மௌனங்களை நாம்தான் உற்றுக்கேட்க வேண்டும்
“I found it impossible to decide which of the two countries was now my homeland“ – Manto
இந்தியப் பிரிவினைப் பற்றி பலவிதமான ஆவணங்களும் நூல்களும் திரைப்படங்களும் நம்மிடம் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஏதோவொரு விதத்தில் பிரிவினையின் சாட்சியங்களை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன. இவற்றுக்கும் ஊர்வசி புட்டாலியாவின் தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ் (The other side of silence) மற்றும் ரிதுமேனனும் கமலாபாசினும் எழுதிய பார்டர் அன்ட் பௌன்டரிஸ் (Borders & Boundaries) என்கிற இரு நூல்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
இந்தப் புத்தகங்கள் பாதிப்புத் தரப்பின் வேறொரு பக்கத்திலிருந்து வன்முறையை அனுகுகின்றன. முழுக்க முழுக்க இந்நூல்கள் கள ஆய்வுகள் என்றாலும் ஆவணத்தைப் பதிவு செய்கிற தொனி துளியும் இல்லை. பாதிக்கப்பட்டப் பெண்கள் நேரடி உரையாடல்களில் நம்முடன் பேசுகிறார்கள். அந்தச் சாட்சியங்கள் இரத்தமும் சதையுமாக அவர்களுக்கு நேர்ந்த சம்பவங்களை, அனுபவித்தவற்றை, பார்த்தவற்றை விவரிக்கின்றன. மண்டோவின் கதைபோல ஒவ்வொருவரின் வாழ்வும் நம்மை உலுக்கிவிடுகின்றன. உங்களுக்கு நிறைய அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளிக்கலாம். இதுதான் சரி இதுதான் தர்க்கம் என்கிற முடிவுகளை உடைக்கிற நம்பவியலான கூறுகளை இந்தப் புத்தகங்கள் தரும். மொத்தம் எட்டு பகுதிகள். ஆந்தாலஜி மாதிரி ஒவ்வொன்று ஒவ்வொரு அனுபவங்களாக நம்முடன் பேசத் துவங்குகின்றன.
பிரிவினையின்போது இருநாட்டின் எல்லையில் வெவ்வேறு மததை, நிலத்தைச் சேர்ந்த பெண்கள் கடத்தப்படுவதும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதும் நடக்கிறது. பல சந்தர்ப்பங்களில் கடத்தியவர்களாலயே பெண்கள் கட்டாயத் திருமணம் செய்து கொள்ளப்படுகிறார்கள். பிரிவினையின்போது ஏற்பட்ட உயிரிழப்பு, கண்ணியம் மற்றும் இழந்த தங்களின் நியாயத் தன்மை கௌரவம் ஆகியவற்றை மீண்டும் பெறும் முயற்சியில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பெண்களை பரஸ்பரம் தங்கள் சொந்த நாடுகளுக்கு ‘மீட்டெடுக்க’ ஓர் ஒப்பந்தத்தை அமைக்கின்றன. அது, கடத்தப்பட்ட நபர்கள் (மீட்பு மற்றும் மறுசீரமைப்பு) சட்டம், 1949). இருநாட்டு எல்லையிலும் கடத்தப்பட்ட பெண்கள் இந்தச் சட்டப்படி அந்தந்த நாட்டிற்குப் பரிமாற்றம் செய்யப்படுவார்கள் அரசுகள் அறிவிக்கின்றன. இந்தச் சட்டம் எழுத்து வடிவில், பார்ப்பதற்கு, உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைத் தருகிறதுபோல இருக்கலாம். ஆனால் பெண்களின் கெடுவிதி இதிலிருந்துதான் தொடங்குகிறது.
பிரிவினையின்போது நடக்கின்ற வன்முறையை பெண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்?
1989 ல் ஊர்வசி புட்டாலியா இந்த நூலுக்காக பிரிவினையில் பாதிக்கப்பட்ட பெண்ணான தமயந்தி சாகலை டெல்லியில் சந்திக்கிறார். கடத்தப்பட்ட பெண்களை மீட்கும் தன்னார்வலர் குழுக்களில் சாகலும் ஒருவர்.
