பேராழத்தில்
பேராழத்தில்
மாலை சூரியன் மறைந்த பின்பும் இருள் முழுமையாகக் கவியாமல் இருந்தது. கொன்றை மரங்களின் உச்சிக்கிளைகளில் துண்டு மேகங்கள் போல கொக்குகள் அமர்ந்து ‘கிலாவ் கிலாவ்’என எழுப்பும் ஒலி அவ்விடமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அம்மரங்களுக்கு அப்பால் கருமை பரப்பில் சூரியன் அஸ்தமித்ததன் எச்சம் பரவியிருந்தது. சிற்பி வேதசாதகர் மெதுவாக ஆற்றின் கரையோரம் வந்து நின்றார். ஆறு, மென் கொதிப்புடன் செல்வதுபோல் இருந்தது. அதன் சாம்பல் நிறத்தினை உற்றுநோக்கிய வண்ணம் மெதுவாக இறங்கினார். கால்கள் சில்லிட்டு நடுங்கின. உள்ளங்கையில் பிடித்திருந்த லிங்கத்தைக் கைகள் நடுங்க அருகிலிருந்த பாறைக்கடியில் வைத்தபோது ஈரமணலில் கூலாங்கல் நகர்வதைக் கண்டார். பின் அது சிறு நண்டு என்று கண்களுக்குப் புலப்பட்டதும் தன்னுள்ளே தயக்கமாகப் புன்னகைத்தார். மெதுவாக தன் உடைகளை அவிழ்த்து நிர்வாணமானார். ஈரக்காற்று உடலைக் கூசியதும் குறி மெல்ல எழுவது போலிருந்தது. மயில்கள் கூட்டமாக அகவிய ஒலி அவரைத் திடுக்கிடச்செய்தது. அத்திசை நோக்கியவர் அவ்வொலியினுடன் கொக்கமர்ந்திருந்த கிளையைப் பார்த்து மனதில் இணைத்துக்கொண்டார். அவரின் சிங்கவால் சடை காற்றின் திசையில் துழாவியது. ஆற்றுக்குள் சிற்பி மீன் போல பாய்ந்ததும் அதன் மௌனம் உடைந்தது.
நீரில் சிற்பியின் அசைவிலிருந்து வரும் ‘தளக் தளக்’ சப்தம் அவ்விடம் முழுவதும் தாள இசை போல் ஒலித்தது. அரைநாழிகைக்குப் பின்; நீருக்குள்ளிருந்து வெளியே வந்தார். அவர் உதடுகள் மந்திர உச்சாடனத்தை முனங்கிக்கொண்டிருந்தன. கண்களைத் திறந்து பார்த்தபோது இருள் சூழ்ந்துவிட்டிருந்தது. ‘எத்தனை நாளிகை நீருக்குள் இருந்தேன்?’ என்று எண்ணியவாறு ஆகாயத்தை அண்ணாந்தார். வானம் வெண்பொட்டில்லாத மூளியாகத் தன்னைக் காட்டியது. தாடியின் வெண்மயிர்கள் பளிச்சென மார்பில் ஒட்டியிருந்தன. முதுகில் ஈரம் சொட்டி மின்னின. சிலகணங்களுக்கு முன்பிருந்த ஆற்றின் வடிவத்தை இப்போது சரியாக ஊகிக்கமுடியவில்லை. ஆறு பெரும் கடலாக முடிவின்றி விரிந்திருந்தது. ஆற்றின் வெகு தொலைவில் தண்ணீருக்குள்ளிருந்து மீன்கள் மூழ்கி எழுவது போன்று படகுகள் சென்றுகொண்டிருந்தன.
