வெண்ணிறப் புழுக்கள்
வெண்ணிறப் புழுக்கள்
1
கொடிவேரி அணையில் பவானியின் இரைச்சல் மிகத்துல்லியமாகக் கேட்டது. இரவில் எப்போதுமே அவ்விரைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக் மெல்ல உயர்ந்தெழுவது போல் இருக்கும். “பவானிக்கு கோவம் வந்தால் ஊரைச் சுருட்டி வாயில போட்டு போய்டுவாள்” என்றார் சங்கரன் மாமா. அணையைக் கட்டிய கொங்கள்வான் கதையை இங்கிலிஷ் படங்களைப் போல சொல்லத் தொடங்கினார். பெரும்படை திரட்டி குதிரையில் வந்திறங்கிய கொங்கள்வான், புலிகளை வேட்டையாடி குதிரையில் இழுத்துக்கொண்டு போனான் என்றார். கொங்கள்வானிற்கு பணியாத குறுமன்னர்கள் அணையை கொம்பன் யானைகளைக்கொண்டு இடிக்க முயன்றபோது அவைகளின் மத்தகம் பிளந்து குருதி பீறிட்டு இரத்த ஆறு ஓடியதென்று சொன்னபோது சட்டென்று போர்வையை உதறி அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு எழுந்தேன். அவர், “எங்கடா” என்றார். நான் விரலைக் காட்டிவிட்டு வெளியே வந்தேன். வெளியே கனத்த இருளுக்குள் இலைகளில் நீரின் பளபளப்பு நிலவொளியில் மின்னின. தவளைகளின் கத்தல் ஒருகணம் சட்டென நின்று பின் துவங்கியது. மூத்திரம் வெள்ளி அரைஞான் கயிறாக வெளியேறியது. ஜிப்பை இழுத்துவிட்டு பேன்ட்டை இன்னொரு சுற்று சுருட்டிக்கொண்டு நேராக அம்மாவுடன் சென்று படுத்துக்கொண்டேன். அம்மாவின் அணைப்பில் எப்போதுமே கதகதப்பு இருக்கும். போர்வையை இழுத்து போத்தி கண்களை இறுக்கிக்கொண்டேன். மனம் அணையையும் பவானியையும் மாறி மாறி நினைத்துக்கொண்டிருப்பiதைத் தவிர்க்க வௌ;வேறு நினைவுகளுக்குள் நுழைய முயற்ச்சித்தேன். அணைப் படிக்கட்டில் துணித்துவைக்கும் பெண்களும் அவர்களின் கை வளையல்கள் மோதும் ஒலியும் நினைவில் வந்தன. அந்தரங்கமான அவ்விசை செவிக்கு மிக அருகில் கேட்டது. அவர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக கற்பனையில் மேலெழுந்தன. நன்றாகப் பார்த்து பழகிய முகங்களின் சாயல்கள். ஒவ்வொரு இரவும் இப்படி கதைகளும் அதைத்தொடர்ந்த பயமுமே என்னைத் தூங்கச் செய்தன.
எப்போதுமே காலையில் கண் விழித்ததும் மலைகளுக்கப்பால் பச்சைக்குவியல்களுக்குள் பவானி ஆறு கரும்பச்சையில் மெதுவாக நெளிந்து வருவதைப் பார்ப்பேன். குழந்தையின் வாயில் ஒழுகும் எச்சிலைப்போல சன்னமாக நழுவி ஓடிக்கொண்டிருக்கும். இரவில் கேட்ட சப்தம் பெரும் பிரமை என்று அப்போது தோன்றும். அணைக்கப்பால் தூய பச்சையில் வயல்பரப்புகள் விரிந்திருக்கும். பவானியின் வேகம், ஆங்காரமெல்லாம் அணையில் மோதியதும் சாந்தமாகி மெல்ல தணிந்து விடும். கண்ணாடிகள் சில்சில்லுகளாக உடையவது போலிருக்கும். கரையில் திருவோடுகளை கழுவி காயவைத்தது போல பரிசல்கள் ஒதுங்கியிருக்கும். கடம்பூர்மலை சன்னமான மேகங்களுக்குள் வெள்ளை வேட்டியில் மூடியபடி கிடப்பதைப் பார்ப்பேன். அம்மலைக்குன்றைப் பார்த்த அக்கணமே நெஞ்சம் பரவசமடைந்துவிடும். மலை உச்சியை அடைவதுதான் அப்போது பெரும் லட்சியமாகக்கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் அம்மாவிடம் கேட்கும்போதெல்லாம் ‘போலாஞ்சாமீ’ என்பாள். மலையின் உச்சயிலிருந்து கோபிச்செட்டிபாளையத்தைப் பார்க்கவேண்டும். கீழே மல்பரி தோட்டத்தில் அம்மா நிற்பது எப்படி இருக்கும்? அம்மாவே ஒரு புழு போல இலைமீது நெளிவாளா? சிறுசிறு தீப்பெட்டிகளாக வீடுகள் சரிந்துகிடக்குமா? சத்தியமங்கலக்காட்டிற்கப்பால் மைசூர் இருக்கிறது, தலைக்கு மேல் விரிந்திருக்கும் அந்தக் காட்டுக்குள்தான் யானை கூட்டம் திரிகிறது என்பார் மாமா. தினம் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொருத்தரும் சத்தயமங்கலத்திற்குள் சென்றதாகக் கதைவிடுவோம்.
2
மினியம்பாளையத்தில் பத்து பதினைந்து வீட்டிலாவது பட்டுப்புழு வளர்ப்பது உண்டு. சோமைய்யப்பகவுண்டர் தன் அப்பா காலத்திலிருந்து படடுப்புழு தட்டிவைத்து வளர்த்தவர். அம்மா அங்குதான் வேலை செய்தாள். பெட்டிகளில் சாக்கிகள்ழூ வாங்கி வந்ததுமே அம்மாவை வரச்சொல்லி ஆள் அனுப்பி விடுவார். அதன்பிறகு ஒரு மாதத்திற்கு அவர் வீட்டில்தான் வேலை. தோட்டத்தில் இலை அறுப்பென்றால் திருவிழா போலத்தான் பேச்சும் சிரிப்பும் கலகலத்திருக்கும். சிலசமயங்களில் சினிமா பாடல்களை உரக்க பாடுவார்கள். அதிகமும் எம்ஜிஆர் பாடல்கள்தான். வெயில் அதிகமிருந்தால் தேங்காய் நார் உரித்து பந்தல் போல கட்டுவார்கள். பட்டுப்புழுவிற்கு எப்போதும் குளிர்சி வேண்டும். பட்டுக்கூடு உருவாகும் வரை தினம் அதற்கு இலையறுத்து போட அம்மா கிளம்பி விடுவாள். ஒவ்வொரு கணமும் அது வளர்ந்துகொண்டிருக்கும். நான் அதன் அசைவுகளை உற்றுப்பார்ப்பேன். பிறந்த குழந்தைபோல முஷ்டி முறித்து புரண்டு நெளிவது போலிருக்கும். கூடுகட்டும் பருவத்தில் அட்டாலியில் செறுகியிருக்கும் ஓலைத்தட்டிகளை இறக்க என்னைக் கூப்பிடுவாள். கவுண்டர் அப்போது சொந்தமாகவே தட்டிகள் நிறைய வைத்திருந்தார். வெள்ளாலபாளையம், கொழவிகாடு பக்கமிருந்து பட்டுப்புழு வளர்ப்பவர்கள் அவரிடம் வாடகைக்கு வாங்கி போவதுண்டு. அவருக்குச் சொந்தமான ஐம்பது ஏக்கரில் எப்போதுமே சோளம், கரும்பு என்று வாரிக்கிடக்கும். மல்பரியில் வீரிய ரகத்தை கோபிச்செட்டிப்பாளையத்தில் முதலில் பயிரிட்டதே அவர்தான் என்பார்கள்.
சிறுவனாக டவுசருடன் தினம் காலையில் அம்மா தோட்டத்திற்கு போகும்போது அம்மாவின் இடுப்பில் குதிரை ஏறிக்கொண்டு நானும் போய்விடுவேன். அம்மா, ‘வாதிக்குதுபாரு..’ என்று முகத்தை கோணலாக்குவதைத் தவிர வேறு ஏதும் சொல்லமாட்டாள். இலைகளை சாக்கில் கட்டி தலையில் வைத்துக்கொண்டு என்னையும் இடுப்பில் சுமந்தவாறே தோட்டத்திலிருந்து திரும்புவாள். வாள் போன்ற வளைந்த குச்சியால் பாதையில் நீண்டிருக்கும் தழைகளை வெட்டி வீழ்த்திவிட்டு, கையை உயர்த்தி “நா மைசூர் ராஜா” என்று முழக்கமிடுவேன். “ஒம்மவன ஊட்டுல உட்டுபோட்டு வரவேண்டீதான..தேவாங்காட்டாம் இடுப்புல ஒக்காந்துருக்கத பாரு..” என்று எல்லோரும் திட்டுவார்கள்.
இரவில் புழுக்கள் ஒன்றோடொன்று சாய்ந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறேன். அம்மா இலைகளை ஆய்ந்து தட்டியில் கொட்டியதும் இலைகளின் பச்சை வாசனையை முகர்ந்து மெல்ல ஒவ்வொன்றாக மேலேறி வரும். காட்டில் மழை கொட்டி சருகுகள் நொறுங்குவதுபோல அவற்றை தின்னத்தொடங்கும். தீராத பசிஇ ஒரேநாளில் வளர்ந்துவிட துடிக்கின்ற வேகம். யானை துதிக்கையைத் துழாவுவது போல இலைமீது நின்று உடலை தூக்கி அலையும். அதன் வெண்சதையை பிடித்து நசுக்கி விட வேண்டு போலிருக்கும். ஆசையில் அதன் கொழுத்த வால்; பகுதியைப் பிடித்து இறுக்குவேன். மரு போன்ற கால்களை உதறி அந்தரத்தில் எதையோ தேடுவது போல எக்கி வளையும். நானே இலையை எடுத்து அதற்கு ஊட்டிவிட முயற்சித்திருக்கிறேன். புழுக்களுக்கு கண் வாய் உறுப்புகள் இருப்பதாகவே தெரியாது. நீண்ட தடித்த புழுவொன்றை துண்டுகளாக வெட்டிப் போட்டது போலத்தான் நினைப்பேன். நான்காவது காய்ச்சல்ழூழூ முடிந்த பிறகுää ஒவ்வொரு புழுவும் பழுத்து நிறம் மாறும். குழந்தை கோழையை கொட்டுவது போல நூலிழைகளை தள்ளும். அப்போது அத்தனையையும் எடுத்து ‘கூடு தட்டி’யில் போட வேண்டும். உள்ளங்கையில் அள்ளி வைத்துக்கொள்வேன். வழவழவென இளநீர் சதையின் மென்மை. வாயிலிருந்து சுருள் சுருளாக நூல் வழிந்து கூடு உருவாகத்தொடங்கும். அச்சயமயத்தில் அதைப் பார்ப்பதற்காகவே தினம் கவுண்டர் வீட்டுக்கு வருவேன். பொன்னிற வெண்மை. சன்னமான தங்கக்கட்டியை சீவியது போன்ற அக்கூடு ஒன்றை யாருக்கும் தெரியாமல் ஜோப்பில் போட்டுää அட்டாலியில் ரகசியமாக பதுக்கியதுண்டு. சமயங்களில்; பட்டாம்பூச்சி ஏதும் வீட்டினுள் பறக்கும்போது அந்தக் கூடுதானா! என்று பிரமித்திருக்கிறேன். இறகுவிரிந்து ஒரு பட்டாம் பூச்சி கூட்டிலிருந்து வெளிவருமென ஆர்வம் இருந்தது.
