன்று. ஆதியிலிருந்து மனிதன் தனக்கு தேவையானவற்றை தன் அடிமைத்தனத்திற்குள் கொண்டுவருவதும் அல்லது அதனை அழித்தொதுக்குவதையும் செய்ய முனைகிறான். பின் கொஞ்சம் கொஞ்சமாக அவன் சமூகளவில் பரிணாமம் அடையப்பெற்று பிறகு அவனின் சிந்தனையிலும் மாறுபாடு அடைகிறான். அதன்பின் மன்னராட்சி, நிலபிரபுத்துவம், சுரண்டலதிகாரம், வர்த்தக சிந்தனை, வணிகமயமாதல், மதக்கோட்பாடுகள், என ஒவ்வொன்றாக குறுக்கிடத் தொடங்குகின்றன. பஞ்சங்களால் இருப்பற்றலையும் மக்களை அடிமைவர்க்த்தினர்களாக உருவாக்கி உழைப்பையும் உயிர்களையும் சுரண்டப்படும் காலகட்டங்கள் இங்கிருந்துதான் உருவாகின. அப்படியான அடிமைச்சமூகம் தோன்றியதிலிருந்து இன்றைக்கு பலநூறு இனக்குழுக்களும் பலங்குடிகளும் வாழ்ந்தவந்த பெருநிலங்கள் அழித்தொழித்த வரலாற்றை நாம் கண்டுகொள்ளாது முன்னகர்ந்துகொண்டிருக்கிறோம் அல்லது நமக்கு தேவையற்றவையென்று நினைவிலிருந்து எடுத்துவிடுகிறோம்.
அக்காலத்தில் உலகளாவ விரிந்திருந்த ஐரோப்பிய ஆதிக்கமே அடிமைச்சமூகத்தை உண்டாக்கி சுரண்டலுக்கு அடித்தளமிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டு காலக்கட்டம் ஐரோப்பாவை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது. இந்நிலையில் அங்கு உருவான இலக்கியங்கள் அம்மக்களை மதப்போர்களுக்கும் உள்நாட்டுபோர்களுக்கும் அடிமைப்பட்டுகிடந்தற்கெதிரான புரட்சிக்கு வழிகோலச்செய்தது. பிரான்ஸில் மன்னர் பதினாறாம் லூயியின் அரசின் நிர்வாக சீர்கேடால்(அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்ஸின் ஈடுபாட்டாடும் ஒரு காரணம்) அம்மக்கள் அத்யாவசியத் தேவைகளின்றி பசியில் செத்து குவிந்துகொண்டிருந்தனர். அக்காலத்தில்தான் ஐரோப்பாவில் அறிவொளிக்காலக் கொள்கைகள்(;(Age of Enlightnment) உருவாகின. அக்கொள்கைள் சமூகத்தில் மக்களிடையே பரவியதும் இத்தகைய புரட்சிகள் தூண்டப்பட்டதற்கான காரணங்கிளில் ஒன்று. 1789 பிரெஞ்சு பாராளுமன்றம் கூட்டப்பட்டதுதான் பிரெஞ்சு புரட்சி முதல் துவக்கம். (1917ம் ஆண்டின் ரஷ்யப் புரட்;சியிலும், மா சே வழிநடத்திய சீனப் புரட்சியிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது)
இத்தகைய சூழலில் அந்நாடுகள் தங்களின் தேவைகளுக்காக எந்த பிராந்தியத்தையும் அதன் அதிகாரத்திற்குள் கொண்டுவர முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருந்தன. இக்காலத்தில்தான் இந்தியாவில் பிரிட்டிஷ் அதன் வர்த்தகத்தைக் காலூன்றியது. அதன்பின்பு இந்தியாவைச் சுரன்டிய வரலாறு நாம் அறிந்ததே. நாளடையில் அந்நிறுவணத்திலே உருவான ஏகபோக சுரண்டல்களும் அதிகாரங்களும் கிழக்கிந்திய நிறுவனத்தை பிரிட்டனின் கையை மீறிச் சென்றன. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர வௌ;வேறு வியாபாரப் போட்டிகளும் வரிகளும் மக்கள் மீது வந்து விழத்தொடங்கின
