பிரக்ஞைக்கு அப்பால்….
பிரக்ஞைக்கு அப்பால்….
ஓவியர் ஹரிதாஸை சித்தனவாசலில் சந்திக்கும்வரை ஆத்மநாமைப் பற்றி நான் எங்கும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்பெயரையே அன்றுதான் எனக்கு பரிட்சயம். ஓவியங்களுடனான என் துவந்தமும் அன்றிலிருந்தே துவங்கியது. இன்று, இந்திய ஓவியர்களின் அகவுலகம் சார்ந்து திரட்டப்பட்ட என் ஆராய்ச்சி நூலுக்கான உந்துதல் அச்சந்திப்பில்தான் முகிழ்ந்தது. தொண்ணுற்றியாறில் சித்தனவாசல் இப்போது நீங்கள் பார்ப்பதுபோல கருவேல மரங்கள் சூழ்ந்த வனமாகவும் கிரஷர் லாரிகளின் ஓயாத இரைச்சலினூடே ஒரு முள்ளெலி போல தன்னை ஒடுங்கிக் கொண்டிருக்கவில்லை. வில்வ மரங்களும் பொருசியும் மண்டிய வனமாகவும் கணத்திற்கொருமுறை மயில்களின் அகவலும் என எப்போதும் ஓயாது சப்தம் இருந்து கொண்டிருக்கும். ஹரிதாஸிற்கு அவ்விடம் பெரும் ஆத்மார்த்தவுணர்வை அளித்திருக்க வேண்டும். பாறையுச்சியை அடைந்ததும் களைப்பு படர்ந்த வயதான கண்கள் மெல்ல தெளிந்தது.
இந்தியா டுடேக்கு ஓவியர் ராமானுஜத்தைப் பற்றிய கட்டுரையொன்றிற்காகவே அச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தேன். விட்டல்ராவ் எழுதிய ‘காலவெளி’ நாவலைத் தவிர ஓவியர்களைப் பற்றிய புனைவுகளோ அபுனைகளோ எதுவும் அப்போது வந்திருக்கவில்லை. அந்நாவலில் ராமானுஜத்தைப் பற்றிய வரிகளை வாசித்ததும் அது குறித்து ஹரிதாஸிற்கு கடிதம் எழுதியிருந்தேன். அவர், தான் அடுத்தவாரம் தமிழ்நாட்டுக்கு வருவதாகவும் அப்போது சந்திக்கலாம் என்று பதிலனுப்பியிருந்தார்.
ஆனால் சித்தனவாசலுக்கு அவர் வந்ததிலிருந்து அன்று முழுவதும் என் கட்டுரைக்கான உரையாடல் அமையாமல் நகர்ந்துகொண்டே சென்றது. நான்கைந்து முறை அப்பேச்சை துவங்கும் போதெல்லாம் தவிர்த்தபடியே வந்தார். கோடுகளும் வண்ணங்களும் கொண்ட சூழலுக்குள் எப்படி அப்பேச்சு மறைந்துக்கொள்கிறதென நானும் காத்திருந்தேன். ஆனால் அடுத்தடுத்த கணங்கள் என் கணிப்புகள் உதிரத் தொடங்கிற்று. தாமரைக் கம்பள ஓவியங்களை பத்துநிமிடங்களில் பார்த்துவிட்டு மலை விளிம்பிற்கு வந்தவர் சுற்றி விரிந்திருக்கும் பச்சை நீண்ட காட்சிகளையும் கண்ணாடி வட்டங்களாக கிடக்கும் குளங்களையுமே வெகுநேரம் வெறித்தவாறிருந்தார். எனக்கோ கேட்கவேண்டிய கேள்விகளின் இருப்பு பிரக்ஞையைக் கனத்துவிட்டிருந்தது. வயதானவர்களுக்கு அழகியல்கள் மீது ஏனிந்த விசாரிப்புப் பார்வை என நொந்துகொண்டேன். சட்டென சூரியன் மறைந்துவிட்டதில் துக்கம் பீடித்துவிட்டது. அழுதுவிடுவாரோ என்று பயந்தேன். தொடுவானில் எங்கோ துழாவினார். விழிகள் சஞ்சலமடைந்தன. எங்களிடையே கனத்த இரும்புத்துண்டுகளாக மாறிவிட்ட மௌனத்தைக் கடக்க முற்பட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீதிருந்த பற்றுதல் விலகி அருவருப்பு சேகரமாகிவிட்டிருந்தது. வெளியே வருவதற்குள் கட்டுரைக்கானக் கேள்விகளை கேட்டுவிடுவது அல்லது எதுவும் பேசாமல் பஸ் பிடித்து சென்றுவிடவேண்டுமென்கிற இரு முடிவுகளுக்கு வந்திருந்தேன். ஆனால் ஹரிதாஸின் முகபாவம் என்னை எதுவும் பேசவியலாவண்ணம் அடக்கிவிட்டிருந்தது. அறைக்கு திரும்பும் வரை நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அன்றே அவர் டில்லி சென்றுவிட்டார்.
நான்கு நாட்கள் கழித்து என் அலுவலகத்துக்கு கத்தையான பார்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். அது, ஹரிதாஸ் தன் ஓவியக்கல்லூரி அனுபவங்களை எழுதித் தொகுத்தக் கைப்பிரதி. ஆட்டோ பயாகிராபி நாவல் போல இருந்தது. அடித்தல் திருத்தலில்லாமல் இங்க் மையில் எழுதிய முன்னூறு பக்கங்கள். அவர் மீதிருந்த வெறுப்பில் சீந்தாமல் இரண்டு வாரங்கள் அலுவலக கோப்புகளுக்குள்ளே போட்டுவைத்திருந்ததை அப்புறப்படுத்தும் நோக்கில் வீட்டிற்கு தூக்கிச் சென்றேன். கோடிட்டதாளின் மேல் இரயில் பெட்டிகள் ஊர்வது போன்ற கையெழுத்துப் பக்கங்களை சரியவிட்டபோது ‘கனவுகளின் கேந்திரியம் அவன்’ என்ற வரி என்னை திசைமீட்டியது.
0
ஆயிரத்து தொல்லாயிரத்து அறுபத்து ஆறில் ஹரிதாஸ் ஓவியக்கல்லூரியில் சேர்வதிலிருந்து தொடங்குகிறது அப்பிரதி. இரண்டாம் ஆண்டில் இன்டர் மீடியட் முடிக்கின்றபோது ஆத்மநாமை சந்திக்கிறார். அப்போது ஆத்மநாம் கல்லூரியில் இறுதியாண்டு மாணவன். எல்லோராலும் கேலிக்குள்ளாக்கப்படும் வினோதச்சித்திரன். கட்டடற்று திரியும் இளைஞன். கல்லூரிக்கு வருவது கிடையாது. போர்ட்ரைட் வகுப்புகளுக்குள் நுழைந்து மாணவர்களுக்கு மாடலாகத் தன்னைக் காட்டி அமர்ந்துகொள்வான். அவனைக் குறுக்கீடு செய்பவர்களிடம், ‘நீங்கள் என்றைக்காவது காணும் பொருளாக இருந்திருக்கிறீர்களா? எப்போதுமே ஒரு பக்கமிருந்து மட்டும் பார்க்கும் தட்டைச்சிந்தனையை மாற்றி பார்த்திருக்கிறீர்களா? உங்கள் கேன்வாஸ் சட்டத்திற்குள் அடைக்க முயலும் பரந்துபட்டக் காட்சியின் சுதந்திரத்தை உணர்ந்ததுண்டா? அசலான அக்காட்சியிலிருந்து ஒரு துளியை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையையும் உருவாக்கி விட்டதாக எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?’ என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிவிட்டு சென்றுவிடுகிறான்.