பள்ளிக்கூடம் விடுமுறையில் அம்மாவுடன் நானும் தோட்டத்திற்கு போய்விடுவேன். கடலை போட்டிருக்கும் தோட்டத்தில் டவுசரைக் கலட்டிவிட்டு கக்கூஸ் போவதாகக் குத்தவைத்து அமர்ந்து ஒருவொருச் செடியாகப் மெல்ல நோண்டி கடலைகளை திருடுவேன். எப்படியும் ஒரு படியாவது தேறிவிடும். என் டவுசரில் திணித்தது போக மீதம் அம்மா சேலைக்குள் சுருட்டிக்கொள்வாள். நான் அவளின் திருட்டுமடியை மறைத்து நிற்பேன். வீட்டிற்கு வந்ததும் விறகு கூட்டி பானையில் தண்ணீர் தயார் செய்வோம். கடலை அவித்து எடுக்கும் வரை “ஏங்கண்ணுக்கு” என்று அம்மா சொல்லிக்கொண்டேயிருப்பாள். நான் வெட்கத்தோடு சிரித்திருப்பேன். கடலை வெந்து உடையும்போது ஈர மணல்போல மணக்க ஆரம்த்ததும் சுடச்சுட ஒவ்வொன்றாக எடுத்து, தரையில் முட்டி வாயில் போட்டுவிடுவாள். சாப்பிட்டதும் கடலை கொதித்த நீரை கரண்டி விட்டு குடிப்பேன். அம்மா “மூத்தரம்” என்று தலையில் அடிப்பாள். அன்று முழுதும் அம்மா கையில் குமையும் கடலை வாசனையை நுகர்ந்தபடியே தூங்கிவிடுவேன்.
அம்மாவுடன் கூட பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது. சிறுவயதிலேயே தாத்தா இறந்துவிட்டார் பாட்டி மட்டும் தான். என் நினைவுத் தெரிந்து, எழ முடியாத கூனுடன் கால்களில் நீர் வீக்கத்தில் மலமூத்திரம் நாற கதவருகே பாட்டிக் கிடந்தாள். பிறகு ஒரு அடைமழைக்காய்ச்சலில் சுணங்கி இறந்து போனபோது நாங்கள் சங்கரன்மாமாவின் வீட்டிற்கு வந்து விட்டோம். அவர் அம்மாவின் பெரியப்பா மகன். மாமா சிறுவயதிலிருந்து அம்மாவின் கூட இருந்தவர். மாமாவுக்;கு இதுதான் வேலை என்றில்லாமல் எல்லா தொழிலிலும் ஒரு கோவணம் வைத்திருப்பார். பேச்சும் பரிதாபச் சிரிப்புமே அவருக்கு முதல். எதாவது கிடைத்துவிட்டால் அதைப்பற்றி பலதும் கதைபேசத் தொடங்கிவிடுவார். இதெல்லாம் எங்கு கற்றுக்கொள்கிறாரென யாருக்கும் தெரியாது. ஆனால் மாமா தினத்தந்தியை ஒரு வரி பிசகிடாமல் பொறக்கி எடுத்துக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஊரில் எம்எல்ஏவுக்கு கட்சிகளுக்கென்று பொதுவான ஏஜென்ட் ஒருவர் உண்டு. வேலைமாற்றம், பஞ்சாயத்து, ஸ்டேசன் செலவு, லோடுலாரி ஜப்தி என்று எதாவது பிரசன்னைகளுக்கு அந்த ஏஜன்டையே போய்; பார்க்கவேண்டும். கணபதிசாமியைத்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் அணுக வேண்டும். எங்களுக்குத் தெரிந்த ஒரே கட்சியாபிஸ் அவர்தான். அவருக்கும் வயதாகி சர்க்கரையில் பார்வை மங்கியபிறகு மாமா கட்சியல் அவரிடத்திற்கு வர துடித்துக்கொண்டிருந்தார். குமரப்பர்தான் அப்போது கட்சியில் பெரிய இடத்திலிருந்தார். ஊரில் அவரை ‘பெரிய பழக்கம்’ என்பார்கள். ரோட்டில் அம்பாஸிட்டர் கார் ஏதும் சென்றால் நிச்சயமாக முன்னிருக்கையில் அவரைப் பார்க்கலாம். வேட்டியை அவிழ்த்து கட்டச்சொன்னால் கட்டிவிடுவதும் டவுசரை அவிழ்த்து சொறிய வேண்டுமென்றால் வலிக்காமல் செய்துதருவதையும் ஆத்மாத்ரத்மாகச் செய்தார். அம்மா மாமாவைத் திட்டும்போதெல்லாம் “நான் அவருக்கு ஒசத்தி சாதி நாயாக்கும்” என்பார். கட்சிஆட்களுக்கு தொகுதியில் எல்லா சமூகத்தின் ஓட்டுக்களும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். சங்கரன் மாமாவிற்கு கவுண்டர்களிலிருந்து போயர்கள், தொறையர் சமூகம் வரை பழக்கமிருந்தது.
மாமா காலையிலே எழுந்து குளித்து நெற்றியில் திருநீர் பூசிää செந்தூரம் இட்டு கிளம்பிவிடுவார். பனியன் போடாமல் சட்டையணியும் பழக்கம். மாரில் மண்டிருக்கும் ரோமத்தில் கவரிங் செயின் பளபளக்க வேண்டும். சிலசமயம் அக்கரிய மார்பு எனக்கு சீக்குவந்த சர்க்கஸ் கரடியை ஞாபகமூட்டும். அப்போதே அவருக்கு நாற்பது வயது முடிந்திருந்தது. திருமணம் செய்யவில்லை. ஹைஸ்கூல் விட்டதும் பிள்ளைகளை சைட்டடிக்க ரோட்;டில் நின்றுகொள்வார். சின்னபெண்கள் அவரை பார்த்து வாய்மூடி சிரிக்குபோது பரவசமடைவார். யாரும் ஏதும் கேட்டால், “ஒஞ்சோலி மயிற பாத்துட்டு போடா” என்பார். மாமாவிற்கு கஞ்சா மீது அளவுகடந்த போதை இருந்தது. எல்லா ஊரின் கஞ்சா இலையின் மணத்தையும் அறிந்திருந்தார்..
3
காலையில் எழுந்தபோது மாமா யாருடனோ கத்திக்கொண்டிருந்தார். அவர்கள் கைகளில் நான்கு பெட்டை ஆடுகளைப் பிடித்திருந்தார்கள். சினை நிற்பதற்காக கூட்டிவந்த வெள்ளாடுகள் அவை. எங்கள் வீட்டில் முரட்;டு கிடா ஆடு இருந்தது. அதற்கு முனிராசு என பெயரிட்டிருந்தேன். காலையில் கிடாவின் வயிற்றை காயப் போட வேண்டுமென்பதற்காக முந்தினயிரவே மாமா அதற்கு சோளம் கொடுத்ததைப் பார்த்தேன். பெட்டையாடுகளைக் கண்டதும் நாக்கை நீட்டி ‘த்ப்பே’ என்று கத்திக்கொண்டு, கால்களை தூக்கி நின்றது. நான் பக்கத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா என்னை விரட்டி, “ஸ்கூலுக்கு போவலீயா” என்றாள். கிடா முன்னங்கால்களை தரையில் தட்டி பைத்தியம் பிடித்தது போல கத்தத்தொடங்கியது. அதன் கத்தல் ஒரு மிருகக் குரல் போலவே இல்லை. கயிற்றைப் பிடித்து இழுத்தும் பெட்டையாடுகள் மிரண்டு நின்று கொண்டன. சிவந்த புழுபோல கிடாயின் செந்நிற குறி நீண்டது. மாமா அதைப் பற்ற எத்தணித்ததும் சட்டென உள்ளிழுத்துக்கொண்டது. “தாயொலி உள்ளார போய்டீயா” என்று துழாவினார். எப்போதுமே மாமா பொட்டாடுகளை உடனே சேரவிடாமல் வெகுநேரம் போக்குகாட்டி கிடாயை கத்த விடுவார். அதன் தவிப்பின்மீது அவருக்கொரு சந்தோசம் அது. ஆட்டோடிவந்தவர்கள் பொருமையிழந்து திட்டத்தொடங்கிவிடுவார்கள். பின் அவிழ்த்துவிட்டதும் பாய்ந்து கால்களை தூக்கி ஆட்டின் முதுகைப் பிடித்துக்கொள்ளும். வெள்ளாடு பிடியிலிருந்து மிரண்டு வெளியே ஓடும்போது மாமா அதன்பின்னாலே சிரித்துக்கொண்டே போவார்.
கிடாவை இயங்க விடாமல் அதன் வாலைப்பிடித்துக்கொண்டார். அது காலால் எக்கி முண்டி, அவரை உதைக்க எத்தனித்தபோது படாமல் விலகிப்பிடித்திருந்தார். வந்திருந்த கிழவர் ஒருவர் “யேய் விடுய்யா” என்றார் எரிச்சலாக. மாமா சட்டெனக் கயிற்றைவிட்டதும் கிடா விரட்டிச்சென்று கக்கூஸ் சுவரில் அணைத்தவாறு உடம்பை உதறியது. கிடா தணிந்தடங்கியதும் வாலைத்தூக்கி புழுக்கையை மணிபோல கொட்டிவிட்டு செல்லும். சினை நிற்கவில்லையென்றால் ஒவ்வொரு முறையும் இணையவிட வரும்போதும் மாமா காசு புடுங்கிவிடுவார்.
4
பள்ளிக்கூடம்; முடிந்து வீட்டிற்கு வந்ததும் கதவிற்கு பின்னாலிருந்து சுசீலா அத்தை என்னை இறுக்கிப்பிடித்தாள். திக்கென்றது எனக்கு. வெளியே செருப்பிருந்தபோதே நான் சுதாரித்திருக்க வேண்டும். என் வயிற்றைக் கிள்ளியபடி வாரி அணைத்திருந்தவளை காலால் உதைக்க எத்தனித்தேன். அம்மாவைப் பார்த்து “என்ன உட்ர சொல்லூ” என்றேன் கெஞ்சுவதுபோல. “டே ஒங்கத்தக்காரி உன்ன பாக்கத்தாஞ்சாமீ ஓடியாறா” என்றாள் அம்மா. நான் அத்தையின் கையை எடுக்க முடியாமல் தோற்றேன். இரும்புப்பிடி போலிருந்த அக்கை. ‘‘ஏங்கண்ணு…ஏம்மருவனில்ல நியீ..’’ என்றவாறு தொடையிடுக்கில் கை கொண்டு சென்றாள். நான் வீய் என்று கத்திக்கொண்டு எம்பிக் குதித்தேன். என் குறியை அவள் கைகளுக்குள் சிக்கவிடாமல் பின்னால் தள்ளி தொடைக்குள் மறைக்கப் பிரயத்தனப்பட்டேன். அம்மா எழுந்து வந்து “விடுடீ கொழந்த புள்ளைய” என்றாள். அத்தை சேலையை அள்ளி செறுகி, “ஆமா இத்தூச்சூடு. கொழந்த” என்றாள். நான் போடீ என்று முனங்கினேன். அத்தை ஏமாற்றத்துடன் என் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.