கோவிலை ஏறிட்டார். அது, மெல்லிய கருஞ்சாம்பல் வெளியில் பெரும் சித்திரமாக நிமிர்ந்து நின்றது. தன் நூறு வருட முதுமையை தாங்கியிருந்தது. அதன் பிறப்பு வெறும் பாறைக் குன்றுகளாகக் கிடந்;திருக்க வேண்டும். இப்போது கண்களுக்குள் நிறைந்து பரவும் கரிய சிவரூபமாக மாறியுள்ளது என்று மனதில் எண்ணினார். அப்போது கோவிலிலிருந்து நகரருக்குள் செல்லும் இராஜபாதையில் குதிரைகளின் குளம்படியோசைகள் எழுந்தன. சிற்பி தலையை எக்கினார். புதர்களுக்கப்பால் வெண்புரவிகளின் பாய்ச்சல் கொக்குகள் எழுந்து பறப்பது போலிருந்தது. ‘மன்னரின் சைனிக்கள் கொவிலுக்கு வந்து செல்கிறார்களா?’ வேகமாக ஆற்றிலிருந்து கரைக்கு வந்தார்.
சிவாலய கற்கோபுரத்தைப் பார்த்து ‘சிவ சிவ’ என்று கைகளைக் கூப்பி வணங்கிவிட்டு உடைகளை அணிந்துகொண்டார். அப்போது கரையோரமிருந்த ராட்சஸ பனைமரத்தில் தன் பெருவிழிகளை உருட்டியபடி ஆந்தை ஒன்று அவரை உற்று நோக்கிக்கொண்டிருந்தது. கோவிலுக்குப் பின்புறமாக நீண்டு செல்லும் ஆற்றுப்பாதையில் இறங்கி நடக்கத்தொடங்கினார். மென் தூறல் பெய்திருந்ததில் காட்டுமல்லியின் வாசனையும் கோரை புற்களின் மணமும் பாதையில் கசிந்திருந்தது. புற்கள் காற்றில் அசைந்து அவரைப் பற்ற அலைந்தன. உடம்பில் உரசுவதை தள்ளிக்கொண்டே விரைந்தார். பாதையின் குறுக்கே வழவழப்பாக எண்ணைய் பூசிய மேனியில் நீலக்கண்ணாடி போல் ஒன்று நழுவிச்சென்றது. மெல்ல உற்றுப் பார்த்தவர் அதொரு நாகம் என்று பட்டதும் தன் கால்களைப் பின்னோக்கி எடுத்துக்கொண்டார். அது அவரசரமில்லாமல் நெளிந்தபடி சென்றது. அது கடந்து போவதே பிரம்மையாக இருந்தது. அதன் மென்மையான வால் தாயோடு ஓடும் குட்டியைப் போன்று அசைந்தோடி புதருக்குள் மறைந்தது.
இருள் வெளியில் கோவிலின் ராஜகோபும் கம்பீரமாக தோற்றமிற்றிருந்தது. சிற்பி வருகையை எதிர்நோக்கியிருந்த சீடர்கள் அவரைக் கண்டதும் எழுந்து தலை வணங்கினர். வேகமாக அவர்கைளைக்கடந்து அர்த்தமண்டபத்திற்குள் நுழைந்தார். வாசலில் பரவிக்கிடந்த பூவரசின் காய்ந்த இலைகள் அவர் பின்னால் சுருண்டோடி பின் அடங்கின. கோவில் மண்டபகங்களுக்குள் தீ பந்தங்கள் பொன்னிறமாக எரிந்துகொண்டிருந்தன. மண் பூசிய பாதங்களுடன் மார்போடு கைகள் கூப்பிய வண்ணம் அவர் நடந்தார். உதடுகள் சிவ நாமம் ஜபித்தபடியிருந்தன. எரிந்துகொண்டிருந்த அத்தனை தீப்பந்தங்களும் துளி நெருப்பாக மாறியிருந்தது.