கிழக்கிந்திய கம்பெனியின் ‘இந்திய ஏஜெண்டுகள்’ நெசவுத் தொழிலாளர்களுக்கு மூலப்பொருட்;களை வழங்கி ஐரோப்பிய சந்தைகளில் விற்றுக்கொடுத்ததுடன் அவ்வர்த்தகத்திற்கு சிறந்த பிரதிநிகளாகவும் தங்களைக் காட்டிக்கொண்டனர், நாளடைவில் இவர்களே பண்ட முதாளிகளாகவும் மாறியனார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு துணிகள் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டபோது, கம்பெனியின் காவலாளிகள் ஒவ்வொரு இந்திய நெசவாளர்களின் வீடுகளில் காவலுக்கு நிறுத்தப்பட்டு அவர்கள் வெறொரு விற்பனையாளர்களுக்கு துணிகளை விற்றுவிடாதிருக்க கண்காணிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட அடிமைகளைப் போல. இப்படியானதொரு நிலையில் நெசவாளர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி கிராமங்களுக்கு குடிபெயர்ந்தனர். (நெசவாளர்கள் கிளர்ச்சி 1773). நிலங்களற்ற விவசாயிகள் மீது முதலீடு செய்யாமால் அவர்களின் பண்ணைகளிலிருந்து மூலப்பொருட்களை வாரிக்கொண்டுபோவதும், அபனியையும் அவுரியையும் கட்டாய ஒப்பந்த முறையில் விளைச்சலிடவும் நிர்பந்திக்கப்பட்டார்கள். ஒவ்வொரு தோட்ட முதலாளியும் விவசாயிகளை மிரட்டுவதற்காகவே ‘தலைவெட்டி கும்பல்களை’ வைத்திருக்கிறார்கள்.
இங்குதான் (பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்) ‘தாண்டவராயன் கதை’ நாவல் தொடங்குகிறது. தமிழில் பெருநாவல்கள் உருவானதற்குகூட ஐரோப்பிய, ரஷ்ய இலக்கியங்களே காரணமாக இருந்திருக்கின்றன. பெருநாவல்களை வாசிப்பதென்பது தொடர்ச்சியான ஒரே கனவை தினம் விழித்துக்கொண்டு காணுவது போல். கனவு கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெற்று பிரம்மான்டமாக-மலையுச்சியிலிருந்து பௌர்ணமி நிலவைப் அண்ணாந்து பார்ப்பது போல– நம் கண்முன்னே தோன்றும். அக்கணத்தை ஒரு பேரானந்தம் என்றே சொல்லலாம். அப்படியான ஒரு கனவினை கட்டியெழுப்பியது தல்த்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டணையும்’ போன்ற நாவல்கள். என் வாசிப்பைப் பொருத்தவரையில் தமிழில் சுந்தரராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள், ஜே.ஜே சிலகுறிப்புகள்’ (ஜே.ஜே- ஆழ்மனதின் சிந்தனைக்கு இருப்புக்கும் இடைப்பட்ட வெற்றிடத்திலிருந்து கேள்வியெழுப்பி களைத்துப்போடக்கூடிய ஒன்று)ää பா.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணியும’ ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ போன்றவைகளை வகைப்படுத்துவேன். இங்கு பெரும் நாவல்களிலிருந்து (கட்ட புத்தகங்கள்) வாசகன் ஒதுங்கி நின்றுகொள்ளும் சூழல் இன்னும் இருக்கிறதென்பதை மறுக்கவியாலது அதற்கு காரணம் சில நாவல்கள் சொற்களைக் குவித்து அதைச்சுற்றி கெட்;டி அட்டைகளை போட்டுக்கொண்டு வாசகனை ஏமாற்றிவிட்டதும்கூட. உண்மையில் விஸ்தாரமான பரப்பையும் மனதின் நுண்ணிய அடுக்கினை கட்டியnழுப்பி பின் கலைத்துபோடக்கூடிய நாவல்வகைமைகள் தமிழில் குறைவாகவே இருந்திருக்கின்றது இருக்கின்றதும்கூட. அதிலும் சில அறிதான படைப்புகள் -தயங்கி எடுத்தபோது- வாசகனின் வெற்றிடங்கிளில் நிறப்பியதும் உண்டு. உம்: பிரான்ஸிஸ் கிருபாவின் ‘கன்னி.’
