முகம்
முகம்
மிக அருகே பன்றியின் முகத்தைப் பார்த்தேன். அதன் கரிய உடம்பில் சாக்கடை நீர்ச் சொட்ட, கொழுத்த வயிற்றில் முலைகாம்பு வரிசை தரையில் உரசியபடி, கருத்த கூம்புமூக்கைத் தூக்கி உறிஞ்சிவிட்டு என்னைப் பார்த்தது. சுருங்கி விரிந்த நாசித்துளைகளில் ஈரம் மினுமினுத்தது. தூக்கம் இல்லை. கண்களை மூடியபடிதான் படுத்திருந்தேன். பின்தொடரும் இக்காட்சி என்னை வெறியூட்டிக்கொண்டே இருக்கிறது. எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். வெயில் சுவரில் இறங்கியிருந்தது. வாயோரம் வழிந்திருந்த எச்சிலைத் தோள்பட்டையில் துடைத்துக்கொண்டு எழுந்தபோது லுங்கியிலிருந்து செல்போன் பாயில் விழுந்தது.
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். முகம் முப்பதைத்தாண்டியதுபோல முதிர்ந்துவிட்டதாகப் பட்டது. கண்களைச் சுருக்கும்போது வரிக்கோடுகள் பிரிந்து ஓடின. தாடையில் முளைத்திருந்த சூட்டுக்கட்டியில் சீழ் தென்பட்டது. சவரம் செய்யும்போது அதைச்சுற்றி விடப்பட்டிருந்த மயிர்த்துணுக்கைத் தடவினேன். வலியினூடே அப்படிச் செய்வது நன்றாக இருந்தது. வெளியிலிருந்த சிமெண்ட் தொட்டியிலிருந்த நீரில் முகத்தைக் கழுவிக்கொண்டேன். நீரின் குளிர்ச்சி பட்டதும் கன்னச் சதைகள் நடுங்கின. நெற்றி கனத்திருந்து. பீடிக்காக டவுசரில் கைவிட்டுத் துழாவியதில் பாக்கெட்டிலிருந்த கத்தி தட்டுப்பட்டது. ஒருகணம் அடி வயிற்றில் திக்கென வலி பரவுவதை உணர்ந்தேன். உறுப்பு போல கத்தியைப் பிடித்துத் தடவியபடியே அதன் கூர்மையைத் தொட்;டதும் நெஞ்சின் பேராழத்தில் அச்சம் பரவியது. அதுதான் நான். பீடியைப் பற்றவைத்து தெருவை ஏறிட்டுப்பார்த்தேன். எப்போதும் அப்பாதையில் பன்றிகள் கூட்டமாகவோää குட்;டியுடனோ இறங்கி ஓடும். ஏதும் கண்ணில் தென்படவில்லை காலைவெயில் ஓடுகளில் வெறுப்போடு கசிந்துகொண்டிருந்தது.
0
பன்றிகளுடனான இணக்கம் எனக்குச் சிறுவயதிலிருந்தே தொற்றிவிட்டிருந்தது. வீட்டைவிட்டு தெரு முக்கிற்கு வந்தால் குறவன்காலனியில்தான் கால்கள் படும். பள்ளர் தெருவுக்கும் குறவன் காலனிக்கும் நடுவே சாக்கடைப் பாலம் மட்டுமே எல்லை. இரு சமூகமும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தன. அக்காலனி முழுதும் பன்றிகள் கூட்டமாக குப்பைக்கூலங்களை நோண்டியவாறு குட்டிகளுடன் அலையும். பொட்டல் வெளியில் குப்பை விழுந்ததும் குடுகுடுவென குறுத்த வாலை ஆட்டிக்கொண்டு ஓடிவருவதைப் பார்த்திருக்கிறேன்.
குறவன்காலனிக்குள் நுழைந்துதான் எங்கள் தெருவிற்கு வரமுடியும். சிறுவனாக அம்மாவின் கையைப் பிடித்தபடி வருவேன். அப்பாதையெங்கும் மலம் சிதறியிருப்பது போலிருக்கும். காய்ந்த களி போலவும், வெளுத்த சதைக் குவியலாகவும் புற்களில் ஒட்டிக்கிடக்கும். நான் மலத்தின்மீதுதான் நடப்பதாகவே எண்ணினேன். பாதையோரங்களில் குவியல் குவியலாக இருக்கும் காலை மலங்களைப் பன்றிகள் அவ் அவ்வெனப் பசியுடன் தின்பதைப் பார்த்திருக்கிறேன். அக்காட்சியைக் கண்டதுமே வயிற்றுக்குள்ளிருந்து வாந்தி, பூனைபோல வாய்வழியே வெளியே எம்பிக்குதிக்கத் தயாராக இருக்கும். சட்டெனத் தலை கனத்ததுää குமட்டல் அடிவயிற்றை மேலே இழுத்துக்கொண்டுää கழனித்தண்ணீராக செரித்த பருக்கைகள் பீறிட்டு வரும். புளித்த காரத்தன்மை மூக்கை எரித்ததும் அப்படியே பொத்திக்கொண்டு அமர்ந்துவிடுவேன். நெற்றியைப் பிடித்துவாறே அம்மாவும் அமர்ந்துவிடுவாள். பின்பு என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு வருவாள். நான் தலையை அவள் தோளில் சாய்த்துää சாலையை வெறித்தவாறே இருப்பேன்.
அப்பா ஹோட்டல் வேலைக்குப் போய் வந்தார். காலையில் கழிப்பறையைக் கழுவுவதிலிருந்து இரவு முடிந்ததும் பாத்திரம் தேய்த்து கொடுத்துவிட்டு வரும்வரை வேலை சரியாக இருக்கும். மீந்த இட்லி, காய்கறி, குழம்புகளை அள்ளி வாளியில் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார். அம்மா அத்துனையையும் அடுப்பை மூட்டி சுட வைத்துää பாதி விலைக்கு கடைபோட்டுவிடுவாள். குறவன் காலனியில் இருப்பவர்களுக்கு ஏனோ அதன் ருசி பிடித்திருந்தது. அம்மாää ஹோட்டல்களில் கிடைக்கும் எச்சிலிலை டிரம்முகளை எடுத்துவந்து வீடுகளில் வளர்க்கும் பன்றிகளுக்குப் போடுவாள். வாளி ஒன்றுக்கு ஐந்து ரூபாய் என்று அதில் கணிசமான பணமும் கிடைத்தது. பெருத்த வயிறுள்ள பன்றிகள் எங்கள் வீட்டைக் கண்டுகொண்டுää பின்னால் வருவதை பார்த்திருக்கிறேன். அதன் அருகாமை அருவருப்பையும் அச்சத்தையும் கொடுக்கும். ரோமம் மண்டிய கருத்த குள்ள மனிதனைப் பார்ப்பது போலிருக்கும். டிரம்முக்குள் தலையை விட்டுத் துழாவும். அம்மா நான் பயப்படுவதைக் கண்டு சிரித்தவாறே பன்றிகளை விரட்டுவாள்.. டிபன் வாங்க நிற்கும் தோட்டிப்பெண்கள், “ஓம்பையன டவுசர் போடச் சொல்லுக்கா பன்னி பசிக்கு தின்னுட போது” என்பார்கள்.
அங்கு வந்துசேர்ந்த கொஞ்ச நாளிலே நானும் தோட்டிப் பையன்களுடன் சேர்ந்து கரிய வெற்றுடம்பைக் காட்டியவாறு டவுசரில் கற்களை நிரப்பிக்கொண்டு கவன்வில்லை ‘விசுக் விசுக்’ கென சப்தமெழுப்பியபடி சுற்றத்தொடங்கினேன். அத்தோட்;டிப் பைன்களின் சுதந்திரம் என்னை வசியப்படுத்தியிருந்ததால் சீக்கிரத்திலே பள்ளிக்கூடத்தை வெறுத்தேன். முருகதாஸ்தான் எனக்கு பன்றிகளை முதன்முதலில் அடையாளம் காட்டியவன். அவன் அப்பா கக்கூஸ் சுத்தம் செய்யவதற்கு கிளம்பிச் சென்றதும் என்னை அழைத்துச் சென்று பன்றிகள் மேயும் திசைகளைக் காட்டுவான். கருவேல மரங்கள் மண்டிய காடுகளுக்குள் இறங்கி செல்வோம். அங்குதான் அவை சுற்றியலைந்துவிட்டு நிழலில் குழி பறித்து படுத்திருக்கும். முருகதாஸ் ஒத்த உருவம்கொண்ட அத்தனை பன்றிகளிலிருந்து அவர்களுடையதை மட்டும் பிரித்தறிந்திருந்தான். நான் கேட்டபோதுää பன்றிகளின் வெட்டுண்ட காதுமடல்களைக் காட்டி அவ்வுத்தியைச் சொன்னான். அப்போதுதான் அத்தனை பன்றிகளின் காதுகளும் கிழிபட்டிருந்ததை கவனித்தேன். சிலதுகளுக்கு வாலும் வெட்டப்பட்டிருந்தது. வாலில்லாத பன்றிகள் அசப்பில் மனிதனைப் போலவே தோற்றமளித்தன. அது ஒவ்வொன்றுமே அப்பன்றிகளின் முதலாளிகளுடைய அடையாளங்கள். எதற்குமே முழுமையான காதுமடல்கள் இல்லை. குட்டிகள் மட்டுமே அறுபடாத காதுகளுடன் ஆனால் அவ்வடையாளங்களை அனிச்சையாகப் பின்தொடர்வதுமாக இருந்தன.