கர்ப்பகிரகத்திற்குள் நுழைந்து ‘ஓம்’ மெனச் சொல்லியவாறே திருநீரை அள்ளி இட்டுக்கொண்டார். உச்சரித்த பிரணவ மந்திரம் கர்ப்பகிரகத்திற்குள்லிருந்து அவர் வெளிவந்த பின்பும் ஒலித்துக்கொண்டிருந்தது. வெளியே வந்தவர் மகாமண்டபத்தின் சிலைகளை ஏறிட்டுப்பார்த்தார். அக்கணம் தன் பிரக்ஞை நழுவுதை உணர்ந்தார். உடல் நடுக்கம் எடுத்தது. வெளியே நின்றிருந்த சீடன், சிற்பியைக்கண்டதும் மறுமுறை தலை தாழ்த்தினான். அவர் சீடனின் தலைமீது தன் கையை ஒரு நொடி தொட்;டு எடுத்தார். சீடன் சிற்பக்கூடத்திலிருந்து கொண்டுவந்த உளிகளை அவர்முன் நீட்டினான். அதைப் பார்த்த கணத்தில் அவர் நெஞ்சம் அச்சத்தில் மூண்டது. தன் அச்சத்தைத் தவிர்ப்பதற்காக அவற்றை சட்டென வாங்கிக்கொண்டு வேகமாக முன்மண்டபத்;திற்கு விரைந்தார். அவர் நடையின் தள்ளாட்டத்தை சீடன் கவனித்தபடி பின்தொடர்ந்தான். அக்கணம் தான் முதன்முதலில் சிலை வடிப்பதற்கு துணை புரிய வந்தபொழுது கண்ட சிற்பி வேதசாதகரின் தோற்றம் அவன் நினைவில் மீண்டது. கூர் ஆணி போன்ற அவருடைய பார்வையும் புடைத்திருக்கும் மூக்கும், சிங்கப்பிடரி தலைமயிரும், வெண்மையும் கருமையும் கலந்த மெல்லிய பூ நாறு போன்ற தாடியும் அவன் மனதில் தெளிந்தது. அவ்வெண்தாடி கொடியாக நெளிந்து நீண்டிருக்கும். கைகள் பாறைகளை உடைத்து வலுப்பெற்று புடைப்புச் சிற்பமாகவே மாறியிருந்தன. அவை சதைகள் கொண்டவையா? என ஆரம்பத்தில் அவனுக்கு ஐயமிருந்தது. உளிகள் மோதும்போது அவர் கண்கள் சிற்பத்திலே நிலைகுத்தியிருப்பதை சீடன் பார்த்துக்கொண்டேயிருப்பான்.
ஒவ்வொரு சிற்பமும் கற்பாறையிலிருந்து ரூபவடிவம் பெறும் வரை அவர் மனம் அலைக்கழிந்து சாவின் விளிம்பைத் தொட்டுவிட்டு வருவது போலிருக்கும். பாறைகளைத் தொட்டு அதன் ஆழத்தில் உயிர் ஓடுவதை அறிவார்.. தூண்களில் சிலை உருவத்தை முடிக்கும் தருணம் அவரின் மௌனம் கனமுற்று விடும். அவர் உதடுகளுக்குள் ஏதோ ஒன்று முட்டி நிற்கும். ஓரத்தில் சமயங்களில் எச்சில் மட்டும் மின்னுவதை சீடன் பார்ப்பான். அப்பொழுது பானையில் தண்ணீர் மொண்டு கொடுப்பான். அவர் அண்ணாந்து பருகும்போது உள்ளே வறண்ட நாக்கு தண்ணீரின் குளிர்ச்சியில் புரண்டு நெளியும். அக்கணமே அவ்விடம் முழுவதும் சிற்பியின் உடலிலிருந்து வெப்பம் பரவுவதை அவன் உணர்ந்திருக்கிறான்.