வரலாற்றை மீள் உருவாக்கம் செய்கின்ற இலக்கியப்பிரதிகள் பெரும்பாலும் ரஷ்ய, ஐரோப்பிய இலக்கியத்தில்தான் நடந்திருக்கின்றன. ஒரு வரலாற்று ஆசிரியனைவிட இலக்கியவாதிகளே அதனை கறாரான தன்மையில் எவ்வித சமநிலையுமின்று உருவாக்கியிருக்கிறார்கள். அக்காலத்திலிருந்தே படைப்பாளிக்கு தன் கடந்த காலங்களின் வரலாற்றின்மீது அவனுக்கிருக்கும் பற்றுதலும் ஒரு காரணம். ஒரு வரலாற்றினை பினைந்து எழுதுவதற்குää நாவலாசிரியன் முதலில் காலத்தின்மீது ஏறும் சாகஸ முயற்சிகளை புனைவுகளின் ஊடாக செய்ய முனைகிறான். ஒருவகையில் இது பொட்டல் தளத்தை மலைக்குன்றாக உயர்த்துவது போலத்தான். புனைவாளன் அவ்வரலாற்றை எவ்வகையில் தன் புனைவுகளுக்குள் பயன்படுத்துகிறான்? அதன் தரவுகளை எவ்வகையில் முன்னிருத்திக்கொள்கிறான் என்பதிலே அதன் வெற்றியிருக்கிறது.
தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும’; போரின் பின்புலத்தில் எழுதப்பெற்ற ஒரு செவ்வியல் நாவல். அதில் வரலாற்று தரவுகளை ஆசிரியர் பயன்படுத்திருப்பதற்கு நிகராக வேறெந்த நாவல்களிலும் காணவியலாது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எவ்வித சமநிலையுமின்றி நியாயங்களை முன்னிருத்தப்பட்டிருக்கும். போரும்அமைதியும் வாசித்தவர்களுக்கு கல்கியின் பொன்னியின்செல்வன் எவ்வகையிலும் காவியமரபையோ செவ்வியல் வடிவத்தையோ கொண்டிருக்கவில்லையென அறியமுடியும். இவ்வகையானவொரு சூழலுடன் ‘தாண்டவராயன் கதை’ நாவலையும் ஒப்பிட விழைகிறேன். மேற்கத்திய படைப்புகள் மட்டுமே மகத்தானவை என்று தீர்க்கமாக நம்பிக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கு இந்திய பேரிலக்கியங்கள் வரிசையில் எவ்வித ஐயமுமின்றி வைக்கபடவேண்டிய வகையில் தமிழில் இப்படியொரு நாவலிருப்பது பெரும் வரமென்றெச் சொல்லலாம்.
தாண்டவராயன் கதை பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் லிட்டில் போர்ட் நகரத்தில் ஒரு வெள்ளைக்கார தம்பதிகளின் வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது. டிரஸ்ட்ராம் அவன் மனைவியான எலினாருடனான சாபக்காட்டில் புணர்சிக்குட்படுகிறான். அதன்பிறகு அவளுக்கு பார்வையிழப்பு ஏற்பட்டுவிடுகிறது. திடீரென்று ஏற்பட்ட அப்பார்வையிழப்புக்கான காரணமறியாது அவர்கள் சுணங்கிவிடுகிறார்கள் அதற்குக்காரணம் தாங்கள் சாபக்காட்;டினுள் நுழைந்ததுதான் என நினைத்துக்கொள்கிறார்கள். அவளின் பார்வையிழப்பினை சரிசெய்வதற்கான மருந்தினைத் தேடி அவன் வௌ;வேறு நிலங்களுக்கு பிரயாணம் செய்கிறான். நாவலில் அப்போதிருந்த இங்கிலாந்தின் அரசியல் சூழலை பா.வெங்கடேசன் கதைகளுக்குள் காத்திரமாகக் கொண்டுவருகிறார். பிரான்ஸில் இருக்கும் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட் என்பவரிடம் எலினாரை அழைத்துச்செல்லும் போது அங்கு பிரெஞ்சுப் புரட்சியின் கிளர்ச்சிக்காலக்கட்டம் நடந்துக்கொண்டிருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் ஐரோப்பா காலனியத்தை உருவாக்கி தங்களுக்கு கீழிருக்கும் நாடுகளை அடிமைப்படுத்திக்கொள்ள முனைந்த காலக்கட்டம் அது. அப்போது ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்திற்கெதிராக பிரெஞ்சு படைகளிடம் ஆதரவைக்கேட்டு வரும் ‘சொக்ககௌட’ என்ற தூதுக்குழுவினன் வழியாக இந்திய பிராந்தியத்திற்குள் கதை நுழைக்கின்றது.