சமூக சேவகர், பெண்கள் நலப் பாதுகாவலர் மிர்துலா சாராபாய் போன்றவர்களோடு இணைந்து (சாராபாய்தான் இந்திய அரசால் நியமித்த மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பிலிருந்தவர்). பெண்களை மீட்க இதுபோல நிறைய தன்னார்வுக் குழுக்கள் இரு நாடுகளின் சார்பாக பணியாற்றி வந்தன. பிரிவினைக்குப் பிறகு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இந்த மீட்புச் செயல்பாடு நடந்துள்ளது. சாகல் போன்ற எத்தனையோ பேர்களின் சேவையும் உழைப்பும் வெளியே தெரியாமலே மறைந்திருக்கிறது.
இவர்களுடைய களப்பணி சாதாரணமானது கிடையாது. அமிர்தரஸைச் சேர்ந்த சத்யா என்கிற பெண் பாகிஸ்தானிற்குக் கடத்தப்பட்டிருக்கிறபோது, அப்பெண்ணை மீட்கும் பணிக்காக, சாகல் முதலில் சத்யாவின் வசிப்பிடத்தை அவர்களுக்குத் தெரிந்த பிற தன்னார்வுக் குழுக்கள் மூலம் (பாகிஸ்தானிய அரசுடன் தொடர்புகொண்டு) அறிந்துகொள்ள வேண்டும். அதுகூட உத்தேசமான தகவல்தான். எப்படியென்றால் இந்தப் பகுதியில் இன்னாரால் கடத்தப்பட்ட பெண்கள் விற்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் துல்லியமாகத் தெரிந்துவிடாது. ‘வாங்கியவர்’ செல்வாக்கு மிக்கவராக இருக்கலாம், தகவலுக்கு வராமல் நிறைய பெண்களும் அங்கு இருக்கலாம். அல்லது ஊருக்குள் இப்படி பெண்களை மீட்க நுழைகிறபோதே அந்த ஊர்க்காரர்களால் தாக்கப்படலாம் (இரண்டு நாட்டிலும் இது நடந்திருக்கிறது). இது ஒருபுறம் என்றால், இரண்டு அரசும் தத்தமது நாடுகளுக்குள் மீட்புக்குழு இறங்குவதற்கு அனுமதியை ஓரிரு நாட்களுக்குத்தான் அளிக்கிறது. இவ்வளவு அபாயகரமான சூழலில் சாகல் அந்த ஊருக்குள் நுழைகிறார். எப்படித் தெரியுமா? தாங்கள் மீட்புக்குழுவினர் என்பதைக் காட்டிக்கொள்ளாமல், லஸ்ஸி விற்பதுபோல, முட்டை விற்பதுபோல ஊர்ப் பெண்களிடம் பேச்சுக்கொடுக்க வேண்டும். எதிராளி பேசுவதைப் பொறுத்து “எங்கள் வீட்டுப் பெண்கள் காணாமல் போய்விட்டார்கள். பார்த்திருக்கிறீர்களா?” அல்லது “எங்களிடம் விற்பனைக்குப் பெண்கள் இருக்கிறார்கள் வேண்டுமா” அல்லது ”உங்களிடம் பெண்கள் எதுவும் இருக்கா? விலைக்கு வாங்கிக்கொள்கிறோம்” இப்படி பல்வேறு தொனியுடன் எந்த வீடுகளிலெல்லாம் கடத்தப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள் எனக் கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படியே கண்டுபிடித்துவிட்டாலும் பெண்களை உடனடியாக மீட்க முடியாது. வைத்திருப்பவரின் தற்கணத்து மனவோட்டத்தைப் பொறுத்தது. ‘செல்வாக்கு’ ‘மனிதாபிமானம்’ ‘விட்டுக்கொடுப்பது’ தூக்கியெறிவது இப்படி ஏதோவொன்றால்தான் அது நிறைவேறும். இதில் ஒருசிலர் மட்டும் பயந்தவர்களா இருப்பார்கள், அவர்களை மிரட்டி மீட்கிறபோதுதான் ஓரளவு அதிகாரத்தைச் செலுத்த முடியும்.