இன்றுடன் அவன் சேர்ந்து பத்து வருடங்களும் நிறைவுற்றது. கற்கோவில்களை நன்கு கட்டக்கூடிய ஸ்பதிகள் வழிவந்தவர் சிற்பி வேதசாதகர். மூப்பற்றவர் என்றும், காலத்திற்கு அப்பாற்பட்டவர் என்றும் அழைக்கப்படும் வேதசாகரின் வயதினை அவனால் இன்றுவரை கணிக்க இயலவில்லை. சிற்பம் வடிப்பதில் பாரதத்திலிருந்த ஸ்தபதிகளின் மத்தியில் தன் ஆசானை மிஞ்ச யாரும் இல்லை என்று மக்கள் பேசிக்கொள்வதை கேட்டு கர்வம் கொண்டிருக்கிறான். எண்ணற்ற சீட சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். ஆனால் இம்மூன்று ஆண்டுகளாக சிற்றுளியைத் தொடுவதற்குக் கூட அவர் கைகள் நடுங்குவதை கண்டு அவன் மருண்டிருந்தான்.
வேதசாதகர் சீடர்களைப்பார்த்து ‘செல்’ என்பதுபோல் கண்ணசைத்தார். ஆழ்ந்த யோசனையிலிருந்தவன் அப்போதுதான் நினைவிலிருந்து மீண்டான். அங்கிருந்த ரங்க மண்டத்தினுள் நுழைந்தான். அம்மண்டபத்தின் மூலையிலிருந்த வைக்கோல் பரப்பிய பாயின் கலையாத அமைப்பு, நேற்றும் அவர் துயில் கொள்ளவில்லை என்பதைக் காட்டியது. பூவரச இலைகள் மீது வைத்திருந்த வெல்லம் தேங்காய் கலந்த அரிசி சாதம் சிதறிக்கிடந்தன. உதறி அப்புறப்படுத்திவிட்டு அப்போது சமைத்துக் கொண்டுவந்திருந்ததைக் கலயத்தில் வைத்து, கோவிலுக்கு வெளியே சிற்பிகளும் பணியாட்களும் தங்கும் மடம் நோக்கி நடந்தான். அவன் பின்னே ஏனைய சிற்பிகளும் பின்தொடர்ந்தனர்.
0
சோழர் காலத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த விந்தியமறவன் இக்கோவிலைப் புதியதொரு பாணியில் அமைக்க விரும்பினான். அதற்கெனவே பாரதவர்ஷமெங்கும் சிற்பங்களைக் காண பயணம் செய்தான். வயது மூப்படையத் தொடங்கியது. நோய்மை பீடிக்கப்பட்டு சுணங்கினான். தன் தேசத்திற்கு திரும்ப இயலாது அந்நிய மண்ணில் படுக்கையில் வீழ்ந்தான். வாழ்வின் எஞ்சிய நாட்கள் அவனை அச்சத்திலாழ்த்தியன. அவன் கண்ட சிற்பங்கள் அடுக்கடுக்காக ஞாபங்களில் வந்து விழுந்துகொண்டிருந்தன. உயிர் நழுவும் தருணத்தில் தான் சேகரித்த சிற்பக் குறிப்புகளைத் தன் மகள் வழி பிறந்த வாரிசான செங்கிரைமறவனிடம் கொண்டு சேர்க்க முடியாது தோற்றான்.
விந்தியமறவனின் காலமுடிவுற்ற பின்பும் நிறைவுறாத அவன் ஆசைகளின் பிம்பமாக அவன் பேரன் செங்கிரைமறவன் தழைத்திருந்தான். சிற்பங்களின்மீதான ஞானம் அவனுக்குக் குருதியினூடே ஊறியிருந்தது. பெரும் சிற்ப சைனிக்கள் சூழ இக்கோவிலை விஸ்தரிக்கத் தொடங்கினான். பாரதவர்ஷம் முழுதும் சிற்ப நுணுக்கங்கள் அறிந்த ஸ்பதிகளால் தன் அவையை நிரப்பினான். தன் தாத்தாவைப் போன்று சிற்பங்கள் தணியாத தாகம் அவனையும் தேசாந்திரியாக அலைக்கழித்தது. தினம் அவனின் கனவுகளிலிருந்து சிற்பங்கள் உருப்பெற்று எழுந்துவந்தன. அவற்றின் நுணுக்கங்களையும் கூர்மையையும் தொட்டுத் தடவி ஆசுவாசமடைவான். பேரரசி பிரகனதி தன் மகனையும் தந்தையைப்போல் இழந்துவிடக்கூடாதென்பதில் கவனமாக இருந்தாள். சோழர்களின் கடைசி சிற்றரசனான சியமகந்தனின் மகள் நன்னையை அவனுக்கு மணமுடித்தான். நன்னை பேரழகி. அவளே ஒரு தனிச்சிற்பம் போல அரண்மனையில் அமர்ந்திருந்தாள். செங்கிரைமறவனுக்கு அரசி நன்னையையும் ஒரு சிற்பமாக வடித்துப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் மூண்டிருந்தது.