வெவ்வேறு நிலத்தினூடாக நாவல் செல்லும் போது முதலில் எனக்கு ஏனோ குர் அதுல்ஐன் ஹைதரின் ‘அக்னி நதியே’ நினைவில் வந்தது. ஆனால் அந்நாவல் காலவோட்டத்தின்மீது ஒரு பூனையாக தாவிச்சென்றுகொண்டு பின் நிகழ்காலத்திற்கு வந்திறங்கி சாவகாசமாக நடக்கத்தொடங்கிவிடும். அது போல அல்ல இந்நாவல் என உணர்ந்துகொண்டேன்.
நாவல் இந்திய பிராந்தியத்திற்குள் நுழைகின்றபோது அப்போதைய இந்தியாவின் பின்காலனிய சூழலின் ஆரம்பகாலங்கள். ஹைதர் அலியின் மரணத்திற்குபிறகு திப்புவின் அதிகாரத்திலிருக்கும் மைசூர் பகுதிகளும் அதை எதிர்த்துக்கொண்டிருக்கும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகளும் கொண்ட பின்புலத்தின்ஊடே கதையை விரித்தெடுக்கிறார் ஆசிரியர். தாண்டவராயன் கதையில் டிரிஸ்ராம் ஒரு மையப்புள்ளியே அவனைச்சுற்றி படரும் கதாபாத்திரங்களும் அவைகள் சொல்லும் கதைகளுமே இந்நாவல். சத்யபாமா, கெங்கம்மா, பலகுணம் முதலியார், ஸ்வப்பனஹள்ளி அகதிகள், துயிலார் இனம், பூசாரி, கௌட என் ஒவ்வொன்றின் கதைகளும் டிரிஸ்ட்ராமைச் சுற்றி பின்னி ஒரு விடுபடவியலாத சக்கரவியூகத்தினுள் அவனை மாட்டிவிடுகிறது. இதனூடாக பா.வெங்கடேசன் எழுப்பும் கேள்விகள்தான் உண்மையான கதைகள் மாறாக டிரிஸ்டராம் அவன் மனைவியின் கண்நோய்க்கு தேடியெடுக்கும் மருந்து மட்டுமே நாவலல்ல.
பெரிய நாவல்களை எழுந்துநிறுத்தச்செய்வது அதைச்சுற்றியும் சிதறிக்கிடக்கும் பல்வேறு கதாபாத்தரங்களே. அவ்வகையில் இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்தரங்கள் சுற்றி நிற்கின்றன. மிகக்குறைவான சித்தரிப்பு கொண்ட பாத்தரங்கள்கூட நாவலை கூர்ந்து அவதானிக்ச் செய்கின்றன. மேலாட்டமான வாசிப்பில் ஏதோ துப்பறியும் நாவல்களைப் போல வாசிக்கத்தொடங்கினால் ஏமாற்றமே மிஞ்சும். அதே சமயத்தில் அம்பர்தோ ஈகோவின் Name of the க்கு இணையான பிரம்மான்டத்தையும் வாசிப்பின் பரப்பையும் தரக்கூடியது.
ஒருவரலாற்றi எடுத்துக்கொண்டு புனைவில் மிகைக்கற்பனையைக் கொட்டுகிற நாவல் இது அல்ல மாறாக இதில் முழுக்க முழுக்க பா.வெங்கடேசன் தன் சுயபிரக்ஞையை பூரணமாக பயன்படுத்தியிருக்கிறார். வரலாற்றின் அழிக்கப்பட்ட நிலங்களும் அந்நிலங்களின் வாழ்ந்துகொண்டிருந்த மானுட துக்கங்கள் இழையோடுகின்றன. அவ்வகையில் மாஸ்தி வெங்கடேஸ அய்யங்கார் (எம்.வி.அய்யர்) எழுதிய ‘சிக்க வீர ராஜேந்திரனை’ நாவலைக் கூறமுடியும். சிக்கவீர ராஜேந்திரன் பிரட்டிஷ் ஆட்சியியின் கீழிருந்த குடகு பகுதியில் மன்னராக இருந்தவன். அக்காலத்தில் குடகில் வாழ்ந்த மக்களின் வாழ்வு போராட்டங்களையும் ஆட்சிமுறைமைகளையும் புனைவாக்கி எம்.வி. அய்யர் கொடுத்திருப்பார். குடகர்கள் சிறந்த போர்வீரர்கள் ஆனால் அவர்கள் நாட்டைத் அவர்களே ஒருபோதும் ஆண்டதில்லை. சிக்க வீர ராஜேந்திரன் நாவலை படிக்கத்தொடயபோது முதலில் அதை ஒரு ராஜாக்கதைகளைக்கொண்ட வரலாறு போன்றுதான் எண்ணியிருந்தேன். பின்பு குடகைப் பற்றித் ஏ.கே.செட்டியாரின் பயணக்கட்டுரைகளையும், ஜெயமோகனின் கண்ணீரைப் பின்தொடர்தல் கட்டுரைகளையும் படிக்கின்றபோது அந்நாவலில் நான் தவறவிட்டவைகளுக்காக வருந்தினேன்.