இப்படி மீட்கப்பட்ட பெண்களிடம் விதவிதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. சிலர் மதமாற்றப்பட்டு இன்னொரு ஆணைத் திருமணம் செய்து குழந்தைகளுடன் சந்தோஷமாகவோ, சங்கடத்திலோ வாழ்க்கையை நடத்துகிறார்கள். ”நாங்கள் இங்கேயே இருந்து விடுகிறோம்” என்கிறார்கள். இயற்கையாகவே பெண்களிடம் உள்ள இயல்புதான் என்றாலும் இன்னும் சிலர் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாகவே இதை எதிர்கொள்கிறார்கள். அவர்களிடம் அதற்கு எந்தப் பதிலும் இல்லை. அந்த மௌனம் அவ்வளவு உண்மையாகவும் எதையும் சொல்ல முடியாது வலியையும் கொண்டிருக்கிறது என்கிறார் சாகல்.
பெண்கள் வெறும் மதரீதியான, நிலம் ரீதியான பிரிவினைக்காக மட்டும் கடத்தப்படுவதில்லை. சொந்த நாட்டிலேயே சொத்துக்காக, நிலங்களை அபகரிக்க, காம வேட்கைக்காக என அக்கடத்தலுக்குப் பல முகங்கள் உண்டு. உதாரணத்திற்கு, பிரிவினைக் கலவரத்தில் சொத்துக்கள் உள்ள குடும்பத்தில் யாராவது உயிருடன் மிஞ்சியிருந்தால், குறிப்பாக அது பெண்களாக இருந்தால் அத்தனைச் சொத்துக்களையும் அபகரிக்க அந்தப் பெண்களை விரட்டிவிடுவதும் அல்லது தாங்களே கடத்தி விற்றதும்கூட நடந்திருக்கின்றன. கணவன், அப்பா, குழந்தைகள் என அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள். அந்தரமாக விடப்படும் பெண்கள் வேறு வழியின்றி வெளியேறுகிறார்கள் என்பது எவ்வளவு மோசமானது.
இருதரப்பிலும் இருக்கிறப் பெண்களை மீட்க 1948 செப்டம்பரில் அப்போதைய பாகிஸ்தான்- இந்திய அரசாங்கம் (Inter Dominion treaty) இது சம்மந்தமாக நிறைய சட்டத்திருத்தங்களை வெளியிடுகிறது (Central Recovery Operation- Abducted Persons (Recovey and Restoration Act 1949)). 1947 மார்ச் க்குப் பிறகு இருபக்கமும் அது இந்தியாவாகட்டும் பாகிஸ்தானாகட்டும், எந்த இடத்திலாவது மதமாற்றமோ திருமணமோ நடந்திருந்தால் அது செல்லாது என அறிவிக்கிறது. மார்ச் மாதம்தான் பஞ்சாபில் பிரிவினையின் மிகப்பெரிய கலவரம் நடந்தது. சரி, மார்ச் 1க்கு முன்பு? அப்படியென்றால் இந்தக் காலக்கெடு தேதியை எதுவரை நீட்டிப்பது? யாராலும் அதற்கு துல்லியமான ஒரு ஆரம்பப் புள்ளியைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில இடங்களில் பெண்கள் தாமே முன்வந்து ஏற்றுக்கொண்ட உறவு இது என்று சொல்லும்போது என்ன பதில் இருக்கிறது? இதற்கு என்ன நியாயம் சொல்ல முடியும்? இருநாட்டு அரசுகளும் ஒரு முடிவுக்கும் வர முடியாமல் திணறுகின்றன.