0
மண்டபங்களின் பேரமைதி வேதசாதகரை அச்சமூட்டியது. தாளமுடியாத நடுக்கம் கைகளில் ஓடுவதை உணர்ந்தார். மனம் மறுபடியும் மறுபடியும் பிரக்ஞையின் அப்பால் வெளியேறத் துடித்தது. ரதி ரதி என்று மனம் சொல்லியது. ஆம் அச்சொல்தான். சொற்களால் நிரப்பமுடியாத பிரபஞ்சம். ஒவ்வொரு இரவும் அப்பிரபஞ்சத்தின் எல்லையைத் தொட்டு மீள்வதும் பின் தாளாத குற்றவுணர்வில் சுணங்கிப் போவதும் ஒரு பெருஞ்சுழற்சியாக சுழட்டிக்கொண்டிருப்பதை அக்கணம் எண்ணினார். புலன்கள் கூர்மையடைந்தன. தன் உடலே அப்போது உளியாக மாறவிட்டதுபோலிருந்தது. எண்ணங்களைக் கலைக்க முற்பட்டபோது ரதியின் மூக்கின் நுனியும் பிரிந்த உதடும் நினைவில் தொட்டு ஓடின. பேராழத்தில் சர்ப்பத்தின் அசைவினை கேட்டார். சுயம் அனிச்சையாக அவிந்தது. தன்னை இயக்கிக்கொண்டிருப்பதே அவ்விசைதானெனத் தோன்றியது. உளிகளை எடுத்துக்கொண்டு வசந்த மண்டபத்திற்கு விரைந்தார்.
கதவைத் திறந்ததும் உள்ளிருந்த கரிய இருள் சட்டென தாக்கியது. உடலின் மென்அதிர்வை உணர்ந்தார். கைவிளக்கின் சிறு வெளிச்சத்தில் கதவைத் தாழிட்டுவிட்டு திரும்பினார். விளக்கின் செந்நிறவொளி மண்டபத்தின் இருளை விழுங்கியது. மண்டபத்தின் தூண்களிலிருந்த ரதி சிற்பங்களைக் கண்டார். ஒருகணம் மனம் தவித்து எழுந்தது. அத்துனை முகங்களிலும் குறுநகை ததும்பியது. போகத்தின் வெட்கப்புன்னகை. காமத்தை வென்றதன் களிப்பு. தாபத்திற்காக இறைஞ்சி நிற்கும் முகங்களைக் காணும் ஏளனம். ஒவ்வொரு தூண்களிலும் ரதியின் இடையசைவுகளும்ää நடன ஒத்திகைகளும் மாறி மாறி இருந்தன. வேதசாதகர் மெல்ல அச்சிற்பங்களிலொன்றைத் தொட்;டார். கைகள் சில்லிட்டெழுந்தன. அவைகள் தன் படைப்பின் உச்சம் என்கிற திமிர் அப்போது எழவில்லை.