அத்தை என்று நானாகவே சொல்லிக்கொண்டது தான். அம்மாவுடன் பாவடைச் சட்டை போட்டு திரிந்த வயதிலிருந்தே இருக்கிறாள். அம்மாவிற்கு சகோதரி போல அதனால் சித்தி என்று கூப்பிடவேண்டும். ஆனால் அத்தைக்கு அப்படி அழைப்பது பிடிக்காது. அம்மாவைவிட கனமான உடம்பு. இன்னொரு உடல் ஒட்டிக்கொண்டிருப்பது போலிருப்பாள். தவிட்டுநிறம். தண்ணீர்பையைப் போன்று வயிறு முன்னால் சரிந்திருக்கும். அத்தைக்கு ஆண் மூக்கு என்று அம்மாவிடம் கிண்டலடிப்பேன். சிரித்தால் உதட்டை தொடுமளவு நீண்டு ஒருவாறு அழகாகவும் தெரியும். அவள் அழும்போது புடைத்துத் துடிக்கும். அவளுக்கு குழந்தையில்லாததால் தினம் அவள் கணவனுடன் சண்டைப் போட்டுவிட்டு அம்மாவிடம் வந்து சொல்லி அழுதுக்கொண்டிருப்பாள். அப்போது அம்மூக்கு மல்லாக்க விழுந்த பல்லிபோல துடிப்பதைப் பார்த்திருக்கிறேன். என்று பரிதாபமாக மோவாயை இழுப்பாள்.
தட்டப்பயறுகுழம்பும் பழையசோறும் ரெடியாக இருந்தது. நான் “அம்மா இப்போ வெச்சதா?” என்றேன். அதற்கு அத்தை “நாந்தாங்கண்ணு வெச்சேன்” என்று சொல்லிச் சிரித்தாள். எனக்குத் தேக்கு இலையில் ஊற்றி சாப்பிடுவதே பிடிக்கும். மதியமே சத்துணவுக் கொட்டகைக்கருகேயிருக்கும் மரத்தில் தேக்கிலைகளைப் பறித்துவைத்துக்கொண்டேன். குழம்புப் பாத்திரத்தைத் திறந்ததும் ஆவித்துடித்து முகத்தில் அடித்தது. நல்ல பயறு என்றால் குழம்பில் சேறு மணம் வீசவேண்டும் என்பாள் அம்மா. பயறு முழுவதையுமே அள்ளிவைத்து தேக்கிலையை அப்படியே சிந்தாமல் பிடித்துக்கொண்டு திண்ணைக்கு ஓடினேன். அங்குதான்; முனிராசு கட்டிக்கிடக்கும். மாமா அதன்மேல் வீசும் சீக்குவாடையிலேயே அதன் வயதை அறிந்து சொல்வார். அவ்வளவு துல்லியம். கிடாய்;க்கு குழம்பு ஊற்றி பிசைந்துவைப்பது பிடிக்கும். சோற்றை மறைத்து போக்குக்காட்டிவிட்டு தாடியை பிடித்திழுத்தேன். புதர்போன்ற ரோமம் பிடரியில் குத்திட்டுநிற்க என்னைப் பார்த்து தலையைச் சிலிப்பி முட்ட எத்தணித்தது. சோற்று தட்டு கிடைக்காமல் பொறுமையிழந்து என் முழங்கையை மோதித் திருப்பியது. நான் அதற்கு நேராக தட்டைக் காட்டிவிட்டு எடுத்தேன். என்னை எச்சரிக்கை செய்வதுபோல முன்னங்கால்களை தரையில் ‘டொக் டொக்’கென அடித்தது. நான் எப்போதுமே தள்ளியே இருப்பேன் ஒருமுறை அதன் கீழே அமர்ந்து குறுந்தாடியை நீவி விட்டபோது பூர்ர்ர் என்று திம்மலை என் முகத்தில் அடித்திருக்கிறது. பச்சிலை கலந்து கசந்தமணம். அப்போது தாடி மயிறை வெடுக்கெனப் பிடித்து இழுத்து என் ஆத்திரம் தீர்த்தேன். அதைப் பார்க்கின்றபோது எனக்கு கருத்த ராவுத்தரே நினைவில் வரும்.
வெகுநாட்களுக்கு முனிராசை ஆடுகளோடு இணைசேரவிடாமல் மாமா வைத்திருந்தது எதற்கென்று எனக்கும் அம்மாவுக்கும் புரியவில்லை. தினமும் காலையில் எழுந்ததுமே இணைக்காக ஆட்டை ஓட்டி வருபவர்களிடம் நெடுநேரம் பேசிவிட்டு திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார். அம்மா அது கத்துக்கொண்டிருப்பதைப் பொறுக்காமல், “நீ நாயம் போட்டு தீட்டிருந்தீனா அது உசிற விட்டுடும் பாத்துக்க. அதோட பாவ கீவம் ஒனக்குத்தான்” என்ற முனகிக்கொண்டே சென்றாள். மாமா அம்மாவை பார்த்துக்கொண்டிருந்ததை நான் பார்த்ததும் “யென்ன” என்றார். நான் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றேன்.
கொஞ்ச நாளில் கிடாய்க்கு மதம் பிடித்து போனது. யானைக்கு மதம் பிடிப்பது போல. ஆனால் இது பித்து. ‘காமப்பித்து’ என்றார் மாமா. நான் புரியாது அமைதியாக நின்றேன். ‘செக்ஸ்ஸ_டா’ என்றார் உதடு சுழித்து சிரித்தபடி. “ இப்ப நல்லா மொரட்டு பொட்டாட்டுக்கிட்ட கோண்டுபோகோனும்” என்றார். அது நாக்கை வெளியே தள்ளிப் பற்களைக் கிட்டித்து ‘ப்பே’ என இறைந்தது. அழுகைப் போலிருந்தது. கிடா பெட்டை ஆடுகளை விரட்டி ஏறுவதை மாமா எனக்குக் காட்டி சிரிப்பார். அவர் என்னை சீண்டுகிறார் என்று அறிந்தேன். கிடா நாக்கை கடித்து இறைஞ்வதைக் கண்டு அதிர்ந்தேன். அம்மா அதை வீட்டில் கட்டவிடாமல் அவிழ்த்து விரட்டச் சொல்லிவிட்டாள்.
அதன்பின் கிடாயை புதூர் நால்ரோட்;டில் பார்த்தேன். ஒற்றைக்கொம்புடன் தலை பிளந்து இரத்தம் காய்ந்த பிசுபிசுப்புடன் திரிந்தது. பித்து ஏறி தலையை மடாரென்று மோதியபடியே ரோட்டில் அலைந்துகொண்டிருந்தது. லாரியின் பின் கதவில் மோதி பிளந்திருக்கும் என்றார்கள். அம்மா புலம்பினாள் மாமாவிடம் அதை வெட்டித்தள்ளிவிட சொன்னாள். மாமா அது பித்தேறி அலைவதை குரூரமாக ரசித்தார். கொழகொழவென்று மூளை சதையில் ஈ மொய்க்க ஒவ்வொரு கடைக்குள்ளும் சென்று ஆட்களையும் விரட்டி முட்டிக்கொண்டிருந்தது.
அடுத்த வாரம் தாசப்பக்கவுண்ட நால்ரோட்டு பாலத்தினருகே உடல் முழுவதும் புழுக்கள் நெளிய விரைத்து கிடந்த நிலையில் மாமா அதை தூக்கிவந்தார். கசாப்புகடையில் தோலுரித்து மிளகும் பொடியும் கொட்டி இரண்டு பேரோடு சேர்த்து திண்றுமுடித்தபோது அம்மா சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி அதிர்ந்து மாமாவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று முழுவதும் மாமா சாராயம் குடித்துக்கொண்டேயிருந்தார். மாமா குடித்துவிட்டால் இரவில் அம்மாவுடன் பெரும் சண்டையாக இருக்கும். அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது எனக்கு. முகமெல்லாம் போதைத் திளைக்கத் திண்ணையில் அமர்ந்திருந்தார். தூக்கமென்பதே அவர் கண்ணில் வரவில்லை. பீடி புகை இருளில் கலைந்து போவதை வெறித்தவாறே நான் அம்மாவை இறுக்கிப்படுத்திருந்தேன். அம்மா என் கைகளைப் பற்றியிருந்தாள். அவள் விரல்களில் ஓடிய நடுக்கம் எனக்கு புதிதாகப் பட்டது. நான் மெதுவாக ‘மாமாகூட இருக்கேன்’ என்றதும் என்னைப் பார்த்து சீறினாள். சிறு தீ மௌனமாக சீறுவது போலிருந்தது. இரவில் மூத்திரம் முட்டி எழுந்தபோது மாமா என்னருகே படுத்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். அவர் உடலின் வியர்வை வீச்சம் நாற்றமடித்து குமட்டல் எடுத்தது.
5
அடுத்;தநாள் அம்மா அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டாள். பள்ளிக்கூடம் போகவேண்டாமென்று சொல்லி, சோமையப்பர் வீட்டுக்குச் சென்று பட்டுப்புழுவிற்கு இலைகளை ஆய்ந்து போட்டுவிட்டு வந்தாள். வேலைகளைப் பரக்கப் பரக்கப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து ‘என்ன?’ என்றேன். புதுவீட்டிற்கு போகப்போகிறோம் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டாள். பக்கத்து வீட்டிலிருந்து லெட்சுமணன் அண்ணனும் அக்காவும் புதுத் துணி எடுத்து வந்திருந்தார்கள். சுசீலா அத்தையும் கூட இருந்தாள். கையில் பழங்கள், பூச்சரம், கவரிங் நகைப்பெட்டி. அம்மா குளித்து புதுச்சேலை உடுத்தியதும் ஒருகணம் அம்மாவையே திகைத்துப் பார்த்தேன். சங்கரன்மாமா மட்டும் இல்லை. நான்கைந்த பெண்கள் புதிய பட்டுபுடவை மொடமொடப்புடன் வந்து சேர்ந்தார்க்ள. எல்லோருமே மெல்லிய குரலில் பேசிக்கொள்வதும் என்மீது பார்வையை விட்டு விலக்கிக்கொள்வதுமாக இருந்தார்கள். மினிலாரியைப் பிடித்து பெரிய கொடிவேரிக்கப்பாலிருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போனோம். மனோப்ரியா வந்திருந்தாள். நான் அவளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். பெரிய மனுஷிபோல வெட்கப்பட்டு புதிய பாவாடையை அடிக்கடி இழுத்து கால்களை மூடிக்கொண்டாள். அவளை அப்போதுதான் முதன்முதலாக பார்ப்பது போலிருந்தது எனக்கு. தட்டில் வைத்திருந்த புளிப்பு மிட்டாய்களை ஆளுக்கொரு தரமென மாறி மாறி திருடித்திண்றோம்.