பள்ளிக்கூட கக்கூஸில் மூத்திரம் பெய்வதற்கு நிற்கையில் குழியில் படுத்திருக்கும் பன்றிகளைக் கண்டு அப்படியே நின்றுகொண்டிருப்பேன். உடல் முழுவதையும் சாக்கடைக்குள் அமிழ்த்திக்கொள்ள முண்டும். குட்டிகள் எப்போதும் துள்ளித்திரியும். தலையை ஆட்டியபடி பாய்ந்து என்னை நோக்கி மோதுவது போல வந்து பட்டென நின்று பின்பு பின்னால் தெறித்தோடும். அப்படியே ஒரு வட்டமாக அவ்விடத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். சிறுத்த வாலை ஊசல் குண்டு போல ஆட்டியவாறே மூக்கைத் துளைத்துத் தேடித்திரியும். பெருத்த பன்றிகள் எப்போதுமே தீவிர கவனத்தில் இருக்கும். சாக்கடைக்குழிக்குள் காய்ந்த கரிய ஈர மணலுக்குள் வசதியாக குழிதோண்டி சரிந்தவாறு பாலூட்டிக்கொண்டிருக்கும்.
0
குளித்துவிட்டு கொடியிலிருந்த லுங்கியில் தலையைத் துவட்டும்போது மறுபடியும் கண்ணாடியில் அக்கட்டியைப் பார்த்தேன். பழுத்து வெடித்துவிடத் தயாராக இருந்தது. அப்படியே கத்தியால் மழித்துவிடவேண்டுமென்கிற வெறி எடுத்தது. சதையைப் பிதுக்கியதும் வலி தாடை முழுதும் பரவியது. கெட்டவார்த்தையில் முனகிக்கொண்டே லைட்டைப் போட்டேன். அது மினுக் மினுக்கென்று வெளிச்சத்தை முக்கியதும் கதவோரம் சாய்ந்திருந்த பூனை சட்டென எழுந்து தலையை நிமிர்த்தி மியாவ் என்று அலுத்துக்கொண்டு கொல்லைக்குள் நுழைந்தது. “ந்தா எங்க சுத்திட்டு வர ஒன்னுங்கெடாயது போ எல்லாந்தீந்துச்சு” அப்பா விரட்டினார். அவர் குரல் தொழதொழத்து போயிருந்தது. எட்டிப்பார்த்தேன். அடுப்பிற்கு நேராக நெஞ்சைக் காட்டியவாறு படுத்திருந்தார். குளிர் அடங்கியபோதும் அவரால் அவ்விடத்திருந்து வெளிவரவியலாதவாறு அதன் வெம்மைக்குப் பழகிவிட்டிருந்தார். சிறு தூறல் விழுந்தாலும் தன் உடைந்த கால்களை இழுத்துக்கொண்டு அடுப்பின் முன்னால் ஊர்ந்தடைந்துகொள்கிறார். அவரை ஒருகணத்திற்குமேல் ஏறிட்டுப்பார்க்கமுடியவில்லை அடிவயிற்று பிசைவது போலிருந்தது.
“பாண்டி குறுக்கம்பட்டி பக்கம் போவியா ?” அப்பா கேட்டதும் தேடுவதை நிறுத்திவிட்டு “நா அங்கலாம் போவுல வேற வேலயா போறேன் நீ எதுவும் எங்கிட்ட சொல்லாத” என்றேன் கோவமாக. அவர் காதில் விழுந்ததும் சரசரவென தரையைத் தேய்த்தவாறு வெளியே வந்து என்னை வெறித்துப் பார்த்தார். பற்களில்லாத தாடை கழன்று ஆடியது. பார்வை இறைஞ்சுவது போல இருந்தது. நான்ää “ஒன்னத் தூக்கி வண்டில வெச்சு கொண்டு போவ முடியாது பேசாம கெட. யாராச்சும் வந்தா பேசிகிட்டிரு” என்றேன்.
“ஆருமே இல்லடா. என்ன ரோட்டுத் திண்ணையில விட்டுட்டு போடா” என்றார் என் கால்களைப் பற்றுவதுபோல. நான் பதறி, “சாவமாட்டியா நீ.. கெடந்து உசிர வாங்குற தாயெளி” என்று அடிக்கச் சீறியதும் அவர் அடங்கிக்கொண்டார். என் முகம் வெறிபிடித்ததுபோலிருந்திருக்க வேண்டும். மெல்ல விசும்பலாக அழுதார். அவர் முகத்தை ஏறிடாமல் சுருட்;டிக்கிடந்த சட்டைக்குள் பணத்தைத் துழாவி எடுத்துக்கொண்டு ஆணியில் மாட்டியிருந்த பைக் சாவியுடன் வெளியே வந்தேன். முன்பிருந்ததைவிட இப்போது வாசலில் மலநாற்றம் அதிகம் வீசியது. சமீபத்தில் அவ்வாடை குமையும்போதெல்லாம் பன்றியின் உருவம் மனதில் எழுந்துவருகிறது. உடனே கண்கள் அலைய தேடத் தொடங்கிவிடுகிறேன். சாக்கடைக்குள் உடலசைவு தெரிந்ததும் கழுத்தை நீட்டிப்பார்த்தேன். நாய் கால்களை தூக்கி எம்பி வெளியேறியது.
உள்ளே அப்பாவின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. பிரக்ஞையின்றி உள்ளங்கையில் சாவியைக் கசக்கியவாறு தெருவை வெறித்து அப்படியே நின்றுகொண்டிருந்தேன். இன்றைக்கு வெள்ளிக்கிழமை என புத்தியில் பட்டதுமே மலர் ஞாபகம் எழுந்தது. இரண்டு மாதமாக அவளும் சந்தைக்கு வருவதில்லை. அவளைப் பார்க்காதது மனதில் ஆங்காரமாக ஊறிக்கொண்டிருந்தது. மலர் மலர் என்று மனம் சொல்லி அலுத்துää எழுந்த ஆவல் மட்டுப்பட்டு வெறியுணர்வு கூடிவிட்டிருந்தது.
0
அப்பா பைக்கில் அடிபட்டு விழுந்ததிலிருந்து அவரால் ஹோட்டல் வேலைக்குப் போக முடியவில்லை. இருபதுவருடம் அங்கு வேலை செய்திருந்தார். முதலாளியின் மகன் நிர்வாகத்திலிருந்ததால் மருத்துவச் செலவிற்கு பணம் கிடைக்குமென்று நம்பியிருந்தோம். ஐம்பதாயிரத்தில் தொடங்கிய பேரம் இருபதுடன் முடிந்தது. சரியாக இடுப்பு எலும்புக்கு நேராக பைக் மோதி சாக்கடையில் விழுந்தவரை மூங்கில் கடையிலிருந்த ஆட்கள்தான் சந்தைக்கு லோடு இறக்க நின்ற தட்டு வண்டியில் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
ஆறு வாரம் எலும்பு முறிவு வார்டில் பெல்ட் போட்டு படுக்க வைத்திருந்தபோது வலி முனகலினூடே ஹோட்டலைப் பற்றியே அரற்றிக்கொண்டிருந்தார். “ஒன்ன தூக்கி சந்தைலயே சவம் மாறி போட்டுட்டு வந்துரேன். நீ அங்கனயே கெடந்து சாவு” என்றேன்.
“செத்த போயி செந்தாமரைய பாத்து ஒரு வார்த்த சொல்லிட்டு வந்துர்றா..நாலா பொறவு வேற ஆள யாரயும் சேத்துடுவான்டா” என்றார் கெஞ்சுவதுபோல.
“எலும்பு ஒடஞ்சுகெடக்குற இனிமே அங்கலாம் போவமுடியாது. நான் சொல்லிக்கிறேன் நி சும்மா இரு. அவந்தான் சொல்லறேனுங்கறானா அப்புறம் நி யேன் பினாத்துற” அம்மா அவரை அடக்கினாள்.
அப்பாவால் கைகளைத் தரையிலூன்றித்தான் நகரமுடிந்தது. தவழ்ந்து முன்னே செல்லும்போது இடுப்பு தனியாக பின் தொடரும். திண்ணையிலிருந்து இறங்கி வீட்;டிற்குள் ஊர்ந்து போகையில் நண்டு குழிக்குள் ஓடுவது போல் இருக்கும். தினம் கொல்லைப்படியில் அமர்ந்தபடியே மலமிருந்து மணலை அள்ளிப் போட்டு தூர எறிந்துவிடுவார். கால் முட்டி தேய்ந்து வலி எடுக்கும் நேரங்களில் உட்கார்ந்த இடத்திலே ஒன்றுக்கிருந்துவிட்டு நகர்ந்துகொள்வார். அம்மா நாற்றத்தை அறிந்து மூக்கைத் பொத்திவாறே “சனியனே ஓம்முத்தரத்த களுவதான் எனக்கு வேலயா” என்று தண்ணீரை வாரி இறைத்துவிட்டுச் செல்வாள். அவர் ஒரு ஜந்து போல நகர்ந்துகொள்வார். அம்மா ஹோட்டலுக்கு போகத் தொடங்கியதுமே அவளின் பாவனைகள் மாறிவிட்டிருந்தன. அப்போதுதான் அவள் முகத்தில் ஆணவமும், குலைவையும் ஒருசேரப் பார்த்தேன்.