மையத்தூணிற்கடியில் நிற்கும் ரதியினருகே நின்றார். அவளின் திரண்ட முலையையும் புடைத்த காம்பையும் வருடினார். உடல் பதைத்து நடுங்கியது. விரல்கள் அனிச்சையாக அவளைப் பற்றின. சரிகையின் மென் மடிப்பினைப் பிடித்தார். இடது காலைத் தூக்கி அன்னப் பறவையின் முதுகில் வைத்திருந்ததால் பிருஷ்டம் பின்னோக்கி சாய்ந்திருந்தது. பிளந்திருக்கும் யோனியை நோக்கினார். கைவிளக்கு வெளிச்சத்தில் காந்தள் மொட்டினை அவிழ்த்தது போல் அது சிவந்திருந்தது.. சட்டென அவள் முகத்தை அண்ணாந்தார். அவள், வெட்கி திருப்பியதுபோன்ற பிரமை தோன்றி மறைந்தது. அவளின் அடிவயிற்றில் உளியைப் பரப்பிவாறு மறுபடியும் முகத்தை ஏறிட்டார். அவள் நெளிந்தாள். உளியை அவளின் யோனியிழைகளுக்குக் கொண்டு சென்றதும் அவளின் இடை மெல்ல எழுந்தது. வேதசாதகர் தன்னுள்ளே சிரித்துக்கொண்டார்.
வேதசாதகர் தன் உணர்வுகளை உரசும் அவளின் ஸ்தனங்களைக் காண தினம் அவ்விருளுக்குள் வருவார். அக்கணம் அவரின் ஆண்மை மீண்டெழும். எண்ணம் முழுதும் குறுகுறுப்பு உண்டாகும். தன் பிரம்ம விரதத்தினைச் சீண்டுவதாக நினைப்பார். அத்துனையும் காமரூபங்களென தன்னுள்ளே சொல்லிக்கொள்வார். அவ்வடிவங்கள் அவருள் பொங்கி வழிவதாகவும் உணர்வினை மூட்டுவதாகவும் அஞ்சினார். தன் அகத்தின் எல்லை விரியும் கணங்களை ரசிக்கத்தொடங்கினார்.
அன்று இளவயதாக அஞ்ஞாசகரை வந்து சந்தித்தபோது சிற்பக்கலையைப் பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. படைப்ப10க்கம் ஊற்றாகப் பீறிட்டு வருவது மட்டுமே அவர் வசமிருந்தது. மனம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள தவித்துக்கொண்டிருந்தது. அறிவின் பேராழத்தில் தான் தத்திக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். கற்கக் கற்க அவ்வாழம் நீண்டுகொண்டே சென்றது. அஞ்ஞாசகர் ‘தியானித்திரு’ என்பார். “அகத்தினுள் புலப்படும் அசைவுகளை உற்று நோக்குää அதன் வடிவினைக் காண். ஆழ்மனம் கண்டுகொண்டிருப்பவற்றிற்குää மேல் மனம் உருவம் கொடுக்க வேண்டும். உளிகள் தாம் நம்மை இயக்குகின்றன இளைஞனே. ஆழ்மனதின் குகைக்குள் புதைந்திருக்கும் முடிவற்ற வடிவங்களுக்கு இவைதான் உயிர் கொடுக்கின்றன. எழுத்தாணி போல இவை படைக்கும் படைப்புகள் என்றும் நம்மோடு பேசிக்கொண்டேயிருக்கக்கூடியவை. சிற்பங்கள் அனைத்தும் நம் கனவின் நிச்சயங்கள். ஒவ்வொன்றிலும் அதன் உயிரின் துளியொன்றை இட்டு விடுங்கள். அத்துளியை காண்பவனுக்கு அது வெளிப்படட்டும். அவற்றை ஒரு போதும் அழித்துவிடாதீர்;. அழிப்பதற்கு நீர் உரிமையற்றவன். படைப்பு என்பதே இன்னொன்றோடு மோதுவற்குத் தான். மோதி ஒன்று அது மடிய வேண்டும் இல்லையேல் இன்னொன்றாக உயிர்பெற வேண்டும்”.