இருதலைக்கொல்லி
இத்தனைச் சிக்கல்களுடன்தான் மீட்புக்குழுவின் செயல்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் மீட்பு மற்றும் மறுவாழ்வு இயக்ககம் (Ministry Of Relief and Rehabilitation) 23000 பெண்களின் பெயர்கள் கொண்டப் பதிவேட்டை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறது. பதிலுக்கு பாகிஸ்தான் அரசும் இன்னொரு பதிவேட்டை தருகிறது. டிசம்பர் 6 1949 ல் ஒருமித்த முடிவுடன் இரு அரசாங்கமும் இப்பெண்களைத் தத்தமது நாடுகளுக்கு போகும்படி ஆணைப் பிறப்பிக்கின்றன.
இது ஒருபுறம் என்றால், மீட்கப்படுகிற பெண்களை ஏற்றுக்கொள்வதில்தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. பெண்களைத் தேடித் தர விண்ணப்பத்த சீக்கிய, இந்து மதங்களைச் சேர்ந்தவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ‘தங்கள் சமூகத்தின் புனித அந்தஸ்து’ பரிபோய்விடுமென்கிற அச்சம். இன்னொரு ‘ஆணுடன் இருந்தது’ என்பது மட்டுமல்ல ‘வேறொரு மதத்துக்கு மாறியதும்’ இங்கு மிகப் பெரிய பிரச்சனையாகிறது. மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானப் பெண்கள் இங்கேயும் போக முடியாமல் அங்கேயும் போக முடியாமல் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்கதியாகிறார்கள். சரி, அப்படியே மீட்புக் குழுவுடன் வந்துவிட்டால் எல்லைத் தாண்டிய மறுகணம் “தீட்டு” எனக் காரணம் காட்டி சீக்கியர்களாலும் தீவிர இந்துக்களாலும் கொல்லப்படலாம். குற்றவுணர்வுடனும் பழியுணர்வுடனும் எங்களை வாழ வைக்கத்தான் இந்த மீட்பு நடவடிக்கையா? எனக் கேட்கும் பெண்கள் ஒருகட்டத்தில் எங்களை யாரும் மீட்கவே வேண்டாம் என முடிவெடுக்கும் நிர்பந்தத்திற்கு வந்துவிடுகிறார்கள்.
“யாரெல்லாம் தீட்டு எனச் சொல்லப்படுகிறார்களோ அவர்கள் என்னருகே அமரட்டும். அவர்களுக்கு உரிய மரியாதையும் அந்தஸ்த்தையும் நான் தருகிறேன்” என்கிறார் காந்தி.
“மீட்கப்பட்டப் பெண்களை பழமைவாத நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்காமலிருப்பது உலக அரங்கில் நமக்கு பெரும் அவமானத்தை அளிக்கிறது” என நேரு கடுமையாகச் சாடுகிறார். ஆனால் இதையெல்லாம் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்த விசயத்தில் அவர்களுக்கு ஓரளவு சுமூகத் தீர்வு உள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம்கள் இந்தியாவிலிருந்து மீட்கப்பட்டவர்களை இஸ்லாம் பெண்களை -முழுக்க இல்லாவிட்டாலும் -ஓரளவெனும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
சீக்கியர்களுக்கும் தீவிர இந்துக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிலிருந்த அத்தனைபேருக்கும் ஏற்பதென்பது அவமானமாகத்தான் இருக்கிறது. இந்தியப் புராணக் கதைகளின் மீதான செல்வாக்கும் அறுத பழசான ராமன்- சீதை கதை அவர்களின் தர்க்கமாக இருக்கிறது என்கிறார் ஜி.டி. கோசலா. “ஏற்கெனவே பலியானப் பெண்களை மீட்பு முகாம்களுக்கு இழுத்து வருவதும் வன்முறைதான்” என மகாவீரத் தியாகி குரலெழுப்புகிறார்.
இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு இன்னொரு யோசனையும் செய்கிறது. இவ்வாறு மீட்கப்பட்டப் பெண்களை ஏற்காமலிருக்கும் தர்க்கத்தை உடைக்க, நம்பிக்கையை மாற்ற, அந்தந்த மீட்பு முகாம்களில் வைத்து அவர்களுக்கு மறுமணம் செய்யும் வழியைக் கொண்டுவருகிறது. பிரிவினையில் நடந்தது ஒருவகையான வன்முறையென்றால் இதுவும்கூட அதன் இன்னொரு வடிவம்தானே? ஒரு பெண் தீட்டானவள் என்றால், அவளை தன் நிலத்தில், சொந்த மத அடையாளத்தில் நடத்தும் இந்தச் சடங்கு எப்படி தீர்வாகும்? அப்படியென்றால் தீட்டு என்பது எதைக் கொண்டிருக்கிறது? இந்த நிலத்தின் லட்சியவாத ஒழுக்கத்தைக் கடைபிடிக்க பெண் மீதான பலியீடுகள் தானே இவை எல்லாம்.
Mass Abortion Camp
“தீட்டு” ”களங்கம்” எனக் காரணங்களால் மீட்கப்பட்டும் பெண்கள் ஒதுக்கப்படுகிறச் சூழலில் மீட்பு குழு இன்னொரு அறிக்கையையும் வெளியிடுகிறது. அது, முகாமலிருக்கும் ஆயிரக் கணக்கானவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கர்ப்பமாக உள்ளனர். உறவினர்களால் நிச்சயம் இவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால் என்ன செய்வது? கருக்கலைப்புதான் இதற்கான தீர்வு என அரசாங்கம் முடிவெடுக்கிறது. இதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் “சஃபயா“ என்கிற கருக்கலைப்புத் திட்டம். அந்தந்த முகாம்களிலும் தனியார் மருத்துவமனைகளிலும் கருப்பகலைப்புகள் செய்யப்பட்டன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் நிறைய பணம் சம்பாதித்தாத சாகல் சொல்கிறார். எங்கு பார்த்தாலும் பெண்களின் ஓலம்தான் கேட்டன. பிண்டமும் இரத்தமும் அத்தனை மருத்துமனைகளின் குப்பைகளில் கிடந்தன என்கிறார் சாகல். கும்பல் கும்பலாகக் கருக்கலைப்பு என்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியவில்லை.
ஸாஜோவிக் (stasa zajovic) என்கிற பெண்ணிய சிந்தனையாளர் “சுத்தப்படுத்துதல்“ என்கிற சொல்லாடல் ஏன் கருக்கலைப்புடன் தொடர்பு படுத்தப்படுகிறது எனக் கேள்வி எழுப்புகிறார். தெற்கு ஐரோப்பாவில் இருக்கும் போஸ்னியா-ஹெர்ஸிகோவினா பிரிவினையின்போது நடந்த சித்திரவதைகள் குறித்து எழுதும்போது “பாலியல் வன்புணர்வுகள்” பிரிவினையின்போது நடக்கும் முதல் அத்துமீறல் என்கிறார். ஸாஜோவிக் சொல்வதை நாம் விரிவாக அர்த்தப்படுத்தினால், ‘ஒன்றைச் சுத்தப்படுத்துதல்’ எனும்போது அது அசுத்தமானதாக, தீட்டானதாகவே பொருள்கொள்ளப்படுகிறது இல்லையா?. இன்றும் நமது கிராமங்களில் “சுத்தப்படுத்துதல்” என்கிற சொல் புழக்கத்தில் உண்டு. சுத்தப்படுத்துதல் என்கிற சொல் பெண் உடலோடு அழிக்க முடியாத உறவில் இருக்கிறது. கர்ப்பமானவர்கள் தங்களது உடலால் தம் குடும்பத்தையும் நாட்டையும் அசுத்தப்படுத்திவிட்ட குற்றத்துக்கு ஆளானதாகவே பார்க்கப்படுகிறார்கள் இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், நாட்டிற்குக் கலங்கம் ஏற்பட்டுவிடாமலிக்கும் பொறுப்பை பெண்களிடம் தருகிறோம் என்பதுதான் அதன் அர்த்தம். அதாவது, நாட்டின் தூய்மை பெண்களில் சுத்தப்படுத்தலோடு தொடர்புடையது. கடத்தப்படுவது அறிந்து தற்கொலை செய்வதும், மீட்பு நடவடிக்கைக்காகக் கருக்கலைப்புச் செய்து கொள்வதும், இதெல்லாம் தாய்நாட்டிற்காகச் செய்கிற தியாகமாக பொருள்கொள்ளப்படுகிறது. அப்படியென்றால் ஆண்குலத்தைக் காப்பதற்கான பலிகடா பெண். ஆக, நாடு என்கிற தூல நிலம் ஆண்மையத் தன்மை கொண்டதுதானே? மீட்பு நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு பெண்கள் இன்ன நாட்டின் பிரஜைகள் என்பதைவிட இன்ன மதத்தினர் என்ற அடையாளம்தான் முக்கியமாகியது.