நான் ஏழு வரைமட்டுமே படித்திருந்தேன். ஐந்தாம் வகுப்பு வரை அருகிலிருந்த ஆர்.சி கிறிஸ்த்தவ பள்ளிக்கு அம்மா என்னை அனுப்பினாள். வெண்ணிற அங்கியிலிருக்கும் கன்னியாஸ்திரி ஆசிரியர்களிடம் பயம் இல்லாமல் ஒருவித புரியாமையுணர்வே ஏற்பட்டது. அவர்களின் முகத்திலிருந்த மென்தன்மையைப் பார்த்துக்கொண்டிருப்பேன். என்னைப் படிக்க வைப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. என்னைப் போன்ற பையன்களுக்கு ஒழுக்கத்தை மட்டுமே போதித்தார்கள். உண்மை பேசுவதை கொண்டாடினார்கள். ஐந்தாம் வகுப்பு முடித்ததும் அங்கிருந்து அரசுப் பள்ளிக்குச் சென்றேன். அங்கு எல்லோருமே என் தெருப்பையன்களாக நிரம்பியிருந்ததைப் பார்த்ததும் அடக்கிவைக்கப்பட்ட ஒழுக்கம் வெளியேறி மனம் விடுதலையடைந்ததுபோலானது.
மதியம் சாப்பிட்டதுமே பள்ளியிலிருந்து கிளம்பி அவ்வழியிலிருக்கும் மாடிவீடுகள் உள்ள தெருக்களைச் சுற்றி அலைவோம். வெளியே செடிக்கு வேலியிட்டிருக்கும் கம்பிக்கூண்டுளை அடையாளமிட்டு வைத்து, இரவில் ஒவ்வொன்றாகத் தூக்கி வந்து கடையில் எடைக்கு போடுவதுதான் எங்களுக்கு சாகஸ வேலை. அப்படித்தான் என் கையில் பணம் புழங்கத்தொடங்கியது. ஏழாம் வகுப்பு பெயிலானதும் மூன்று வருடங்கள் பள்ளிக்குச் செல்வதாகச் சொல்லிக்கொண்டு கருவேலங்காட்டுக்குள் குண்டு விளையாடித்திரிந்தேன். அப்போதுதான் சிகரெட் பற்ற வைக்கக் கற்றுக்கொண்டேன். புகையை உள்ளிழுத்து நிறைத்து விடுகையில் குறியில் சிலிர்ப்புத் தட்டுவதை உணர்ந்தேன். நினைவு மெல்ல நீரில் ததும்பி பின்பு தெளிவதுபோல் இருக்கும். அதன் பிறகு கஞ்சாவிலும் சுயமைதுனத்திலும் போதையின் உச்சத்தை அனுபவித்தேன்.
கருவேலங்காட்டுக்குள்தான் எப்போதும் இருந்பேன். அப்புதர் மண்டிய இடத்தில் விழுந்திருக்கும் நிழலில் அந்தரங்க அமைதி இருந்தது. அங்கு எப்போதும் பன்றிகள் நுகர்ந்தவாறே அலைந்துகொண்டிருக்கும். எப்போதுமே பயந்து பதுங்கிக்கொள்ளும் பன்றிகளின் சுபாவம் தங்களுக்குள் மோதும்போது மட்டும் மூர்க்கமாகத் தெரிவதைக் கண்டு மிரண்டிருக்கிறேன். ஒன்றையொன்று முட்டிமுட்டித் தள்ளியவாறு உறுமல் எழுப்பும். கிடைத்த மலத்தைத் தின்னும்போதோ புணரத்துடிக்கிற வெறியிலோ அவ்வாறு முட்டிக்கொண்டு கிடக்கும். தன் குழாய் மூக்கினை இன்னொன்றின் கால்களுக்குள் விட்டு புரட்டிவிட எத்தனிக்கும். அப்போது அவ்விடமெங்கும் ‘கீச் கீச்’ செனக் கூப்பாடு எழும். சட்டெனக் கலைந்து குனிந்து ஓடுவதுபோல வேறுவேறு திசைகளில் தெறித்தோடிவிடும். குட்டிகள் கருத்த பிண்டங்களாக அதன் பின்னால் உருளும்.
பள்ளிக்கூடத்திற்குப் போகாமல் அலைந்தது அம்மாவுக்கு தெரிந்துகொண்டாள். அப்பா என்னை அந்தோணி அண்ணனிடம் பெயின்டு வேலைக்குச் செர்த்து விட்டார். பெயிண்டு வேலை என்றால் இரண்டு வடையும் டீயும் கிடைத்துவிடுவதும் வியர்வை வழியாமல் குளுகுளுவென்று வீட்டுக்குள் இருந்தவாறே வேலை செய்யலாமென்கிற எண்ணத்துடன்தான் அந்தோணி அண்ணனிடம் சேர்ந்தேன். புது வீட்டினுள் குமையும் பெயின்ட் வாசனை எனக்குக் கிளர்ச்;சியைத்தூண்டியது. சுவரின் வெண்மை நிறம்மாறி கண்கள் நிறைந்து குளிர்வதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்தோணி அண்ணன் இலங்கையிலிருந்து அகதி. சிறுவயதிலே புலம்பெயர்ந்திருந்ததால் அவரிடம் அம்மொழி வாசனை இல்லை. எப்போதுமே வீட்டு ஓனர்களிடம் குழைந்துதான் பேசுவார். காண்ட்ராக்ட் கூலிää தினக்கூலி என எந்த வகையில் பேசிமுடித்தாலும் அவர் மனக்கணக்கில் வேறொன்று ஓடிக்கொண்டிருக்கும். எங்களுக்கு எப்படியும் இரண்டு வேளை டீயும் வடையும் தருவித்திடுவார்.
பெயிண்டு பூசும்போது எழுகின்ற மணமும் குளிர்ச்சியும் மனதைக் கிளர்ந்தெழத் தொடங்கின. அக்கணம் பீறிட்டெழுந்ததும் மனம் ஒவ்வொரு முகங்களாகத் தேடியலையும். அப்படித்தான் காரணமின்றி மலரை நினைவு கூர்ந்தேன். அவளுக்கு என்னைவிட எட்டு வயது அதிகம். சந்தையில் ஹோட்டல் கடை நடத்தி வந்தாள். தினம் உணர்ச்சி தூண்டப்படும்போதெல்லாம் அவள் முகம் பிரக்ஞையில் நிறையும்.
ஒருமுறை கவர்மென்ட் காலேஜில் பெயின்ட் வேலை வந்திருந்தது. கழிப்பறைச்சுவர்களில் பென்சிலில் வரைந்திருந்த முலை, குறி ஓவியங்களுக்கு கீழ் சுயமைதுன வாசகங்கள் கிறுக்கப்பட்டிருந்தன. அவ்வார்த்தைகளை விட்டுவிட்டு மற்ற இடங்களை மட்டும் தேய்த்து வண்ணம் பூசினேன். கிளம்பும்முன் பேனாவில் மலர் பெயரைச் சின்னதாக யாருக்கும் தெரியாமல் ஆனால் எழுதவேண்டுமென்கிற குறுகுறுப்பில் கிறுக்கி வைத்தேன். எண்ணங்களிலெல்லாம் அவள் மட்டுமே இருந்தாள். உணர்வுகளின் பெருமுரசு அவள். அவளை, அத்தருணங்களில் நினைப்பது குற்றவுணர்வாகவும் குரூரமான திருப்தியாக இருந்தும் அவ்வெண்ணத்தில் மோதிச்சாவதற்காகவே அது தொடர்ந்தது.
0
பெருமாள் புறத்தோற்றத்தில் தோட்டியென்றே சொல்லமுடியாத அலங்காரத்தில் இருப்பான். அங்கிருப்பவர்களிலே வெளுத்த நிறம் அவனுக்கு மட்டும்தான். ஷேவ் செய்து கும்குமமிட்டுத்தான் வெளியே வருவான். அவனுக்கு சொந்தமான பன்றிக்கறி கடை இருந்தது. செவ்வாய் வியாழன் மட்டுமே கறிபோடுவான் மற்றநாட்களில் வட்டி பிசினஸிற்காக அக்கடையில் அமர்ந்திருப்பான். அவன் அப்பா சண்முகத்திற்கு மூன்று மனைவிகள் இவன் மூன்றாமவளுக்கு பிறந்தவன். முதல் இரண்டுபேருக்குமிருந்த மகன்கள் முனிசிபாலிடியில் இருந்தனர். இரண்டாவது மனைவிக்கு பிறந்திருந்த ரெத்தினம் மட்டும் பன்றிக்கறி பிசினஸ் செய்துவந்தான். ரெத்தினத்தின் வீட்டு மாடியில் தொட்டிபோன்ற பெரிய பெரிய சிமெண்டு அறைகளில் பன்றிகள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவனிடமிருந்துதான் வாரம் நூறு கிலோவுக்கு மேல் வெளியூருக்கு சப்யை ஆகும். பெருமாளை எப்போதுமே அவன் அத்தொழிலுக்குள் அண்டவிடாமல் வைத்திருந்தான். அவனும் கொஞ்சநாள் வேலைக்காக மருத்துவமனைக்குப் போய்வந்தவன்தான். அங்கிருந்த சலைன் பாட்டில்களையும்ää சிரஜ்சு பெட்டிகளையும் திருடி பிடிப்பட்டதுமே அவ்வேலையிலிருந்து நின்றுவிட்டான். அவனுக்கு அரசு உத்யோகமெல்லாம் பொருட்டே அல்ல.
அவன் அப்பா சண்முகம் சாவதற்குள் உறவுக்கார ஒருத்தியை அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். இரண்டு மாதத்திற்குள் அவள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டாள். பெருமாள் குடும்பமே சூனியம் பீடிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி அங்கு பரவியிருந்தது. சண்முகத்தை மூன்று மகன்களும் சேர்ந்துதான் பிராந்தியில் விஷம் கலந்து குடிக்கச் செய்து பாதாளச் சாக்குடைக்குள் இறக்கிவிட்டு பலியை அரசாங்கத்தின் மீது போட்டதாக பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன்.