அதேசமயம் காட்சிகளை அப்படியே தத்ரூபமாக பிரதியெடுப்பவர்களையும் ஆத்மநாம் வெறுத்துள்ளான். படைப்பாளியின் அகத்துடன் புறவுலகம் மோத வேண்டும். எண்ணங்களின் இடையூறால் மட்டுமே படைப்பு நிகழ்கிறது என்கிறான். ஆனால் கல்லூரியில் எல்லோரும் நிறங்களை இறைப்பதிலே ஆர்வமுற்றிருக்கிறார்கள். யாருக்கும் தன்னுள் மூளும் உணர்ச்சிக்கொப்பான நிறத்தைக் கண்டுகொள்ளத் தெரியவில்லை. மனவெழுச்சியையும் ஆங்காரத்தையும் கசிந்தோடும் காமத்தையும் நிறமாக்கத் தெரியாமல் உழல்வதும் நிறத்தின் அர்த்தங்களை புரிந்துகொள்ளாமல் மலட்டுத்தனத்துடன் தீட்டிக்கொண்டிருப்பதும் அவனை எரிச்சலூட்டுகிறது. சொற்களற்ற கவிஞர்கள் என அவர்களைச் சாடுகிறான்.
ஆத்மநாமின் கேள்விகள் ஹரிதாஸை தூக்கமிழக்கச் செய்கின்றன. கலையை அறிவதென்பது அதை தன்னுள் நிரப்பிக்கொள்வதும் அதன் ஆகிருதியில் தன்னை இணைப்பதும் தானென ஹரிதாஸ் எண்ணுகிறார். ஆத்மநாமின் தனித்துவ பாவனைகளால் கவரப்பட்டு தினம் அவனைப் பார்ப்பதற்கென்றே கல்லூரிக்கு வருகிறார். ஆனால் ஆத்மநாம் யார் கண்களிலும் தென்படாதவனாக இருக்கிறான். மாணவர்கள் யாருக்கும் அவனைப் பற்றிய பிரக்ஞை இல்லை. அவரவர் தன் வகுப்புக்கு வருவதும் கொடுக்கும் பொருளை பிரதியெடுப்பதையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஹரிதாஸ் தினம் கல்லூரியின் சிவப்பு கட்டிடங்களிலும் மாணவவிடுதியிலும் ஆத்மநாமின் இருப்பைத் தேடியலைகிறார். நண்பர்கள் ஒவ்வொருவராகத் தொட்டு இறுதியில் அவன் இருக்குமிடம் புலப்படுகிறது. கல்லூரியின் மேல்தளத்தில் காகிதப்பூச்சிகளின் எச்சில்கள் நிரம்பிய கூள அறைக்குள் தன்னுடைய ஓவிய ஸ்டூடியோவை அமைத்துக் கொண்டு யார் கண்ணிலும் புலப்படாமல் உறங்கிக்கொண்டும் தனிமையில் உலாத்திக்கொண்டுமிருக்கிறான். அவனைப் பார்த்ததும் ஹரிதாஸ_க்கு பயம் ஏற்பட்டுவிடுகிறது.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்மநாமுடன் பழகும் போது அவன் சுயப்பிரக்ஞையுடனிருப்பதை உணர்கிறார். அவனின் படைப்பு மனம் என்பதே அவனின் உறக்கம் தானென்றும் அது, உற்பத்தி செய்யும் கனவுகளும் அக்கனவிலி மனமெழுப்பும் காட்சிகளேயே தன் கேன்வாஸில் தீட்டுகிறானென்கிற அவனின் சித்திரவித்தையை கண்டுகொள்கிறார். ‘கனவுகளின் கற்பனாரூபத்திற்குகொப்பானவொன்று புறவுலகில் எங்குமில்லை. ஆழ்பிரக்ஞையிலிருக்கும் படிமங்களை சேகரித்து கனவுக்குள் காட்சிப்படுத்தும் அந்த அரூப சைத்ரீகனே நிஜமான சித்திரக் கலைஞன்’ என்கிறான் ஆத்மநாம். ‘பால்யவயதிலிருந்து என்னைத் துரத்திய கனவுகளை ஓவியக் கல்லுரியில் படிக்கும்போது உற்றுநோக்க ஆரம்பித்தேன்’
கனவுகளை மட்டுமே ஓவியமாக்க முடிவெடுக்கும் ஆத்மநாம் தினம் உறங்குவதில் ஆர்வம் கொள்ளத் தொடங்கியிருக்கிறான். அவன் பொழுதுகளெல்லாம் உறக்கங்களாக மாற்றியிருக்கிறான். காலதீதமற்ற உறக்கம். புறத்தீண்டலோ அதிர்வோ லேசில் கலைத்திடாத நிலத்தைத் தேடியலைகிறான். அப்படியொரு நிச்சலனமிடம் எங்கும் கிடைக்கவில்லை. மொட்டை மாடியில் உறங்கிப்பார்க்கிறான், வனாந்திரத்தினுள் புலி போல பதுங்கிக் கிடந்திருக்கிறான், கடலுக்குச்செல்லும் படகிலேறி அணியத்தினுள் படுத்துதிருக்கிறான், பூட்டிய அறைக்குள் வியர்வை கசிய தூங்கிப்பார்த்தும் உறக்கம் எந்தவொரு கனவையும் சிருஷ்டிக்கவில்லை. திசைத்தப்பிய பறவையாக அலையும் தன் தூக்கத்திற்குரிய கனவைத் தேடிச்சலித்தோய்ந்தபோது ஓர் நாள் தன் ஓவிய ஸ்டூயோவில்(கூள அறை),சட்டென தூக்கம், மோகினியாக அவனை மயக்கியிழுத்துள்ளது. அக்கணத்தில் பூச்சிகளாக கனவுகள் அவனை மோதிக்களைத்ததும் திடுக்கிட்டெழுந்தவன் அவ்விடத்தைப் பார்த்து குதுகலிக்கிறான். அன்றிலிருந்து தூக்கக் கதவை இழுத்து சாத்திக்கொண்டு கனவுக்குள் இலகுவாகப் படுத்துக்கொள்கிறான். அப்படித்தான் அவனுடைய சித்திரவுறக்கம் தொடங்கிற்று. வெகுநாட்களுக்கு பிறகு முகிழ்ந்த அந்நீண்டவுறக்கத்தில் வராக்கனவுகளெல்லாம் சீட்டுக்கட்டுகளாக சரிந்து விழுகின்றன. ஆழ்மனக்கிடங்கில் குவிந்து கிடக்கும் புறக்காட்சிகளும் மனிதர்களும் உறக்கம் துவங்கியதும் சிலந்தி நூலைப் பிடித்து மேலெழுவது போல கனவுக்குள் நுழைகின்றன. எதையும் களைக்க முடியவில்லை. காலையில் விழித்ததும் கனவுகள் சிருஷ்டித்துக் காட்டியவைகளை அப்படியே கேன்வாஸில் தீட்டிக்கொள்கிறான். அன்றையிலிருந்து அவன் கனவுகள் முழுதும் ஓவியங்களாக மாறுகின்றன.