அப்போது “நான் காமத்தைத் தவிர்க்கவே முனைகிறேன் மாமனிதரே” என்றார் வேதசாககர்.
“ஆஹா…நல்ல முரண் இது. காமம் எங்கிருக்கிறதென அறிந்துவிட்டீரா? ஆசை இருக்கிறதல்லவா. மானுட விருப்பு வெறுப்புகள் இருக்கிறதல்லவா? அவையெல்லாம் காமம் அல்லாதவைகள் என்று நினைக்கிறீரோ? மானுடம் ஆசைகளால் இயங்குகிறது. இச்சை அரூபமானது. அதன் தோற்றத்தை எங்கு காண முடியும்? அதற்கென ஒரு தோற்றமிருக்குமென்றால் அது இந்த உடல். இந்த சரீPரம் தானே. இதுதான் அதன் ரூபம். ரதியை நீர் கண்டடைந்து பாருங்கள் அவளுள் எஞ்சியது எதுவும் இங்கு இல்லை”
கை விளக்கின் ஒளி செஞ்சிவப்பாக மாறியது. அவளின் கரிய விழிகள் மின்னின. அர்சுனனின் வில் போன்ற புருவம். எரிக்கும் சுடர், சிருங்காரம், வியப்பு, பீதி என கண்கள் மாறி மாறி பாவனைகளைக் காட்டின. அவளின் பெரு மூச்சில் முலைகள் அசைந்தன. இடையில் நழுவும் பொற்சரிகையைப் பிடித்திழுத்தபடி தவிப்புடன் நிற்கும் ரிஷிகளின் சிற்பங்களைக் கண்டார். அவர்களின் இறைஞ்சும் முகத்தையும் புடைத்த குறியையும் கண்டு சிரித்துக்கொண்டார். கைகளால் முலைகளைப் பற்றியதும் அவள் தன் கால்களை நெகிழ்த்தி யோனி மலரைக் காட்டினாள். வேதசாதகர் சுயமிழந்துகொண்டிருந்தார். அக்கணம் பிரமச்சரியமென்பதே சிறு புள்ளியாகத் தெரிந்தது. உடல் முழுதும் கண்களாக அவளை நோக்கின. ரதியின் பேரழகு அவரை அழித்து மீட்டியது. ஒரு உயிராகத் தன் குறி துடிப்பதைக் கண்டார். அக்குற்றவுணர்ச்சியின் விளிம்பில் நிற்கின்ற கணத்தை அனுபித்தார்.
0
நுழைவாயிலின் தாழ் திறக்கும் ஒலிகேட்டது. அரசர் வருவதை இரு காவலாளிகள் அறிவித்தனர். சட்டென பேரச்சம் வேதசாதகரை ஆட்கொண்டது. வசந்த மண்டபத்திலிருந்து அவசரமாக வெளியேறி இறங்கி வந்தார். வெளியே பரவியிருந்த வெளிச்சம் கண்களைக் கூசி காட்சியை ஒருகணம் கலைத்தது.
வெண்புரவிகள் மீது வில்லேந்திய போர்சைனிக்களின் நடுவே யானை மீதிருந்த அம்பாரியில் அரசன் செங்கிரைமறவர்மன் அமர்ந்திருந்தான். நுழைவாயிலுக்குள் யானை தலை தாழ்த்தி பின் ‘புஸ் புஸ்’ எனத் துதிக்கையில் ஈர நாசியில் முச்சுவிட்டது. அதன் நடை மூப்படைந்துவிட்டதைக் காட்டியது. ஒரு கணம் பெரும் கரும்பாறையொன்று தன் விழிகளை உருட்டிப் பார்ப்பது போல இருந்தது. யானை துதிக்கை ஊன்றி முன்னங்கால் மடித்து முதுகை இறக்கியதும் மன்னன் தன் தாடி நீவியபடி சரிகை தவழ தூய ஆடையில் வந்து நின்றான். சிற்பி ஓடிச்சென்று நிலம் நோக்கி வணங்கினார்.