பெருமாள் தன் நரித்தனத்தை பிரயோகிப்பதில் திறமையானவன். இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் பன்றி வேட்டையைத் தடமில்லாமல் செய்து வந்தான். அவனுக்குää வெளியூர் கடைகளிலிருக்கும் கறி சப்ளை ஆட்களுடன் தொடர்பிருந்தது. அவனைப் போல காலனியிலிருந்த சில ஆட்களைத் தன் பேச்சில் வசியச் செய்துää பன்றிகளை பிடித்து விற்க கற்றுக்கொடுத்திருந்தான். அது அவர்களின் சாதிக்கெடுவிற்கு மாறாக இருந்தது. பெருத்த சினைப் பன்றிகளும் காணாமல் போய்க்கொண்டிருந்தன. எப்போதுமே அவன் இடுப்பில் கனத்த கயிறு கட்டப்பட்டிருக்கும். பன்றிகளை அதன் கூட்டத்திலிருந்து தனித்துப் பிரிப்பதில் பல உத்திகளைக் கையாள்வான். கருவேல புதருக்குள் பன்றி சிக்கியதும் சட்டெனக் சுருக்கிடாமல் மெல்ல ஊர்ந்து அதன் வாயை கட்டிவிடுவான். அப்போது அது திமிறி தன் பின்னங்கால்களைத் தரையிலூன்றி எம்புவதற்கு முயலும்போது அவன் காலால் அதை மிதித்து அமுக்கிவிடுவான். பன்றிகள் எப்போதும் பின்னங்காலில் தாவிப் பாய்ந்து ஓடக்கூடியன. எதிரே இருப்பவர்களை அதன் கனத்த எடை வந்து மோதித்தள்ளி விடும். இன்னொரு காலை அதன் தலையில் அழுத்தித் தரையோடு நிறுத்திவிட்டு சரசரவென கயிறுகளைக் கட்டி இறுக்கி அப்படியே தூக்கி வந்து ஸ்கூட்டியின் முன்னால் மல்லாக்கப் போட்டு கிளம்பிவிடுவான். ஒவ்வொரு வேலையும் நுணுக்கமாகச் செய்வதைக் கண்டிருக்கிறேன். அவன் எப்போதுமே என்னைச் சட்டை செய்ததில்லை.
ஐந்து வருடமாக முனிசிபாலிடியில் நடத்தாமாலிருந்த பன்றி பிடிக்கும் டென்டர் உள்ளாட்சித் தேர்தலுக்காக இந்;தவருடம் நிச்சயமாக நடந்துவிடுமென ரொம்ப நாட்களாகவே குறவன்காலனிக்குள் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. ரெத்தினம்தான் டென்டர் வாங்குவதென்று எல்லோருக்குமே தெரியும். அவனுக்கு இது வெறும் கௌரம்தான். சிலசமயங்களில் ரெத்தினம் சேர்மனைப் பார்த்துவிட்டதாகவும் டென்டர் பத்திரம் கைமாறியதாகவும் அடிக்கடி வெற்றுத்தகவல் பரவும். அப்போதெல்லாம் அவன் வீட்டின் முன் கூட்டம் சூழ்ந்துவிடும். டென்டர் வெறும் பெயருக்குத்தான் நடக்குமென்று எல்லாருக்குமே தெரிந்திருந்தும் ரெத்தினத்திடமிருந்து எதாவது பணம் கைமாறாதா என்கிற ஏக்கமே அவனைச் சூழ்ந்திருக்கச் செய்தது.
நான் நினைத்ததுபோலவே டென்டரை ரெத்தினம்தான் எடுத்தான். ஒரு லட்;சத்திற்கு மேலாகக் கை மாறியதாக குறவன் காலனி முழுதும் பேசிக்கொண்டார்கள். அம்மா அத்தொகையைச் சொல்லி ஆத்தாத்துப் போனாள். “அவ்ளோ பணமும் பன்னிக்குதானா?” என்று ஏங்கிக்கொண்டாள். அப்பா “ஊருல பன்னியே இல்லாமப் போயிடுச்சு. வீட்டுல கெடக்க நாயி நரியலாம் அள்ளி போட்டு போவ போறானுவ” என்று அலுத்துக்கொண்டார்.
அன்றைக்கு எல்லோரும் முனிசிபாலிடி ஆபிஸில்தான் இருந்தோம். எனக்கு அதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம். பெருமாள் முகம் அன்றைக்கு முழுதும் கன்றிப்போயிருந்தது. “எந்த தேவுடியாப்பய பன்னிய புடிக்குதுனு பாக்குறேன்” என்றான். அவன் கூப்பாடெல்லாம் அங்கு யாரும் கண்டுகொள்ளவில்லை. என் உள்ளுணர்வு அவன் அப்படி அசர்பவன் இல்லையென்றே சொல்லியது. வெளியே அமர்ந்திருந்த சிமெண்டுத் திண்ணையின்மேல் கரித்துண்டால் ஒரு கோணலான வட்டத்தைப் போட்டான். அதனுள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் இரண்டிரண்டு கோடுகளிட்டு வரைந்தான். நடுக்கட்டத்தைக் கையால் அறைந்து இதுதான் குறவன்காலணி என்றான். நான் வியந்துபோனேன். அதுதான் அவர்களிடமிருந்த மாவட்;ட வரைபடம். ஆதியிலிருந்தே அவர்களிடம் அவ்வழக்கம் உண்டென அறிந்திருந்தேன். அவன் சொன்னதுபோல மாவட்டத்தின் நடுவில்தான் அக்காலணி இருக்கிறது. எந்த தெரு, வீதி, வார்டில் எந்த புதர்களுக்குள் பன்றிகய் இருக்கிறதென வாய்க்கணக்கொன்றை போட்;டு முடித்திருந்தான். ரெத்தினம் வெளியே வந்ததுமே பெருமாள் அவனுடன் சேர்ந்துகொண்டு,எ “யேய் எல்லா நா பாத்துக்குறேன்.. ஓத்தா பாபுவோட பன்னியப்பூரா சூத்தோடு புடிச்சுறேன்” என்றான் வெறியுடன். ரெத்தினம் அவன் எண்ணத்தை முன்னரே அறிந்தவன் போலிருந்தான். தனக்கும் அவனின் இரத்தவுறவு என்பதால் அவனிடமே ஒப்படைத்துவிட்டிருந்தான்.
டென்டரில் தோற்ற ஆட்களின் பன்றிகளுக்குத்தான் முதலில் சுருக்கு விழும். நான் வீரபாபுவின் முகத்தை நேராக நோக்குவதற்காக காத்திருந்தேன். ஏனோ அவரின்; தோற்ற பிம்பத்தைப் பார்க்க வேண்டுமென்றிருந்தேன். முப்பது வருடமாக டென்டர் எடுத்தவர். வீரபாபு முன்னமே தன் பங்காளிகளிடம் சொல்லி பன்றிகளை வீடுகளுக்குள் அடைக்கச் சொல்லிவிட்டார். வீடுகளுக்குள்ளிருக்கும் பன்றிகளை பிடிக்கக்கூடாது. அப்படி நுழைந்த ஆட்களை அவ்வீட்டிலிருக்கும் பெண்களே கழுத்தை அறுத்துக் கொலைசெய்ததுண்டு. அப்போது அவர்கள்மீது வரும் வெறியை நேராக பார்க்க ஒக்காதென அப்பா அடிக்கடி சொல்வார். தன் பிள்ளைகள் கழுத்தில் சுருக்கு மாட்டிக்கொண்டுபோவதுபோலொரு ஆங்காரம் அக்கணம் மூளும்.
இரண்டு நாட்;களாக விடிய விடிய பன்றி பிடித்தல் நடந்தது. முனிசிபாலிடி ஆட்கள் காக்கி சட்டையில் லுங்கி நுனியை வாயில் கடித்தபடிää சுருக்கை நீட்டிக்கொண்டு அலைந்தனர். பெருமாள் அவ்வேட்டையை வேவு பார்த்தவாறு செல்போனில் ஒவ்வொரு வார்டாக பிடிபட்ட பன்றிக்கணக்கைக் கேட்டுக் குறித்துக்கொண்டிருந்தான். ஏற்கனவே பன்றிகள் குறைந்துவிட்டிருந்ததால் அவ்வெண்ணிக்கை அதிகமும் நூறுக்குமேல் தாண்டாது என்றுதான் யூகித்திருந்தேன். பெயின்டு வேலை முடித்துவரும்போது அப்பா என்னிடம்; நூற்றி இருபதுவரைக்கும் பிடிபட்டுவிட்டதாகவும் அதில் நாற்பது மட்டுமே முனிசிபாலிடியில் கணக்குக் காட்டிவிட்டு எஞ்சியதை வெளியூருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு நடப்பதைக் கேள்விப்பட்டதாகச் சொன்னார். எப்போதுமே அக்கணக்கின் உண்மை யாருக்குமே தெரியாது.
அன்றைக்கு சாய்ந்தரம் பெருமாளை என் வீட்டுத்திண்ணையிலேயே பார்த்தேன். சட்டென அம்மாவின் கண்களை நோக்கியதும் அவள் குற்றவுணர்வோடு அல்லாடுவது தெரிந்தது. அவள் உருவமே அருவருப்பாகத் தோன்றியது. ஒருகணம் அவள் தலையைப் பிடித்து ரோட்;டில் தள்ளி அறைவதுபோல எண்ணம் உதித்து, பின் அதைக் கலைத்துவிட்டேன். பெருமாள் மிதமிஞ்சிக் குடித்திருந்தான் ஆனால் சுய நினைவோடுதான் என்னை ஏறிட்டுப்பார்த்தான். அவன் முகத்தில் ஆங்காரம் தெறித்தது. காக்கிச் சட்டை முழுதும் வியர்த்து வீச்சமெடுத்தது. நான் உள்ளே வந்ததும் திண்ணையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான். மண்ணெண்ணெய் நாற்றமடிக்கும் பேண்ட்ää சட்டைகளைக் களைந்து சாப்பிட அமரும்வரை அம்மா முகத்தல் தொற்றியிருந்த பதற்றத்தை என்னால் அறியமுடியவில்லை. அவளின் கழுத்தில் கிடந்த கவரிங் நகைகள் என்னை அச்சூழலை எரிச்சலூட்டின.