அதுபோன்ற பல ஓவியங்களை அவ்வறைக்குள் பார்த்ததாக ஹரிதாஸ் அடுத்தடுத்த பக்கங்களில் எழுதியிருந்தார்.
ஒரு நடுநிசியில் அவனைப் பார்க்க செல்லும் போது அறைக் கதவு தாழிடாமல் இருக்கிறது. உள்ளே அவனுடைய உறக்கபாவனையைக் கண்டு ஹரிதாஸ் திடுக்கிட்டு போகிறார். அதுவரை அப்படியொருவர் தூங்குவதைக் கண்டதில்லை என்றும் அவ்வுறக்கம் கூலிசனங்களின் களைப்புறக்கமாகவோ பொற்பட்டு விரிப்பின் மேலுறங்கும் பேரரசனைப் போன்றோ நாய் பூனைகளின் கணத்தூக்கங்களோ இல்லை. மரக்கிளை மீது படுத்துக்கொண்டு பிரக்ஞையில் எந்நேரமும் இரையின் அசைவை உற்றுக் கேட்டவாறு இமைகளை மட்டும் மூடியிருக்கும் சிறுத்தை போன்றிருந்தது என்கிறார். (கட்டில் மீது அவன் அப்படித்தான் படுத்திருப்பானென கற்பனை செய்து கொண்டேன்). மெல்ல அவனருகே சென்றவர் கட்டிலில் அமர்கிறார். பழுத்த செந்தோல் உடம்பு. மூச்சொலிகூட அறையின் மௌனத்தை சூனியமாக்குகிறது. ஒருகணம், உடம்பு முழுதும் இமைகள் திறந்து விழித்துக்கோள்வானோவென்கிற அச்சம் ஏற்பட்டு நகர்ந்து கொள்கிறார். சட்டென கனவு கலைந்தெழுந்தவன் ஈஸில் சொறுகியிருந்த கிழிந்த பழைய கேன்வாஸில் நீண்ட கூம்பு வடிவ மாடங்களையும் அதன் மேல் பறந்து செல்லும் வல்லூறுகளையும் அவசரமாகக் கீற்றுகிறான். முழுதும் வரைந்து முடித்த பின்புதான் ஹரிதாஸின் இருப்பு ஆத்மநாமுக்கு பிரக்ஞையிழெலுகிறது.
‘எப்போ வந்த?’ என்கிறான்.
அவர், ‘இது பண்டையக் கால அரண்மனையா’ என்று கேட்டு, ‘ஏன் அதற்கு வண்ணங்கள் தீட்டவில்லை? என்கிறார். ஆத்மநாம் ஏதும் பேசாமல் அடுத்தவொன்றை வரையத் தொடங்குகிறான்.
அவனருகே கருப்பு வெள்ளையில் முடிக்கபடாத ஓவியம் ஒன்று கிடந்தது. ஆடுகளை மேய்த்தவாறு சிலர் நடந்து வருவதுபோன்ற ஓவியம். இராணுவ அணிவகுப்பு போல ஆடுகள் தலை கவிந்திருக்கின்றன. கருங்குருவிகளாக அதன் தூக்கிய வால்கள் தீட்டப்பட்டுள்ளன. அவ்வோயித்தையே வெறித்துக்கொண்டிருந்தவருக்கு சட்டென ஓர் எண்ணம் பிரக்ஞையை அறைகிறது. ஆடு மேய்ப்பவர்களின் இடது காதுகளில் கரிய இரத்தம் தோய்ந்தக் கட்டுத்துணியும் சிலரது காதுகளில் ஈக்கள் மொய்ப்பதுமாக தீட்டப்பட்டுள்ளது. அவ்விடத்தில் ஹரிதாஸ் இப்படி எழுதுகிறார்: ‘எனக்கு நினைவிலுள்ளது. அது யதார்த்த சித்திரம் அல்ல. அவனுடைய ஆழ்மனதின் பதிவு. கற்பனைக்கிடங்கு. கரிய மரங்கள் காற்றில் அசைவது போலவும் நீல வண்ண சிமென்ட் தரையயெங்கும் காகிதங்கள் பறந்தலையும் அவ்விடத்தை நான் அதுவரை பார்த்தில்லை. எல்லாமே கறுப்பு வண்ணத்தில சிதறிடிக்கப்பட்டிருந்தன’. அவனிடம் அவ்வோயித்தைப் பற்றி கேட்டதற்கு அவன், “எல்லாம் பைத்தியங்கள். ஒன்றையொன்று மாறி மாறி காதுகளை அறுத்துக்கொண்டு அலைகின்றன” என்கிறான்.
அது நிச்சயம் வான்காவை குறிப்பிடுவதாக இருக்க வேண்டும். அக்காலத்தில் வான்கா, காகின், போன்ற போஸ்ட் இம்ரஷனிஸர்களிடமிருந்து ஆத்மநாம் முற்றிலும் முரண்பட்டிருக்கக் கூடும்.
ஹரிதாஸ் தினம் இரவுகளை அவனுடனே கழிப்பதற்காக அக்கூள அறைக்குச் செல்கிறார். பிறிதொருவரின் கனவுகளை முகர்வதிலிருக்கும் அந்தரங்கத் தேடல் அவருக்கு மோக ரோகத்தை ஏற்படுத்திற்று.