கொடிவேரியில் அணைக்கட்டில் எங்களைப் போல இன்னொரு கூட்டம் காத்திருந்தது. பளீரென்ற நிறத்தில் கவுண்டர்வீட்டு பெண்களைப்போல் இருந்தார்கள். பட்டுப்புடவை அவர்களுக்கே அழகாக இருந்தது. இறங்கியதும் மனோப்ரியா என் காதில் ‘ஒங்கம்மாக்கு கல்யாணமாமே’ என்றாள். நான் ஒன்றும் புரியாமல் அவளையேப் பார்த்து நின்றேன். அவள் “ஆமா எங்க பெரியப்பாவத்தான் கல்யாணம் பண்ணப் போறாங்க” என்று எனக்கு கூட்டத்திலிருந்த ஒருவரைக் காட்டினாள். அங்கு சிலர் புதிய வளையல்கள் அணிந்து நின்றுகொண்டிருந்தார்கள். மனோவின் பாட்டி மட்டும் பதற்றத்தோடு என் கன்னத்தை வழித்து முத்தமிட்டுச் சென்றது. நான் அம்மாவையே வெறித்துக்கொண்டிருந்தேன். ஒருகணத்திற்குள் அத்தனையும் வேகமாக நடந்தன. பெருத்த தொப்பையோடு முன் வழுக்கையும் பின் மண்டையில் கொஞ்சம் நரையுடன் வெண்ணிற வேட்டி சட்டையணிந்த ஒருவர் அம்மா கழுத்தில் மாலை அணிவித்து பொட்டிட்டார். என்னால் எதையும் தெளிவு படுத்த முடியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. என்னை யாருமே கவனிக்கவில்லை. தலையை கீழே இறக்கி தரையை வெறித்தேன். பின்மண்டையில் அடி விழுந்தது போல காட்சிகள் களைந்தன. தரையில் கற்களைப் பார்த்தேன். சிறிய புல்நுனியில் கட்டெறும்புகள் வளைந்து செல்வதை கவனித்தேன். கண்களில் நீர் முட்டி காட்சிகள் மறைந்ததும் கீழே அமர்ந்துகொண்டேன். ஒரு குளிர்ந்த கை என்மீது விழ நான் வெடுக்கென்று திரும்பினேன். சுசீலா அத்தை. உப்பிய வெதுவெதுப்பான சதைகள். அவள் கையை எடுக்ககூடாதென நினைத்துக்கொண்டேன். மனோ என்னிடம் “எங்க வூட்டுக்கு வரியா நியீ” என்றாள். அத்தை என்னை ‘போ’ என்று சைகை செய்ததும் எழுந்து சென்றேன். அவள் மடித்த பட்டு பாவாடையை இறக்கி புதிய கண்ணாடி கோலிக்குண்டுகளை வைத்திருந்ததைக் காட்டினாள். உருண்டு ஓடின. எடுத்துப் பார்த்தேன். கிடாயின் கண்கள் போல கருப்புமணிகள். செம்பு குடத்தில் போட்டு விளையாடினோம். மனம் முழுவதும் அம்மாவைப் பற்றியே பதைபதைத்திருந்தது. அவளுக்கு ஏதோ நடந்துவிட்டது போல. எல்லோரும் சேர்ந்து அம்மாவை கெடுத்துவிட்டார்கள். என்னை இனி ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடுவார்கள். நான் பெரியவனான பின்னே இங்கு வரப்போகிறேன். அம்மா இனி என்னுடன் இருக்க மாட்டாள். அவளுக்கு வலிப்பு வரும். அதற்குதான் இப்படி செய்கிறார்களா? கல்யாணம் செய்தால் வலிப்பு போய்விடுமா? மாமா தான் என்னை வளர்ப்பார். சட்டென்று ஒரு கூர்மையான வலி ஏற்பட்டது போல மாமா ஞாபகம் எழுந்தது. அவரைத் தேடினேன். அம்மாவை ஏமாற்றியதை அவரிடம் போய் சொல்ல வேண்டும். கண்கள் நீர் மறைக்க அவரைத் தேடினேன். மாமாவிற்கு தெரிந்தால் அந்த தொந்திகாரரை அடித்து விரட்டிவிடுவார் பிறகு எல்லாம் சரியாகிவிடும். எழுந்து ரோட்டிற்கு வந்தேன். வெயில் சுள்ளென்று என் முதுகில் அடித்தது.
6
அப்பா என்பதே போட்டோவில் இருக்கும் ஒரு உருவம் மட்டுமே. என் நினைவு தெரிந்து வீட்டில் பழுப்பேறிய கருப்பு வெள்ளை படம் ஒன்று மாட்டியிருந்தது. அதில் ராஜப்பா ஸ்டூடியோ என்ற வட்டவடிவ எழுத்துக்கள் இருக்கும். அணில்வால் மீசையுடன் கன்னம் ஒட்டிய முரட்டு முகம் அப்பாவிற்கு. பீடி அதிகம் குடிப்பார். நான் போட்டோவின் அருகில் நின்று உற்றுப் பார்க்கும்போதெல்லாம் மேற் சட்டத்தில் ஒரு பல்லி எட்டிப் பார்ப்பதைக் கவனித்திருக்கிறேன். கண்களை உருட்டிவிட்டு போட்டோவுக்குள் சென்று மறைந்து கொள்ளும். அப்பாவுடன் நான் இருந்தது ஒரு கனவுபோல மட்டுமே என் நினைவில் உள்ளது. எங்கோ ஓரு மழையில் நானும் அம்மாவும் குடையுடன் அவரோடு ஓட்டமாக சென்றது. நான் அதை நினைவுகூர்ந்து கேட்கும்போது அம்மா திடுக்கிட்டு நிமிர்வாள். அவள் முகம் ஏதோ யோசனையிலிருந்து மீண்டது போலிருக்கும். ஆனால் நான் சிறுகுழந்தையாக இருந்தபோதே அவர் இறந்துவிட்டார்.
அன்று அதிகாலையிலே மாமாவின் குரல் கேட்டே எழுந்தேன். புதியவீட்டின் வழவழப்பான சிமெண்டு தரையை வெறித்தவாறு படுத்திருந்தேன். விழித்துக்கொண்டுதான் இருந்தேன். பெரிய சைஸ் டிவியில் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. அடுப்படியில் பெண்கள் குரல்களினூடே அம்மாவின் அழுகுரலும் அவளை சமாதாணம் செய்வதுபோன்ற முசுமுசுவென பிற குரல்களும் கேட்டன. உள்ளே சென்று அம்மாவைப் பார்த்தேன். புதிய புடவையில் மஞ்சள் பூசி கவுண்டச்சிபோல மாறிவிட்டிருந்தாள். வெளியே நான்கைந்து ஆட்கள் மாமாவை பிடித்து பின்னால் இழுத்து தள்ளினார்கள். மாமா ‘தேவுடியா நாயிகளா’ என்று கத்திக்கொண்டேயிருந்தார். அவர் மட்டும் சாந்தமாக ஊர்க்காரர்களிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார். மாமாவின் ஒவ்வொரு சொற்களும் அவருக்கு மண்டையை பிளக்குமென்று தோன்றியது. அடக்கப்பட்ட ஆத்திரத்தை கவனிதேன். என்னைப் பார்த்ததும் மாமா கண்களில் நீர் கசிந்தது. போதையில் இருந்தார். வேட்டி அவிழ்ந்து ரோட்டில் சரிந்தது எல்லோரும் அவரை தூக்கிப் போனார்கள். அன்று முழுவதும் மாமாவின் குரல் என்னுள்ளே கேட்டுக்கொண்டேயிருந்தது.
கொஞ்சம் கொஞ்சமான நான் அம்மாவிடமிருந்து விலகத் தொடங்கினேன். ஒருவித அசூயை உணர்வுடன் வீட்டின் மூலையில் அமர்ந்திருப்பேன். அதிகமும் வீட்டை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்பேன். ஷெல்பிலிருக்கும் பொம்மைகளை தொடாது பார்க்க வேண்டும் என்றாள் வயதான பாட்டி ஒருத்தி. அப்புதிய அப்பாவின் அம்மா அவள். அவருக்கு ஒரு அக்காவும் உண்டு. எப்போதும் திருடிவிட்டு ஓடத்துடிப்பவனைப் பார்ப்பது போலத்தான் நோக்குவார்கள். அதிகமும் அம்மாவுடன் மட்டும்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். தோட்டத்து வேலையெல்லாம் அம்மாவுக்கு மறந்துவிட்டிருந்தது. அம்மாவை தொடுவதே எனக்கு கூசியது. மீனா அக்காவைத்தொடுவது போன்று திடீரென்று மாறிவிட்ட உணர்வு. மீனா அக்கா என்னைப் பிடித்து இழுத்து பேசும் போதெல்லாம் என் உடலில் ஒருவித அருவருப்புணர்வுவை அடைந்திருக்கிறேன். அவளின்; போக்கு சரியில்லை என்று அம்மா அடிக்கடி சொல்வாள். அம்மாவின் மூக்கின் அடியில் ஒட்டியிருக்கும் மருவை இனி நான் பிடித்திழுத்து விளையாட முடியுமா? அம்மாவுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான நீண்ட மூக்கு. அம்மாவிற்கு இடது நாசியின் பள்ளத்தில் கருத்த நாய் உண்ணி போல மரு உட்கார்ந்திருக்கும். அதன் நடுவிலிருக்கும் அரிவாள் போன்ற ஒற்றை மயிரைப் பிடித்திழுக்கும் போது ‘அய்யோ வலிக்குது சாமீ’ என்பாள். எத்தனையோ நாட்கள் அம்மருவை நான் ராட்சஸ உருண்டையாக கற்பனை செய்து, அப்படியே பியந்து வந்துவிடாதவென்று எண்ணியிருக்கிறேன்.
எனக்குப் புதிய வீடு ஒருவித அச்சத்தையே கொடுத்தது. படுக்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தேன். பாய்கூட புதிதாக இருந்தது. அம்மா கொடுக்க சொல்லியிருக்க வேண்டும். அவரிடம் கோரைப்பாய் நிறையவே இருந்தது. தவிட்டு மூட்டையின்மீது படுத்திருப்பது போன்ற ஞாபகம். முதுகில் குத்துவது போலிருக்கும். அம்மா இனி வரமாட்;டாள். தனியாகத்தான் படுத்துப் பழக வேண்டும். வீடு கொடிவேரி அணைக்கு மிக அருகே இருந்ததால் ரேடியோவில் ஸ்டேசன் திருப்புவது போல தண்ணீர் இரைச்சல் இருந்து கொண்டேயிருந்தது. எவ்வளவு நேரம்; கொட்டிக்கொண்டிருக்குமென நினைப்பேன். தீர்ந்துவிடாதா? இங்கே இவ்விரைச்சலில்லாமல் யாரும் தூங்குவதில்லை. பாறையில் மோதும் ஒலி. ஆற்றுக்குள் கிடக்கும் சில பாறைகளை நினைவுகூர்வேன். அதன்மீது அமர்ந்து நீரின் ஓட்டத்தை கேட்டிருக்கிறேன். ஈரத்தில் கிடக்கும் அதன் குளுமையை உணர்ந்திருக்கிறேன். அந்நினைவுகளை எண்ணியதும் புலன்களில் சிலிர்ப்பு தட்டியது. ஈரப்பாறைகளை கட்டிக்கொள்கிறேன். என் குறி அதன்மீது உரசி நடுங்குகிறது. திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன் கனத்தக் குளிருக்கு உடல் கூசி ரோமங்கள் எழுந்;துநின்றன. வெளியே ஒரு நிழல் அசைந்தது. அப்பா தான். இல்லை ‘அவர்.’ அம்மாவின் கணவர். முதுகில் வியர்வை வடிய எங்கோ வெறித்தபடி புகைத்துக்கொண்டு நின்றார். சட்டெனத் திரும்பி என்னை கவனித்துவிடக்கூடும்; என்கிற பயம். கம்பளிக்குள் சுணங்கிக்;கொண்டேன். அறைக்குள் மெல்ல அம்மாவின் அசைவு கேட்டது. கூடவே சேலையின் கசங்கல் சப்தம். என் உடல் நடுங்கியது. அம்மா என்று ஒலியேயில்லாமல் கூவினேன். நெஞ்சின் கனம் தணிவது போலிருந்ததும் மீண்டும் அப்படிச் சொல்லிக்கொண்டேன். உடல் காய்ச்சல் கண்டது போல வாய் கசந்தது. ஒவ்வொரு நாளும் நடுஇரவில் விழித்துக்கொள்ளும் போதெல்லாம் திண்ணையில் முதுகை காட்டியாவாறு அவர் புகைத்;துக்கொண்டிருப்பார். கால்களை மடக்கி நெஞ்சோடு ஒட்டி கம்பளிக்குள் புதைத்து அழுவேன். அதற்கு காரணம் ஏதும் எனக்கு தெரியாது.