அந்தோணி அண்ணன் செல்போனில் கூப்பிட்டிருந்தார். பெயின்டு வேலையாக வெளியூருக்கு செல்ல வேண்டிய ஞாபகம். அன்றைக்கு இரவே கிளம்பிச்செல்லச் தயாரானேன். போவதற்குமுன் மலர் வீட்டிற்குப் போகலாமென முடிவெடுத்திருந்தேன் பின்பு அம்முடிவைச் செய்யமுடியாமல் எதோவொன்று என்னை இம்சித்துக்கொண்டே இருக்கவே தவிர்த்துவிட்டேன். அப்பாவிடம் மட்டுமே போகுமிடத்தைச் சொல்லி வைத்தேன்.
தோட்டிகள் மிதமிஞ்சிக் குடிப்பவர்கள். பீ நாற்றத்தையும் மூத்திர நெடியையும் பழகிக்கொண்டவர்கள். அவர்களின் மேல் வியர்வையின் உப்பு வீச்சம் எப்போதும் குமைந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு மனித மலம் கூட விலங்கின் கழிவுபோலத்தான். குறவன் காலணிக்குள்ளிருக்கும் சண்முகத்தின் வீட்டிற்கு பலமுறை சென்றிருக்கிறேன். வாசல் வராந்தாவில் குறுக்காக செங்கல் எழுப்பிää ஆஸ்பஸ்டாஸ் சீட்டு அமைத்து சிறு ஷெட்டு போலிருக்குமிடத்தில் பெருத்த பன்றியொன்று தரையில் சாய்ந்து படுத்திருக்கும். கறிக்காக தனியாக வைத்;து வளர்த்தான். ஊசிய சாம்பார் கலந்து சோறும்ää இட்லிக்குவியல்களும் அதன் முன்னால் கொட்டிக்கிடந்தன. அருகிலேயே அது மலம் கழிந்திருந்ததையும் கண்டேன். படுக்கையில் மலமூத்திரம் நாற கிடக்கும் வயதான மனிதனாகத்தான் தெரிந்தது. சண்முகம் செப்டிக்டாங்க் வண்டி ஓட்டுகிறான். அவன் அப்பாவுடன் மருத்துவமனை மார்ச்சுவரியில் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது கூட இருந்திருக்கிறான். “பீ நாத்தங்காட்டியும் மனுச கொடல உள்ளாறதான் அப்புடி நாத்தம் கொமட்டி வரும்” என்றான். ஒருநாள் கூட அவன் குடிக்காமலிருந்ததில்லை. அது அவர்களின் பிறப்பின் சாபம் என்றே நினைத்துக்கொள்வேன். முனிசிபாலிடியில் வேலை பதினொரு மணிக்கு முடிந்ததுமே குவார்ட்டரை ஊத்திக்கொண்டுதான் வீடு வந்து சேர்வார்கள். என் வயதொத்தவர்கள் மட்டும் சுத்தமான சர்ட், பேன்டுடன் நவீனத்திற்கு மாறிக்கொண்டிருந்தார்கள். எப்போதுமே அவர்களிடம் விலை அதிகமுள்ள செல்போன்களே புழங்கின. பணத்தை பெரிதாக நினைப்பதில்லை ஆனால் பெரும் பணமுள்ளவர்கூட சாதாரணமாகக் கக்கூஸ் கழுவக் கிளம்பிவிடுவார்கள். அவர்களுக்கு மரணம் நிகழ்வதென்பதுää ஒன்று குடித்தழிவதாலும் இன்னொன்று காரணமற்ற கொலைகளாலும் தான். சண்டைத்தகராறுகளின் உச்சம் கொலையில்தான் முடியும். ஏற்றுக்கொண்டு அமைதியாகும் மனநிலை அதிகமும் இருக்காது. கொலைகளுக்கான நியாயங்களைத் தரவுவதில் கைத்தேர்ந்தவர்களென அப்பா சொல்வார். குறவன்காலனிக்குள் ஒருமுறைகூட போலிஸ் நுழைந்து பார்த்ததில்லை.
சிறுவயதில் பள்ளிக்கூடம் போகாமல் சுற்றித்திரியும்போது பன்றிகள் பிடிப்பதைக் கண்டிருக்கிறேன். புதருக்குள் கீக் கீக்கென அடித்தொண்டையில் உருமிக்கொண்டு ஓடும். சுருக்கிடுவதைப் பார்ப்பதற்காகவே அவர்களினூடே சென்றிருக்கிறேன். எனக்குப் புரியாத மொழியில் அவர்கள் பேசிக்கொள்வார்கள். அது, அவர்களுடையதா அல்லது பன்றிக்கானதா எனக் குழம்பிக்கொள்வேன். மூங்கில் கம்பில் சுற்றிய நரம்புக்கயிற்றை பன்றித்தலையைச் சிக்க வைக்க பரபரத்து அலைவார்கள். புது நரம்பை பயன்படுத்தக்கூடாது. அது கழுத்தை அறுத்துவிடும். பன்றிகள் எப்போதுமே அச்சுருக்குக்கம்பை அறிந்திருக்கும். அவர்களைக் கண்டதுமே புதருக்குள் பதுங்கிவிடும். அதன் பாய்ச்சலைப் பார்க்கும்போதுதான் அதொரு மிருகம் என்று எண்ண தோன்றும். சிறுவயதில் அச்சுருக்குக்கம்பினை மந்திரக் கோலாக எண்ணியதுண்டு. பின்நாட்களில்ää அம்மூங்கில் கம்பில் ஒன்றுமில்லை என்றும் பன்றியைச் சிக்க வைப்பதில் செய்யும் உத்தியிலும் கம்பின் லாவகத்திலுமே அவ்வேட்டைத்தனத்தின் கச்சிதம் அடங்கியுள்ளதன தெரிந்துகொண்டேன்.
0
அந்தோணி அண்ணன்தான் அம்மா கொலை செய்யப்பட்டதை முதலில் சொன்னார். ஒருகணம் என் உடல் பதறிச் சரிந்தது. மரணச்செய்தி அப்படி உலுக்குமென அறியவில்லை. நான் வந்து சேர்வதற்குள் வீட்டைச்சுற்றிக் கூட்டம் கூடிவிட்டிருந்தது. ஒவ்வொரு முகமாக என்னைப் பார்ப்பதாகவும் எல்லோரும் என்னை நோக்கி வருவதுபோலிருந்தது. கூட்டத்தில் யாரோ என்னைக் காட்டி போலிஸிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். முருகதாஸ் என் தோளை ஆருதலாகப் பற்றினான். உள்ளே அம்மா கழுத்து அறுபட்டுக் கிடந்தாள். இரத்த இறைந்திருந்தது. சேலை களைந்து பாவாடை விலகிக்கிடந்தவளை தொடாமல் நின்றவாறே பார்க்கச் சொன்னார்கள். அழுக்குத்துணியை அள்ளி வீசியதுபோலத்தான் இருந்தாள். லாரியில் அடிபட்டுக்கிடக்கும் கோரமான பிணங்களைப் போஸ்ட்மார்ட்டத்திற்கு சுருட்டிக்கொண்டு செல்லும்போது பார்த்திருந்திருக்கிறேன். அப்படியொன்றாகத்தான் அவள் தெரிந்தாள். மெல்ல என் உடல் நடுங்கியது. பார்வை மறைத்து காட்சிகள் கலைந்தன. மனம் கேவியது. உடலை ஒருவரும் தொங்கிக்ககொண்டிருந்த தலையை இன்னொருவராகவும் தூக்கியபோது கெட்டிக் குழம்;புபோல தேங்கியிருந்த கரிய இரத்தம் உடைபட்டு வழிந்தது. அதன் நாற்றம் தாளாமல் எல்லோரும் முகத்தை மூடி நின்றார்கள். அவள் தொடைகளில் பிறாண்டிய இரத்தக்கீறல்களைக் கவனித்தேன். போலிஸாருடன் வந்த ஒருவர் போட்டோ எடுத்துக்கொண்டார். முருகதாஸ் என் பார்வைத் தவிர்க்க திருப்பினான். அம்மா புதுச்சேலை அணிந்திருந்தாள். ரொம்ப நாட்களுக்கு முன் அச்சேலையில் கல்யாணவீட்டில் பார்த்திருந்தேன். கட்;டிலுக்கடியில் கிடந்த பெருமாளின் நீல நிற ஜட்டியை கம்புகொண்டு தூக்கிää அம்மாவின் பிணத்தோடு ஒதுக்கி வைத்தார்கள்.
