வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து
பெருநகரத்தின் குரூர முகம்
வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து
‘எந்த அயோக்கியன நம்பினா மேல்? தண்ணிக்காக ஊரையே பறக்க அடிச்சிட்டீங்’ –அசோகமித்திரனின் தண்ணீர் நாவலிலிருந்து
பெருநாவல்கள் மட்டுமே வாசிப்பின் எல்லைகளையும் மனிதின் சித்திரங்களையும் கொடுக்குமென்றால் சிறிய நாவல்களிலும் அத்தகைய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பக்க அளவில் ஒரு படைப்பபை பிரக்ஞை பூர்வமாக எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ போன்ற நாவல்களை வாசிக்கின்ற அதே உத்வேகம் தான் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’வையும் வாசிக்கின்றபோது இருக்கின்றன. பெரும்பாலும் பிரதிகள் தடித்த பெருத்திருப்பதில் தான் கிளாஸிக்ககான மோகம் விழுகிறது. அது நம் இயல்பு. சிறிய பக்களவு நாவல்கள் வாசிப்பதே பெருநாவல்களுக்கான வாசக இடைவெளிகாக எண்ணுகிறேன். சில சமயங்களில் அத்தகைய பிரதிகளை தேடி வாசிக்க மனம் ஏங்கும்.
நாவல்களின் நூற்றாண்டு இது. தமிழ் சூழலில் நாவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. நாவலை எழுதுவதென்பது கனவை காட்சிப்படுத்துவது போல் கச்சிதமானதாகவும் உயிரோட்டமானதாகவும் செய்யக்கூடியது. அக்கனவை எழுத்தாளன் சுமந்து அலைந்து எழுதி முடித்த பின்னும் அதில் அவனுள்ளே எஞ்சியவைதான் நிறைய இருக்கும். என்னளவில் புதுய உலகை படைப்பாளன் காட்டக்கூடுமானால் அவன் கலையின் கயிற்றைப் பிடித்து நம்மை சுழற்றிவிடக்கூடியவன் என்றே சொல்வேன். அப்படியொரு சூழலை எழுத்தினூடாக வா. மணிகண்டன் நிகழ்த்தியிருக்கிறார்.
ஒவ்வொரு நகரங்களும் பன்முகம் கொண்ட மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. பின் அவ்வுருவாக்கங்களே அவற்றின் வாழ்வியலை அழித்து திண்று செரித்து பெருத்திருக்கிறது. அவற்றினூடான பின்னியிருக்கும் கதைகள் புற்றீசல் போல வழிந்து பறந்து வாழ்ந்து மடிகின்றன. வாழ்வின் விளிம்பு மக்களின் தினப்பொழுதுகள் என்றும் சொல்லி சொல்லி எஞ்சிய வண்ணமுள்ளது. வாழ்வின் இருத்தலை பற்றி பேசும் படைப்புகள் எப்போதும் படைக்கப்பட்டுகொண்டேயிருக்கின்றன. சார்த்தரின் ‘மீள முடியுமாவும’, தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும’ பேசப்பட்டுக்கொண்டேயிருப்பதன் ஆதாரம் அதன் யுத்தம் நிமித்தம் தோறும் நடப்பதே.
இதற்குமுன் மணிகண்டனின் சிறுகதை தொகுப்புகளான மசால்தோசை 38 ரூபாய் லிண்சே லோஹன் w/o மாரியப்பன் மட்டுமே நான் படித்திருக்கிறேன். முதலாவது தொகுப்பு பரவலாகப் பேசப்பட்டது. பின்னது குறுங்கதை வடிவில் நிறைய கதைகள் அடங்கியது ஒன்று. நான் நாவல்கள் வாசிப்பதிலே பெரும் விருப்பம் கொண்டவன என்பதால் மூன்றாம் நதி வெளிவந்ததுமே வாங்கி படித்துவிட்டேன். சமீபகாலங்களில் கிளாசிக்குகள் நிகராக புது நாவல்கள் எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகின்றன. ஆகையால் என் சமகால எழுத்தாளர்களை வாசிப்பதில் மேலெழும் ஆர்வமே இது.