அன்று தீவிரமாக அவன் வரைந்துகொண்டிருக்கும் ஓவியம், செம்மண் பாவிய ஆற்றுக்கரையோரம் காய்ந்த புதர் மண்டிய நிலம் கொண்ட பெரிய கேன்வாஸ். மலக்குவியல் போல பழுத்த இலைகள். நிலத்தைக் கீறியோடிய வெள்ளத்தின் தளும்புகள். அதுவரை உண்டான கனவுகளிலே அவ்வோவியத்தில்தான் துல்லியமாக ஒவ்வொன்றையும் பதிவு செய்திருக்க வேண்டும். வறண்ட நதிப்படுகையை நோக்கி கிழவர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். கருத்தத் மென்தோலைப் போர்த்திய காய்ந்தவுடம்பு. பெரிய அட்டையொன்று ஊர்வது போன்று முதுகுத்தண்டின் முடிச்சுகள். கைத்தடியை கையில் சாய்த்தவாறு மேய்ச்சலுக்கு விட்டிருக்கும் மாடுகளின் திசையை வெறித்துக்கொண்டிருக்கிறார். அவரருகே பூமிக்குள் இறங்கிச்செல்லும் இருள் கவிந்த படிக்கட்டுகள் கொண்ட கல்லறைத் தோட்டம் வரையப்பட்டுள்ளது. உள்ளே மனித முகங்கள் அண்ணாந்தவாறு இருக்கின்றன. அதே கேன்வாஸில் மற்றுமொரு பக்கத்தில் கிழவர் போர்வையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓடுவது போன்ற சித்திரமும். அதுவும் அக்கிழவர் தான். ஆனால் இரண்டாவதில், கிழவரின் அவிழ்ந்த கேசம் பறந்தலைவது போல தீட்டப்பட்டுள்ளது. ஹரிதாஸ், “ஜீசஸ் கிறிஸ்து போலிருக்கிறாரே” என ஆத்மநாமிடம் கேட்கிறார். அதற்கு ஆத்மநாம், “ஆமாம் இவரும் அவரைப் போல மாய வித்தைக்காரர் தான்” என்கிறான்.
கூள அறை முழுதும் இராட்சஸப் பறவையொன்று சிறகை உதிர்த்து விட்டிருப்பது போல கிழிந்த கேன்வாஸ்காகிதங்கள் சிதறிக்கிடக்கின்றன. எல்லா ஓவியங்களிலும் கிழவரின் உருவம் வரையப்பட்டுள்ளது. அதில் சில கிழவரின் நிர்வாணப் படங்களும் கூட. எல்லா சித்திரங்களிலும் அக்கிழ மனிதனின் தோன்றுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சிறு கோடுகள் கூட அவன் கனவிலிருந்தே படைக்கப்படுகிறதெனில் ஒரே பிம்பம் மட்டும் எப்படி எல்லா படைப்பிலும் பின்தொடரும்? அவ்வோயியங்கள் எதிலும் சிறு துளி கூட நிறம் சிந்தப்படவில்லை. எல்லாம் கருப்பு வெள்ளை படங்கள்.
அன்றைக்கு முழுதும் ஹரிதாஸ் குழப்பங்களால் பீடிக்கப்படுகிறார். நினைக்க நினைக்க அவ்வுருவம் விழிப்பின் மீது சவ்வுபோல படர்கிறது. பால்யத்திலிருந்து உறக்கங்களில் மிதந்துவரும் சில துர்சொப்பனங்களைப் போல் அவ்வுருவமும் தினம் ஏன் அவன் கனவுகளில் ஊடுருவக் கூடாது? ஹரிதாஸ் பல குழப்பமான கேள்விகளுடன் அவனைச் சந்திக்கிறார். அதற்கு ஆத்மநாம் “இல்லை அவர் எனக்கு ஒருவகையில் முப்பாட்டனார். எங்கள் நிலத்தின் ஆதித் தலைவன்.” என்கிறான். கிழவர் பற்றிய கதை ஹரிதாஸை துணுக்குறச் செய்கிறது. “ஆமாம் இந்த வனத்தை அவர் தான் உருவாக்கினார்” என அப்போது வரைந்துகொண்டிருப்பதைக் காட்டுகிறான். அது கருப்பு வெள்ளையிலுள்ள நிலத்தின் ஓவியம். வனம் சூழ்ந்த நகரம்.
அப்பிரதியில் முக்கியமானதொரு பகுதியான ஆத்மநாமின் பூர்வக்குடிக் கதை என்னை பிரமிக்க வைத்தது.
‘பல வருடங்களுக்கு முன்பு இந்நிலம் உலகிலுள்ள புண்ணிய பூமிகளில் ஒன்று. வனவாசிகள், மிருகங்கள், சமவெளி மனிதர்கள் என்கிற பாகுபாடு இருந்ததில்லை. மானுடச்சொப்பனங்களில் சஞ்சரிக்கும் சொர்க்கமாக இந்நிலம் தோன்றுவதாக இங்கு வந்தவர்கள் சொல்வதுண்டு. எல்லாவுயிர்களும் தாய்மையுடன் பழகியதை என் அப்பா தன் பால்ய வயதில் பார்த்திருக்கிறார். அவற்றின் குணத்தையெல்லாம் கிழவர்தான் மாய வித்தை செய்து பெட்டிக்குள் அடைத்து வைத்தவர். வனாந்திரம் முழுதும் தியானத்திலிருப்பது போல் மௌனித்திருக்கும். வலசை வந்த நீண்ட மூக்கு கொண்ட வெளிதேசத்து பறவைகளும் இந்நிலத்தின் தியான வித்தைக்குப் பழகி, இவ்விடத்திலே நிரந்தரமாக கூடிட்டு குஞ்சு பெருக்கி அடைந்து கொண்டன. எப்போதுமே நிலம் ஒருவித ஆழுறக்கத்தில் லயித்திருக்கும். நீர் வறண்டு மரங்கள் மூளியாக நிற்கும் வெயில் காலமென்பதே கிடையாது. செடிகொடிகளும் புதர்களும் கால் முளைத்து நகர்வதுபோல தன் இருப்பை எந்நேரமும் பெருக்கிக்கொண்டேயிருக்கும். தினம் லட்சோபலட்ச மலர்களின் யோனிழையிலிருந்து கசியும் வாசம் உறக்கத்திலிருப்பவர்களை இன்னும் அதனாழத்திற்கு இழுத்துச் சென்றதே தவிர களைத்தெழுப்பவில்லை. மனிதர்கள் கனவுகளின் அடிமைகளல்லவா?
கிழவர் இந்த பூரணத்துவ நிலையைக் கண்டு தன் எல்லா குணவிஷேசங்களிலிருந்தும் விடுபட்டு நிச்சலனத்தை அடைந்திருந்தார். இவை எல்லாமும் கிழவர் செய்யும் மாயவித்தைதானெவும் அவர் தம் கனவுலகில் சிருஷ்டிப்பதன் வெளிப்பாடே என்று எண்ணிய வனவாசிகளும் சமவெளி மனிதர்களும் கிழரை யோகியாக்கி பூஜித்தார்கள். உறக்கம் மெல்ல மனிதர்களிடமிருந்து அஃறினைகளின் பிரக்ஞைக்குள் ஊடுறுவியது. தினம் பகற்பொழுதுகளில் வேட்டையில் களைத்திருந்த அவ்வுயிர்கள் உறக்கத்தை வேட்கiயுடன் பருகி கனவுகளுக்குள் தளும்பின. முடிவின்றி நீளும் தூக்கத்திலிருந்து விடுபட்ட மனிதர்கள் விழிப்புக்கும் உறக்கத்திற்கும் நடுவில் உழன்று பின் அது தரும் போதையைப் பருகி மறுபடியும் தூக்கத்தினுள் நுழைந்து கொண்டார்கள். பிரக்ஞைக்கப்பால் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு கிளர்ச்சியூட்டவே செய்தன. பசி ஏற்படவில்லை யாரும் எதையும் கொன்றுண்ணவில்லை.