7
அன்றைக்கும் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்தபோது பழைய வீட்டின் ஞாபகம் எழுந்தது. சட்டென அம்மாவின் பழைய ரெக்ஸின் பையிலிருந்த பழைய வீட்டுச் சாவியை தேடியெடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். காற்று ஊசியாக குத்தியது. பேன்டினுள் குளிர் காற்று குறியை சிலிர்க்கச் செய்தது. விறுவிறுவென நடக்கத் தொடங்கினேன். ஒடுவதற்கு பயம். அவருடைய நாய் இருட்டின் எங்கிருந்து வேண்டுமானலும் தாவி என்னைக் கடிக்க நேரிடும். இன்னும் என்னை அந்நியனாகவே அது தன் புலன்களில் பதிந்திருந்தது. மழை பெய்து ஈரம் உள்ளங்காலில் அழுத்தியதும் குறுகுறுப்பாக இருந்தது. பழைய வீட்டிற்கு போகின்ற சந்தோஷத்தில் நடையை கொஞ்சம் வேகப்படுத்தினேன். வாய்க்காலில் தண்ணீர் சலசல வென ஓடுகின்ற சப்தம் கூடவே வந்தது. அவ்வாய்க்கால் பழைய வீட்டைத்தாண்டித்தான் சென்று முடியும். இருளில் இலைகளெல்லாம் கரும் பச்சையாக மின்னின. நாயின் நினைவுää வருகிறதாவெனத் திரும்பி பார்த்துக்கொண்டேன்.
வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் குறைந்து பெரும் கருமை பரப்பாக மாறியது. பாதையின் சரிவில் வீட்டைக் கண்டதும் மனம் குதூகலித்துத் துள்ளினேன். இரண்டொரு மாதத்தில் வீடு மனித உடல்கள் இல்லாத பழைய கோவில்கள் போல சிதிலடைந்து விட்டிருந்தது. ஓடுகளில் மட்டும் ஈரத்தின் பளபளப்பு. பூட்டைத் திறந்ததும் உள்ளேயிருந்த வெப்பம் என்னைத் தூக்கி அள்ளிக் கொண்டது. திடீரென கண்ணில் நீர் தட்டிற்று. உடல் முழுதும் மண் பூசியத் தரையில் அப்படியே குப்புர விழுந்தேன். வீட்டைச் சுற்றி சுற்றிப் பார்த்தேன். ரீங்காரம் போல தவளைக் கத்தல். தூயக்காற்றை இழுத்து நெஞ்சில் நிறப்பினேன். அட்டாலியில் என் பழைய பாய் செருகியிருந்தது. பூரண உறக்கத்திற்காக மனம் ஏங்கியதும் கால்களை நீட்டிக்கொண்டேன். கண்களில் பீளை வடிந்து மறைத்துக்கொண்டிருந்தது. அப்படியே சிறிது நேரம் தூங்கிப் போனேன். வெளியே கரும்புவயலில் கரும்பு நொறுங்கும் சப்தம் எழவே எழுந்து வெளியே வந்தேன். இருளுக்கு கண் பழவில்லை. ஒருகணம் அப்படியே நின்றுகொண்டு இருளில் கடம்பூர் மலையடிவாரத்தையும் வெறித்தபோது கரிய மேகம் போன்றவொன்று என் முன் வருவது போலிருந்தது. சிமெண்டு தொட்டியிலிருந்த நீரை அள்ளி கால்களில் விட்டுக்கொண்டேன். ஏதும் தவறு செய்துவிட்டது போல மனம் கூம்பியது. சட்டென்று கரும்புத் தோட்டத்திற்குள் எழுந்த சலசலப்பைக் கேட்டேன். அத்திசையை நோக்கியபோது வீட்டின் சுவருக்கும் கரும்புத் தோட்டத்திற்குமிடையே ஒரு கரிய உருவமொன்று அசைவது போலிருந்தது. கையை நீட்ருகிறதென அருகே செல்ல அடியெடுத்து வைத்தேன். ஒருகணம் அவ்வுருவம் அசைவற்று நின்றதைக் கண்டு பதறி திரும்பி ஓடினேன். வயிற்றை கவ்வும் பயம். மலவுணர்வு எடுத்தது. நெஞ்சு துடிக்க ஓடிக்கொண்டிருந்தேன்.
அச்சம்பவம் பெரும் கனவொன்று தோன்றி கலைந்துவிட்டதுபோலிருந்தது. அடுத்தநாள் நாங்கள் இருந்த பழைய வீடுகள் நொறுங்கி குப்புற விழுந்திருந்தன. பட்டுப்புழு தட்டிக்கு பின்னவைத்திருந்த ஓலை குருத்துக்கள் பிய்த்து எறியப்பட்டிருந்தது. பக்கத்து வீடுகளில் பட்டுப்புழுக்கள் பிதுங்கி குவியல் குவியலாக பச்சிளம் குழந்தையின் மலம் போலக் கிடந்தன. மதம்பிடித்த யானையின் அசைவற்ற ஒரு நிலையைத்தான் நான் முந்தினயிரவு பார்த்துள்ளேன். மதம் கனத்து உடைகின்ற சிலகணங்களுக்கு முன்பிருந்த நிலை அது. அன்று நானும் அம்மாவும் இருந்திருந்தால் மூளை பிதுங்கி இப்படி கிடந்திருப்போம் என்று நினைத்துக்கொண்டேன். தாசில்தாரும் கலெக்டரும் வந்திருந்தார்கள். யானை சாணியை பாலீத்தின் பையில் சிலர் பத்திரப் படுத்தினார்கள். அன்றைக்கு எம்எலஏ ஆட்களோடு மாமாவைப் பார்த்தேன். அவர் என் பார்வையை தவிர்த்தபடியே இருந்தார். அவர் முகம் மாறிவிட்டிருந்தது.
8
அம்மாவின் திருமணத்திற்குப் பிறகு சுசீலா அத்தை அதிகமும் வீட்டிற்கு வரவில்லை. அமுதா பிறந்தபோது மட்டும் இரண்டுவாரம் தங்கியிருந்தாள். அச்சயமத்தில் என் எண்ணத்தில் வெறுப்பு புதர் போல மண்டிக்கிடந்தது. யாரையும் அருகே அண்டவிடாத காட்டு முள் நான். என்னைத்தவிர வேறுயாரும் இவ்வுலகில் இருப்பதாக தோன்றவில்லை. தனிமையில் என்னுடன் ஓயாது பேசிக்கொண்டும், சிரிப்பதும் பின் மோதிக்கொள்வதுமாகயிருப்பேன். அம்மு பிறந்த பிறகு என்வெறுப்பு இன்னும் அதிகமானது. அம்மு அழுதுகொண்டேயிருக்கும். அம்மா அவளை உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டு காற்றில் அலையவிடும்போது பிஞ்சு விரல்களால் எதையோ இறுகபிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ளும். அசௌகரியமானது போல உடல் முறுக்கேறும். உதட்டை சிலகணங்கள் அப்படியே குவித்து வைத்திருந்தால் அழத்தொடங்க போகிறாளென அர்த்தம். சிவப்பு முள்ளங்கி கால்களை அம்மாவின் மார்பில் உதைத்து அழும். தோளில் போட்டு முதுகைத் தட்டிக்கொடுக்கவேண்டும். அம்மா அவளின் குவிந்த உதட்டில் முத்தமிட்டு தளர்த்துவாள். இருவரின நெற்றிப் பொட்டும் தொட்டு விலகும். அக்கணம் நான் சீ என்று வெறுப்படைவேன். ‘நாயே’ என்பேன். ‘பிசாசு நாயிப்பொறப்பு’ என்பேன். அப்போதுதான் மனம் ஆசுவாசம் அடையும்.. புள்ளிபோட்ட சிறியக் குண்டியை தட்டிப்பார்க்கத் தோன்றும். பிறகு என்னை கட்டுபடுத்திக் கொள்வேன். சுசீலா அத்தை மட்டுமே அம்முவை தூக்கி வந்து என்னிடம்; காட்டுவாள். ‘அண்ணா பாரு..’என்பாள். “ஏங்கண்ணு ஓம்மொவம் இத்தீச்சூடு போவுது?. கொழந்தய பாக்கோணுங்கண்ணு…ஒங்கம்;மா மாதிரி இருக்கு பாரு.. ஒருவாட்டி பாத்திட்டீனுவையீ அப்றம் எல்லாம் சரியாப்போயிறும்” என்று கேட்பாள். நான் அமைதியாக மூச்சைப்பிடித்து நிற்பேன். அப்போது என்முகம் மீதே அம்மாவின் தவிப்பு குவிந்திருக்கும்.
பின்னால் அம்மு அம்மாவை போலவே இருந்தாள். அம்மாவின் சிறுத்த சுருங்கிய பிம்பம். மரு இல்லாத அம்மா. அத்தை அப்படியே அவளைத் தூக்கி மார்போடு அணைத்து வெறித்தனமாக சுற்றுவாள். “குட்டி விஜயா..எத்தச்சூடுடீ வளர்ந்துட்ட…”என்பாள். மோவாயை வழித்து நெற்றி முறிப்பாள். அம்மு வளர்வதை வாஞ்சையோடு பார்த்தவள் அத்தை மட்டும்தான். அம்மாவின் பால்யம் இப்படித்தான் இருந்திருக்கும் என்பாள்.
இங்கு நண்பர்கள் யாரிடமும் பழக்கம் வைக்க பிடிக்கவில்லை. ஒருவரேனும் அம்மாவைப் பற்றி கேட்டுவிடுவார்கள் என்கிற பயமிருந்ததால் ப்ளஸ் டூ கோபிச்செட்டிபாளைத்தில் படிக்கச் வேண்டுமென்று சொல்லிவிட்டேன். ஊருக்கு வரும்போது அத்தையுடன் மட்டுமே சிரித்து பேசினேன். நாள் முழுவதும் அத்தையுடனே இருந்தேன். கொடிவேரியிலிருந்து நால்ரோட்டிற்கு வந்து செல்ல பஸ்ஸிற்காக காத்திருக்காமல் நடக்கத் தொடங்கிவிடுவோம். எத்தனையோ கதைகளைப் பேசிக்கொண்டு வருவாள். அப்போது எங்களுக்கு கொடிவேரியில் யாரும் பழக்கமில்லை. அத்தைக்கு இங்கிருப்பவர்களே வெளிய10ர் ஆட்களைப்போலத்தான் அறிமுகம். மினியம்பாளையத்தில் போகிறவழியில் எல்லோரையும் இழுத்துப்போட்டு பேசிவரும் அத்தைக்கு இங்கு வந்தவுடன் ரோட்டில் நடப்பதிலே கூச்சம். எனக்கு எல்லோருமே அவளின் பருத்த மார்பையும் சிவந்த வயிற்றையும் வெறித்துப் பார்ப்பதாக எண்ணினேன்.