இரவு முழுதும் அப்பா திண்ணையில் பித்து பிடித்ததுபோல அமர்ந்திருந்தார். அம்மாவை வெட்டியபோதே அவர் பார்த்திருந்ததாக முருகதாஸ் சொன்னான். “அம்மாவ பாத்துட்டுருக்கப்பவே விசு வந்து கை கால வெட்டிட்டு அப்படியே கீழ விழுந்துட்டாரு.” என்றான். “வீரபாபு பன்னிய புடிச்சதலாம் பெருமாளு அவனுட்டவே திருப்பி குடுத்து துட்;ட வாங்கிட்டானாம்டா. வண்டில புடிச்சத சேலத்துலர்ந்து கமிஸன் ஆள வரச்சொல்லி ரெத்தினத்துக்கு தெரியாம அனுப்பிட்டான். மூனு லச்சம் பொறன்டுருக்கு. எல்லா துட்டையும் ஒங்கம்மாட்டதான் குடுத்து வெச்சுருக்கான். இது என்ன பன்னுச்சுன்னு வௌரந்தெர்ல ஒங்கப்பாட்ட கேட்டாலும் ஒன்னுந்தெர்லனு சொல்லுது” அவன் சொல்வதை அதற்குமேல் கேட்க மனம் ஒப்பவில்லை. எண்ணம் முழுவதிலும் பெருமாளின் பிம்பம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவன் அப்போதே பணத்துடன் வெளியூருக்குத் தப்பிவிட்டிருந்தான்.
பெருமாளுடன் அம்மாவுக்கு தொடர்பிருப்பதாக அப்போதே பேச்சிருந்தது. காதுகளில் விழும்போதெல்லாம் உடல் கசந்து எரியும். பெருமாளைப் பார்க்கும்போது சொலேறென்று அறைந்துவிடவேண்டுமென நினைப்பேன். அவனின் பெருத்த உடம்பை கீழேத் தள்ளி விதைகளில் மிதிப்பதுபோல பிரமை வந்துபோகும். ‘கொறத் தேவிடியாபய’ என்று என்னுள்ளே சொல்லிக்கொள்வேன். “ஒங்கம்மா எதுக்கு அவேன்கூட கெடக்குது” ஒருமுறை மலர் என்னிடம்; கேட்டபோது, அவள் முகத்தில் தோன்றிய முகச்சுழிப்பைக் கண்டேன். அவளை அடிப்பதற்கு ஓங்கினேன். “கையி கியீ வெச்ச பேத்துடுவேன்..பன்னி கணக்கா கெடக்கான்ல அவங்கிட்ட போயி காட்டு” என்றாள். காரணமில்லாமல் அக்கணம் அவள் முகம் நினைவில் வந்து போனதும் தொண்டையைச் செறுமி காறித்துப்பிக்கொண்டேன்.
முருகன் என்னை அழைத்துச்சென்று பாரில் குடிக்க வைத்து அழைத்து வந்தான். “அந்தத் தேவிடியாப்பயல கொல்லனும்டா பாண்டி. அவேனுக்கு சுன்னிய அறுத்து எரிறேன்டா..” நான் அவனைக் குறவன் காலனிக்குள் அழைத்துச்செல்ல கேட்டும் அவன் மறுத்துவிட்டான். கோவம் பீறிட்டு, அவனை அடித்து உதைத்தேன். என் ஆங்காரம் அடங்காமல் கொதித்தது. நானே ரெத்தினம் வீட்டிற்குத் தனியாகக் கிளம்பிச் சென்றுவிட்டேன்;.
ரெத்தினம் பத்துப்பதினைந்து ஆட்களுடன் வராந்தாவில் அமர்ந்திருந்தான். வார்டு கவுன்சிலரும் அங்குதான் இருந்தார். செப்டிக்டேங் வண்டியருகே முனிசிபாலிடி சுமோ இரண்டு வெளியே நின்றுகொண்டிருந்தன. என்னை எதிர்பார்த்தே இருந்திருக்க வேண்டும். அவனைப் பார்த்ததும் திமிறியெழுந்து அடிக்க ஓடிய என்னை அங்கிருந்தவர்கள் பிடித்து அடக்கினார்கள். சட்டென எழுந்து வந்தவன் “ஒம்மா தேவிடியா முண்ட அந்த நாயிகூட சேந்து செரச்சு கெடந்துருக்கா இங்க வந்து என்ன மயித்துக்குடா கத்துற. ஆளு தனியா பூலு தனியா வெட்டி எறிஞ்சுருவேன் ஒழுங்கா வீடு போவ முடியாது பாத்துக்க” என்றான். அவன் தோள்கள் அதிகாரத்தனத்தில் இருந்தன. சிலர் தெலுங்கில் பேசி அவனை சமாதானப்படுத்தி உள்யே கூட்டிச்சென்றார்கள். நான் கையில் கிடைத்ததை வாரி அவன்மீது வீசினேன். கவுன்சிலர் இறங்கி வந்து என்னை அறைந்து, “தாயளி கேசு என்னத்துக்குடா குடுத்துருக்கு. இங்க வந்து கத்திட்டு கெடக்க. மூடிகிட்டு போயி ஒங்கப்பனுக்கு இப்பவாது ஒழுங்காச் சோறு போடு” என்றார். நான் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்விடம்முழுதும் தோட்டி சனம் கூடியிருந்தது. இருளுக்குள் ஒவ்வொரு பார்வையும் என்னைக் கூர்மையாக நோக்குவதாக தெரிந்தது. மலத்தை அள்ளி அவர்கள் மேல் வீச வேண்டுமெனத் தோன்றியது எனக்கு.
அம்மா பெருமாளுடன் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் என் முதுகில் ஊர்ந்து வந்தன. கலைக்க கலைக்க அழியாத அப்பிம்பங்கள் முற்றுகையிடும்போது அருவருப்பு அடிவயிற்றில் ஊறிக் கசந்தது. அப்பா அவளைத் தேவிடியாளென்று திட்டுவதோடு அதற்குமேல் ஒன்றும் தோன்றாது அவ்வெறுமையைப் போக்கிக்கொண்டார். அவர் எப்போதோ அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். அவள் வயதும் எண்ணங்களும் பொலிவுற்ற வேளைகளில் நான் உறங்கிப்போயிருந்ததாக நினைத்தேன். அவளின் அதீத ஒப்பனைகள் அடிவயிற்றில் தீ மூட்டியிருந்தன. பெருமாளின்மீது அவ்வொப்பனைகளின் வாசனை குமைந்ததை அறியத் தவறிவிட்டிருந்தேன்.
அம்மா பன்றிக்கறி சாப்பிடப் பழகிவிட்டிருந்ததை அன்றைக்கு இரவுதான் பார்த்தேன். நான் வறுத்துக் குடுக்கச்சொல்லிக் கேட்கும்போதெல்லாம் அதன் அருவருப்பைச் சொல்லி ஒதுக்கித்தள்ளிவிடுபவள் அன்று ஆசையுடன் சுவைத்துண்பதைக் கண்டு மருண்டிருந்தேன். வேகவைத்த கறியை மிளகு, தேங்காய் மசாலாவில் புரட்டி எண்ணெயில் போட்டு எடுத்துவந்தபோது அவளும் அமர்ந்து தின்னத் தொடங்கினாள். அதன் தோலை குலையாமல் விழுங்கும் லாவகத்தையும் தெரிந்திருந்தாள்.
0
பெருமாளின் கூட்டாளியொருத்தன் கேரளாவில் இருப்பதாகவும் பெருமாள் அவனுடன் பதுங்கிக்கொண்டிருப்பதாகவும் முருகதாஸ் சொல்ல, நான் அவனைத் தேடிச்சென்றேன். நான்கு நாட்;கள் அங்கு அலைந்தும் கண்ணில் தென்படவில்லை. ஆபாச பிம்பங்களின் பெருக்கம் பிரக்ஞை முழுதும் சூழ்ந்திருந்தன. இரயில் பிடித்து வந்து சேர்ந்தபோது அப்பா நடக்கவியலாத கால்களை இழுத்தபடி ஊர்ந்து திரியும் மிருகம் போலாகியிருந்தார். கழிவிரக்கம் தாளாமல் தனிமையின் அக்கணங்களை எண்ணி சுயமைதுனத்தில் கழித்தேன். அப்போது பிரக்ஞையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வதுபோல விடுதலையுணர்வு ஏற்படும். மனம் விதிர்த்து அடங்கி பின் மறுபடியும் கழிவிறக்கம் மூண்டு விடும்.
தினம் ஆறாப்பசியுடன் அவனைத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். என் எண்ணமெல்லாம் குறவன் காலனியை நோட்டமிட்டபடியே இருந்தன. அவனை எதிர்கொள்ளுகையில் விழும் முதல் வெட்டுக்கான ஒத்திகையை பலமுறை நிகழ்த்திப் பார்த்தேன். அவன் பிணத்தை தொலைவிலிருந்து பார்த்து ரசிக்கவேண்டும். என் சினவெறி அடங்குவதற்குள் அக்காரியத்தை முடிக்க அலைந்தேன். அப்போதெல்லாம் அம்மாவை ஒருகணம் கூட நினைக்கவில்லை. வேலைக்கு வரச்சொல்லி அந்தோணி அண்ணன் போன் பண்ணிக்கொண்டேயிருந்தார். இரண்டு முறை ஆள் அனுப்பிவிட்ட பிறகே கிளம்பிச் சென்றேன்.
சுண்ணாம்பின் வெண்ணிறத்தைப் பார்க்கும்போது மனம் குளிர்ந்து அனல் அமந்துவிடுமென்று அவற்றைப் பார்க்கச் செய்தார். நான் அவரை முழுவதுமாகத் தவிர்த்து வந்தேன். வேலையிலே பிராந்தி அடித்துக்கொண்டு சென்றது அவருக்கு என்மேல் வெறுப்பை மூட்டிவிட்டது. அன்றைக்கே வரவேண்டாமென்று திட்டி விரட்டினார். நான் நேராக மலரின் வீட்டிற்கு கிளம்பிச் சென்றேன். காமத்தில் திளைத்திருப்பது பலியுணர்ச்சியை அடைந்துவிட்டதுபோலிருக்கும்.