ஒரு நிலைக்கப்பால் கிழவரின் யோக முறை செயலிழக்கவராம்பித்தது. கனவு மெல்ல தன் விழிப்பைத் தொடங்கிற்று. தூக்கம் களைந்தெழுந்த உயிர்கள் தங்கள் ஆதி குணத்திற்கு திரும்பவாரம்பித்தன. பசி தன் கார்வையால் உயிர்களின் மோன நிலையை உசுப்பியது. ஒவ்வொருவுயிரியின் வயிற்றுக்குள்ளும் கூண்டுக்குள் அலையும் மிருகமாக பசி சுற்றிவந்தது. பேரழிகியாக இவ்வனம் தன் அழகிய முலையைக் காட்டி பேரழகியாக எழுந்து நின்றது. பேருறக்கம் கலைதலின்போது ஆட்கொள்ளும் போதையும் நீண்ட நாளின் பசியும் மிருகங்களை புணர்ச்சிக்கொப்பான வேட்டைத்தனத்துடன் பச்சிலைகளை நோக்கி உந்தித் தள்ளியது.
மிருகங்களின் மூச்சுக்காற்றிலிருந்து பரவிய இந்நோய் சமவெளிக்குள் உறங்கிக்கிடந்த கால்நடைகளைத் தாக்கின. வீட்டிலிருந்த ஆடு மாடுகளெல்லாம் பட்டியை உடைத்தெறிந்து வெளியேறி, கண்ணில் படும் தாவரங்களையும் புற்களையும் வெறியோடு மேய்ந்தன. எதற்குமே பசி அடங்கவில்லை. ஆடுகள் வனமெங்கும் கிளைகளில் தேன்கூடுகள் போல தொங்கிக்கொண்டிருந்ததை ஊர் மக்கள் பார்த்து உறைந்து போனார்கள். மாடுகள் கொம்பால் நிலத்தைப் பிளந்து எஞ்சிய வேரை சுவைக்கப் பழகின.
இந்நோய் மனிதனை பாதிக்க சிறிது காலமெடுத்தது. கனவுகள் அவர்களை உறக்கத்திலிருந்து மீள விடாமல் சார்த்தி வைத்திருந்தது. ஆனால் நோய் பீடித்த மறுகணம் மனிதர்களின் வெறியுணர்ச்சி பேரலையாக அவர்களை உருட்டித் தள்ளியது. கண்ணில் பட்ட மரங்களையெல்லாம் வெட்டித் தின்னவாரம்பித்தார்கள். தின்றழிக்க முடியாத அளவு மரங்களும் புதர்களும் விரிந்திருந்தன. புழுக்களாக இலை மீது நெளிந்தார்கள். பச்சையிலைகளின் குளுமையும் மென்மையும் எந்த உயிரையும் பசியாற்றிவிடாமல் தன் இருப்பை நிறுவிக்கொண்டிருந்தது. பசுந்தழைகளை சுவைத்த நாக்குகள் பச்சை நிறமாக மாறின. தங்கள் நாக்கின் பச்சையைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் பசியின் நினைவெழுந்து வனத்தை நோக்கி ஓடச் செய்தது. ஒவ்வொன்றும் ஒன்றையொன்று தின்றும் புணர்ந்தும் செத்தொழிந்தன. மனிதர்கள் ஆடு மாடுகளைத் திண்பதும் மிருகங்கள் மனிதர்களை வேட்டையாடுவதும் எஞ்சிய மாடுகள் நிலங்களை முட்டி விழுந்தும் செத்தொழிந்தன. மலைக்கழுகுகள் பசியில் பிசாசாக பறந்துத் திரிந்தன. இலைகளற்ற மொட்டை மரப் பொந்துகளில் அடைந்திருந்த கிளிகளைப் பிடித்துக்கொண்டு அப்பால் பறந்தபோது துர்சாபத்தின் சமிக்ஞை போலிருந்ததாம்.
ஓடிக்கொண்டிருந்த நீர் முழுதும் உறிஞ்சிக்குடிக்கப்பட்டு நதி கரிய சதையுடன் பிசுபிசுப்பாக மாறியது. அதனுள்ளும் மறைந்திருந்க்கும் ஈரத்தைத் தோண்டி மனிதர்கள் பேயாக அலைந்தார்கள். தோண்டியக் குழிகளிலிருக்கும் குளுமையைத் தேடி எலும்புத் துறுத்திய உடலோடு மிருகங்கள் வந்து விழுந்தன.
வனவாசிகளை விட சமவெளி மனிதர்களிடம்தான் இந்நோயின் தாக்கம் கோரத்தனமெடுத்தது. மரங்களை வேரோடு பிடுங்கி வந்து இலைத்தழைகளை வெட்டி தின்றார்கள். நிலம் தோலுரிக்கப்பட்டு செற்றிறமாக மாறிவிட்டிருந்தது. காடு முழுதும் கொஞ்சம் கொஞ்மாக மரங்கள் வெட்டுண்டு எறும்பு போல நகர்ந்து கொண்டிருந்தன. மலைகள் மெல்ல மெல்ல தன் நிறத்தை இழந்தது. அதன் எடை குறைந்தபோதும் யாருக்குமே பசி அடங்கவில்லை. பச்சை ஏற்படுத்துவது வெறும் வயிற்று பசி மட்டுமின்றி புலன்களின் ஒட்டு மொத்த இயக்கத்தையென அவர்கள் உணர்ந்தார்கள். அவ்வுணர்ச்சிதான் தன் ஆகிருதியைக் காட்டுகிறதென அறிந்த
கிழவர் நிச்சலனம் களைந்தெழுந்த போது எதுவுமிஞ்சவில்லை. குவியல் குவியலாக உடல்களும் பிணக்கவுச்சியும் மட்டுமே. பதற்றமாக வடக்கிற்கும் தெற்கிற்கும் அலைந்திருக்கிறார். தன் யோக வித்தை ஏற்படுத்திய எதிர்விளைவு அவருக்கு குற்றவுணர்ச்சியைத் தூண்டிற்று. தினம் தன் தவறுக்காகப் பிராத்தனைகள் செய்யவாரம்பித்தார். இவ்வூர் மீண்டும் தன் செழிப்பை அடையும்வரை சாப்பிடப் போவதில்லையென முடிவெடுத்தார். ஊர் சனங்கள் சமாதானம் செய்தும் ஒரு பருக்கைக்கூட அவரை விழுங்கச் செய்ய முடியவில்லை. அதன் பின் கிழவரின் கனவுகள் வெறும் பச்சைத்திரையை மட்டுமே காட்டியதால் உறக்கத்திலிருந்து விடுபட்டு மௌனமாக எழுந்தமர்ந்து கொண்டார். தூக்கமும் உணவுமற்ற உடல் வற்றத் தொடங்கியது. பேசுவதைக் குறைத்தார். மௌனத்திலாழ்ந்தவாறு அழிந்த வனத்தின் வெறுமையைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவருக்கு ஆடுகள் மட்டுமே பிடிக்குமென்பதால் அவற்றுடன் மட்டும் சம்பாஷனைகள் இருந்தன. வெளியே வரும்போதெல்லாம் மொட்டைவனத்தைக் கண்டு கண் கலங்கி நின்றுவிடுவார். எல்லாம் இழந்த பின்னும் இந்நிலமும் வனமும் தன்னை விட சலனமற்று ஆழுறக்கத்தில் இருப்பதைக் கண்டு கிழவர் வெட்கித்துப் போனார்.