விமானத்தில் பச்சிளம் குழந்தைகள்
கை குழந்தையுடனும் நிறைமாதக் கர்ப்பத்துடன் மீட்கப்பட்டிருந்தப் பெண்களின் நிலை இன்னும் மோசம். ஒன்று, இரண்டு வயதுக் குழந்தைகள் அநாதைக் காப்பகங்களுக்கு அனுப்பப்பட்டன. அவர்களை யாரும் தத்தெடுக்க முன்வரவில்லை. அப்படியே எடுத்தாலும் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை. இது இப்படியென்றால் இன்னொருபுறம், முகாம்களில் பிரசவித்தக் பச்சிளம் குழந்தைகளை என்ன செய்வது?. மீட்புக்குழுவைச் சேர்ந்த கமலா, மிர்துலாபென் என்கிற இரு சமூக நலவாதிகள் கண்காணிப்பிலிருந்த குழந்தைகள் மட்டும் நூற்றுக்கு மேல். இக்குழந்தைகளை மிர்துலாபென் என்கிற சமூக ஆர்வலர், அரசாங்க உதவியை எதிர்பார்க்காமல் அப்போதைய டாடா ஏர்நிறுவனத்திடம் கேட்டு, ஜூலந்தர் காம்பிலிருந்து டெல்லிக்கும் அலகாபாத்துக்கும் (பச்சிளம் குழந்தைகள் காப்பகங்களுக்கு) அனுப்பி வைக்கிறார். ஒன்று இரண்டு அல்ல, 200 முதல் 250 வரை. அந்தப் பச்சிளம் குழந்தைகளை எப்படி அனுப்பியிருப்பார்? ஒவ்வொரு குழந்தைகளும் பாதுகாப்பான தனித்தனி கூடையில், பயணத்தின்போது அழுதால் பசிக்கு பால்புட்டி, மலம் நீர் போனால் மாற்றுவதற்கு மாற்றுத் துண்டு, அடையாளத்துக்காக கூடையில் குழந்தையின் தாயார் பெயர் (அப்பா பெயர் தேவையில்லை) என அத்தனையும் விமானப் பணிபெண் வசம் ஒப்படைக்கப்படுகிறது. கற்பனை செய்து பார்க்க முடிகிறதா இப்படியொரு விமானப் பயணத்தை?
இதே மாதிரிதான் பாகிஸ்தானிலும் நடந்திருக்கும் என்கிறார் ஆசிரியர். இவர்களது செயலைப் பார்த்த பாகிஸ்தானின் மீட்புக்குழு அமைப்பின் செயலாளர், கமலாபென்னை தங்களுக்கும் சேவை செய்யும்படி (சில தீர்க்க முடியாதச் சிக்கல்களில்) கேட்டுக்கொள்கிறார்.