மலரின் வீட்டிற்கு போய் நின்றது அவளை அதிர்ச்சியிலாழ்த்தியது. அன்று அவளைத் தழுவியதும் எப்போதும் புலன்களில் பரவும் உணர்ச்சி ஏற்படவில்லை. அம்மாவின் மரணம் தொண்டைக்குள் குத்தியது. மலரின் தொழதொழவென ஆடும் தொடைச் சதையைப் பார்த்ததும் அம்மாவின் தொடையில் பதிந்திருந்த கடித்தடங்கள் நினைவு வந்தன. அவள் மேல் பாய்ந்து குதறிவிடுவதுபோல எத்தனித்தேன். அவள் பதறி தள்ளிக் கொண்டு எழுந்தாள். சமயங்களில் அவளுக்குப் பெருமாளைப் பற்றி ஏதும் தெரிந்திருக்குமென சந்தேகத்தை களைந்துகொள்ள அவளுடன் முயங்கும்போது கேட்டேன். சட்டென எழுந்தவள் “சீ நாயே கொறப்பயகூட படுப்பேனு நெனச்சியா அறுத்துடுவேன்” என்று அடிக்கப் பாய்ந்தாள். நான் சற்று தணிந்து “ஒன்னும் நெனச்சுகாத” என்று சமாதானப்படுத்தினேன். அவள் கண்களை கூர்மையாகப் பார்த்தேன். இனி இவளைத் தொடுவது அருவருப்பை மூட்டிவிடுமென விலகிக்கொண்டேன்.
0
அன்றைக்குக் குடித்துவிட்டு அளவுகடந்த போதையிலிருந்தேன். வீட்டிற்குத் திரும்பும் வழியில் சந்தையிலிருந்த கொட்டகைக்குள் முந்தினநாள் மீந்த காய்கறிகள் கொட்டப்படும் கால்வாய்க்குள் பன்றியொன்று மூக்கால் நிமிண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்து வண்டியை நிறுத்தினேன். அதன் பெருத்த உடலசைவு குழிக்குமேலே தெரிந்தது. அதனருகே சென்று எட்டிப்பார்த்தேன். மூப்பேறிய பன்றிää என்னைக் கண்டதும் மருண்டு நகர்ந்தது. அய்யானாருக்கு நேந்துவிட்டிருக்கும் கிடாப் பன்றி. பெருமாளும் அவன் பங்காளிகளும் வெகுநாட்களுக்கு பிறகு அக்கோவிலுக்காக வளர்த்து வந்தனர். பிடரி மயிரை சிலிப்பியதும் கிளை முறிவதுபோல சடசடவென சப்தம் வந்தது. வாங்கி வைத்திருந்த பிரியாணிப்பொட்டலத்தை அதன்மீது எறிந்தேன். முதலில் பயந்து முகம் தூக்கிப் பார்த்துவிட்டு பின் தயக்கத்துடன் அப்பொதியை முகர்ந்து, சோற்றை அவ்; அவ் வெனத் தின்னத்தொடங்கியது. கால்கள் பிரம்புபோல தடித்திருந்தன. அது மூர்க்கமாக மோதக்கூடியதெனத் தெரியும். மேலிருந்தே அதைக் கவனித்தவாறே மெல்ல நகர்ந்து அவ்விடத்தைச் சுற்றினேன். கால்வாயின் இருபுறமும் பன்றியின் உடல் உரசுமளவிற்கு பெருத்த பன்றி. என் அடிமனதிலிருந்து பாம்பாக ஒரு எண்ணம் சரசரவென பாய்ந்து மேலேறிவருவதை உணர்ந்தேன். சட்டெனப் பாய்ந்து அதன் கழுத்தைப் பற்றினேன். கால்கள் தரையை உதைத்து பிறாண்டின. கத்தவிடாமல் இன்னொரு கையால் வாயை இறுக்கியதும் திமிறி எழுந்ததை அப்படியேத் தூக்கி நிறுத்தினேன். கரிய ஆள் போல தோள் உயரத்திற்கு நின்றது. யாரும் பார்க்கிறார்களாவென சுற்றுமுற்றும் நோட்;டமிட்டேன். இருட்டிவிட்டிருந்ததால் அவ்விடத்தில் ஆள் நடமாட்டம் தென்படவில்லை. தரையோடு பின்னங்;கால் தேய்த்துக்தொங்கிய பன்றியை இழுத்துக்கொண்டு கொட்டகைக்கு வந்தேன். அதன்மேல் குமைந்த வாடை நாசியை புரட்டியது. வெளுத்த பச்சை நிறத்தில் மூத்திரம் பிரிந்து என் கால்களை நனைப்பதைக் கண்டேன். இடுப்பில் செறுகியிருந்த கத்தியால் பரபரவென அதன் கழுத்தை அறுக்கத் தொடங்கினேன். கைகளுக்குள் சிக்கியிருந்த பன்றியின் கண்கள் மிரண்டு பார்த்தன. சாக்கு பையைக் கிழிப்பது போல சப்தம் எழுந்தது. மூக்கின் வட்டத்துளை வழியே உயிர் மூச்சு வெளியேறிக்கொண்டிருந்தது. கத்தி மண்மூட்டைக்குள் இறங்குவதுபோல வெதுக்கென பாய்ந்ததும் குருதி பீறிட்டு வெளியேறி, என் சட்டையை நனைத்தது. சூடான கெட்டி ரத்தம். அப்படியே கீழே போட்டதும் நிலம் அதிர்ந்து கால்களை வெட்டி வெட்டி உதைத்துக்கொண்டிருந்தது. கண்கள் எனக்கப்பால் வெறித்தபடி இருந்தன. பாத்;திரத்தில் கல்லை தேய்ப்பது போன்ற மென்குரல் எழுந்து சட்டென அடங்கியது. அது கத்தாது. தொண்டை அறுபட்டுவிட்டது. எப்படி அவ்வுத்தியை அக்கணம் பயன்படுத்தினேனென்று பின்னால் வியந்திருக்கிறேன். ஒவ்வொரு கால்களாக விதர்த்து அடங்கிக்கொண்டிருந்தது. பெரிய மூட்டையொன்று கிழிந்து கிடப்பது போலிருந்தது. இறைச்சித்துண்டுகளாக வெட்டிப் போட்டுவிடவேண்டுமென எண்ணி பின்பு அம்முடிவை கைவிட்டேன். வாய் பிளந்து பற்கள் வெளியே தெரிந்தன. அப்போதுதான் பன்றியின் பற்களை அருகில் பார்த்தேன். ஒருகணம் அது சட்டென்று எழுந்து ஓடிவிடுவதுபோல பிரமை தோன்றிற்று. உயிர் இருக்கிறதாவென காலால் எத்தினேன். மெல்லிய அதிர்வு மட்டுமிருந்தது. எனக்கு மூத்திரப்பை நிரம்பியவுணர்வு அழுத்திக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உடல் முழுவதும் வியர்த்து உள்ளுக்குள் கத்தி பாய்வதுபோலொரு உணர்வெழுவதைக் கவனித்தேன். அங்கிருந்து விறுவிறுவெனக் கிளம்பி சந்தையின் வெளியே சோடியம் விளக்குகள் பளீரென விரிந்திருந்த இடம் நோக்கி நடக்கத்தொடங்கினேன்.
அடுத்தநாள் பன்றி இறந்த செய்தி நான் எதிர்பார்த்ததைவிட அச்சத்தை மூட்டிருந்தது. காலையில் சந்தைக்கொட்டைகைக்குள் காக்கி சட்டையுடன் வாளிää கரண்டிகளுடன் வேலைக்குத் தயாரான ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். பெண்கள் கவலை தோய்ந்திருந்ததை காண்பதற்கு உள்ளுக்குள் குறுகுறுப்புற்றது. அப்பன்றியைக் காணவேண்டுமென்று நடந்தேன். குற்றத்தின் இன்னொரு விளிம்பிலிருந்து என்னை பார்த்துக்கொள்கிற குரூரம். மனதில் எழும் குற்றவுணர்ச்சியைச் சீண்டிவிட்டு அக்கூர்மையை உணர வேண்டும். நேற்றிரவு கைகளுக்குள் உயிருடன் முண்டியதைப் போல அது இல்லை. முரட்டுடம்பு தளர்ந்து, ஒரே இரவுக்குள் அதன் மொத்த எடையும் குறைந்து விட்டிருந்தது. மூக்கின் துளையில் ஈக்கள் மொய்த்தன. அறுபட்ட கழுத்தில் இரத்தம் கருத்திருந்தது. அவ்விடம் முழுதும் இரத்தம் வடிந்திருக்க வேண்டும். ரெத்தினம் பதற்றத்துடன் செல்போனில் யாரையோ கூப்பிட முயன்றுகொண்டிருந்தான். அவன் கண்களை சந்திக்கக்கூடாதென்கிற படபடப்பில் உதட்டில் போலிச்சுழிப்பைக் காட்டிக்கொண்டு பார்வையை பன்றியின்மீதே குவித்திருந்தேன். பார்க்க பார்க்க அது இன்னும் சிறுத்திருப்பதுபோலவும் சற்றே பெரிய பெருச்சாளியொன்று கிடப்பதுபோலவும் தெரிந்தது. எப்படியாயினும் இச்செய்தி பெருமாளுக்குப் போய்ச்சேரட்டும். அவன் நிச்சயம் என்னை அறிந்துகொண்டிருப்பானனென்று எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணம் ஒருவித பலிவிளையாட்டை எதிர்கொண்டது.