அந்த வினோத நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வித்தையை யாரும் தெரிந்திருக்கவில்லை. அந்நோய்க்கு மருந்தென்பது பசியை பூர்த்திசெய்ய விடாமல் அதை கவனித்தவாறு அப்படியே அமர்ந்திருப்பதுதானென கிழவர் சொல்லியிருக்கிறார். ஏனெனில் பசியாறப் பசியாற அந்நோய் தீர்ந்துபோகாமல் ஊதிப் பெருத்துக்கொண்டேதான் போகுமாம். கிழவருக்கு எங்காவது மீந்திருக்கும் பச்சையிலைகளைப் பார்க்கும் போதெல்லாம் சொல்லொன்னாவுணர்ச்சியில் மனம் தளும்பிடும். புத்துணர்வு, வாழ்வின் மீது கொள்ளும் பற்று, இருத்தலின் நம்பிக்கை, ஆசை,மோகம் என பேருருவங்களை பச்சை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது என்பார்.
யாருக்கும் நோய் குணமடையவில்லை ஆனால் அதற்குள் இலை தழைகள் முழுதும் தின்னழிக்கப்பட்டுவிட்டன. பச்சையிலைகள் இல்லாததால் நோயின் வீரியம் அதன்பிறகு பாதித்தவர்களுக்கு குறைந்திருந்தது. அவர்கள் சீக்கிரமே அதிலிருந்து வெளியேறினார்கள். அவ்வாறு மீண்டவர்கள்தான் என் அப்பாவும் அவரின் குடும்பங்களும். ஆனால் அவர்களின் விந்துத்துளிகளுக்குள் அந்நோய் வேர்பிடித்து சந்ததிகளுக்குள் பயணமாவதை எவரும் அறியவில்லை.
0
ஆத்நாமின் பூர்வக் கதை அவரை மிகவும் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகள் அவனை பார்க்கக்கூடாதென முடிவெடுக்கிறார். ஏனெனில் ஹரிதாஸ_க்கு நிறங்கள் மீதிருந்த வேட்கைதான் ஓவியம் பயிலவே உந்தியிருந்தது. ஒவ்வொரு நிறத்திற்கெனவும் பிரத்யேக குணங்கள் உண்டு. அவை தரும் உணர்ச்சிகளின் கூட்டியக்கமே சித்திரம் எனும் ஆழமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. அது முற்றிலும் ஆத்மநாமுக்கு எதிரான மனநிலை. அவனுடைய தாக்கம் தன்னை நிலைகுலையச் செய்துவிடுமென்கிற அச்சத்தில் அவனிடமிருந்து ஒதுங்கிவிடுகிறார். ஆனாலும் ஆத்மநாமின் சிந்தனை அவர் எண்ணங்களை சுவீகரித்து பிரம்மாண்ட சித்திரமாக உருவாகிவிடுகிறது. தன் கற்பனைகளே அவனின் ஓவியங்களின் நீட்சிதானோ என மனக்கொந்தளிப்புக்குள்ளாகிறார். அவன் ஏற்படுத்திய அதிர்வுகளை முற்றாக அழிக்க அவருக்கு நெடுங்காலம் தேவைப்படுகிறது. ஆத்மநாமின் கரிய கோட்டு சித்திரங்களின் தாக்கம் தன்னுடைய படைப்புகளிலும் பாதித்துவிடக்கூடாதென எந்நேரமும் எச்சரிக்கை சுமந்து திரிந்துள்ளார். ஒரு கலைஞனின் தாக்கத்திலிருந்து விடுபடுதல் தற்கொலைக்கொப்பானதாக இருந்துள்ளது. அதற்காக அவனை பார்ப்பதையே தவிர்த்துள்ளார்.
அதன்பின் கல்லூரி முடிக்கும் வரை ஆத்மநாமை அவர் பார்க்கவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஓவியக்கண்காட்சியொன்றை நடத்த முயல்கையில் மீண்டும் ஆத்மநாமை சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. லலித் கலா அகதாமியில் ஹரிதாஸின் நூற்றி இருபது ஓவியங்களையும் பார்க்கும் ஆத்மநாம், ‘கேன்வாஸில் உன்னுடைய பிம்பம் தான் பிரதிபலிக்க வேண்டுமே தவிர அடுத்தவைகளை அல்ல’ எனக் கூறிவிட்டு வெளியேறிவிடுகிறான். அதன் பின் அவனை எங்கும் பார்க்கமுடியவில்லை என அக்குறிப்புப்பிரதி முடிகிறது..
கடைசி பக்கங்களில் துண்டுத்துண்டான குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. ஓவியக்கண்காட்சிகள் பற்றிய சில தகவல்களும் சில ஆளுமைகளின் சித்திரங்களும். இந்த கைப்பிரதியை முடித்தபோது பெரும் சூன்யம் கவிந்ததுபோலானது எனக்கு. எண்ணத்தில் மீண்டும் மீண்டும் அக்கதை எழுந்து கனத்த மனச்சோர்வினுள் தள்ளியது. அன்றைக்கு இரவே ஹரிதாஸிற்கு கடிதமெழுதினேன். அடுத்தடுத்த ஆறு மாதங்கள் அப்பேச்சு தொடர்ந்தது. வழியில் பச்சை இலைகளையும் அரைநிர்வாணப் பக்கிரிகளையும் பார்க்கும்போதெல்லாம் ஆத்மநாமின் எண்ணம் எழுந்துவிடும். ஹரிதாஸ் தான் முதலில் என் ஆய்வு பற்றிய எண்ணத்தைத் தூண்டினார்.