என்னுடைய பருவ வயதில் என் நினைவின் ஆழத்தில் இருந்தது சுசீலா அத்தையின் பிம்பம் மட்டுமே. அவளைப்பற்றிய எண்ணம் தோன்றியதுமே புலன்களில் மொட்டு விரிந்துவிடும். உடல் சில்லிட்டு கூசும். ஏதோவொன்றை திருடிவிட்டது போல மனம் பதைபதைக்கும். நெஞ்சு கனத்து விதிர்த்தடங்கும். என்னவென்று புரியாமல் அதைத் பின்தொடர்ந்திருக்கிறேன். அதன் பொருள் புரியாது. சொற்கள் கிடையாது. ஆனால் அதை அறிவதிலே அதனை உணர்வேன். அத்தை குரல் கேட்டதும் ஜன்னல் கொசுவலைக்குள்ளிருந்து திருட்டுத்தனமாகப் பார்ப்பேன். அப்போது இளம்பெண்ணாகத் தெரிந்தாள். நன்றாக விரிந்த மலரின் இதழ்களின் பசுமை தெரியும். உதடு குவியும் சிரிப்பையும்ää விடைத்து அடங்கும் நாசியையும் மனதில் எழச்செய்து ஆராய்ந்தேன். சிறியவயதில் என்கைக் கட்டிக்கொண்டு சரிந்ததெல்லாம் துல்லியமாக அப்போது தான் நடந்தது போல ஞாபகத்திற்கு வரும். என்னைக் கொஞ்சிய வார்த்தைகளைச் சேகரித்து எடுப்பேன். என் தினவைத் தூண்டுபவை அவை. பழைய வீட்டிற்கு வந்து படுத்துக்கொள்வேன். அங்குதான் அத்தை இருக்கிறாள். சட்டெனக் கதவைத் திறந்து என் முன் வந்து நிற்கப்போகிறாளென காட்சிகள் அமைப்பேன். அதன்பிறகு நான் நடுங்கி நிற்பதும் அவள் என்னை அணைத்துக்கொள்வதும் என்னுள்ளே நிகழ்ந்துகொண்டேயிருந்தது. இந்த அந்தரங்க கனவில் திளைப்பதற்காகவே பழைய வீட்டில் தாழிட்டுக்கொண்டு படுத்திருப்பேன். அப்போதெல்லாம் நெற்றி காய்ச்சல் போல சுடும்.
அக்கணங்களில் என் கனவில் பெரிய பெரிய வெண்ணிறப் புழுக்கள் பரிதவித்து எழுந்து வந்தன. புடைத்தத் தலையைத் தூக்கி அலைவதை கண்டதும் என் ஆழ்மனம் விழித்துக்கொள்ளும். அதன் மென் சருமத்தை பிடித்து வருடுவேன். சதைக்குள்ளிருந்து குள்ள மனிதனைப் போல கால்களை நீட்டி என் மீது ஊர்ந்து அலைந்தோடும். பெருத்த தலையை வாயில் கவ்வி சுவைப்பதுபோலவும் அது என் வாயிலிருந்து வழுக்குவதுமாக காண்பேன். காலையில் எழும் போது இக்கனவுகள் நிரம்பி தலையை அழுத்திவிடும். தினமும் தொடர்ச்சியாக கண்டுகொண்டேயிருந்தபோது ஒருநாள் லுங்கியில் விந்து கொட்டி மொடமொடப்பாக மாறிவிட்டதைக் கண்டு அதிர்ந்து போனேன். சுயவெறுப்பு என்னைப் பீடித்துவிட்டது. அன்றைக்கு முழுவதும் குற்றவுணர்விலிருந்தேன். பின்பு அவ்வெறுப்பினூடே அதைக்கண்டுணரத் தொடங்கி, நிதானமாக அதிலிருந்து வெளிப்பட்டேன். பிரக்ஞையின் ஒவ்வொரு முடிவிலும் சென்று மோதி கலைந்தேன். புழுவின் தடித்த உடம்பு தோன்றும் போதெல்லாம் சிலிர்ப்பு தட்டி நான் துடித்து அடங்குவதை பூரணமாக அறிந்தேன் பின்னால் இதை நினைக்கும் போதெல்லாம் என்னை நானே வெட்கித்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
லீவுக்கு வரும்போது அத்தையுடன் நானும் அம்மாவும் கொடிவேரி அணைக்கு துணித்துவைக்கச் செல்வோம். அம்மாவுடன் வந்தாலும் எதுவும் பேசாமலே வருவேன். அத்தையின் தழுத்தச் சதைகளை உரசுவேன். சிறுவனாகவே அத்தைக்கு அறியப்பட்டிருந்ததால் அவள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. ஆற்றுப் பாதையைத் தாண்டினால் அணையில் தண்ணீர் ததும்பி வழிவது தெரியும். ஆற்றுக்குள் குட்டி எருமைகள் போல கிடக்கும் கரிய பாறைகளில் அமர்ந்து பெண்கள் துணிகளைக் கும்மிக்கொண்டிருப்பார்கள். சிறிய பொதி போல முலைகள் ஈரப்பாவடைக்குள் அசையும். அதிகமும் சதை உப்பிய பெண்கள்தான் என் கண்களுக்கு தெரியும். மனம் தாவித்தாவி தேடும். சிலர் முகங்கள் என்னபை பார்த்து தீவிரமடையும். ‘ஆம்பளீங்கள யாரு இங்க கூட்டிவரது’ என்பார்கள். நான் தயங்கி நிற்பேன். பின் அம்மாவைக் காட்டி ஏதோ பேசத்தொடங்கிவிடுவார்கள். ஆற்றுக்கப்பால் போய்விடுவோம். அத்தைக்கு துவைத்துத் தருவேன். அவள் கைகள் கும்மும் போது முலைகள் குலுங்குவதைப் பார்ப்பேன். என் புலன்கள் இறுகித் துடிக்கும். என் எண்ணங்களை அப்போதே அவள் அறிந்துகொண்டுவிட்டாள். என்னை நேராகப் பார்த்து எதையும் கேட்கமாட்டாள். ஒருகணம் எங்களது பார்வை கீறி விலகும். மனம் கிளர்ந்து மறுபடியும் அக்கணத்திற்;காக ஏங்கும். அத்தை என்மீது பார்வை படாமல் வேறெங்கோ அலையவிட்டபடியே பேசுவாள். எனக்குள் நெளியும் எண்ணங்களைக் அவள் கண்டுகொண்ட பின்பு என்னைத் தொடுவதைத் தவிர்த்தாள். அக்கணம் மனம் கூம்பி துவண்டிருக்கிறேன். தோட்டத்தில் தனிமையில் அழுதிருக்கிறேன். அதன்பிறகு எப்போதுமே அவளின் கண்களின் எச்சரிக்கையும் பதற்றமும் இருந்தது. அதொரு பிம்பமாகவே என் மனதில் பதிந்;துவிட்டது. இப்போதும் அத்தையை நினைக்கிறபோது அந்த பயந்த பிம்பமே தோன்றும்.
நான் அத்தையுடன் இருக்கும் கணங்கள் அம்மாவிற்கு ஆத்திரம் தாழாமல் வந்து சீறுவாள். எதையோ பறிகொடுத்துவிட்டது போல கண்களில் பதற்றம் அலைவதைக் கண்டு உள்ளுர புன்னகைத்துக்கொள்வேன். அம்மாவை சீண்டுவதற்காகவே அத்தையுடன் நெருங்கினேன். அப்போது என் அகங்காரம் வழிந்துää எதையோ தோற்கடித்துவிட்டது போலாகும். ஆனால் நெஞ்சில் படபடப்பு அடித்துக்கொண்டிருக்கும். குற்றம் புரியும் மனம். சுசீலா அத்தையை இழுத்துக்கொண்டு அடுப்படிக்கு போய்விடுவாள். சட்டென்று சுவற்றில் மோதியது போல ஒரு சப்தம். பின் அத்தையின் தோளில் சாய்ந்து அழத்தொடங்கிவிடுவாள். நான் பதறி எழுந்து சென்று பார்க்கும்போது அம்மா கீழே சரிந்திருப்பாள். அத்தை ‘என்னாச்சு’ என்று புரியாமல் தேற்றுவாள். குற்றவுணர்ச்சியில். அழ முடியாமல் ஊமைவிசும்பு செய்வேன். உள்ளிருந்து அவர் ‘என்னடீ’ என்று கத்திக்கொண்டே வருவார். அப்போது அவர் கண்களை சந்தித்ததும் சட்டென விலகிக்கொள்வேன். அம்மாவை துன்புறுத்தும் கணங்களெல்லாம் மனம் ஒரு புழுவாக புரண்டிருக்கும். “தெச தெரியாம திரியிற குட்டிநாயீ கண்ணு ஒங்கம்மா.. அத அளுவ விடாத சாமீ” என்பாள் அத்தை ஒன்றும் புரியாமல்.
9
வீட்டிற்குள் வராமல் வெளியே நின்றுகொண்டிருந்த சங்கரன் மாமா வை கண்டதும் அம்மா கெட்டவார்த்தைகளை முணுமுணுத்தவாறே அடுக்களைக்கு சென்றாள். யாருக்கும் என்னவென்று புரியாத வெறும் முனகல் அது. அவரின் சப்தம் கேட்டு நான் விதர்த்தெழுந்தேன். அவரின் முகமே மாறிவிட்டிருந்தது சற்று நேரத்தில் எழுந்து சென்றுவிட்டார். அப்போது அவருடன் இருப்பது எனக்கு சற்று ஆசுவாசமாக தோன்றுமென்று, அவர் பின்னாலே சென்றேன். கொடிவேரி அணை படியில் அமர்ந்திருந்தார். நான் பாலத்தில் நின்று தண்ணீர் சீறிப்பாய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மாமா கைலிக்குள் கையை துழாவி பாக்கெட்டிலிருந்த பொட்டலத்தை எடுத்து வைத்தார். காய்ந்த கஞ்சா இலைகள். உள்ளங்கையில் வைத்து தேய்த்து பொடியாக்கி பீடிக்குள் போட்டு இழுத்தததும் அவர் முகம் சற்று தெளிந்தது. “ ஒங்கப்பங்காரன் நல்லா பாத்துக்குறானா? ஹீ…ஹீ” என்று ஆனந்தமாக சிரித்தார். நான் அவர் முகத்தையே நோக்கியிருந்தேன். “ஊருல ஒங்கம்மாள தேவுடியானு பட்டங்கட்டீட்டாங்க தெரீமா?” என்றவர் மீண்டும் இன்னொரு கஞ்சாவை இழுத்தார். “இத்தூச்சூடு புள்ள இருக்கங்காணும் அவளுக்கு தொணம்; வேணுமாமா? ஒங்கப்பன் செத்து எத்தன வருசமாச்சு..ஏவூட்டுல சோறாக்கீட்டு இருக்கறக்கென்ன..த்தூ.. என்ன மயித்துக்கு இவன கட்டீட்டானு நாயம் கேக்க வந்தா நாயீமாரி வெரட்டிவுடுறா..தாயொலி. அந்தாளு சீக்ரமே ஒங்களலாம் உட்டுபோட்டு ஓடீறானா இல்iலா பாரு” என்றார். அன்று முழுவதும் அவர் குடித்துக்கொண்டே இருந்தார். போதையில் பலமுறை அம்மாவை தேவிடியாளென்றும் ஆபாசமாகவும் திட்டினார். நான் சுயநினைவிழந்து கேட்டுக்கொண்டிருந்தேன். ஆற்றிற்கு வரும் பெண்களிடமெல்லாம் சொல்லி நியாம் கேட்பதும் பின்பு கெட்டவார்த்தையால் திட்டுவதுமாக இருந்தார்.