மூன்றாவது நதி யதார்த்த நாவல் வகையைச் சார்ந்தது. பெருநகரங்களின் நாம் அன்றாடம் கடந்துபோகின்ற தேவைகளுக்கு அப்பால் நிகழுகின்ற பிழைப்பும் அதனைச் சுற்றும் வன்மங்களும் நிறைந்த உலகைக் எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கின்ற படைப்பு. பிழைப்புக்காக மணைவி குழந்தையுடன் பெங்களூர்க்கு வரும் அமாசை பெங்களூரின் அசுரத்தனமான பெருக்கத்தைக் கண்டு பயந்து போகிறான். பாதுகாப்பில்லாமல் சாலைகளில் படுத்துக்கிடக்கின்ற தருணத்தல் மனைவியை திருடர்களின் வேட்டைக்கு பலிகொடுக்க நேர்கிறது. மகள் பவானியுடன் சேரிக்கு குடிபுகுவதும் பின் வேலைத்தேடும் அலைச்சலுமாக நகர்கிறது. தனிமையின் தகிப்பில் வேறொரு பெண்ணின்மீது எழும் மோகம் அவனின் அப்போதைய தாகத்தை நிறைத்துவிட்டாலும் பின் மறுமணம் செய்துகொண்டு அக்குற்றவுணர்ச்சியை மறைத்துக்கொள்கிறான். விளிம்புநிலை மனிதர்களின் மானுட பக்கங்கள் இப்படி நாம் கடந்து செல்கிறோம் பவானியின் சேரி வாழ்க்கையும் சித்தியின் நடத்தை மீறலையும் கடந்து வாழ்வின் இருத்தலைத் தேடி லே-அவுட் குடியிருப்பினுள் வீட்டு வேலைக்காக வந்து சேர்கிறாள். நகரங்களின் காமநுகர்வுகளுக்குள் இளம் வயதில் மோகத்தில் சிக்கி ஏமாற்றமடைவதும் பின் வாழ்வை எதிரிநோக்கி அவற்றை துடைத்து முன்னேறுவதும் ஆசிரியர் இயல்பாகச் சொல்லிச் செல்கிறார்.
போர்வெல் இயந்திரம் குரூரமான விலங்குபோல நிலத்துடன் மோதி போரிடுவதாக ஆழ்துளை கிணறுகள் ஆங்காங்கு முளைப்பதாக ஆசிரியர் எழுதுகிறார். இதற்குபின் நாவல் வேறொரு பரப்பின்மீது நகரத்தொடங்குகிறது. பால்காரர் நகர்பகுதிகளுக்கு குடி தண்ணீர் சப்ளை செய்யும் குறு முதலாளி. அவரின் எல்லைகள் அதிகாரத்திற்குட்பட்டிருக்கிறது. லிங்கப்பா அவருடன் வேலை செய்கிறான். அவன்மீது பவானிக்கு காதல் வசப்படுகிறாள். யதார்த்த உலகில் உறவுச்சிக்கல்களும் குற்றங்களும் பின் நிகழும் மரணம், கொலைகளுக்கும் அடிப்படையாக எழுப்பபடும் தீராத கேள்விகள் வந்துகொண்டேயிருக்கின்றன.