இருநாடுகளுக்கும் போக வழியில்லாமல் தவிக்கும் பெண்களுக்காக ஜலந்தரில் ‘காந்தி வனிட ஆஷ்ரமம்‘ உருவாக்கப்படுகிறது. இம்மாதிரி நிறைய ஆஷ்ரமங்கள் இரு நாடுகளிலும் உருவாகின. இதில் இருந்தவர்கள் எந்த உறவும் இல்லாமல் தனிமையான வாழ்வை ஏற்கிறார்கள். ஒருகட்டத்தில் இந்த மீட்பு நடவடிக்கை எந்த எண்ணத்துக்காக உருவானதோ அதன் நோக்கமே சிதைந்துவிடுகிறது. “பயனாளிகள் என்று கூறப்படும் பெண்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், இந்திய அரசாங்கம் ஏன் இந்தத் திட்டத்தைத் தொடர வேண்டும்?” என்கிற கேள்வியை கமலா பாசின் வைக்கிறார்.
துயரார்ந்த மனநிலையில் முகாம் பெண்கள்
மூவாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் ஹொசியாபூர், ஜலந்தர் மற்றும் கர்னல் போன்ற ஆஷ்ரமங்களில் வாழ்வை நடத்துகிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசு அளித்தாலும் தாங்கள் அகதிகள்போல இருக்கிறோம் என்கிறார்கள். ஒருவருக்கு மாதம் பத்து ரூபாய்தான் அரசின் உதவித்தொகை. இதில் எப்படி ஒருவர் வாழ்க்கையை நடத்துவது? அவர்களுக்கென சுயமான வேலை வேண்டும். அதற்காக அரசாங்கத்திடம் பல்வேறு மனுக்கள் அளிக்கிறார் சாகல். அதுபோக மற்ற தனியார் நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட விண்ணப்பங்களை சாகல் எழுதுகிறார். அரசின் முயற்சி காலதாமதப்படும் என தனியார் தொழிற்சாலைகளை அனுகுகிறார். இந்தப் பெண்களுக்கு வயது, படிப்பு தகுதி, என நிறைய சிக்கல்கள் உள்ளன. தன்னார்வலர்களைக் கொண்டு இலவச கல்விக்கு ஏற்பாடு செய்து, ஒருசில மாதங்களில் அவர்களால் ஓரளவு வாசிக்க எழுத முடிகிறது. பிறகு சிறுசிறு நிறுவனங்களில் வேலையும் கிடைக்கிறது.
ஊர்வசி புட்டாலியா களப்பணிக்காக தமயந்தி சாகலைச் சந்திக்கையில் இவ்வளவு விசயத்தையும் ஏன் யாருக்கும் நீங்கள் சொல்லவில்லை எனக் கேட்டதற்கு, “அந்த சமயத்தில் இதெல்லாம் எங்களைப் போல நிறைய பெண்கள் செய்து கொண்டுதான் இருந்தார்கள்” என்று சாதாரணமாகச் சொன்னதோடு அதற்கு மேல் எதுவும் பேசாமல் ஆழமான மௌனத்துக்குள் போய்விடுகிறார். உரையாடலின் முடிவில் தமயந்தி சாகல், “எனக்கும் எந்த அடையாளமும் கிடையாது நானும் சாதாரணப் பெண் அவ்வளவுதான்” என்கிறார்.
விதிவிலக்காக ஒரு காதல் கதை
சைனாப் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவைச் சேர்ந்தப் பெண். பிரிவினை சமயத்தில் கடத்தப்பட்டு, விற்கப்பட்டு ஒவ்வொரு கைகளாக மாறி, கடைசியில் இந்தியாவிலிருக்கும் சீக்கியர் பூட்டாசிங் என்பவரிடம் வந்து சேர்கிறார். அவரையே கட்டாயத் திருமணமும் செய்து குழந்தைகளும் பெற்றுவிடுகிறார். பாகிஸ்தானிய மீட்புக்குழு சைனாப்பை இங்கிருந்து மீட்டு பாகிஸ்தானிற்கு அழைத்துப் போகிறது. சைனாப்பின் பெற்றோர்கள் உயிரோடு இல்லை. பிரிவினையின்போது கொள்ளப்பட்டுவிட்டனர். உண்மையில் சைனாப்பை மீட்பதற்கு முக்கியக் காரணம், அவரது பெயரிலிருக்கும் சொத்துகளை அபகரிக்க அவரது உறவினர் செய்த சதி. பாகிஸ்தானுக்குக் கொண்டுவரப்படும் சைனாப் அவளது உறவினரின் மகனை கட்டாயத் திருமணம் செய்ய வைக்கப்படுகிறாள். குழந்தையும் பிறந்துவிடுகிறது.
