Etger keret (1967) இஸ்ரேலிய எழுத்தாளா். சமகால உலக இலக்கியத்தில் முக்கியமான சிறுகதையாசிரியா்களில் ஒருவர் எனச் சொல்ல முடியும். 1992 ல் Pipelines என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானபோது அதிகமாக கவனிக்கப்படவில்லை. பிறகு வெளிவந்த ஐம்பது குறுங்கதைகள் கொண்ட Missing Kissinger இவருக்கு பரவலான வாசகர்களை உருவாக்கியது. கிராபிக்ஸ் நாவல், சிறார் கதைகள், காமிக்ஸ், என இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன. Nobody said it was going to be fun முக்கியமான கிராபிக்ஸ் நாவல். இவரது கதைகள் பல்வேறு குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. பிற எழுத்தாளா்களின் கதைகளையும் இவரே காமிக்ஸாகவும் குறும்படமாகவும் இயக்கியிருக்கிறார். கரிட் அவா் மனைவியுடன் சோ்ந்து இயக்கிய jellyfish குறும்படம் 2007ல் cannes Film Festival திரையிடப்பட்டு camera d’Or விருதுபெற்றது. National Public Radio வில் இவரது பல கதைகள் வாசிக்கப்பட்டுள்ளன
.
கரிட்டின் பல கதைகள் பெரும்பாலும் குறுங்கதைகள்தான். கிட்டத்தட்ட இரண்டு மூன்று பக்கத்திற்குள் முடிந்துவிடும். ஆனால் அதற்குள் மிக நுட்பமாக கதை சொல்லியிருப்பார். அன்றாட வாழ்வில் புழங்கும் எளிய சொற்களே இவரது எழுத்துபாணி. ஏற்கனவே சொல்லப்பட்ட அல்லது அறிந்த ஒருவிசயத்தை விவரத்து மெனக்கெடுவது கிடையாது. வெறுமையும் தனிமையும் கேளிக்கையானவா்களும் ஓயாது தவறிழைப்பவா்களும் இவரது கதைகளில் அதிகம் பயணிப்பவா்கள். இக்கதைகள் The Girl on the Fridge ல் தொகுப்பிலுள்ளவை.