செங்கிரைமறவர்மன் சிரித்தவாறு உதட்டைச் சுழித்தான். “ஏன் முகம் மோகினி பிடித்தது போலிருக்கிறது. என் வருகையை எதிர்பார்க்கவில்லையா? நான் சிலமாதங்களாக தங்களை கவனித்துக்கொண்டுதானே இருக்கிறேன். எந்நேரமும் என் புகழ் உயர்வதற்காக கோவிலே கதியென்றிருப்பது…” இடையில் சரிந்திருந்த தன் கனத்த உடைவாளை முன்னிழுத்து நீவிக்கொடுத்தான். எத்தனை சூடான குருதிகளை அள்ளித் தன் நாவால் பருகியிருக்கிறது என்று காட்டுவது போல். அரசன் சிற்பியின் முகத்தினருகே பார்வையை இறக்கி இமைகள் விரித்தான். “இன்னும் எத்தனை காலம்தான் வேலையை தொடர்ந்துகொண்டேயிருக்கப் போகிறீர்? என் பேரன் காலத்திலாவது இம்மண்டபங்களை முடிக்க வேண்டாமா?. பிறகு எப்போது என் சிறப்பை பாரதவர்ஷம் காணப்போகிறது?. ஈறாறு ஆண்டுகள் முடிந்துவிட்டது வேதசாதகரே”
“மன்னனின் ஆக்ஞைபடியே நடந்துகொண்டிருக்கிறது” சிற்பி நடுங்கும் தன் கைகளைப் பற்றியவாறு அவரை ஏறிட்டுப் பார்க்காமல் பதிலுரைத்தார். குரல் உடைந்து நா தழுதழுத்தது.
“கடைசி -மண்டலம் முடிய உமக்கு இரு தினங்களே உள்ளது வேதசாதகரே மறக்க வேண்டாம்.” என்றான். வேதசாகர் நெஞ்சம் அதிரக் கை கூப்பினார். பட்டுச் சரிகையை அள்ளித் திரும்பியவன் சட்டென ஈரக்காற்றின் உடல் கூசியதும் அத்திசையை நோக்கினான். வசந்தமண்டப வாயிற் கதவு திறந்திருந்தது.
வேதசாதகரின் முகம் விகாரமடைவதை அரசன் கண்டுணர்ந்தான். காவலாளிகளிடம் அக்கதவினைத் திறக்கச் சொல்லி சைகை செய்தான். உள்ளே கைவிளக்கின் வெளிச்சத்தில் சிற்பங்கள் அலைந்தன. விறுவிறுவென நடந்தவன் வாயிலில் நின்று அவற்றை நோக்கினான். அதிர்ச்சியல் விதிர்த்துப்போய் நின்றான். அனைத்து முகங்களும் அவனை நோக்குவதுபோலிருந்தது. காமத்தின் பேரண்டம். மானுடம் என்கிற பிரக்ஞை இழந்தான். திரும்பி வேதசாதகரைப் பார்த்தான். உடல் துவண்டு சரிவது போல் நின்றார். அவர் மன்னனை ஏறிட்டுப்பார்த்தார். செங்கிரைமறவன் உதட்டைச் சுழித்து, “வேதசாதகர் ஹா ஹா.” சட்டென தன் முதுகுத்தண்டில் கூர்மையான பாய்ச்சலை உணர்ந்தவன் இடையிலிருந்த வாளை உருவி சிற்பியின் தலையில் வீசினான். வேதசாதகரின் தலை குருதி பீறிட அப்பால் போய் விழுந்தது. முண்டவுடல் தக்கதக்கவென விதர்த்து அவன் முன் வந்ததை காலால் எட்டித் தள்ளினான். மண்டபத்தினுள்ளே எரிந்து கொண்டிருந்த கைவிளக்கினை உதைத்து அணைத்துவிட்டு இறங்கினான். ரதியின் முகங்களில் தெரிந்த அரசி நன்னை மறைந்தாள்..