நான் வீட்டிற்கு நுழைவதற்குள் மாமாவிடம்; அணையில் இருந்தது அம்மாவிற்கு தெரிந்துவிட்டது. அவள் முகத்தில் கூர்மை தெரிந்தது. படிகளில் ஏறியதுமே கன்னத்தில் அறைந்தவள் “அந்தாளுவூட்டுக்கு எதுக்குடா போன நாயே” என்றாள். நான் திடுக்கிட்டு அவள் முன் சீறி “நீ யாரையாச்சும் கட்டீட்டு எங்காது ஓடவேண்டீதான” என்றேன். சட்டென தன் கையால் முகத்தை அறைந்து மூடிக்கொண்டு வெடித்து அழுதாள். மொத்த உடலும் சரிந்ததுபோல கிடந்தாள். நான் யாருடனும் பேசவில்லை. இரண்டுநாட்கள் வீடு அமைதியாக இருந்தது சடடென அம்முவின் அழுகுரல் மட்டும் மௌனத்தை உடைக்கும். பிறகு மறுபடியும் பேரமைதி வியாபிக்கும்.
சுசீலா அத்தை என்னிடம் இரண்டுமூன்று முறை பேச முயன்றும் நான் தப்பித்துக்கொண்டிருந்தேன். அத்தையின் கைகளைப் பிடித்து அழுக நினைத்தேன். இருவரும் பேருந்தில் செல்ல நேர்ந்தது நான் அத்தையின் அருகே அமர்;ந்திருந்தேன். அவ்வருகாமையில் மெல்ல ஆசுவாசத்தை உணர்ந்தேன். வெகுநேரம் பேசாமல் வந்தாள். பிறகு “ஒங்க மாமாவாலத்தான் எல்லாமே” என்றாள். அத்தைதான் ஆரம்பித்தாள். “அவன் சம்பாதிக்கிறதுல திண்ணூட்டு ஊட்டுல கெடக்குறோங்கற நெனப்பு அப்படி. தெனம் நீயி தூங்குனப்பெறவு வந்து ஒங்கம்மாகிட்ட படுக்க இழுத்துருக்கான். அவ சுருக்குனு எந்திரிச்சு வெளீய ஓடீட்டா. ஒரு நா ரெண்டு நாளுனு போதைல பண்ணுறானு விட்டுட்டிருந்தா. அந்த நாய்க்கு போத எச்சாபோச்சு..தெனம் தொந்தரவு பண்ணிருக்கான். ‘ஒழுங்கா கெடந்துக்க இல்லீனா ஊருல சொல்லீ மானவமருவாதைய கெடுத்துபோடுவேனுட்டு மெரட்டீருக்கான்’ எங்கிட்ட சேதியச் சொல்லிட்டு நெஞ்ச புடிச்சிட்டு பதறி அழுதுகிட்டுருந்தா. தோட்டத்துல ஒரு நாளு வெச்சு அவன திட்டி நாறா கிழிச்சு போட்டேன். ‘ச்சீய் இன்னொரு தரம் இப்பிடி வெச்சுட்டீனா கொடலு குந்தானியலாம் அறுத்து போட்டுருவேனுனு சொல்லீட்டேன். அவனுக்கு புத்தி போகுதே…பொம்பளக்கித்தான் பொறந்தானா? ஒரு மொறதரம் இல்லீயா..யாருக்கிட்ட நாயம் கேக்க முடியும்?” அத்தை சேலையால் மூக்கை துடைத்து விட்டுக்கொண்டாள். நான் பிரமைப் பிடித்தது போல இருந்தேன். பேருந்திலிருந்து வெளியே குதித்து தலையை மடாரென்று மோதிக்கொள்வது போலிருந்தது. ஒரு கணம் என் தலை போஸ்ட் மரத்தில் மோதி பிளந்து கிடப்பது போலவும் அத்தை புரண்டு அழுவது போலவும் ஒரு ஊமைக்காட்சி தெரிந்தது. கீழே சரிந்து அழுத்துடித்தேன். கம்பினை இறுகப்பிடித்துக்கொண்டேன். “அவேன் துணிமணியெல்லாம் வெளிய எரிஞ்சுடுனேன்..ஒங்கம்மாதான் ஒருவாய் சாப்பாடு போட்டு வளத்தவனு சொல்லீட்டு அவேனூட்டுலயே இருந்தா..தெனம் இப்பிடிதான். எல்லாம் மதம் ஏறிப்போச்சு.. பின்னால அதுக்கொரு பாவம் வந்துடுமுனு நாந்தான் கலீயானம் செஞ்சுட்டேன். ஒங்கம்மாகாரி பாவஞ்சாமீ. எத்தன ராத்திரீல ஊட்டு கதவ தட்டி ஒளிஞ்சிருக்காத் தெரியுமா? ஒடம்பெல்லாம் வேத்துரும்…அது மொகம் பயந்து இத்தீச்சூடு போயிருக்கும்….ஒருநா சாவறனு நின்னா…உன்ன ஏமாத்தறது அதுக்குவறாது கண்ணு..ஓங்கோவத்த எம்மேல காட்டு.” அத்தையின் தலைமுடி களைந்து வாயில் ஒட்டிக்கொண்டேயிருந்தது. நான் ஏதும் பேசாததால் வழியிலே இறங்கிவிட்டாள். வௌ;வேறு காட்சிகளும் சொற்களும் என் உணர்வுகளுக்குள் உழன்று குழப்பி துன்புறுத்தின. இரண்டு மூன்று நாட்கள் யார் முகத்தையும் ஏறிட்டுப்பார்க்காமல் தோட்டத்திலும் அணைக்கட்டிலும் படுத்திருந்தேன். மனம் துக்கத்திழாந்துபோவதும் பின் எழுவதுமாக இருந்தது. ஒவ்வொருகணமும் நகராமல் பைத்திய நிலை மூண்டிருந்தது. அன்றைக்கே பெங்களுர் கிளப்பிச் சென்றேன்.
10
கோபியில் இருக்கும்போதே சந்திரன் எனக்கு நல்ல பழக்கம். பெங்களுர் அருகே பிடுதியில் ஹோட்டலொன்றில் வேலை செய்தான். தினம் அவன் கிளம்பிசென்றதும் அவனறையிலே படுத்திருப்பேன். இரண்டு முறை அம்மா போன் செய்து பேசினாள். குரல் கம்மிப்போயிருந்தது. பேசமுடியாமல் வைத்து விட்டேன். எழுந்து வெளியே வந்து நின்றுகொள்வேன். வால்காக்கைகள் விலா மரத்தில் அமர்ந்து கத்திக்கொண்டேயிருக்கும். எப்போதுமே கேட்கின்றதுதான். தனிமையில் அவ்வொலிகள் என்னைத் துன்புறுத்தின. ஒருவிதமான பித்து நிலைக்கு மாறியிருந்தேன். கனமான அழுத்தம். பின்மண்டை வலி எடுத்தபடியே இருக்கும். துண்டைச் சுற்றி இறுக்கமாக கட்டிக்கொள்வேன். கயிறு கிடைக்காதா என தேடுவேன். எதாவது சப்தம் கேட்டாலே காது சவ்வுகளில் வலி எடுக்கும்.
பெங்களுர் இரயில்வே ஸ்டேசனில் வந்து கடைசி நடை மேடை அமர்ந்து ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அலைக்கழிப்பு தாங்காமல் நின்றுகொண்டிருந்த சீரடி இரயிலில் ஏறிவிட்டேன். கூட்டம் அதிகமென்பதால் டிக்கெட் பற்றி யாரும் கேட்டவில்லை. வடநாட்டு பையன்கள் சிலருடன் கக்கூஸ் அருகே நின்றுகொண்டேன். அவர்களுக்கு அங்குதான் கஞ்சா இழுப்பதற்கு வசதி. என் தயக்கத்தைப் பார்த்தவொருவன் கையைத்தட்டி அமரச்சொல்லி எனக்கும் கொடு;த்தான். புகையை நிரைத்துக்கொண்டு சரிந்தேன். தலைசுற்றல் எடுத்து பெட்டிகள் வட்டவாக்கில் சுற்றின. அச்சுற்றும் வேகம் அதிகமானதும் நான்ää ‘சுத்துது. சுத்துது’ என்று கத்தத்தொடங்கினேன். உட்கார்ந்துகொண்டு தலைச் சுற்றும் வேகத்திற்கு வட்டமடித்தேன். என் வித்தையைப் பார்த்தவர்கள் சிரித்தார்கள். வெளியே குதித்துவிட விடலாம் போலிருந்தது. ஒருவன் தொடைகளைப் பிடித்து எதோ கன்னடத்தில் கத்தினான். அவன் கையைப் பிடித்துக்கொண்டேன்ää தலையைத் தடவியவன் கொஞ்ச நேரத்தில் மடிமீது அழுத்தினான். நான் பதறி எழுந்து அவனை ஏறிட்டபோது தன் கறைப்பற்களைக் காட்டி கெஞ்சுவது போல சமிக்ஞை செய்தான். அவனை எட்டி உதைத்து விட்டு, எழ இயலாமல் நகர்ந்தபடியே சீட்டின் அடியில் வந்து படுத்துக்கொண்டேன். இரண்டு நாட்கள் அங்கேயே கிடந்தேன். சீட்டினடியில் தெரியும் கால் பாதங்களையும் வெடிப்யையும் பார்க்கும்போது அம்மாவின் முகம் நினைவில் வரும். சட்டென கண்களில் நீர் முட்டி அழுதுவிடுவேன்.
சீரடி ஸ்டேசன் வெளியே சோளம் சுட்டுக்கொண்டிருந்ததை வாங்கி நாய்போல வறண்டி போட்டேன். கோரப்பசியில் கிடைத்ததை வாங்கித் தின்றேன். சிலமுகங்களைப் பார்க்கின்றபோது வெறுப்பு உண்டாகும். மீசை, கண்கள் மீது ஒரு அருவருப்பு. விஷ சிரிப்பு. சங்கரன் மாமாவின் சிரிப்பு. விஷம். சிலநேரம் பார்ப்பவர்களை அடிக்கப் பாய்ந்திருந்தேன். வடநாட்டு பெண்களை பார்த்து பார்த்து சலித்து போனேன். மாமிச வாடை நாசியில் தங்கியிருந்தது. கடையில் சிறியதும் பெரியதுமாக சிலைகள். பாதையிலே சிலைகள் கிடந்தன. பாபாவை பற்றி எனக்கு தெரியாது ஆனால் அதன் தூய பளிங்கு வெண்மை பிடித்திருந்தது. ஒருவாரம் போதையிலே சுற்றிதிரிந்த பின் மறுபடியும் பெங்களுர் வந்தபோது புதிய காற்றை சுவாசித்தது போலிருந்தது.