வரலாற்றை உருட்டி விளையாடுதல்:
1. நாவலின் ஒவ்வொரு கதையினூடேவும் வரலாற்றை பொதிந்திருக்கிறார் பா.வெங்கடேசன். இதுவொரு அசாத்திய முயற்சி. பதினாறு பதினேழாம் நூற்றாண்டில் கத்தோலிஸத்தினை உடைத்தெறியும் கால்வினியம் வளர்ந்துவந்த காலத்தை அனாயசமாக நாவலின் காலத்தினூடே சொல்லிச்செல்கிறார். சாரா, கேத்ரின், எலினாரின் மூவரும் ஜான் வெஸ்லேயின் (john Wesley 1700-1780) பிரசங்கத்தினைக் கேட்கச் செல்லும் பகுதிகள்.
2. நாம் இதுவரை மேலோட்டமான வராற்றினைப் படித்திருப்போம், அதாவது, திப்புவின் நூலகம் இரண்டாயிரம் நூல்களைக்கொண்டுள்ளதென்று. நாவலில் சிலிடைந்த தூசி துப்பைகளுடனான அந்நூலகத்தினை நுண்ணிய காட்சிகளாக நம் ஆழ்மனதில் எழுப்புகிறார்.
3. டிரிஸ்ட்ராம் எலினாரின் கண்நோய்க்கான மருத்துவ விளம்பரத்தைப் பார்ப்பதாக காட்டப்படும் விளம்பரம் ஒன்றில் “வர்ஜீனியா கெஸட்டின் நடுப்பக்கத்தில் வில்லியம்ஸ்பர்க்கில் விற்கப்படவிருக்கும் இருபத்தைந்து வர்ஜீனிய அடிமைகளைப்பற்றின சர்ச்சிலென்பவருடைய விளம்பரத்திற்கும், மரணதண்டனைக் கூட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பதினைந்து கருப்பர்கள் விற்பனைக்குத் தயாராக இருப்பதைத் தெரிவிக்கும் மாவட்ட மணியக்காரரின் அறிவிப்பிற்குமிடையில் டிரிஸ்ட்ராம்; இப்படியொரு வினோதமான விளம்பரத்தைப் பார்த்தான்” (பக் 73) அக்காலத்தில் உருவான வரலாற்று அதிகாரத்தை ஓங்கி நிறுத்தப்படுவதற்காக கட்டமைக்கப்பட்டதை நினைவில்கொள்ள வேண்டும்.
4. ஜினியஸ் எழுதியதாக வில்லியம் பிட் (William Pit -1759- youngest PM in British) வாசிக்கின்ற கட்டுரையொன்றில், மதங்களின் கோட்பாடுகளையும் அம்மதங்கிளினால் தூண்டப்பட்ட சமூகத்தின் போர்களையும் சொல்லப்படுவது ஒரு உலகியல் தத்துவம்.
தாண்டவரயன் கதையில் சொல்லப்படும் வரலாற்றுக்களத்தினை இங்குமட்டுமின்றி எந்நிலத்திற்கும் உரியதாக எடுத்துக்கொள்ள முடிகிறது. நாம் தினம் அறிந்துகொண்டிருக்கும் ஈழப்பேராட்டங்களோடு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டியது அவசியம். தமிழ் ஈழம் முழுவதும் அழிக்கப்படுவதற்கான பிரயத்தனங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, அதற்கெதிரான அறைகூவல் விடுத்த இலட்சியவாதிகளின் தடம்கூட இங்கில்லை என்பதுதான் உண்மை. நாவலில் எலினாரின் கண்களுக்கு தெரிவது பிரான்ஸ், இங்கிலாந்து என்ற நகரங்களில்லை. ஒலிகளாலும் வினோதமான ஸ்பரிசங்களாலும் வாசனையாலும் கட்டப்பட்ட வெறோரு நகரம். அது எந்தவொரு தேசமாகவும் இருக்கக்கூடுமென்று நாம் அறிவதிலே இருக்கிறது. இவ்வரிகளைப் படிக்கின்றபோது போர்ஹேஸின் உலகப்பயணம் நினைவில் எழுந்தது. பார்வையின்றி அவர் செய்த பயணங்களில் அறிந்துணர்ந்த நிலங்களை அகத்தில் எப்படி பதிவிட்டிப்பார்.! எலினாரின் கண்நோக்கான மருந்தினைத் தேடத்தொடங்கும் பகுதியில் சொக்ககௌட பேசப்படும் இடங்கள் அப்போது நடந்துகொண்டிருக்கும் பேரரசுகளின் அதிகாரத்திற்கெதிராக புரட்சியாளர்களின் கிளர்ச்சிகள் இடம்பெறுகின்றன்.