நகரத்தின் இன்னொரு முகத்தை அவள் காணும் போது அவ்வாழ்வை ருசிக்க எத்தணிக்கிறாள். அப்போது அவளுக்கு தடுமாற்றத்திற்கு உள்ளாவதை தரிசனமாகக் காட்ட முனைகிறார் ஆசிரியர். பின் வேற்றுலகிற்குள் நுழையத் தன்னை தயார் செய்துகொள்வதிலிருந்தே அவளின் அழிவு தொடங்குகிறது. வாழ்வின் விளிம்பில் லிங்கப்பாவுக்கும் அவளுக்கமான புதிய பந்தம் நிகழ்ந்து பின் உருக்குலைந்து போகிறது. லிங்கப்பாவின் மரணம் அது நிகழிந்துவிடுமென மனதில் அவள் பதறிக்கொண்டேயிருக்கிறாள். நாவலின் முதலிலே அது நேர்வதாகச் சொன்னாலும் பின் வாசிக்கையில் மூட்டமாக அதை மறைக்கச்செய்துவிடுகிறது. நாவல் ஒரு வட்டமாக தொடங்கிய இடத்திலே முடிவது ஒரு வடிவ புனைவுத்திக்காக மட்டுமே பயன்படுத்தியருக்கிறார்.
ஒரு பக்கம் பவானியின் வாழ்வின் ஊடுபாடுகளையும் மறுபக்கம் குடி தண்ணீர் வேட்டை முதலைகளின் கொழுத்த தொழிகளுமாக நாவலின் பக்கங்கள். நாவலின் மையம் இந்த இரு புள்ளிகளிலே சுழல்கிறது. மானுட வாழ்வின் இருத்தலுக்கான உச்சக்கட்ட மோதல்களின் தருணங்களை நாவல் காட்டுகிறது. குடி தண்ணீர் மாபியாக்களின் குரூரம் சாமானியர்களை வேட்டையாடி அழித்துவிடும்.
பவானி வருணின் காதல் பற்றி சொல்லும்போது இப்படிச் எழுதுகிறார். ‘அவளின் இதழ்கள் பறக்கும் பறவையொன்றின் இறகை ஒத்திருப்பதாக அவன் வர்ணிக்கிறான்’. இதை நாவலின் காதலின் கவித்துவ வரியென்றுச் சொல்வேன்.
ஆசிரியர் ஒன்றொடொன்று வெட்டி நகரும் குணாதியங்களை காட்டி செல்கிறார். உதாரணமாக பவானியின் தந்தையின் உடல் நலமில்லாது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ரமேஷின் முறுக்கேறிய உடல் வனப்பைக் கண்டு கிளர்ச்சியடைகிறாள். பின் அப்பாவின் மீளாத நிலை கண்டு தவிப்பதுமாக மாறி மாறி அலைகிறாள். இது ஒரு முரணாக இருந்தாலும் அதை மறுப்பதற்கில்லை. யதார்த்த தளத்தைவிட்டு நாவல் மீறாமல் செல்கிறது. பவானியின் இருத்தலோடு பல்வேறு திசைகளிலிருந்து உருவாகும் மோதல்களினூடே கதை நகர்வதில் தான் இதை நாவல் என்கிற கட்டமைப்புக்குள் கொண்டுவருகிறேன். தற்போது தமிழில் படைப்புகள் சில எவ்வித குறுக்கீடுகள் இல்லாமல் ‘நாவல்’ என சொல்லப்படுகிறது.
இந்த நாவலைப் படிக்கின்றபோது அசோகமித்ரனின் தண்ணீர் நாவல் நினைவில் எழுந்தது. தண்ணீர் 1973 வாக்கில் எழுதப்பட்டது. இன்றுவரை குறைபடாத வாசிப்புக்குரியது. அன்றைய காலக்கட்டத்தில் மெட்ராஸின் நீர் ஆதார பிரச்சனையை சொல்லக்கூடிய நாவல். தண்ணீரில் அசோகமித்ரன் இப்படி ஓரிடத்தில் சொல்லியிருப்பார் ‘பதினெட்டடி துளை போட்டாங்களா சாமி..பூமியில தண்ணி இல்லாம போனா யாருதான் என்ன செய்ய முடியும்?’ தண்ணீர் நாவலின் கதாபாத்திரங்களுக்கும் தண்ணீர் பிரச்சனைகளுக்கும் ஊடே கதை பின்னலாக ஓடும்.