மண்டியா தனியார் சுகர் பேக்ட்ரி ஒன்றில் வேலை கிடைத்தது. தினம் டன் கணக்கில் சீனிக்கரும்புகள் ராட்சஷனின் பெருத்த வயிற்றுக்கான தீனி போல உள்ளே சென்று சக்கை சக்கையாக மலக்குவியல்களாக வந்து விழும். அவ்வெண்சக்கைகள் எனக்கு பட்டுப்புழுவை ஞாபகப்படுத்தின. சர்;க்கரைப்பாகு கனத்து இறுகி குளமாக தேங்கி எந்நேரமும் நுரைத்த விஸ்கியின் புளித்த மனம் போல் வீசிக்கொண்டேயிருக்கும். ஆறுமாதத்தில் உடம்பிலும் அவ்வாசனை ஏறிக்கொண்டது. ஓய்வு நேரத்தில் மேல்கோட்டைக்குச் செல்வேன். கரும்புவயல் நிறைந்த பாதைகளைக் கடக்கும் போது சரசரவென பாம்புகள் நெளிந்தோடும். ஊர் நினைப்பேயில்லாமல் ஏழட்டு வருடங்கள் அங்கேயே இருந்துவிட்டேன். தினம் கரும்பின் சக்கை மணம் ஒரு போதைபோல என்னை வசப்படுத்தியிருந்தது. கன்னடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன். என் கன்னம் ஒட்டிää மீசை வால் போல இறங்கி, முகம் அப்பாவின் சாயலில் மாறிக்கொண்டிருப்பதை கவனித்தபோது உடல் சிலிர்த்தது.
11
ஊருக்கு வந்திறங்கியதும் முதலில் பார்த்தது நம்பிராஜன் அண்ணணைத்தான். என்னைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்தினார். அவருக்கு அம்மாவைவிட வயது அதிகம் இருந்தும் அண்ணன் என்றே கூப்பிட்டு பழகியிருந்தேன். சிரமப்பட்டே ஸ்டாண்டு போட்டார். உடல் நடுக்கம் சீராக நடுங்கியது. மூப்பேறிவிட்ட தோள் பட்டை எழும்புகள் சோர்ந்திருந்தன. தொழில் எல்லாம் முடங்கி போய்விட்டதென சலித்துக்கொண்டார். என் உயரத்தை அண்ணாந்து கன்னத்தைப் பிடித்து நலம் விசாரித்தார். மண்டிகிடந்த புதருக்குள் சிதலடைந்திருந்த கருப்பர் கோவிலைப் பார்த்தேன். என்னை கவனித்தவர் ‘அங்கதான் போறேன்’ என்றார்.
கருவறைக்குள் தெய்வங்கள் கை கால்கள் உடைபட்டு ஊனமாக நின்றன. கீழே கவிந்திருந்த மர நிழலுக்குள் நான்கைந்து பேர் கவரிங் நகைகளையும் கீரிடத்தையும் பரப்பி வைத்திருந்தனர். “இவன மாதிரி நாலு ஆளுக. முருகன், புள்ளயார், பார்;வதி சிவன்னு எல்லாம் பெங்ளுர் பக்கதிலருந்து வந்தது…எல்லா சாமிக்கும் செட்டு ரெடி பண்ணி வெச்சுருக்கேன்…சாய் பாவா மட்டும் ஒரு நூறு உடுப்பு இருக்கு” என்றார். நம்பிராஜன் அண்ணன் ஒரு அழிந்துவிட்ட ஓவியர். சிறுவயதில் வண்ணங்களை குழைத்து பூசியபடி நரகாசூரனாக நாடகத்தல் தோன்றிருக்கிறார். உண்மையில் அவருக்கு நாடகத்தில நடிப்பதற்குத்தான் விருப்பம். வள்ளி திருமணத்தில் பபூனாக உடைகள் சரிந்து அவிழ்ந்து ஓடியது நினைவில் மீண்டது. “கலய அடக்க முடியாதுகண்ணு..’ என்றார். வாய் விளிம்பில் புகையிலையின் கருஞ்சாறு. “அதுக்கு ஒரு வடிகாலு கொடுக்கோனுமில்ல…இல்லீனா சரஸ்வதியோட சாபம் தொரத்தும்” என்றார்;;; ஆழமாக என்னபை; உற்றுப் பார்த்து. முருகன் வேடமிட்டிருந்தவன் பிரசங்கம் கேட்பது போல குந்தியமர்ந்து எங்களை வெறித்திருந்தான்.
“பட்டுப்புழு தட்டிலாம் இப்பம் பின்னறது இல்லீங்களா” என்றேன். “தட்டியெல்லாம் பின்றக்கு யாரு கண்ணு இருக்கா? எல்லாம் நெட்ரிகா, பிளாஸ்டிக்குனு மாறிடுச்சு. இப்ப புழு வளக்குறாங்க சொல்லு?” வெத்திலை எடுத்து சுருட்டி சுண்ணாம்பை சிவன் வேடத்திலிருந்த ஆளிடம் வாங்கி எஞ்சியதை சுவரில் துடைத்தார். “ஒங்கம்மாகாரி எப்புடீருக்கு..மாமா பீ மூத்தரம் நாறீட்டு கெடக்கானாமாம்..இதுக்குத்தான் இந்த பறப்பு பறந்தானா?” என்றார். நான் தலையை மட்டும் ஆட்டினேன். “சம்பாதிச்சு அம்மாவ பாத்துக்க என்ன” என் தோளை உலுக்குவது போல அழுத்தி உச்சரித்தார். என் பதிலை விடாப்பிடியாக எடுக்க முயன்றவா நான் பலமாக ஆட்டியதுமே விடுவித்தார். அவரிடம் சொல்லிவிட்டு கிளம்புகையில் எதிரே அம்மு டிவிஎஸ் எக்ஸலில் என்னை எதிர்பார்த்து வந்துகொண்டிருந்தாள். என்னருகே வந்ததும் தலைத்தூக்கி தயக்கமான ஒரு புன்னகையில் “அம்மா கூட்டிவர சொல்லுச்சு” என்றாள். டிவிஎஸ் எக்ஸல் இஞ்சின் அணைக்காமல் விம்மிக்கொண்டிருந்தது. “நி போ நா நடந்து வரேன்”என்றேன். திரும்பவும் தயக்கத்தோடு அதை மறுதலிப்பதாக நின்றாள். நான் சைகைக் காட்டிவிட்டு முன்னாடி நடந்தேன்.
மாமா பின்னாலிருக்கும் ஓட்டுவீட்டில் இருப்பதாக அம்மு சொன்னாள். அம்;மா என்னையே உற்று பார்த்தவள் “ ஒருக்கா பாத்தட்டு வந்துரு” என்றாள். அதுவே அம்மாவின் அதிகபட்ச அதிகாரம். மிக நிதானமாக என் முகத்தை ஏறிட்டுச்சொல்லியிருக்கிறாள் என்று பட்டது. நான் எழுந்து பின் பக்கம் நடந்தேன். பழைய சைக்கிள் ஒன்று துருப்பிடித்து கிடந்ததன் அருகே மூங்கில் தட்டிகள் சரிந்திருந்தன. அவரை நேர்கொண்டு சந்திப்பதை இத்தனை வருடங்களாக தவிர்த்துவந்திருக்கிறேன். இன்றைக்கு மட்டும் என்ன உந்துதல்? திரும்பி போய் விடலாம். அதற்கும் மனம் ஒப்பவில்லை. ஏதோவொரு ஆங்காரம். குரோதம். அவர் கண்களை எதிர்கொள்கின்ற தருணங்களை எத்தனையோ முறை மனதில் நிகழ்த்தியிருக்கிறேன். அம்மா போன் பண்ணும்போதெல்லாம் ‘இன்னும் சாகலீயா’ என்றுதான் கேட்டிருந்தேன். உள்ளே நுழைவதற்கு முன்னே என் நாசியை துளைக்கும் வீச்சம். அடுத்த நொடி வயிற்றில் குமட்டி முகத்தை இறுக்கிப் பொத்திக்கொண்டேன். இருள் கவிந்திருந்த சிமென்டு திண்ணையில் மாமா படுத்திருந்தார். ஒரு சிறு அசைவு. யாரு?’ என்றார் குலைந்த குரலில். பாயில் அழுக்கு போர்வை விரித்து அதன்மீது கிடந்தார். தலை மட்டுமே அசைந்தது. உடல் காய்ந்தப் பீயை போல, ஒரு குச்சிகொண்டு; நகர்த்தி விடலாம். அவர் அருகாமையில் குமட்டல் வீச்சம் அதிகமாகியதும் கால்களை கவனித்தேன். அங்கிருந்துதான் வீசுயதுää இரத்தம் கசிந்த கட்டுத்துணியில் ஈ மொய்க்காமலிருக்க பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டிருந்தது. அதை மீறியும் ஈக்கள் கவரை மோதி பறந்தன. அருகில் கரிய கறை படிந்த மலக்கப்பு. என் உருவம் தெளிவடையாமல் அவரின் கண்கள் துழாவியதைக் கண்டு “நாந்தான் முரளி” என்றேன். அவரின் முகம் வடிவமில்லாத சிதைந்த பழைய சிற்பமாக தோன்றிற்று. அவரின் இமை சற்று நின்று அசைந்ததும் என்னை அறிந்துகொண்டாரென உணர்ந்தேன். நெஞ்சில் நாலைந்து எலும்புவரிகள் மட்டும் தெரிந்தன. அக்குளில் பெரிய பொந்து போல குழி. எனக்கு வேறு யாரையோ பார்ப்பதுபோன்ற பிரமையில் அருவருப்புடன் விளிம்பில் அமர்ந்தேன். வாந்தியின் குமட்டல் விடாது புரட்டியதில் மூச்சை முடிந்தளவு நிறுத்திப் பிடித்து பின் வெளியேற்றினேன். வாய்க்குள் வாடை இறங்கி தொண்டை கசந்தது. எதை வைத்தும் சங்கரன் மாமா என்கிற பிம்பத்தை நினைவில் கொண்டுவரமுடியவில்லை. ஒருகணம் கண்கள் அசைவற்று வாய் திறந்தபடியே வேறு எங்கோ வெறித்துக்கொண்டிருந்தார். இறந்துவிட்டாரோ? கண்கள் ஓரத்தில் சன்னமாக கண்ணீர் கசிந்தது. என்னைப் பார்த்தார். “பாக்கோணும்னு நெனச்சேன் கண்ணு” வாய் குழறியபடி திரும்பவும் அதையேச் சொன்னார். “எல்லாம் முடிஞ்சிது…இனி ஒன்னுல்ல.” என்றார். மறுபடியும் பேசுவாரென்று அடுத்த வார்த்தைக்காகக் காத்திருந்தேன். எந்த அசைவுமில்லை. மிக நீண்ட நேரம் கழித்தே ஒரு சிமிட்டல் கண்ணகளில். வாய்க்குள் நாக்கு துழாவியபடி கிடந்தது. எவ்வளவோ பேச வேண்டியிருந்தும் அக்கணம் சொற்கள் அவிந்து நின்றேன். காலின் அழுகல் சதையிலிருந்து நீர் வடிவதை உற்றுப் பார்த்தேன். கரிய பளபளப்பாக சின்ன சின்ன புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன…
2015 மணல்வீடு சிற்றிதழில் வெளியானது