இந்நாவல் முழுவதையுமே வெறும் வார்த்தைகளாகää வரிகளாக ஒரு கதையினைப் போல வாசித்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். பல்வேறு குறியீடுகளினூடே பிரதியை ஆசிரியர் சிறுக சிறுக நகர்த்தெடுத்து பின்பு அக்குறியீகளுக்குள் பொதிந்திருக்கும் முடிச்சுகளை பின்னால் அவரே விரித்தெடுத்துவிடவும் செய்கிறார். அப்போது அதனை உணரும்போது கதையின் இன்னொரு பிம்பம் புலப்படுகிறது. (உம்) சொக்க கௌடா “மருந்து சாபக்காட்டிலல்ல சாதாரணக் காட்டை சாபக்காடாக்கிய கதைகளில் இருக்கிறது” என்கிறான். (பக் 128)
பா.வெங்கடேசனின் இன்னொரு கலைத்தன்மை அவரின் எழுத்துநடை. இந்நடையை தன்னிடமிருந்து கண்டுகொள்ளவே அவருக்கு இரண்டாண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஒருவகையில் இந்நடையினை “ராகம்“ என கூறலாம். எல்லா ராகங்களும் தன்னை உணருபவர்களை முதலில் உள்ளிழுக்காது நழுவிச்செல்லும். அதுபோல இவரின் நிறுத்தமற்ற லயத்தினை வாசித்து சென்றுவிட்டதும் பின் அதனோடு நம்மையறியாது இயைந்து உள்ளே செல்லத் துவங்கிவிடுவோம். வாசகனை வரி பிசகாமல் முன்னிருத்திவைக்கக்கூடிய ஆகிருதிய இந்நடைக்கிருக்கிறது. ஜோஸ் சரமாகோவின் நடையையும் மார்க்கேஸின் மொழிவடிவையும் என்னால் இப்பிரதிக்குள் உணரமுடிகிறது. சமயங்களில் கோணங்கியின் மொழியைக்கூட ஞாபகப்படுத்தலாம். ஆனால் எளிய வாசிப்புக்கு பழக்கப்பட்டவர்கள் யாரும் கோணங்கியின் கதைமொழிக்குள் நுழைய முடியாது. பிரக்ஞையின் வெளியிலிருந்து எழுதத்துவங்கி பின் தன்பிரக்ஞை கூறும் வெளிக்குள் மட்டுமே உலவும் எழுத்து அவருடையது. ஒவ்வொரு சொற்களும் அப்பிரதி கூறவியழும் கதைக்கான கதைகள் கொண்டிருக்கும் கோணங்கியின் எழுத்து. கோணங்கியின் ‘த’ நாவல் குறித்தும் அவரின் எழுத்தின் தடைகளைப் பற்றியும் பா.வெங்கடேசனே கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். (காலச்சுவடு இதழ் டிச 15)
எழுத்தாளனின் நடை எதுவாகினும் அதனைப் புறந்தள்ளி அப்பிரதி பேசும் கதையினை மட்டுமே புரிந்துகொள்ள முயல்வதென்பதே பரந்த வாசிப்புக்கொண்ட வாசகனின் இயல்பு. என்னளவில் இவ்வெழுத்து எனக்கொரு தடையாக இருக்கவில்லை. மாறாக பா.வெங்கடேசன் பயன்படுத்தும் ‘அடைப்புக்குறிக்குள் குறிப்பிடுவது’தான் வாசிப்புத்தடையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அதுவே பல்வேறு இடங்களில் மாறுபாடுகளாக என்னை உணரச்செய்தது. சில அடைப்புக்குறிகளுக்குள் ஒரு கதையையே வைத்திருக்கிறார். உதாரணமாக நீலவேணி சர்க்கத்தில் வரும் மாலேஸ்வரி பற்றியக் கதை. அவ்வடைப்புகுறிகளை புறந்தள்ளினால் மாலேஸ்வரி கதைப்பற்றிய அவதானிப்புகளைத் தவறவிடக்கூடும்.