இப்பிரதியில் வரும் பவானியை ஜமுனாவோடு ஒப்பிட்டு பார்த்தேன். இருபெண்களும் வேறுவேறான காலத்தின் படைப்பாளியின் பிம்பங்கள். ஜமுனா லௌகீல வாழ்வை அடையக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தாலும் போராட்டம் நிறைந்த தண்ணீர் வாழ்க்கைக்குள் தன் இருத்தலில் ஆசுவாசம் அடைந்துகொள்கிறாள். பவானி இன்றைய நவீன மனுஷி. லௌகீதத்தை விரும்பினாலும் அதன் குரூரத்தை அறிந்தவளாக விலகிக்கொள்கிறாள். இப்படி ஒப்பிட்டுக்கொள்வதில் காலத்தின் இடைவெளியின் மாற்றத்தை உணர முடிகிறது. தண்ணீர்; நாவலின் இறுதியில் ஜமுனா சாயாவிடம் சொல்லும் ஒரு வார்த்தை உண்டு. ‘எல்லாம் பழையபடி தான்’ அவர்கள் வாழ நினைத்ததும் இழந்ததும் அந்த பழையவைகள் தான். அதே வார்த்தையை பவானியின் மனதிலும் இருந்திருப்பதாக ஒருகணம் வாசிக்கும் போது எண்ணத் தோன்றியது.
நாவலில் சில சம்பவங்களை தொடர்ந்து வாசித்துச் செல்லும் போது அவை அறுபட்டு தாவிச்செல்வதுதான் சற்று தோய்வுறச்செய்கிறது. அதுவே தொடர்ந்து நிகழும்போது ஏமாற்றமடை வைக்கிறது. நாவலுக்குள் வரும் கதாபாத்திரங்ளின் வாழ்வினூடே இன்னும் கதை நகர்ந்திருந்தால் மூன்றாம் நதி நிச்சயம் வாசிப்பின் வேறொரு பரிணாமத்தை அளித்திருக்கும். படைப்பாளி சற்றும் பிசகாமல் கதைச் சொல்லி செல்கிறார். சலிப்படையும் நடையில்லை. அதேசமயம் கவித்துவமான சித்தரிப்புகள் இல்லை என்கிற குறை மட்டும் என் மனதில் எஞ்சுகிறது. தமிழ் நாவலில் தொட்டிராத புதிய பகுதியொன்றை புனைவு படுத்தியிருக்கிறார். சமகால உலகின் இறுதி மூச்சான குடிதண்ணீர் வேட்டை தொழிலின் ஏகாதிபத்தியம். நகரம் சுருங்கிவிடும் போது அதன் கோரமுகம் வெளிப்பட்டு சாமானியனைத் தாக்கக்கூடும்.
நாவலின் தொடக்கத்தில் அமாசையும் சின்னச்சாமியும் பஞ்சத்தால் சந்தையில் சொற்ப விலைக்கு மாடுவிற்றுவிட்டு வருகிறார்கள். அப்போது சின்னச்சாமி ‘மனிசனுக்கே தண்ணியில்ல’ என்கிறார். அதுவே வாழ்வின் ஆதார மையமாக தெரிகிறது. நாவல் முடித்தபின்பு மறுபடியும் புரட்டுகையில் அவ்வரிகளை படித்துப்பார்த்தேன். எத்தகைய ஆழமான வரிகள் என்று அப்போது நினைக்கத்தோன்றியது. நாவல் முழுக்க அவ்வரிகள் உள்ளுக்குள்ளே சுணங்கிக்கொண்டேயிருந்தது என்பதை உணர்ந்தேன். கண்களுக்கு புலனாகாத நதிகளின் அழிவுகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன….
மூன்றாவது நதி
வா. மணிகண்டன்
யாவரும்.காம் வெளியீடு
(2015 செப் தினமலா் பதிப்பில் வெளிவந்த கட்டுரை)