ஆத்மநாமின் ஓவியம் ஏதுமிருந்தால் உளப்பகுப்பாய்வுக்கு உதவியாக அமையுமென கடிதமெழுதியிருந்தேன். ஆனால் அவர், தான் எதையும் கைவசம் வைத்துக்கொள்ளவில்லையென்றும் கல்லூரி முடித்து வெளியேறியபோதே ஆத்மநாமின் கூள அறை சுத்தம் செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுவிட்டதாக பதிலெழுதினார்.. எனக்கு அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஒரு வருடம் நானே தேடியலைந்தேன். (அக்கதாப்பாத்திரம் புனனைவா உண்மையா என ஒருகணம் கூட நான் யோசித்தில்லை) ஆத்மநாம் வாழ்ந்த காலக்கட்டம் நாற்பது வருடங்களுக்கு பின்னோக்கியிருந்தது. அவன் வயதொத்த ஓவியர்களைச் சந்தித்தேன். அல்போன்ஸ், சந்தானராஜ், பாஸ்கரன் என அன்றைக்கு கல்லூரி முதல்வர்களாகவும் முக்கியமான ஆளுமைகளாக இருந்தவர்வர்களுடன் உரையாடினேன். (புற்றுநோக்கான சிகிழ்ச்சையிலிருந்ததால் ஆதிமூலத்தை மட்டும் என்னால் சந்;திக்க முடியவில்லை.) அக்காலத்தில் பணியாற்றிய பெரும்பாலான ஓவியர்கள் அன்றைக்கு உயிரோடில்லை. சிலருக்கு வயது முதிர்வில் நினைவு தப்பிவிட்டிருந்தது.
இரண்டு வருட அலைச்சலுக்குப் பிறகு எனக்கு கிடைத்த தகவல் இதுதான்:
ஆத்மநாம் 1939 ல் தெலுங்கு பிராமனனுக்கும் இஸ்லாம் பெண்ணுக்கும் பிறந்தவன். இளவயதிலே அவன் அம்மா காசநோய் தாக்கி இறந்துவிடவே அப்பா மறுமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டுக்குக் குடியேறியிருக்கிறார். அம்மாதான் அவனுக்கு பூர்வக்கதைகளை சொல்லியிருக்கிறாள். கிழவர் அவன் அப்பா வழியில் அவனுக்கு முப்பாட்டனார். அவர் வடக்கில் பெரும் ஜமின்தார் குடும்பத்தில் பிறந்தவர். அப்போதே வெளிநாடுகளெல்லாம் சுற்றிவந்தவர். அவரிருந்தவரை அக்குடும்பம் பெரும் நிலத்தையே ஆண்டுகொண்டிருந்துள்ளது. கல்விக்காக வீடுகளையும் நிலங்களையும் தானமாகக் கொடுத்து ஒரு நிலைக்கப்பால் அவர்களுக்கு தங்குவற்கு கூட இடம் கிடைக்காமல் ஆனது.
ஆத்மநாமின் அப்பா வேலைக்காக அலைந்தபோது அவனும் நாடோடியாக சுற்றியிருக்கிறான். எப்போதும் சுண்ணாம்பு கட்டிகளையும் கறித்துண்டுகளையும் பொறக்கி வைத்துக்கொண்டு கால் கடக்கும் நிலக்காட்சிகளை சுவர்களிலும் தார்ச் சாலைகளிலும் தத்ரூபமாக தீட்டியிருக்கிறான். தெருச்சுவர்களிலே அவனின் கலையார்வம் கெட்டுவிடுமேன்ற அச்சத்தில் நெல்லூரிலுள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்த்துவிட்டு அவர் நாடோடியாக வெளியேறிவிட்டார். அங்கிருப்பவர்கள் அவனை கவின் கலைக்கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் டிப்ளமோவே ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டும். கலைத்துறையில் அவ்வளவு நீண்ட பாடயியல் இது தான்.
அவனைப்பற்றிய இன்னொரு தகவல் கல்லூரி நூலகவியலாளர் ஸ்ரீகுமார் மூலம் கிடைத்தது. சோழ மண்டல கலைக் கிராமத்தில் பழைய பாணி ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றில் சில கருப்பு வெள்ளை ஓவியங்கள் உண்டு என்றும் என்னிடம் சொன்னார். நான் தேடிவந்தது சரியாகவே இருந்தது. ஆமாம். அதில் ஒரு சித்திரம் ஆத்மநாமுடையது. ஹரிதாஸ்தான் அதை ஆவணப்படுத்தினார் என்பதை அங்கிருந்த காப்பகக் கண்காணிப்பாளர் மூலம் கேட்டறிந்தேன்.
அது கருப்பு வெள்ளையிலிருந்த கோட்டு சித்திர பாணி ஓவியம். பிளந்தபோடப்பட்ட நிலத்தின் நடுவே கிழவர் ஆடுகளை நோக்கி ஓடும் காட்சி. அவரின் கைத்தடி விரலிலிருந்து நழுவுவதிலிருந்தும் நரம்புகள் புடைத்திருப்பதிலும் அம்மனிதரின் பதற்றத்தையும் பயத்தையும் துல்லியமாக பதிவிட்டிருந்தான் ஆத்மநாம். ஹரிதாஸின் கைப்பிரதியைக் அக்கணம் நினைவுகூர்ந்தேன். பல வருடங்களாக அக்கதை கனவாகவே என்னை தொடர்ந்துவந்ததை எண்ணியபோது உடல் விதர்த்தது. கேமிராவில் அதை புகைப்படமெடுத்துக்கொண்டேன். அன்றிலிருந்து என் தேடல் வேறு வேறு திசையில் என்னைச் சுழட்டியது. இந்தியா முழுக்கச் சுற்றினேன். அன்றைக்கு புகழுச்சியலிருந்த பல ஓவியர்களைச் சந்தித்தேன். முடியாது என்னும் போது பல்வேறு நரித்தனங்களை பிரயோகித்தேன். விவன் சுந்தர், புபேன் கக்கர் என வேறுவேறுபட்ட ஆளுமைகளுடன் நேரடித் தொடர்பு கிடைத்தது. விவன் சுந்தரம் எனக்கு ஷன்கா சௌத்திரியை அறிமுகப்படுத்தினார். சௌத்திரி அப்போது பரோடாவில் ஒன் மேன் ஷோ நடந்துவதற்காக ஓவியங்களை தயார் படுத்திக்கொண்டிருந்தார். ஷோ இடைவெளிகளில் அமர்ந்து பேசினோம். பரோட கல்லூரியில் தான் பயிலும்போதே ஆத்மநாமின் சித்திர பாணி வியப்புக்குள்ளாக்கிதாகவும் அவனைச் சந்திப்பதற்காக நண்பர்களுடன் தேடிவந்து பார்க்கமுடியாமல் திரும்பியதை நினைவுகூர்ந்தார். அப்போது “ஆத்மநாம் போன்ற படைப்பாளிகள் நிச்சயம் தற்கொலை செய்திருப்பார்கள். அவர்களால் யதார்த்தவுலகில் வாழ முடியாது” என்றார். என்னால் அவர் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் சட்டென எழுந்து கொண்டேன். ‘படைப்பின் ஆழ்நிலை என்பது ஒருவகையில் பித்து மனம்தான். அதன் சுழற்ச்சிக்குள்ளிருந்துதான் கலைஞன் பெரும் படைப்புகளை வெளிக்கொணர்கிறான். அத்தருணத்தில் அவன் அதை படைப்பை உருவாக்கும் சாதனமாக மட்டும் விட்டுவிட்டாலொழிய யதார்த்தவுலகில் பிரக்ஞாப்பூர்வமாக இருக்க முடியும். அப்படியில்லையெனில் ஆழ்பிரக்ஞையினுள்ளே தன் உலகை சிருஷ்டித்து அவ்வெளியிலிருந்த மீளாமல் உழல்வதைத் தவிர வேறுவழியில்லை. ஆத்மநாம் அவ்வாறு சிக்குவதற்குரிய நிறைய சாத்தியங்கள் இருக்கக்கூடும்” என்றார் சௌத்திரி. நான், “என் ஆய்வே அதிலிருந்து தான் தொடங்குகிறது” என்றேன். ஆய்வு நூலை அவர் முன் விளக்கினேன். முழுவதையும் கேட்டவர் மெல்லத் தெளிந்தாலும் அவரின் ஆளுமை அதை ஆமோதிக்க மறுத்தது. பெரும் கலைஞர்களுக்கே உரிய குற்றச்செயல் அது. பிறகு மும்பையிலிருக்கும் நேஷனல் மாடர்ன் ஆர்ட் கேலரியின் இயக்குநர்களிடம் பேசி சர்வேதச தரத்தை பெற்றுதருவதாக உறுதியளித்தார்.