இரண்டாவது, அடைப்புக்குறியை கதாபாத்திரங்களை பகடி செய்வதற்கும் பயன்படுத்துகிறார். உ.ம் ஹிடெதுர்க்க வனத்திற்குள் செல்லும் முதலையைப் பற்றிச் சொல்லும்போது “அவன் வனத்திற்குள் சிக்கிää புரண்டெழுந்து, குன்றிமணிகளை லங்கோட்;டிடி போட்டுக்கொண்டு, உடலின் அட்டையட்டையாக படிந்த அழுக்குடன்” என்று முடிக்கையில் அடைப்புக்குள் – அவன் ஆறுநாட்களாக குளிக்கவில்லை என சொல்கிறார். அதுபோல டிரிஸ்ட்ராமை காட்டினுள் காவல் காத்துக்கொண்டிருக்கும் கங்காணிகள் அவனை ஒப்படைக்கவிருந்த இடத்தில் அடைப்புக்குறிக்குள் ‘விட்டது சனியன்’ என பகடியை போட்டுவிட்டுச்செல்கிறார். அவர்கள் எவ்வளவு சிரமத்துடன் அவனை வனத்தினுள் வைத்திருந்தார்களென்கிற காட்;சி மனதில் வந்து போகிறது. இதுபோல சில பகுதிகளின் எள்ளல்கள் அடைப்புக்குள் வந்துபோகின்றன.
இந்நாலைப் வாசிக்கின்றபோது இதுவரையில் வரலாற்றை புனைவுக்குட்படுத்திய நாவல்களை பட்டியலிட்டுப் பார்த்தேன். (நான் வாசித்த வரையில்) தல்ஸ்தாயின் “போரும் அமைதி” , குர் அதுல்ஐன் ஹைதரின் “அக்னி நதி” மற்றும் தமிழில் சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” பூமனியின் “அஞ்ஞாடி” சு.வெங்கடேசனின் “காவல் கோட்;டம்”. கன்னடத்தில் எம்.வி. அய்யரின் “சிக்க வீர ராஜேந்திரன்” மலையாளத்தில் சந்துமேனனின் “இந்துலேகா” ஓ.வி.விஜயனின் “கசாகின் இதிகாசதம்”இதில் பூமணியின் அஞ்ஞாடி ஒருவகையில் வரலாற்று வகைமையான யதார்த்த நாவல். கலிங்களில் கிராமிய வாழ்க்கையையும், சாணார் சமூக வளர்ச்சியையும், சிவகாசி கலவரங்களும் என அறியப்படாத வரலாற்றுத் தகவர்களை கொண்டெழுந்தாகிருந்தாலும் பூமணியின் புனைவுமொழிக்கே அதனை படிக்குக்கூடுகிறது. ஒருகட்டத்தில் தகவல்களில் குவியல்கள் ஆவணமாக விழுந்து அலுப்பூட்டிவிடுகிறது. சு.வெங்கடேசனின் “காவல் கோட்டம்” நாவல் முழுவதும் தகவல்கள் மட்டுமே நிறம்பியவொன்று. அதில் கலைவேறு தகவல் வேறாக தொக்கி இருப்பதை காணமுடியும். மேலேவுள்ள பட்டியிலில் எவ்வித நவீனத்துவமும் அணுகவியலாத வகையில் ‘தாண்டவராயன் கதை’ பேரிலக்கியத்திற்குள் வந்துவிட்டிருக்கிறது. தாண்டவராயன் கதையை செவ்வியல் வடிவத்தில் நவீனம் என்று வகைப்படுத்தலாம். இப்பிரதி முழுவதுமே பல நுண்ணிய படிமங்கள் பரவிக்கிடக்கின்றன வெவ்வேறுபட்ட வாசிப்பிலே அதன் பல கோணத்தை அறியமுடியும். இதுவரை தமிழ் நாவல்களின் மீது, புதிய வாசகர்களுக்கு உதாசினங்களிருப்பின் அவற்றை எடுத்தெறிந்துவிட இந்நாவல் முயலும்.