சைனாப் போய் விட்ட வருத்தத்தில் இருக்கும் பூட்டாசிங் அவளை எப்படியாவது அழைத்துவர வேண்டுமென முடிவெடுக்கிறான். சீக்கியனாகிய பூட்டாசிங் முஸ்லீமாக மதம் மாறுகிறான். தனது பெயரை ஜமீல் அஹமத் என முறையாக மாற்றிக்கொண்டு பாகிஸ்தானிய அரசிடம் அனுமதி கோருகிறான். இரண்டு வருடங்களில் பலமுறை நிராகரிக்கப்படுகிற அவனது விண்ணப்பம் ஒருகட்டத்தில் ஏற்கப்படுகிறது. அதுவும் ஒரேயொரு நாள்தான் விசா அனுமதி.
போலீஸ், ஜமீல் மற்றும் சைனாப் இருவரையும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறது. அங்குதான் ஜமீல் என்கிற பூட்டாசிங் தனது முன்னாள் மனைவி சைனாபைப் பார்க்கிறான். இந்த இரண்டு வருடத்திற்குள் அவள் வேறொரு பெண்ணாக நிற்கிறாள். பூட்டாசிங்கைப் பார்த்ததும் சைனாப் எதுவும் பேசவில்லை. அவளே சற்று அதிர்ந்துதான் இருக்கிறாள். நீதிபதி அவளிடம், ஜமீல் அவளை அழைத்துப் போகிற விருப்பத்தைத் தெரிவித்ததற்கு, அவள் சில கணங்கள் மௌனமாக இருந்துவிட்டு, “எனக்கு இங்கு திருமணம் ஆகிவிட்டது. இப்போது எனக்கு எந்த பந்தமும் இவருடன் இல்லை. என்னுடைய குழந்தைகளை இவர் வளர்த்துக்கொள்ளட்டும் அதுவே போதும்” என்கிறாள். நீதிபதியும் போலீசும் ஜமீலை இந்தியாவுக்குத் திரும்பும்படி அறிவுறுத்துகிறார்கள். அங்கிருந்து கிளம்பிய ஜமீல், இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான். அவனது சட்டைப் பையில் ஒரு கடிதம் இருக்கிறது. அதில் தன்னுடை காதல் மனைவியை அடைய முடியவிலையென்கிற ஏமாற்றம் கவிதையாக உள்ளன. ஜமீலின் வாழ்க்கை ‘கர்தாவ் சிங்’ என்கிற படமாக வெளியானது. எப்படிபட்ட காதல் இது! சைனாப் உண்மையில் அவனை விரும்பினாளா? பூட்டாசிங் சைனாபை காதலித்தக் காரணத்திற்காகத்தான் விலைக்கு வாங்கினானா? அவளால் ஏன் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை? எப்படிபட்ட சூழலில் சைனாப் நிறுத்தப்பட்டிருப்பாள்? இது எதற்கும் பதிலைக் கண்டுபிடிக்க முடியாது. பிரிவினையின் வன்முறை எல்லா வகையிலும் பெண்களை அலைகழித்திருக்கிறது. உண்மையில் இங்கு நிலம் என்பது என்ன? அது நிச்சயம் ஆண்தான். அது எத்தனைத் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டாலும் அத்தனையும் ஆணாகவே பிறக்கிறது. ஆணைப் பொறுத்தவரை காலதீதமாகப் பெண், அதில் ஒன்று தூய்மை அல்லது வன்முறை, இந்த இரண்டுக்கும் அவள் எப்போதும் அவசியம்.
மார்ச் 8 2024 அன்று அருஞ்சொல் இதழில் வெளிவந்தது
https://www.arunchol.com/thuyan-article-on-partition-and-women