ஒவ்வொன்றாகத் தொட்டு நிறைய ஓவியர்களை சந்திக்க முடிந்தது. அவர்களின் படைப்புகளையும் நனவிலி மனதையும் உளப்பகுப்பாய்வு செய்து திரட்டிய தரவுகள் என் ஆய்வை வேறு பாதைக்கு கொண்டு போனது. என் நீண்ட பேட்டியொன்றை ஆங்கில நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். (ஓவியம் சார்ந்த அறிதலுள்ளவர்கள் தவிர பெரும்பாலானவர்கள் அதைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை.)
என்னுடைய உள ஆய்வில் நான் குறிப்பிடுவது இரண்டு விஷயங்கள் தான். ஒன்று, இந்திய படைப்பூக்க மனம் எப்போதுமே பித்துநிலைக்குள் சிக்கி, வெளிவர முடியாமல் உழன்று தற்கொலை செய்யக்கூடிய அளவில் கனமிழந்துவிடுவதில்லை. படைப்பூக்கம் செயலிழக்கும் தருணங்களில் சிந்தனைமரபும் தொன்மங்களும் இந்நிலத்துக்குரிய தத்துவங்களும் அப்படைப்பு மனத்தைச் சமன் படுத்திவிடுகின்றன. இது கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தக்கூடியது. கீழைத்தேய சிந்தனை மரபும் தத்துவங்களும் எதிர்சிந்தனையைக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்குக்கூட ஆழ்பிரக்ஞையில் ஊடுறுவியிருக்கிறது. அது, மனப்பிளவிற்காளாகும் போது அதவாது தன்னுள் அவர்கள் கண்டுகொள்ளும் இன்னொரு எதிர் மனத்தை அறிந்து அதை கொன்றுவிடும் நோக்கில் முன்னேர இச்சிந்தனை மரபு விடுவதில்லை. அப்படியே அத்தகையச் சூழல் உண்டானாலுமே அக்கணச்சூன்யத்திலிருந்து உடனே மீண்டுவிடுகிறார்கள். அதனால் தான் மேற்கு நாடுகளில் படைப்பாளிகளின் (எத்துறை சார்ந்தும்) தற்கொலைகள் இங்கு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. (இவ்விடத்தில் வான்காவை ஆத்நாம் கேலிச்சித்திரமாக வரைந்திருந்ததையும் என்னால் நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது)
இரண்டாவது, கலை என்பது நனவிலி மனதை ஆராயும் ஒருவித உளப்பயிற்சி தான். ஆத்நாமின் ஓவியம் அவன் ஆழ்மனதில கூறுகள். அவன் மட்டுமின்றி கலையுடன் இயங்கும் எல்லா படைப்பாளிகளுமே அவ்வுளப் பயிற்சியையே மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். தங்களுக்குள் இருக்கும் இன்னொன்றோடு தர்க்கம் புரிகிறார்கள். தங்களின் ஆழ்சிந்தனை மரபுடன் தான் கற்றறிந்ததை மோதச் செய்து பரிசோதனை செய்கிறார்கள். அதனாலேயே படைப்பாளிகள் ஓர் நிலையில் முதிர்ந்த சிந்தனை மரiபு நோக்கி நகர முடிகிறது.
என் ஆய்வுநூலை எடுத்துப் பார்க்கும் கணந்தோரும் ஹரிதாஸின் நினைவு எழாமலிருந்ததில்லை. சோழ மண்டல கலைக்கிராமத்தில் ஆத்மநாமின் ஓவியத்தை என்னிடமிருந்து மறைத்தற்குப்பிறகு அவர் மேலிருந்த விருப்பம் முழுதும் என்னிடமிருந்து உதிர்ந்துவிட்டிருந்தது. ஆனால் எதற்காக தன் சொந்தக் கைப்பிரதியை எனக்கு அனுப்பினாரென்று அவர் இறப்பதுவரை தெரியவில்லை. அப்பிரதியை வைத்துக்கொள்வதில் அந்தரங்கமான தவிப்பு ஊர்வதை உணர்ந்திருக்கிறேன். நேரமிருக்கும் போதெல்லாம் பிரதியின் ஏதோவொரு பக்கத்தை வாசிக்கத் துவங்கிவிடுவேன். ஒருவகையில் என் முழு ஆய்வையும் நிறைவு செய்வதற்கான உந்துதல் அந்நூலில் தான் இருந்தது. ஆத்மநாமின் கனவுகளும் அக்கிழமனிதனின் உருவமும் என் கனவுகளில் ஒருவித நோய்மையை ஏற்படுத்தியிருந்ததைப் பற்றி ஒருமுறை ஹரிதாஸிடம் கேட்டபோது ‘உன்னால் மட்டுமே அக்கதையை சரியாக உணரமுடியும்’ என்றார்.
ஆய்வுகள் தொடங்கி பத்துவருடம் முடிந்தபின்பும் ஒரு மனநோயாளியின் உறைந்துவிட்டகாலம் போல ஆத்மநாமின் கதைக்குள் நான் சிக்கிக்கொண்டிருந்தேன். பல வருடங்களாக சீந்தாமல் அலமாறியில் பழைய புத்தகங்களுக்கிடையே பழுப்பேறிக் கிடந்ததை ஓர் நாள் புரட்டினேன். இம்முறை அதன் ஒவ்வொரு வரிகளும் என்னை அடையாளம் கண்டுகொண்டன. அதன் அடியில் சோழ மண்டல கிரமாத்தில் நான் புகைப்படமெடுத்துவைத்த ஆத்மநாமின் ஓவியம் இருந்தது. வனம் சூழ்ந்த நிலங்களையும் கைத்தடியுடன் ஓடும் நிர்வாணக்கிழவரையும் உற்று பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தேன். ஒரு கணம் அச்சித்திரம் என் மனத்தை நடுங்கச் செய்தது…