தாண்டவராயன் கதையை வாசித்து முடித்த போது என்னுள் எஞ்சியவை ஒரு பரவசமோää சுவாரசியமோ அல்ல, மாறாக மானுட துக்கத்தின் வலி மட்டுமே. அதிகாரமையத்தின் பெருத்தக் கரங்ககளுக்கு அஞ்சி வாழ்ந்துவரும் மனிதர்களின் கதைகள். கண் நோய்க்கான மருந்தென்பது ஒவ்வொரு பிராந்தியத்திலும் கிடைக்காமல் இறுதியில் அலைந்துகொண்டிருப்தையே தவிர பிரிதொன்றுமில்லை. பா.வெங்கடேசனின் மற்றகதைகளிலிருப்பதைப் (ராஜன் மகள்) போன்று இந்நாவலிலும் காதலை ஒரு கயிறுபோல திரித்து வருகிறார். அக்காதல் கதைக்குள் நுழைகின்ற வழியும் பின் மறைந்துவிடுவதும் நடந்துகொண்டேயிருக்கிறது. கெங்கம்மா கதாபாத்திரம் கதைக்குள் வந்து சேருமிடம் இந்நாவலை வேறொரு கண்ணோட்டத்தில் காட்;டுகிறது. உண்மையில் அவள் மூலமாகவே மானுட துக்கத்தினையும் சரிவையும் கீழ்மையையும் ஆசிரியர் சித்தரிக்கிறார். கெங்கம்மா போரினைப்பற்றி சொல்லவதில் அவள் வாழ்வு புலப்புடுகிறது. “யார் சண்டையிலும் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் சுரோனித்ததைப் பீய்ச்சியடிக்ககும் சாக்கடையகள் ஆக சேரிப்பெண்களின் யோனிகள் தானே விதிக்கப்பட்டிருக்கின்றன” கெங்கம்மா எலினாரின் இன்னொரு பிம்பம். எலினார் தன் கற்பனையில் வைத்திருந்த ஒன்றுதான் அவள். எலினாரின் கனவுகளில் அவள் இருந்திருக்கிறாள். டிரிஸ்ட்ராமிற்கு வழிகாட்டியாகää கதைக்குள் இருக்கும் முடிவற்ற கதைகளைக் காட்டும் ஆதியினத்தியாக.
தாண்டவராயன் கதை வெளிவந்தது 2008 ம் ஆண்டு. இந்நாவலை; எழுதுவதற்கானத் தரவுகளைத் திரட்ட மட்டும் பா.வெங்கடேசனுக்கு எட்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. எழுதி முடிக்க இரண்டு வருடம். ஆக முழுவதுமாக பத்துவருடங்களை செலவிட்டிருக்கிறார். இப்படைப்பு தமிழில் வெளிவந்தபோது பரவலான வாசகப்பரப்பை பெற்றிருக்கவில்லை. மூத்த எழுத்தாளர்களோ கட்டுரையாளர்களோ இலக்கிய முன்னோடிகளோ இதைப்பற்றி இதழ்களிலும் இணையத்திலும் எழுதியதற்கான தடங்கள் தேடிப்பார்த்தபோது எதுவும் கிடைக்கவில்லை. நண்பர் ரியாஸிடம் பேசும்போது பாலசுப்ரமணியம் பொன்ராஜ், ராஜன்குரை இருவா் மட்டுமே தங்களுடைய வலைத்தளத்தில் எழுதியிருப்பதாகச் சொன்னார். அவைகள் மட்டுமே இந்நாவலுக்காக எழுதப்பட்டது. இப்பிரதியை வாசித்தபின் எனக்குள் எழுந்த கேள்விகள். ஏன் இத்தகைய ஒரு ஆகச்சிறந்த புனைவினை யாரும் முன்னிருத்தவில்லை?
(கவிஞர் கிருஷ்ணப்ரியா அவர்கள் சித்தனவாசலில் ‘எழுத்தாளி’க்காக ஏற்படுத்திய பா.வெங்கடேசனுடனான தாண்டவராயன் கதை வாசித்தல் நிகழ்வில் வாசித்தக் கட்டுரை)
உதவிய நூல்கள்
இந்திய புதிய காலத்தில் –அன்தோன்வா, கத்தோவ்ஸ்கி
பட்டியலிட்ட நாவல்களின் மீள்வாசிப்பு மற்றும் தாண்டவராயன் கதை