இருட்;டிவிடும்போதே பன்றிகள் விறுவிறுவென சாக்கடை வழியே அதனதன் புதர்களைத் தேடி ஓடத்தொடங்கிவிடும். வயதேறிய பன்றிகள் சற்று பயமின்றி ஆசவாசமாகவே நகர்ந்து போவதை பார்த்தேன். வெளிச்சத்திலும் அவை முகர்ந்தவாறு அலைந்துகொண்டிருந்தன. சிலது மற்ற பன்றிகளை மூர்க்கமாக மோதித் தள்ளிக்கொண்டு நடந்தன. அவைகள் மட்டும் சற்றே சுதாரித்துக்கொள்ளும் குணாதிசயம் கொண்டிருக்கும். மற்றவைகளைப் போலன்றி சாக்கடைப் பாலத்தின்மேல் அனாயாசமாக நடந்தும்ää காய்கறி குடோன்களுக்குள் தைரியமாக நுழைந்து நிமிண்டுவதையும் கவனித்தேன். அப்பன்றிகளின்மீது ரகசிய அடையாளங்கள் விட்டு வைத்தேன். தினம் அம்மூப்பேறிய பன்றிகளின் வழித்தடங்களைக் குறித்துக்கொண்டு, அவை சிக்குவதற்கான தருணத்திற்காகக் காத்திருந்தேன்.
அதன்பிறகு ஒவ்வொருநாளும் அன்று அக்கணத்தில் தோன்றிய அவ்வெண்ணத்தை நினைவுகூரும்போதெல்லாம் உடல் துவண்டெழுந்தது. கருத்த மேகம் தரையில் இறங்கி வந்துவிட்டதுபோலிருந்தது. அப்பன்றியின் கழுத்தைப் பற்றியதும் அதன் பிருஷ்டம் விம்மித் துடித்தது ஞாபகத்தில் எழுந்தது. அது பெருமாளின் பிருஷ்டம் அப்படித்தான் இருக்கும். கைகளுக்குள் அக்கழுத்து இன்னும் பிடிபட்டிருப்பதைப் போன்றே பிரமை இருந்தது. ஒவ்வொரு உறுப்பும் பெருமாளை நினைவுபடுத்துவதுபோலொரு ஓர்மையை உணர்ந்தேன்.
தினம் என்முன் வந்து நின்றுகொண்டிருக்கும் அப்பன்றியை ஒன்றும் செய்யமுடியவில்லை. தன் சிவந்த விழிகளை நேர்க்குத்தாகக் காட்டி நிற்கும். பின்தொடரும் அம்முகத்திலிருந்து நான் விடுபடவேண்டும். அதற்கு இன்னொரு முகத்தில் நிகழும் மரணத்தைக் காண வேண்டும். அதை அனுபவிக்கும் கணங்கள் மனதில் மறுபடி மறுபடி தோன்றின. உற்று நோக்கும்போது பெருமாள் ஒரு சிரித்த பன்றி போலத்தான் இருந்தான். மலரிடம் ஒருநாள் அவ்வுண்மையைச் சொன்னேன். அவள் திடுக்கிட்டாள். அன்றைக்கு ஒரே சமயத்தில் இரண்டாம்; முறையாகக் உறவு கொண்டோம். சேலை கலைந்து சோர்ந்து கிடந்தவளின் காதினருகே குனிந்து மெதுவாகக் கூறியதும் பதறித் திரும்பியவள் “அத யேன் கொன்ன?” என்று கேட்டாள். அவள் முகத்தில் எதிர்பார்த்த பதற்றம் இல்லை என்பதைத் தொந்துகொண்டு சிரித்தவாறே “அது மாதிரி மூனு பன்னியக் கொன்னுருக்கேன்” என்றேன். அவள் ஜாக்கெட்டின் ஊக்கினை மாட்டிவிட்டு எழுந்தமர்ந்து கொண்டாள்.
“மூனும் ஒன்னுபோலத்தான் இருந்துச்சு..கடசியா சிக்குனது பில்டிங் தொள போடுற மிசினு கம்பியால தொண்டைல விட்டு எடுத்தேன்” என்றேன் சிரித்தபடி. அவள் சட்டென அறைந்தாள். அவளை தள்ளி அவள்மேல் விழுந்து முத்தமிடப் பற்றினேன். மலர் என்னை உதறித் தள்ளிவிட்டு ‘என்ன’ என்பதுபோல முறைத்தாள். “அத கொன்னுட்டா ஒங்க ஆத்தா வந்துருமா” எனக் கேட்;டாள். பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தேன். சட்டென அவளருகே குனிந்து “யாருக்கும் தெரிஞ்சுச்சுனா ஒம்மொவரைய பேத்துருவேன்” என்றேன்.
0
சந்தை நெரிசலுக்குள் பைக்கைச் செலுத்த முடியாமல் வந்த வழியே திரும்பிவிட முயன்றபோது சட்டென ஒரு பிம்பம் பிரக்ஞையில் நுழைந்து வெளியேறியது. உடல் தீயாக எரிந்தது. ஆமாம் அது பெருமாள் தான். என் மிக அருகாமையில் அவன் நின்றுகொண்டிருக்கிறான். எண்ணவோட்டம் நமநமவென மொய்த்தன. அது பழைய இரும்புக்கடை குடோன் அதைவிட்டு அவன் வேறெங்கும் நகர்ந்துவிடக்கூடாதென மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். கைகளில் நடுக்கத்தை தடுக்க பைக் ஹேண்டிலைப் பற்றியபடி என்னை நிதானப்படுத்த முயன்றேன். பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமலிருக்க செல்போனை தோள்பட்டையில் வைத்து தலையைக் கவிழ்த்தவாறு அவனை நோட்டமிட்டேன். மருத்துவமனை ஆள் போல காக்கிச்சட்டையில் குடோனைவிட்டு வெளியே கிளம்புவதற்குத் தயாராக நின்றான்.
மெதுவாக அவ்விடத்திலேயே ஓரமாக பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தி, சாவியை அப்படியே இருக்குபடி விட்டு, அச்சந்தில் விழுந்திருந்த கடைகளின் நிழல்கள் வழியே நடந்தேன். வேட்டை நாயாக என்னை அக்கணம் எண்ணியிருந்தேன். பாக்கெட்டிலிருந்த கத்தியைமீறி என் பார்வை அங்கிருந்த இரும்பு ராடுகளின் மேல் மோதி மோதி வந்தன. ஆயுதத்திற்காக அப்போது நான் ஏதும் பதற்றப்படவில்லை. அந்த இடமெங்கும் துருப்பிடித்த கம்பிகள் பாதையில் நீட்டிக்கொண்டிருந்தன. குடோனுக்கு அப்பால் குறவன் காலனி. பழி தீர்க்க ஆபத்தான இடமாகவும் பட்டது. ஒருகணத்திற்குள் எண்ணங்கள் எனக்கு பலநூறு முனைகளை காட்டிச் சென்றன. அவனை நெருங்குவதற்கு முந்தின கணத்தில் சட்டெனத் திரும்பியவன் என்னை நோக்கினான். கைக்கு சிக்கிய ஏதோவொரு கம்பியை இழுத்து அவன்முன் பாய்ந்து, “தேவிடியா நாயே” என்று வீசினேன். அடி சரியாக அவன் தோளில் நங்கென விழுந்தது. சட்டென பாய்ந்து அவனைத் தள்ளி மிதித்தேன். யாரோ என்னைப் பற்றினார்கள். என் பிரக்ஞை அவன்மேலே குவிந்திருந்தது. அவன் உருவம் மட்டுமே பார்வைக்குள்ளிருந்தது. என் தோள்பட்டையில் யாரோ கடிப்பதை உணர்ந்தேன். மனதினுள் திமிர் பீறிட்டு வெளியேறியது. அவன் முகத்தில் உதைத்தபோது என் ஆங்காரத்தின் கார்வையைக் கேட்டேன். அதுதான் நான். கையிலிருந்த ராடால் மறுபடியும் அவனைத் தாக்குவதற்குள் திபுதிபுவென ஆட்கள் வெளியிலிருந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அக்கூட்டம் ஒருகணத்திற்குள் என்னை நெருங்கிவிட்டது. சட்டென புறக்காட்சி தடுமாறுவதை உணர்ந்தபோதுதான் என் பின் மண்டையில் ராடால் தாக்கப்பட்டது தெரிந்தது. தலை கனத்து நினைவு தப்புவது போல் மறுபடியும் மறுபடியும் புறக்காட்சிகள் சுற்றுவதுபோல் அசைந்தன.
கைகளைத் துழாவி அருகிலிருந்த தட்டுவண்டியைப் பிடித்துக்கொண்டேன். என் அடிவயிற்றில் விழுந்த உதையில் தடுமாறினேன். கயிறு அறுவதுபோல பின்னோக்கிச் சரிந்தேன். தலை யாரோவொருவனின் காலில் மோதியது. பெருமாள் காலைத் தூக்கி என் குறியில் உதைத்தான். அடிவயிற்றில் துருக்கம்பி ஏறியது போல வலி தாக்கியது. நான் மெல்ல மெல்ல சுயமிழந்து கொண்டிருந்தேன். அதன்பின் விதைப்பையில் விழும் அடியை மட்டுமே உணரமுடிந்தது. உயிரைப் பிளந்து அலறினேன். காட்சிகள் கலைந்துää இருண்டு கண்களை மூடின. அப்போது காதுகளைத் தூக்கியபடி பிடறி சிலிப்பி நிற்கும் ஒரு பன்றியின் முகம் தெரிந்தது.
1 Comment
[…] https://thuyan.in/2017/11/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/ […]